valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


39 . கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்


---------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஷீர்டி ஒரு பாக்யம் பெற்ற கிராமம். புண்ணியபாவரான ஸ்ரீ சாயி நிர்வாணம் (முக்தி) அடையும்வரை வசித்த துவாரகமாயி பவனம், மஹா பாக்கியம் பெற்ற ஸ்தானம் (இருப்பிடம்) அன்றோ!

ஷிர்டியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தன்னியர்கள். எக்காரணம்பற்றியோ அவர்களுக்காக சாயி நெடுந்தூரம் வந்தார். ஷீர்டி மக்களை அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களாகச் செய்துவிட்டார்.

ஷீர்டி ஆதியில் ஒரு குக்கிராமமாக இருந்தது. சாயியின் சகவாசத்தால் மகத்துவம் அடைந்தது. பின்னர் புனிதம் பெற்று க்ஷேத்திரமாக மாறியது.

ஷீர்டி வாழ் பெண்மணிகள் தன்னியர்கள் (எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்). அவர்களுடைய அனன்னியமான சிரத்தையால், மாவரைக்கும்போதும் உரலில் தானியங்களை குற்றும்போதும் குளிக்கும்போதும் சாயியின் பெருமையைப் பாடினர்.

அவர்களுடைய பிரேமை பேறு பெற்றது. அவர்கள் பாடிய கீதங்கள் மிக உன்னதமானவை. ஈடிணையற்ற அந்தப் பாட்டுகளைக் கேட்டால் மனம் பற்றுகளிலிருந்து விடுபெறும்.

கதைகேட்பவர்களின் ஆர்வத்தைத் தணிக்கும் வகையில் மனத்திற்கு விச்ராந்தி அளிக்கும் சில பாடல்களைக் கதையுடன் கலந்து தகுந்த சமயத்தில் அளிக்கிறேன்.

சாயி, நிஜாம் ராஜ்யத்தில் சாலையோரத்திலிருந்த ஒரு மாமரத்தினடியில் காணப்பட்டார். பின்னர், சற்றும் எதிர்பாராதவிதமாக தூப்கேடாவிலிருந்து ஒரு கல்யாண கோஷ்டியுடன் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.

அந்த கிராமத்தை சேர்ந்த சாந்த்பாய் பாடீல் என்ற பெயர் கொண்ட புண்ணியவான்தான் முதன்முதலாக இந்தப் புதையலைக் கண்டுபிடித்தார். அவர்மூலம் மற்றவர்களும் சாயிதரிசனம் பெற்றனர்.

பாடீல் குதிரையை தொலைத்தது, சாயி அவருக்குப் புகைகுடிக்கச் சிலீம் கொடுத்தது, குதிரையைக் கண்டுபிடித்துக்கொடுத்தது, 






Thursday, 12 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஏற்கெனவே பல உணவுப்பண்டங்களைச் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. இந்த முறையும் எப்படிக் குடிக்கப்போகிறேன்?" இந்த வக்கிரமான சந்தேகம் என் மனத்தில் உதித்தபோது, முதல் மிடறே மிகச் சுவையுள்ளதாக இருந்தது.

நான் சங்கோசப்பட்டுத் தயங்குவதைக் கண்டா பாபா மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார், "அதை முழுக்கக் குடித்துவிடும்." மறுபடியும் அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்காதென்பதை மறைமுகமாகச் சொன்னார் போலும்!

பின்னர் அவ்வாறே நடந்தது! அன்றிலிருந்து இரண்டு மாதங்களில் பாபா தம்முடைய அவதாரத்தை முடித்துக்கொண்டு நிர்வாணம் (முக்தி) அடைந்தார்.

இப்பொழுது, அந்த மோருக்கு ஏற்படும் தாகத்தைத் தனித்துக்கொள்ளும் வழி, சாயி கதாமிருதத்தை குடிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கைகொடுப்பதற்கு வேறெதுவுமே இல்லை!

ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்! சாயிநாதரே எந்தக் கதையை ஞாபகப்படுத்துகிறாரோ அதை அடுத்தபடியாகச் சொல்கிறேன். கதை கேட்பவர்கள் தங்களுடைய கவனத்தை நீடிக்கட்டும். 


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாய்பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'ஹண்டி வர்ணனை' என்னும் முப்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

க்ஷேமம் உண்டாகட்டும்.

 


 

Thursday, 5 January 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அதை உண்டவர்கள் அனைவரும் ஒவ்வொரு கவளத்திற்கும் சாயி நாமத்தை சொல்லிக்கொண்டே அக்கினியில் ஆஹுதி (படையல்) இடுவதுபோல் வாயிலிட்டனர். ஆயினும், பாத்திரம் காலியானதே இல்லை. எப்பொழுதும் நிரம்பியே இருந்தது.

யாருக்கு எந்த உணவில் ஆசை அதிகமாக இருந்ததோ, அவருக்கு அந்த உணவு பிரேமையுடன் மறுபடியும் பரிமாறப்பட்டது. பலர் மாம்பழச் சாற்றை விரும்பினர். அவர்களுக்கு மாம்பழச் சாறு பிரிதியுடன் அளிக்கப்பட்டது.

இந்த உணவைப் பரிமாற நானா நிமோன்கரையோ மாதவராவ் தேஷ்பாண்டேவையோ பாபா தினமும் ஆணையிட்டார்.

அவர்களும் நைவேத்தியத்தை அனைவருக்கும் பரிமாறும் பணியை நித்திய நியமமாக ஏற்றுக்கொண்டனர். சிரமமான செயலாக இருந்தபோதிலும் மிகுந்த அன்புடன் அப்பணியைச் செய்தனர்.

ஒவ்வொரு பருக்கையும் மல்லிகை மொட்டுபோல் இருந்த 'ஜிரேசா' அரிசிச்சோறு அதன்மீதாக பொன்னிறத்தில் துவரம் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றப்பட்டு எல்லாருக்கும் அளிக்கப்பட்டது.

பரிமாறப்படும்போதே இவ்வுணவின் நறுமணம் காற்றை நிரப்பும். பலவித சட்டினிகளுடன்- சேர்த்து உண்ணும்போது இவ்வுணவு காரசாரமாக இருக்கும். எந்த உணவும் அரைவேக்காடாகவோ சுவை குறைவானதாகவோ இருந்ததில்லை. எல்லோரும் யதேஷ்டமாக (திருத்தியாகும் வரை) உண்டனர்.

ஆத்மானந்தமாகிய தட்டில் சேமியா - பிரேமபக்தியாகிய தட்டில் இடியாப்பம் - இவ்வுணவை ஏற்க சாந்தியையும் சுகத்தையும் ஆத்மானந்தத்தையும் அனுபவிப்பர்களைத் தவிர வேறு எவர் வருவார்!

 அன்னமும் அன்னத்தின் சுவையும் அதை உண்பவரும் ஹரியே. அன்னத்தைப் பரிமாறுபவர் தன்யர். அன்னத்தை உண்பவர், அளிப்பவர், இருவருமே தன்யர்கள்.

இந்த இனிப்புக்கெல்லாம் மூலம் குருபாதங்களில் பலமான நிட்டை. இனிப்பது சர்க்கரையோ வெல்லமோ அன்று. இனிப்பது, ஆழமாக வேர்விட்ட சிரத்தையே !

அங்கிருந்த நித்யஸ்ரீயும் (எப்பொழுதும் உறையும் செல்வம்) நித்திய மங்களமும் அவ்வாறே! பாயசமும் ரவாகேசரியும் பல உணவுப்பண்டங்களின் கூட்டுக்கலவையும் ஏராளமாக இருந்த இடத்தில், தட்டை எதிரில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த பிறகு, தயக்கம் காட்டுவதோ முன்னும் பின்னும் பார்ப்பதோ முட்டாள்தனமான காரியம்.

நானாவிதமான உணவுப்பண்டங்களை உண்டபிறகும் மக்களுக்கு கொஞ்சம் தயிர்சாதம் சாப்பிடவில்லையென்றால் வயிறு நிரம்பிய திருப்தி ஏற்படாது. குடிப்பதற்கு கொஞ்சம் மோராவது கேட்பார்கள்!

ஒருசமயம் ஒரு லோட்டா சுத்தமான மோர் குருராயரின் கையாலேயே நிரப்பப்பட்டு பிரேமையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. லோட்டாவை என் உதடுகளுக்கிடையில் வைத்தபோது,

வெள்ளைவெளேரென்றிருந்த மோரைக் கண்ணால் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். லோட்டாவை உதடுகளில் வைத்தபோதே ஆத்மானந்த புஷ்டியை அடைந்தேன். 




Thursday, 29 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


உள்ளே, சுவரிலிருந்த மாடத்தில் சாய்ந்துகொண்டு பாபா உட்கார்ந்திருப்பார். சாப்பிடுபவர்கள் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் கண்கவர் பந்தியாக உட்கார்ந்திருப்பர். சகலரும் ஆனந்தத்தின் உச்சியில் இருப்பார்கள்.

எல்லாரும் தம் தம் நைவேத்தியத்தை சமர்த்த சாயியின் முன்பு நகர்த்துவர், சாயியும் ஒரு பெரிய தட்டில் எல்லாப் பிரசாதங்களையும் தம்முடைய கைகளாலேயே ஒன்றாகக் கலப்பார்.

பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவது மகா பாக்கியம். உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும்; வாழ்க்கை பயனுள்ளதாக ஆகும்.

வடை, அப்பம், பூரி, சான்ஜோரி - சில சமயங்களில் சிகரண், கர்கா, பேணி, பலவித பாயசங்கள் - பாபா இவையனைத்தையும் ஒன்றாக கலந்துவிடுவார்.

இந்தக் கூட்டுக்கலவையை பாபா இறைவனுக்கு அர்ப்பணம் செய்வார். பின்னர், சாமாவையும் நிமோன்கரையும் தட்டுத் தட்டாக நிரப்பிப் பரிமாறச் சொல்வார்.

பக்தர்களை ஒவ்வொருவராக கூப்பிட்டுத் தம்மருகில் உட்காரவைத்து பரமானந்தத்துடனும் பிரீதியுடனும் தொண்டைவரை நிரம்புமாறு போஜனம் செய்விப்பார்.

சப்பாத்திகளையும் பருப்பு சூப்பையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நெய் கலந்து சுவையூட்டி எல்லாருக்கும் தாமே பரிமாறுவார்.

அந்தப் பிரேமையின் கலவையைச் சுவைத்தபோது - ஆஹா! அந்த பிரமானந்தத்தை யாரால் வர்ணிக்க முடியும்! அதை உண்டவர்கள் வயிறு நிரம்பிய பிறகும் விரலை நக்கிக் கொண்டே போவார்கள்!

சில சமயங்களில் மாண்டாவும் பூரணப் போளியும் - சில சமயங்களில் சர்க்கரை ஜீராவில் தோய்த்த பூரி - சில சமயங்களில் பாஸந்தி, ரவாகேசரி, சான்ஜோரி - சில சமயங்களில் வெள்ளம் கலந்து செய்த சப்பாத்தி - இத்தனை வகைகளில், சுவையான உணவை பாபா அளித்தார்.

சில சமயங்களில், வெண்மையான அம்பேமொஹொர் அரிசிச்சாதம், அதன்மேல் பருப்பு சூப்பு, அதற்கும் மேல் சுவை மிகுந்த நெய், சுற்றிலும் பலவிதமான காய்கறிகள் பரிமாறப்படும்.

ஊறுகாய், அப்பளம், ரைத்தா, பலவித பஜ்ஜிகள் - புளித்த தயிர், மோர், பஞ்சாமிருதம் - இவையும் எப்பொழுதாவது இருந்தன. இந்த திவ்வியமான அன்னத்தை உண்டவர் தன்யராவார் (எல்லாப் பேறுகளையும் பெற்றவராவார்).

எங்கே சாயிநாதரே பரிமாறினாரோ அங்கே சாப்படைப் பற்றி என்ன சொல்ல முடியும்! பக்தர்கள் அங்கே வயிறு புடைக்கும்வரை உண்டு திருப்தியுடன் ஏப்பம் விட்டனர்.

ஒவ்வொரு கவளமும் சுவையாகவும் பசியைத் தீர்ப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் புஷ்டியளிப்பதாகவும் அமைந்தது. பிரேமையுடன் அளிக்கப்பட்ட புனிதமான இவ்வுணவு மிகச் சுவையாக இருந்தது. 




Thursday, 22 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நானா சொன்னார், "குதிரை வண்டி அமர்த்தியபோது நேராக ஷிர்டிக்குச் செல்லவேண்டுமென்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது. -

"தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார்". -

"நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, ஷிர்டியிலிருந்து திரும்பிவரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -

"ஷீர்டி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால், பொறுமையிழந்து தத்தர் தரிசனம் செய்துகொள்ளலாம்' என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டேன். -

"பின்னர், கோதாவரி நதியில் ஸ்நானம் செய்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறிவிட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில், பிரயத்தனம் செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப் போட்டேன்".

பாபா நானாவைக் கண்டித்தார், "உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதை புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக்கொண்டீர். -

"தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீர் எவ்விதமான பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக்  காத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா என்ன!"

இப்பொழுது மறுபடியும் ஹண்டியைப் பற்றி பேசுவோம். ஓ, மசூதியில் சாயியுடன் அமர்ந்து உண்ட அந்த மதிய உணவு எத்தனை புனிதமானது ! சாயி, பக்தர்களின்பால் எவ்வளவு பிரேமை செலுத்தினார்!

ஒவ்வொரு நாளும் பாபாவுக்குப் பூஜையும் ஆரத்தியும் முடிந்து பக்தர்கள்  தம் தம் வீடுகளுக்குத் திரும்பும்போது,-

பாபா வெளியே வந்து மசூதியின் கைப்பிடிச்சுவர் முனையில் நிற்பார். பக்தர்கள் அனைவரும் முற்றத்தில் காத்திருப்பர். பிறகு, அவர்கள் ஒவ்வொருவராக பாபாவை வணங்கிவிட்டுச் செல்வர்.

பாதங்களில் வணங்கிவிட்டு எழுந்து எதிரே நின்றபோது பாபா ஒவ்வொருவருக்கும் நெற்றியில் உதீ இடுவார்.

"இப்பொழுது, குழந்தைகள் பெரியோர்கள் எல்லாரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்". பாபாவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைவரும் வீடு திரும்புவர்.

பாபா திரும்பியவுடன் படுதா இறக்கப்படும். தட்டுகளும் கரண்டிகளும் கணகணவென்று ஒலிக்கும். பிரசாத விநியோக நிகழ்ச்சி ஆரம்பிக்கும்.

சாயியின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிது கிடைக்கும் என்ற ஆசையுடன் சில பக்தர்கள் கீழே முற்றத்தில் காத்திருப்பர். 




Thursday, 15 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இக் கூட்டத்தில், பாபாவிடம் மிகுந்த பிராயம் கொண்ட உயர்ந்த பக்தரான சந்தோர்க்கரும் இருந்தார். தரிசனம் செய்ய ஆர்வமுற்று தம் சகலபாடி பினீவாலேயுடன் வந்திருந்தார்.

சாயிநாதர்க்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருவரும் அவருடைய முன்னிலையில் அமர்ந்தனர். குசலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது பாபா திடீரென்று கோபமடைந்தார். 

பாபா கேட்டார், "நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாள்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா?-

என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்த பிறகு இந்த கதியைத்தான் அடைந்தீரா? ஓ, உம்முடைய மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்! அனைத்தையும் என்னிடம் விவரமாகச் சொல்லும்."

இதைக் கேட்ட நானா தலையைக் குனிந்துகொண்டார். கோபத்தின் காரணத்தை ஆராய ஆரம்பித்தார். அவரால் எதையும் யூகிக்க முடியவில்லை; மனம் குழம்பினார்.

என்ன தவறு செய்தோம் என்று அவருக்கு விளங்கவில்லை. கோபத்திற்கு காரணமும் தெரியவில்லை. ஆனால், பாபா காரணமின்றி  எவர் மனத்தையும் புண்படுத்தமாட்டார்.  

ஆகவே, அவர் பாபாவின் பாதங்களை பற்றிக்கொண்டு பலவிதமாக கெஞ்சினார். கடைசியாக தம்முடைய அங்கவஸ்திரத்தை பாபாவின் சன்னிதியில் விரித்து, "ஏன் என்மீது இவ்வளவு கோபம் கொள்கிறீர்?" என்று கேட்டார்.

பாபா நானாவைக் கேட்டார், "என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக்  கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?-

"நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தடைந்தீர்? வழியில் என்ன நேர்ந்தது? நீர் வழியில் எங்காவது இறங்கினீரா, அல்லது குதிரைவண்டியில் நேராக இங்கு வந்தீரா?-

"வழியில் வினோதமாக ஏதாவது நடந்ததா? எல்லாவற்றையும் விவரமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் எங்கு, என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்லும்".

இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. அவருடைய முகம் கவிழ்ந்தது. உள்ளூர அவமானமாக இருந்தாலும், நானா விவரமனைத்தும் பாபாவிடம் சொன்னார்.

இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.

அசத்தியம் சாயியிடத்தில் செல்லாது என்பதை நிச்சயம் செய்துகொண்டார். ஆகவே, அவர் நடந்ததனைத்தையும் பாபாவிடம் விவரமாகச் சொன்னார்.

குருவை வஞ்சிப்பது மஹா பாதகச் செயல். அதிலிருந்து விடுபடவேமுடியாது. இதை நன்கு அறிந்த நானா, ஆரம்பித்திலிருந்து கடைசிவரை என்ன நடந்ததென்பதை பாபாவிடம் சொன்னார். 




Thursday, 1 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களின் எண்ணிக்கைப் பெருக பெருக, பாபாவுக்கு ராஜோபசாரங்கள் செய்யப்பட்டன. பல இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, தலைக்குமேல் குடை பிடிக்கப்பட்டது. சாமரம் வீசப்பட்டது.

அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. மக்கள் பாபாவைத் தோத்திரம் செய்யவும் புகழ்பாடவும் ஆரம்பித்தனர். ஷீர்டி, புனிதப் பயணிகளுக்குப் புண்ணிய க்ஷேத்திரம் ஆகியது.

அந்த நிலையில் ஹண்டிக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. பக்கீர்களும் ஏழைஎளியவர்களும் வயிறார உண்டு திருப்தியடைந்த பிறகும், உணவு மீந்துபோகும் அளவிற்கு நைவேத்தியம் வந்து குவிந்தது.

இப்பொழுது இன்னுமொரு காதை சொல்கிறேன்; கேட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பக்தர்கள் ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடும்போது பாபா அகம் குவிந்தார்.

ஜாதியே இல்லாதவருடைய ஜாதியைப் பலர் பலவிதமாக அனுமானம் செய்தனர். சிலர் சாயியே பிராமணர் என்று நினைத்தனர்; சிலர் முஸல்மான் என்று நினைத்தனர்.

அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்த ஜாதியில் எப்பொழுது பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் பிராமணர்களா முஸ்லீம்களா? இவற்றில் எதுவமே தெரியாமல் கற்பனையில் அனுமானம் செய்தனர்.

அவர் முஸ்லீம் என்ற அனுமானத்தை ஏற்றுக்கொண்டால், அவர் எப்படி மசூதியில் அக்கினி வழிபாட்டை அனுமதித்தார்? துளசி பிருந்தாவனம் இருந்திருக்குமா? மணி அடிப்பதை எப்படி சகித்துக்கொண்டார்?

சங்கு ஊதுவதையும் தாளம், மிருதங்கம் போன்ற இன்னிசை வாத்தியங்களுடன் நடந்த கதாகீர்த்தனத்தையும் ஹரிநாம கோஷத்தையும் மசூதியில் அனுமதித்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், மசூதியில் உட்கார்ந்துகொண்டிருக்கையில் நெற்றியில் சந்தனம் இட அனுமதித்திருப்பாரா? சமபந்தி போஜனம் செய்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், தம்முடைய பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்து இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்திருப்பாரா? அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தனவே!

ஸ்னானம் செய்தபிறகு பட்டுப் பீதாம்பரங்களை தமக்கு அணிவிக்க அனுமதித்திருப்பாரா? ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒருகணமும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இது சம்பந்தமான ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மிக வினயமாக அதை உங்களுக்கு சொல்கிறேன். அமைதியான சித்தத்துடன் கேளுங்கள்.

ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. பாபா அப்பொழுதுதான் லெண்டியிலிருந்து திரும்பிவந்து மசூதியில் அமர்ந்திருந்தார். பக்தர்களும் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர்.