valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஆனால், அவர் கோ சம்ரட்சண நிமித்தமாகவும் பசுக்களுக்குத் தீனி வாங்க நிதி திரட்டுவதற்காகவுமே வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நான் உத்தியாபன விழாவிற்கு வருகை தரும்படி பாபாவுக்கு அழைப்பு அனுப்பினேன்.

"இவ்விதமாக என் மனம் மயங்கிய காரணத்தால்தான் எல்லாம் இவ்வாறு நடந்தது. அவர் இரண்டு பேர்களுடன் சேர்ந்து வந்து போஜனம் செய்துவிட்டுச் சென்றாராயினும், அவரை அன்னத்தை நாடிவந்த வழிப்போக்கர் என்று நான் நினைத்துவிட்டேன். -

"எதிர்பாராது போஜனநேரத்தில் இரண்டு பேர்களுடன் வந்தவர், எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகாதவராக இருந்திருந்தால், அவர் சாயி என்று நான் நிச்சயமாக அறிந்துகொண்டிருப்பேன்."

ஆனால், ஞானிகளின் ரீதி இவ்வாறே.  அவர்களுடைய கற்பனைக்கெட்டாத லீலைகளும் அற்புதச் செயல்களும் இவ்வாறே. பக்தர்களின் இல்லத்தில் என்னென்ன நடக்கவேண்டுமென்பதை அவர்கள் முன்கூட்டியே நிச்சயிக்கிறார்கள்.

பாதங்களை பணியும் பக்தர்களுடைய இல்லங்களில், எதிர்பாராமலேயே மங்கள நிகழ்ச்சிகள் இம்மாதிரியாக வெற்றிகரமாக நிறைவேறுகின்றன. சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.

சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனத்தில் நினைப்பதைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய தாயோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள் செய்வார்.

இந்த சந்தர்ப்பத்தில் பாபா விருந்துக்கு அழைக்கப்பட்டார்; சந்நியாசி ரூபத்தில் வந்தார். சில சந்தர்ப்பங்களில் அழைக்காமலும் வந்து அற்புத லீலை புரிந்தார்!

சில சமயங்களில் புகைப்பட உருவத்தில் - சில சமயங்களில் களிமண் பொம்மை உருவத்தில் - அவருடைய கிருபைக்கு எல்லையேயில்லை! சில சமயங்களில் தாமே தோன்றினார்!

இது சம்பந்தமாக என்னுடைய அனுபவத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். இந்த விநோதமானதும் அபூர்வமானதுமான காதையிலிருந்து, கதைகேட்பவர்கள் சாயி லீலையின் பிராபவத்தை அறிவர்.

சிலர் இவ்வாறு சொல்லலாம், "இதுவென்ன உண்மையாக நடந்த நிகழ்ச்சியா, கற்பனைக் கதையா?" அவர்கள் விரும்பியவாறு ஏதாவது சொல்லட்டும்; நீங்கள் பயபக்தியுடன் காதையைக் கேளுங்கள்.

சோம்பலும் நித்திரையும் அயர்ச்சியும் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். 'முழுக்கவனுத்துடன் கேள்வி' என்னும் தானத்தை எனக்களித்தால்தான் நான் திருதியுறுவேன்.

சிறிது நேரம் சலனங்களைத் தூர விரட்டிவிட்டு மனத்தை சமநிலைப்படுத்தினால்தான் கேள்வி சிறப்புறும். மனத்தில் அசைபோடுதலும் சிந்தனையும் தொடரும்.

அதன் பிறகு நேரிடை அனுபவம் ஏற்படும். இவை அனைத்திற்கும் கேள்வியே (காதால் கேட்டலே) ஆதாரம்; கேள்வியே சாரம். அதை வைத்து, நிச்சயமாகப் பிறவிக்கடலைத் கடந்துவிடலாம். 




Thursday, 29 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"மற்றவர்களின் கண்களுக்கு நான் இங்கிருந்து நகராததுபோலத் தெரியலாம். ஆயினும், நான் உத்தியாபன விழாவில் விருந்துண்டேன். என்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்று சொன்னேன்; அவ்வாறே என்னுடன் இருவரை அழைத்துச் சென்றேன். -

"சாப்பாட்டு நேரத்திற்கு அவகாசம் இருந்தது. ஆகவே, முதலில் நான் மட்டும் சாவகாசமாகச் சென்றேன். உமக்கு சந்நியாசி வேஷம் தெரியாதா? அந்த ரீதியில் நான் முதலில் பிரவேசம் செய்தேன். -

"நான் எதிர்பாராது வந்ததைக் கண்டவுடன், பைசாவுக்காக வந்திருப்பதாக நீர் பீதியடைவில்லை? பின்னர், நான் உம்முடைய சந்தேகங்களை நிவிர்த்தி செய்தேன். -

"நான் சாப்பாட்டிற்காகத்தான் வந்திருக்கிறேனென்றும் என்னுடன் இருவரை அழைத்துவருவேன் என்றும் சொல்லவில்லையா? சொன்னவாறே  சரியான நேரத்திற்கு இருவருடன் வந்து சாப்பிடவில்லையா?-

"இதோ பாரும்; என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்தையைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய பிராணனையும் கொடுப்பேன். என்னுடைய வார்த்தை என்றுமே பொய்யாகாது. "

சாயிநாதர் இவ்வாறு சொன்னபோது ஜோக்கின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பாபா அளித்த உறுதிகள் என்றுமே வேறுவிதமாக நடந்ததில்லை. எப்பொழுதும் எல்லாருடைய அனுபவங்களும் அப்படியே!

பின்னர், மிகுந்த சந்தோசத்துடன் ஜோக் எல்லா விவரங்களையும் தேவுக்கு ஒரு நீண்ட கடிதத்தின் மூலமாகத் தெரிவித்தார்.

தேவ் அந்தக் கடிதத்தைப் படித்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார். "நான் சாயியைக் குற்றம் சொன்னது வெட்கக்கேடு!" என்று நினைத்துத் தலைகுனிந்தார்.

"சாயியின் மஹிமை மகத்தானது, எல்லாம் தெரிந்தவனென்ற என்னுடைய கர்வம் ஒரு வெட்கக்கேடு. ஆனால், அன்று வந்த சந்நியாசி பாபாதான் என்று நான் எப்படி அனுமானம் செய்திருக்கமுடியும் என்று எனக்கு விளங்கவில்லையே?-

"நான் பாபாவை உத்தியாபன விழாவிற்கு அழைப்பதற்கு முன்பாகவே சந்நியாசி அவருடைய முதல் விஜயத்தை முடித்துவிட்டாரே! அதுவும் நிதி திரட்டுவதற்காக வன்றோ விஜயம் செய்தார்?-

"நான் ஏற்கெனவே அவரை இரண்டு-நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். அதே சந்நியாசி, அந்தக் காலகட்டத்திற்கு முன்பாகவே வந்து, சாப்பாடுதான் வேண்டுமென்று கேட்டால் நான் எப்படி அவர்தான் பாபாவேன்று யூகிக்க முடியும்?-

"ஆனால், 'நான் மதியம் சாப்பிட வரும்போது என்னுடன் இரண்டு பேர்கள் வருவார்கள்' என்று பாபா சொன்ன வார்த்தையைப் புரிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டுவிட்டேன். -

"பாபாவுக்கு அழைப்பு விடுத்த பிறகு, சந்நியாசி முதன்முறையாக, அதுவும் சாப்பாட்டிற்கென்று வந்திருந்தால் நான் இவ்வாறு ஏமாறியிருக்க மாட்டேன்.-

 


 

Thursday, 22 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவ் ஆச்சார நியமத்தின்படியும் சம்பிரதாயத்தின்படியும் சந்தனம், மலர்கள், தாம்பூலம், பன்னீர், அத்தர், ஆகிய பொருள்களை மிகுந்த மரியாதையுடன் அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சியடைந்தார்.

இவ்விதமாக நடந்து முடிந்த பிறகு அனைவரும் தம் தம் இடங்களுக்குத் திரும்பினர். சந்நியாசியும் தம்முடன் வந்த இரண்டு பையன்களுடன் அவருடைய ஊருக்குச் சென்றுவிட்டார்.

அழைக்கப்படாமல் சந்தர்ப்பவசமாக மூவரும் வந்தனர். எனினும், சரியான நேரத்திற்கு வந்து உணுவுண்டனர். ஆனால், தேவுக்கு சந்நியாசி பாபாவாகத் தெரியவில்லை; மனத்தில் சந்தேகமே நிறைந்திருந்தது.

ஈதனைத்தும் அவருக்குப் பிரதட்சயமாக நடந்தபோதிலும், எதிர்பாராமலேயே, அழைக்கப்படாத விருந்தாளிகள் மூவருக்கு அவருடைய கண்ணெதிரில் உணவளிக்கப்பட்டபோதிலும், தேவின் மனத்தில் சந்தேகமே நிலவியது. பாபா வந்ததற்குச் சாட்சி என்னவென்று ஜோக் கை கேட்டார்.

சந்தேகத்தின் விளைவாக, உத்தியாபன விழா நடந்து முடிந்த பிறகு ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். "பாபா எப்படி என்னை இவ்வாறு ஏமாற்றலாம்?  டஹானுவிற்கு வருவதாக ஏன் உறுதியளித்தார்?

"அந்த உறுதி, நீங்களும் அவருடன் சேர்ந்து வருவீர்கள் என்றும், அவருடைய வார்த்தை மாறாது என்றும், என்னுடைய ஆசை நிறைவேறுமென்றும் என்னை நம்பவைத்ததா, இல்லையா?

"ஆயினும் நடந்தது என்ன? என்னுடைய ஆசை ஏன் நிராசையாகிவிட்டது? பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தேன். ஒருவரும் சொன்னவாறு வரவில்லை.

"ப்ரேமையுடன் பாபாவை அழைத்தேன். சரணாகதியடைந்த எனக்கு, வருவேன் என்று அவரும் சொன்னார். ஆனால், நடந்ததோ வேறுவிதமாக. இது எவ்வாறு இப்படி நடந்தது என்று எனக்கு விளங்கவில்லையே !-

"நான் உத்தியோகம் செய்து பிழைப்பவனாதலால், என்னால் நேரில் வர இயலவில்லை. மனப்பூர்வமாக மன்றாடிக் கடிதம் எழுதினேன். என் கடிதத்தையும் மதித்து நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து நான் பெரும்பேறு பெற்றவனென்று நினைத்தேன். -

"ஏதோவொரு சாக்குப்போக்கை வைத்தோ, ஏதாவதொரு மாறுவேஷத்திலோ வருவீர்கள் என்று நினைத்தேன். அவ்வாறு, எப்படி நடக்காது போயிற்று என்பது எனக்கு விசேஷமான ஆச்சரியத்தை அளிக்கிறது".

"ஜோக் கடிதத்தின் முழு விவரத்தையும் சாயியின் பாதங்களில் நிவேதனம் செய்தார். பாபா ஆச்சரியமடைந்து என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

"என்னெதிரில் ஒரு கடிதம் பிரிக்கப்படும்போதே கடிதம் எழுதியவரின் எண்ண ஓட்டத்தை நான் அறிகிறேன். ஆதியிலிருந்து அந்தம்வரை எழுதியவரின் எண்ணங்கள் என்முன்னே உருவெடுத்து நிற்கின்றன.

"நான் வாக்குறுதி அளித்தபிறகு அவரை ஏமாற்றிவிட்டேன் என்று சொல்கிறார். என்னை அடையாளம் கண்டும்கொள்ள முடியாதவர், எனக்கு ஏன் அழைப்பு விடுத்தார் என்று அவரைக் கேளும். -

 


 

Thursday, 15 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவின் மனத்தில் உடனே ஒரு சந்தேகம் எழுந்து, தம் மகனிடம் சொன்னார். "இவர் நிச்சயமாக முன்பு வந்த சந்நியாசிதான். நான் பரிந்துரைத்த காலத்திற்கு முன்பாகவே நிதி திரட்ட மறுபடியும் வந்துவிட்டார். -

"ஒரு மாதங்கூட முழுவதுமாகக் கழியவில்லையே. இவர் ஏன் இங்கு வந்தார்"? முந்தைய சம்பாஷணையை மறந்துவிட்டாரா?" இதுவே தேவின் சந்தேகத்தின் வேர்.

இறங்கிய இடத்திலேயே சந்நியாசி குதிரைவண்டியை விடுவித்துவிட்டார். அங்கேயே சிறிது நேரம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தேவின் இல்லத்திற்கு வந்தார். அவர் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

அப்பொழுது காலை மணி பத்து. பிராமணர்களுக்கு போஜனம் தயாராகிக்கொண்டிருந்த நேரம். தேவின் தவிப்பை கண்ட சந்நியாசி சொன்னார், "நான் பணத்திற்காக அவசரப்படவில்லை.-

"நான் பணத்திற்காக வரவில்லை. இன்று எங்களுக்குப் போஜனந்தான் தேவை." தேவ் சொன்னார், "வாருங்கள் வாருங்கள்; ஆனந்தம்! ஆனந்தம்! இதை உங்களுடைய இல்லமாக கருதுங்கள்".

இதைக் கேட்ட சந்நியாசி சொன்னார், "என்னுடன் இரண்டு பையன்கள் இருக்கின்றனர். " தேவ் சொன்னார், "நல்லது, நிரம்பவும் நல்லது."

தேவ் மேலும் சொன்னார், "சாப்பாட்டிற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? உங்களை அழைக்க நான் எங்கே ஆள் அனுப்பவேண்டும்?"

சந்நியாசி இடைமறித்துச் சொன்னார், "அதற்கென்ன தேவை? நான் எத்தனை மணிக்கு இங்கு வரவேண்டும்? நீங்கள் சொல்லும் நேரத்திற்கு வருகிறேன்".

"நல்லது, பையன்களையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு பன்னிரண்டு மணிக்கு வாருங்கள். ஞானியே, வந்து என் இல்லத்தில் போஜனம் செய்யுங்கள்" என்று தேவ் சொன்னார்.

சந்நியாசி கிளம்பிச் சென்றுவிட்டார். சரியாகப் பகல் பன்னிரண்டு மன்னிக்குத் திரும்பிவந்தார். மூவரும் சாப்பிட அமர்ந்து யதேஷ்டமாக (திருப்தியடையும் வரை) உணவுண்டனர்.

சமையல் முடிந்தவுடன் பிராமணர்கள் பந்திகளாக (வரிசை வரிசையாக) உட்கார்ந்தனர். சந்நியாசி , அவருடன் வந்த இரு பையன்கள், பிராமணர்கள், அனைவரையும் விருந்தோம்பியவர் (தேவ்) திருப்தி செய்தார்.

சந்நியாசி இரண்டு பையன்களுடன் தாமாகவே போஜனத்திற்கு வந்தாராயினும், அவருடைய முதல் விஜயத்தின் நோக்கம் ஒரு மாயைத் திரையை விரித்துவிட்டது.

ஆகவே, தேவின் மனத்தை, 'யாரோ ஓர் எதிர்பாராத விருந்தாளி போஜனம் செய்வதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது' என்ற திடமான எண்ணம் கவ்விக்கொண்டது.

இவ்வாறாக போஜனம் முடிந்தது. போஜனம் செய்பவர்கள் கடைசியில் சம்பிரதாயமாக உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவேண்டிய நீரும் அளிக்கப்பட்டது. வாய், முகம் கழுவிக்கொள்ளக் குளிர்ந்த நறுமண நீரும் அளிக்கப்பட்டது. 





Thursday, 8 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்டேஷன் மாஸ்டர் இவ்வாறு தமது அறையில் சொல்லிக்கொண்டிருந்தபோதே  வெளியில் குதிரைக் குளம்படி ஒலி கேட்டது. மாம்லேதாரே  (தேவ்) அங்கு வந்துவிட்டார். குதிரையிலிருந்து இறங்கி ஸ்டேஷனுக்குள் சென்றார்.

ஸ்டேஷன் மாஸ்டரை சந்திக்க அவர் உள்ளே நுழைந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் சந்நியாசியிடம் சொன்னார், "இதோ பாருங்கள்; மாம்லேதாரே இங்கு வந்துவிட்டார்!-

"இப்பொழுது நீர் அவரிடம் என்ன சொல்லவிரும்புகிறீரோ அதைச் சொல்லலாம். தெய்வாதீனமாக அவரை சுலபமாகவே சந்தித்துவிட்டீர்கள்". பிறகு, சந்நியாசி தாம் அங்கு வந்த நோக்கத்தை மாம்லேதாருக்கு விவரித்தார்.

இருவரும் வெளியே வந்து ஒரு பெட்டியின்மீது அமர்ந்தனர். சந்நியாசி வினயமாக தேவ் அவர்களை வேண்டினார், "இந்த முயற்சி வெற்றி பெறவேண்டும்.-

"கோமாதா சம்ரட்சணம் (நன்கு காப்பாற்றுகை) தருமகாரியம். உங்களுடைய கைகளால் எடுத்துக்கொள்ளப்படாவிடின், என் போன்ற வெளியூர்காரனால் எள்ளளவும் எப்படி சாதிக்க முடியும்?-

"நீங்கள் தாலுகாவின் அதிகாரி; நானோ பசுக்கள் பட்டினி கிடைப்பதைத் தவிர்க்க, வீடுவீடாக அலையும் பிச்சைக்காரன்.-

"நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமேயில்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; கோமாதாவின் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்."

சந்நியாசியின் வேண்டுகோளைக் கேட்ட தேவ் பதில் சொன்னார், "நாங்கள் இப்பொழுதுதான் வேறொரு தர்மகாரியத்திற்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கியிருக்கிறோம். -

"ராவ்சாஹிப் நரோத்தம் சேட் என்ற கௌரவம் மிக்க சமூகத் தலைவர், ஏழைகளின் நண்பர், முனைப்புடன் செயல்படுபவர், இப்பொழுதுதான் நிதி திரட்ட ஆரம்பித்திருக்கிறார். -

"இந்த சமயத்தில் உங்களுடைய நிதி திரட்டும் முயற்சி எப்படி ஒத்துப்போகும் என்பதை நீங்களே சொல்லுங்கள். ஆகவே, இது உங்களுக்கு சாதகமான நேரம் அன்று. ஆயினும், சில காலம் கழித்துப் பார்க்கலாம். -

"நீங்கள் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இங்கு வாருங்கள். அப்பொழுது நாம் முயற்சி செய்வோம். இப்பொழுது உம்முடைய முயற்சி அனுகூலமாகாது."

சந்நியாசி கிளம்பிப் போய்விட்டார். சற்றேறக்குறைய ஒரு மாதம் கழித்து டஹாணுவுக்கு மறுபடியும் ஒருநாள் வந்தார். (தேவ் அன்று உத்தியாபன விழா கொண்டாடிக்கொண்டிருந்தார்.!)

தேவின் இல்லத்திற்கு எதிரே பராஞ்சபே என்று பெயர்கொண்ட வக்கீல் ஒருவாறு வசித்துவந்தார். தேவ் அவ் வீட்டுக்கெதிராக ஒரு குதிரை வண்டி வந்து நிற்பதையும் சந்நியாசி வண்டியிலிருந்து இறங்குவதையும் கவனித்தார்.



Thursday, 1 June 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாபா சொன்னதை ஜோக் தேவுக்கு அவ்விதமாகவே தெரிவித்தார். என்றும் சோடைபோகாத திருவாய்மொழிப்பற்றி அறிந்த தேவ் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

தேவ் முழு நம்பிக்கை வைத்திருந்தார், "பாபா கட்டாயம் வருவார். அதை நான் அனுபவிக்கும் நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும்."

ஷிர்டியைத் தவிர மூன்று கிராமங்களுக்குத்தான் பாபா செல்வார்; அதுவும் எப்போதோ ஒருமுறைதான் செல்வார். மற்றபடி நிரந்தரமாக ஷிர்டியில்தான் இருந்தார். இதையும் தேவ் நன்கு அறிந்திருந்தார்.

போகவேண்டுமென்று தோன்றினால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ரஹாதாவிற்கோ சில சமயங்களில் ருயீக்கோ  நிம்காங்விற்கோ சென்றார். மற்றபடி அவர் எப்பொழுதும் ஷிர்டியிலேயே வாசம் செய்தார்.

"இந்த மூன்று கிராமங்களைத் தவிர அவர் எப்பொழுதும் வேறெங்கும் செல்வதில்லை. அவர் எப்படி இவ்வளவு தூரம் கடந்து எனக்காக டஹாணுவிற்கு வரப்போகிறார்?-

"ஆயினும் அவர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மைத்துப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். -

"அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பிப்போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில், அவர் வானத்திலும் நிரம்பியிருக்கிறார். -

"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்!" (தேவ்வின் என்ன ஓட்டம்).

இது இப்படியிருக்க, உத்யாபன விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு சந்நியாசி தம்முடைய நோக்கம் கருதி டஹானு ஸ்டேஷன் மாஸ்டரிடம் வந்தார்.

சந்நியாசி ஒரு கோசாலைப் (பசுமடம்) பிரச்சாரகர். பசுக்களை பாதுகாக்கும் இயக்கம் ஒன்றின் தன்னார்வத் தொண்டர். அந்த இயக்கத்தின் மூலதனத்தை விருத்திசெய்யும் பொருட்டு நிதி திரட்டுவதற்காக வந்திருந்தார்.

உடையைப் பார்த்தால் வங்காளியைப் போன்றிருந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் அவருக்கொரு யுக்தி சொல்லிக்கொடுத்தார். "ஊருக்குள் செல்லுங்கள்; உங்களுடைய நிதி திரட்டும் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். -

"மாம்லேதார் (தாசீல்தார்) ஊரினுள் இருக்கிறார். நீனால் அங்கு சந்திக்கப்போகும் சேட்டுகளும் சௌகார்களும் உங்களுக்கு உதவி செய்வர். -

"மாம்லேதார் உங்களுக்கு சாதகமாக 'ஆம்' என்று சொல்லிவிட்டால், தர்மகாரியத்திற்கான நிதி சுலபமாகத் திரளும். ஆகவே, தெம்பாக ஊருக்குள் செல்லுங்கள்."


 

Thursday, 25 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாசாஹேப்  தேவ் என்று பெயர் கொண்டவர் பாபாவின் பரமபக்தர். சாயி பாதங்களில் சிறந்த நிட்டை வைத்திருந்தவர். தேவின் தாயார் தம்முடைய நன்மைக்காகவும் எல்லோரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

ஒருசமயம், தேவின் தாயார் பல விரதங்களை முடித்திருந்தார். விரதங்களை நிறைவுபெறச் செய்வதற்காக கொண்டாடப்படவேண்டிய உத்தியாயன (நிறைவு) விழா பாக்கியாக இருந்தது.

விரதங்களின் எண்ணிக்கை பூரணமடையும்போது உத்தியாபன விழா கொண்டாடப்பட வேண்டும். இல்லையெனில் விரதங்கள் பூரணமடையாமல் புண்ணியம் சேராது போய்விடும்.

இருபத்தைந்து - முப்பது விரதங்கள் முடிந்ததை முன்னிட்டு கொண்டாடப்படவேண்டிய உத்தியாபன விழாவிற்கு, நூறு-இருநூறு பிராமணர்களை தேவ் விருந்திற்கு அழைத்திருந்தார்.

உத்தியாபன விழாவிற்கு நாள் குறித்து பாபாவைத் தம்முடைய சார்பில் விருந்திற்கு அழைப்பதற்காக ஜோக் கிற்குக் கீழ்கண்டவாறு பிரார்த்தனை செய்யச்சொல்லி ஒரு கடிதம் எழுதினார்.

"நீங்கள் வாராது போனால் உத்தியாபனம் சிறப்பாக முடிவு பெறாது. ஆகவே, பணிவுள்ள சேவகனாகிய என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அருள்செய்யுங்கள்.-

"நானோ வயிற்றுப் பிழைப்புக்காக அரசாங்கத்திற்கு பணி செய்பவன். என்னால் முடிந்த அளவிற்கு ஆன்மீக சாதனைகளையும் செய்கிறேன். இது விஷயம் உங்கள் மனதிற்கே நன்கு தெரியும்.- (பி. வி . தேவ் டஹானுவில் தாசீல்தாராக வேலை செய்துவந்தார். )

"ஆகவே, டஹானுவிலிருந்து நெடுந்தூரம் ஷிர்டிக்கு வருவதென்பது என்னுடைய சக்திக்கு மீறிய செயல். ஆயினும், என்னுடைய அழைப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையும்."

பாபுசாஹெப் ஜோக் கடிதம் முழுவதையும் பாபா கேட்குமாறு படித்தபின் அவரிடம் சொன்னார், "தேவுக்கு உதவி செய்யுங்கள். உத்தியாபன விழாவைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுங்கள்."

தூய்மையான மனத்துடன் அனுப்பப்பட்ட அந்த அழைப்புக் கடிதத்தை முழுக்கக் கவனமாகக் கேட்டபின் பாபா சொன்னார், "யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.-

"எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.-

"நீரும் நானும் மூன்றாவது நபர் ஒருவரும் ஒன்றுசேர்ந்து போவோம். அவருக்கு அவ்வாறு கடிதம் எழுதுங்கள். அழைப்புக் கடிதம் எழுதியவர் சந்தோஷப்படுவார்."