valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 27 November 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாடீல் இது விஷயத்தில் முன்னோடியாக விளங்கினார். கிராமத்தில் அது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் அனைவரும் சத்திய சாயி விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். 

ஞானிகளின் கிருபை இவ்வாறே! உரிய காலத்தில் பிராப்தம் நேரும்போது, தரிசனத்தாலேயே பக்தர்களுடைய இன்னல்கள் அழிந்து போகின்றன. யமனும் திருப்பியனுப்பபடுகிறான். 

அடுத்த காதலி, சந்ததி இல்லையே என்று ஒருவர் பட்ட கவலையும் எல்லா ஞானிகளும் ஏகாந்தமாக இருக்கும் அற்புதத்தையும் விவரிக்கும். 

நாந்தேட் நகரத்தில் வாசித்த, பார்சி மதத்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பாபாவின் ஆசீர்வதத்தால் புத்திரபாக்கியம் பெற்றார். 

நாந்தேடில் வாசித்த மௌலிசாஹெப் என்ற ஞானியும் பாபாவும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டது. பார்சி கனவான் ஆனந்தம் பொங்க வீடு திரும்பினார். 

இக்காதை உள்ளத்தை தொடும். கேட்பவர்களே! அமைதியுடன் இக்காதையை கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பதும் அவருடைய வாத்சல்யமும் (தாயன்பும்) உங்களுக்கு நன்கு விளங்கும். 

ஹேமாட் பந்த் சாயியின் பொற்கமல பாதங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன். ஞானிகளையும் கதை கேட்பவர்களையும் வணங்குகிறேன். அடுத்த அத்தியாத்தின் விவரணத்தை பயபக்தியுடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்" என்னும் காவியத்தில், 'பீமாஜி க்ஷயரோக நிவாரணம்" என்னும் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீசத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 



சுபம் உண்டாகட்டும்.   

Thursday, 20 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம்

"இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடையை நன்றிக்கடனை கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா சாயி, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதவை.!"

பாடீல் பாபாவின் மகிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுதிருப்தியுடன் வீடு திரும்பினார்.

சாயியின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப் பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனதுடன் ஷீரடிக்கு அடிக்கடி வந்து போனார்.

சாயி நாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது.

ஒருவருக்கு துன்பம் நேரும்போது, சத்தியனாராயனருக்கு பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தபின் சாங்கோபமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையை செய்கிறார்.

அதுபோலவே, பாடீல் அக்காலத்திலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழ மையும்   தூய்மையாக, ஸ்நானம் செய்து விட்டு சத்திய சாயி விரதத்தை   முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.

சத்திய நாராயண பூஜையின்போது மக்கள் சத்திய நாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்கு பதிலாக தாசகனு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம் ' என்னும் நூலிலிருந்து சாயி சரித்திரத்தை பாராயணம் செய்தார்.

இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாங்களில் தாசகனு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் சாயி நாதரின் சத்திய சாயி கதை சொல்லப் பட்டிருக்கிறது.

விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களை பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.

பாடீல், தம்முடன் பிறந்தவர்களை உறவினர்களையும்  நண்பர்களையும்  அழைத்து, இந்த சத்திய சாயி விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனதுடன் தவறாது செய்துவந்தார்.

நைவேத்தியம் (படையல்) சத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும் அதே விகிதத்திலும் கலந்து செய்யப் பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் சாயி; விரதத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

தற்காலத்தில் சாயி பக்தர்கள் 'ஸ்ரீ சாயீ சத்சரிதம்' மராட்டி நூலையோ (இம்மொழி பெயர்ப்பின் மூல நூல்) அல்லது நாகேஷ் வாசுதேவ் குணாஜி எழுதிய ஆங்கில சுருக்கத்தையோ அல்லது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையோ (திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சப்தமாகப் (ஏழு நாள்களுக்குள் ஆசாரமாக படித்து முடிப்பது) பாராயணம் செய்கின்றனர்.



Thursday, 13 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 
"எந்தப் பெண்ணுக்கு வேறு வீட்டிற்குள் (தன்னுடைய வீடு தவிர) நுழைவது பாம்பின் தலைமேல் கால் வைப்பதுபோல் இருக்கிறதோ,
 எவளுடைய வாயிலிருந்து வார்த்தைகளை பெறுவது கருமியிடம் செல்வத்தை பெறுவது போன்றதோ, 
வீட்டில் செழிப்பு இல்லாது போயினும் எவளுக்கு கணவனின் சங்கம் பெரும் சந்தோஷத்தை அளிக்கிறதோ, 
கணவனுடைய அனுமதியுடன் எவள் சாந்தமாகச் செயல் புரிகிறாலோ, அவளே பதிவிரதை ஆவாள். 

ஆனால், எந்தப் பிழைக்காக இந்தத் தண்டனை என்று புரிந்துகொள்வது கடினம். ஆயினும், ஆசிரியர் பிரம்பைக் கீழே வைப்பதாக இல்லை. வெறி பிடித்தவர்போல அடித்தார். 

இதையடுத்து, பீமாஜி முதற்கனவை விட விசித்திரமான கனவொன்று கண்டார். ஒரு மனிதர் அவருடைய மார்பின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பலமாக மார்பை அமுக்கினார். 

ஒரு குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு பீமாஜியினுடைய மார்பை அம்மியாக ஆக்கி அரைத்தார். தாங்க முடியாத வழியால், பரலோகப் பயணம் கிளம்பிவிட்டோம் என்று பீமாஜி நினைக்கும் வண்ணம், உயிரே எம்பி வாய்க்கு வந்துவிட்டதை போலிரிந்தது. 

கனவு முடிந்தது. அவர் தூக்கத்தில் ஆழ்ந்தார்; தூக்கம் கொஞ்சம் சுகத்தை அளித்தது. உதயசூரியன் தோன்றினார்; பாடீல் விழித்துக் கொண்டார். 

எப்பொழுதாவது கண்டிராத வகையில் புத்துணர்ச்சி பெற்றார்! வியாதி பிடித்த உணர்வு நிர்மூலமாகியது. அம்மியும் குழவியும் பிரம்பும் சொன்ன குறிப்பு என்னெவென்று தெரிந்துகொள்வதற்கு யாருக்கு ஞாபகம் இருந்தது? 

மக்கள் கனவுகளை அர்த்தமற்றனவாகவே நினைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் நம்முடைய அனுபவம் எதிர்மாறாக இருக்கிறது. கனவு கண்ட அதே மங்களகரமான நேரத்தில் வியாதி ஒழிக்கப் பட்டது. பாடீலின் துன்பன் முடிவுற்றது. 

பாடீலின்  மனதில் சந்தோசம் பொங்கியது. தாம் புனர்ஜன்மம் எடுத்துவிட்டதாகவே நினைத்தார். பிறகு அவர் மெதுவாக சாயி தரிசனத்திற்கு கிளம்பினார். 

சந்திரனை போன்ற பாபாவின் முகத்தை பார்த்தவுடனே பாடீளுடைய மனதில் ஆனந்த சமுத்திரம் பொங்கியது. அவருடைய கண்கள் ஆனந்தமான அனுபவத்தில் செருகிக் கொண்டன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. 

பாபாவினுடைய பாதங்களில் தலை வைத்தபோது ஆனந்தக் கண்ணீர் மடை திறந்தார் போல வழிந்தது. பிரம்படியும் இதயமே வெடித்துவிடும் போன்று மார்பு அமுக்கப் பட்டதுமாகிய தண்டனைகளின் முடிவான விளைவு சந்தேகமில்லாமல் சுகத்தை அளிப்பதாகவே அமைந்தது. 

"பாமரனாகிய என்னால் என்மீது காட்டப் பட்ட கருணைக்குப் பிரதி உபகாரமாக எதுவும் என்றுமே செய்ய இயலாது. ஆகவே, நான் என்னுடைய சிரத்தை உம்முடைய பாதங்களில் வைப்பதிலேயே திருப்தி கொள்கிறேன். -



Thursday, 6 November 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தத்தோ பந்தினுடைய அனுபவம் அவ்வாறு இருந்தது. பாபாவினுடைய கரம் அவருடைய சிரத்தின் மீது வைக்கப்பட்டு, விபூதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவருடைய மனம் அமைதி அடைந்தது. 

மகாராஜ் அவரைச் சில நாள்கள் ஷீரடியில் தங்கும்படி செய்தார். படிப்படியாக அவருஅடிய சூலை நோய் நிர்மூலமாகியது. 

மகாத்மாக்கள் இவ்விதமே! அவர்களுடைய பிரபாவத்தை நான் எங்கனம் தேவையான அளவுக்கு வர்ணிப்பேன் ? நகரும் நகராப் பொருள்கள் அனைத்தின் மீதும் சத்பாவம் கொண்ட மகான்களுக்கு பரோபகாரமே நித்திய சுபாவம். 

இப்பெருமைகளை பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மற்ற காதைகள், ஒன்றை விட மற்றொன்று அற்புதமான ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால், நாம் இப்பொழுது பிரதமாமான பீமாஜியின் காதையை விட்ட இடத்தில தொடர்வோமாக! 

ஆக, பாபா உதீயை கொண்டுவரச் செய்து, பீமாஜிக்கு அளித்துச் சிறிது அவருடைய நெற்றியிலும் இட்டு விட்டார். பிறகு பாபா தம்முடைய அருட்கரத்தை பீமாஜியின் தலைமேல் வைத்தார். 

தங்குமிடத்திற்குச் செல்லும்படி பீமாஜி ஆக்ஞை இடப்பட்டார். பாடீல் சில அடிகள் மெதுவாக எடுத்துவைத்த பிறகு, வண்டி வரை நடந்து சென்றார். தமக்குத் தெம்பு வந்துவிட்டதை உணர்ந்தார். 

பாபா ஆலோசனை கூறிய இடத்திற்குச் (பீமாபாயின் வீட்டிற்குச்) சென்றார். அவ்விடம் குறுகலாகவும் காற்றோட்டமின்றியும் இருந்தபோதிலும், பாபா அவ்வாறு செய்யச் சொல்லியிருந்தார்; அதுதான் முக்கியம். 

சமீபத்தில் களிமண்ணால் சமம் செய்யப்படிருந்ததால், தரை ஈரமாக இருந்தது. ஆனால், பாபாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பீமாஜி அவ்விடத்திலேயே தங்குவதற்கு வசதிகள் செய்துகொண்டார். 

பீமாஜிக்கு கிராமத்தில் பலர் தெரிந்து இருந்ததால், ஈரமில்லாத உலர்ந்த இடம் கிடைத்திருக்கும். ஆனா, பாபாவினுடைய திருவாய் மொழியாக வந்த இடத்திற்குப் பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றமுடியாது. 

ஆகவே, அவர் அங்கே கோணி பைகளை தரையில் விரித்துத் தம்முடைய படுக்கையை அதன்மீது அமைத்துக் கொண்டார். மன அமைதியுடன் படுக்கையில் படுத்துக் கொண்டார். 

அன்றிறேவே பீமாஜி ஒரு கனவு காணும்படி நேர்ந்தது. கனவில் அவருடைய பால பருவத்து ஆசிரியர் தோன்றி, அவரை அடிக்க ஆரம்பித்தார். 

கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு, அவரைச் சில மராட்டி செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பிக்கவைக்க, முதுகொடிந்து போகுமாறு கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். சிஷ்யனுக்கு பயங்கரமான கஷ்டத்தை கொடுத்தார். 

கதை கேட்பவர்களுக்கு இச்செய்யுள்கள் யாவை என்று அறிந்து கொள்ளும் ஆவல் மிக இருக்கும். ஆகவே, நான் கேட்டதை விரிவாகவும் பதம் பதமாகவும் இங்கே தருகிறேன். 



Thursday, 30 October 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"தின்று விடும்" என்று திரும்ப திரும்பச் சொல்லி மகாஜனியின் கையில் வேர்க்கடலைகளை திணித்தார். அவ்வப்பொழுது  தாமும் சிறிது வாயில் போட்டுக் கொண்டார். இவ்விதமாக முழுப் பையும் காலியாகியது. 

வேர்க்கடலை காலியானவுடன், "தண்ணீர் கொண்டு வாரும், எனக்கு தாகமாக இருக்கிறது" என்று பாபா சொன்னார். காகா ஜாடி நிறையத் தண்ணீர் நிரப்பி பாபாவுக்குத் கொண்டுவந்தார். அதிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு, காகா மஹாஜனியையும் குடிக்கச் சொன்னார் பாபா. 

காகா தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் சொன்னார். "இப்பொழுது போம், உம்முடைய பேதி நின்றுவிட்டது ! ஆனால், எங்கே? ஓ, எங்கே போய்விட்டனர் அந்த பிராமணர்கள் எல்லாம் போய் அவர்களை எல்லாம் அழைத்து கொண்டு வாரும்".

சிறிது நேரம் கழித்து அனைவரும் திரும்பினார். மசூதி முன்போலவே நிரம்பி வழிந்தது. மறுபடியும் தளம் போடும் வேலை ஆரம்பிக்கப் பட்டது. காகா மகாஜனியின் காலராவும் ஒழிந்தது!

ஆஹா! பேதிக்கு எப்படிப்பட்ட மருந்து! உண்மையான மருந்து ஞானியின் சொல் அன்றோ! எவர் அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்கிறாரோ, அவருக்கு மருந்தேதும் தேவை இல்லை. 

ஹர்தா நகரத்தில் வாழ்ந்த கிருஹஸ்த்ரோருவர் சூலை நோயினால் (வயிற்று வலியால்) பதினான்கு ஆண்டுகள் அவதிப் பட்டார். எல்லா வைத்திய முறைகளையும் செய்து பார்த்தார். பிரயோஜனம் ஏதுமில்லை. 

அவருடைய பெயர் தத்தோ பந்த். ஷீரடியில் சாயி என்று அழைக்கப் பட்ட மகா ஞானி ஒருவர் இருக்கிறார் என்றும் அவருடைய தரிசனமே எல்லா வியாதிகளையும் நிவிர்த்தி செய்துவிடுகிறது என்றும் ஒரு செவி வழிச் செய்தி அவரைச் சென்றடைந்தது. 

இக்கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவர் ஷிர்டிக்குச் சென்று பாபாவின் பாதங்களில் தம் சிரத்தை வைத்துக் கருணை வேண்டினார். 

"பாபா, பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இச்சூலை நோய் என்னை விடமாட்டேன் என்கிறது. போதும், நான் பட்டது போதும். நான் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டேன்; இனிமேலும் இவ்வலியை அனுபவிப்பதற்கு எனக்கு சக்தி இல்லை.

"நான் யாருக்குமே துன்பம் இழைத்ததில்லை; எவரையும் ஏமாற்றியதில்லை. மாதா பிதாக்களை அவமதித்து இல்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன கர்மம் செய்தேன் என்று தெரியவில்லை; அதன் காரணமாக இந்த ஜன்மத்தில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன்!"

ஞானிகளுடைய கருணாகடக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை. 


Thursday, 23 October 2014

ஷிர்டி சாய் சத்சரிதம் 

பிறகு பாபா திரும்பி வந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகா மகாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். 

கோபற்காங்விலிருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயிலிருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். 

இக்குழுவினருடன் அந்தேரியிலிருந்து ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காக காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில பயங்கரமாக உருட்டிக் கொண்டு, விசித்திரமான குரலில் சத்தம் போட்டார். 

"யார் அங்கே கூந்தாலியால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்" என்று கூவிக் கொண்டே தம்முடைய சட்காவை எடுத்துக் கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர். 

பணியாள் கூந்தாலியை கீழே போட்டுவிட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்' என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப் போனார். 

"நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்" என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாயும் லக்ஷ்மிபாயும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத் தம் மனம் திருப்தி அடையும் வரை கண்டபடி ஏசினார். 

முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசை மாறி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார். 

பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது,  மசூதியிலிருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையிலிருந்த இந்தப் பை விழுந்திருக்க வேண்டும். 

வேர்க்கடலை ஒரு சேராவது இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா. 

ஒரு பக்கம் வசவுகளை பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையை தேய்த்து ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப் பட்ட மஹாஜனியைத் தின்ன வைத்தார். 



Thursday, 16 October 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"வீக்கம் என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே நான் மறுபடியும் மும்பை சென்றேன் -

"அதே டாக்டரிடம் சென்றேன். பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை.-

"ஆகவே டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்." சன்னியாசியின் பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையை கண்டு வியப்படைந்தனர். 

இந்த சந்தர்ப்பத்தில் இதே மாதிரியான காதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தக் காதையை சொல்லிவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறேன்.

சபா மண்டபத்தின் தரைக்கு தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மகாஜனி காலரா நோயினால் கடுமையாக தாக்கப் பட்டார். 

அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின் மீது பாரத்தை போட்டுவிட்டு, மிகவும் நொந்து போயிருந்த நிலையிலும் இந்த மருந்தையும் வைத்தியமுறையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மகாஜனிக்கு தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்கு தெரிவிக்கவில்லை. 

பாபா விருப்பப் பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டார். 

எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படி பூஜைக்கும் ஹரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக் கூடாது என்றே அவர் விரும்பினார். 

பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி சேவையை இழந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால், -

நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக் கூடிய இடத்தில மசூதியில் வைத்துக் கொண்டார். 

பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டு கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார். 

வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்கு சென்று மலம் கழித்துவிட்டு திரும்பி வந்துவிடுவார். 

இந்நிலையில், தாதா (கண்பத் கோதே பாடீல்) தரைக்கு தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்!

"நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்."