valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 1 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பின்னர் பக்தர்கள் ஒன்று சேர்ந்து சாவடிக்குள் செல்வர். தாத்யா, பாபாவின் ஆசனத்தைத் தயார் செய்துவிட்டு பாபாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்து உட்கார வைப்பார்.

சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய இந்த உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன் அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும்.

மகிழ்ச்சி பொங்கும் இதயத்துடன் திவ்வியமான ஆடைகளை அணிவித்தபின் மக்கள் பக்தியுடன் பூஜை செய்வர். அவருக்கு மாலைகளை அணிவித்தபின் ஆரதிப் பாட்டை உறக்கப் பாடுவர்.

மணம் கமழும் சந்தனத்தை இடுவர். கைகளில் வாசனை திரவியங்களை பூசுவர். அழகான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தை தலைமேல் பொருத்துவர்.

சிலசமயங்களில் பொன்னாலான கிரீடம்; சிலசமயங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீலி செருகப்பட்டதுமான தலைப்பாகை. தொண்டைக்கு நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர்.

பிறகு கழுத்திற்கு நல்முத்துமணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொலித்த அழகே அலாதியானது.

நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும்.

நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் நழுவினால், இரண்டு பக்கங்களிலிருந்தும் ஜாக்கிரதையாகவும் யாரும் அறியாதவாறும் பக்தர்களால் பிடித்துக்கொள்ளப்பட்டது.

அதுபோலவே, தங்கக் கிரீடத்தையோ தலைப்பாகையையோ பின்னாலிருந்து பக்தர்கள் மெலுக்காகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொண்டனர்.

தப்பித்தவறி தலையிலிருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்க வேண்டும் என்ற எல்லையில்லாத பிரேமையும் ஆசையும் அவர்களுக்கு இருந்தது.

சார்வார்ந்தர் ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாமலிருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து, விருப்பப்பட்டே பாபா மௌனமாக இருப்பார்.

பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவர்க்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்?

ஆயினும், பக்தர்கள் பாபாவுக்கு நானாவிதமாக அலங்காரங்கள் செய்தனர். நெற்றியில் மனோஹரமான சந்தனத் திலகம் இட்டனர்; குங்குமப் போட்டும் இட்டனர். 





Thursday, 25 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கிராம மக்களும் பாபாவின் பக்தர்களும் பிரீதியுடன் தரிசனம் செய்ய வந்தனர். அந்த வேளையில் பாபாவின் திருமுகம் அருணன் (உதயகால சூரியன்) உதித்ததுபோல் செந்நிற ஒளியால் அற்புதமாக ஜொலித்தது.

அந்தத் தேஜோவிலாசத்தைப் பார்த்தவர்களின் கண்கள் வியப்பால் விரிந்து மலர்ந்தன. அவர்களுடைய மனம் பிரேமையால் உள்ளமடைந்தது. உலகியல் துன்பங்கள் அனைத்தும் ஒழிந்ததுபோல் உணர்ந்தனர்.

ஓ, பாலசூரியனைப் போன்ற அந்த திவ்விய தேஜஸும் அற்புதமுந்தான் என்னே! அவருக்குமுன்னால் பேரிகைகள் நெடுநேரம் முழங்கின.

வடக்குப் பார்த்தவாறு, ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் தம்முடைய வலக்கையை மேலும் கீழும் மீண்டும் மீண்டும் ஆட்டிக்கொண்டே பாபா நிற்பார்.

பாபாவின் திருமுகவொளிவட்டம் அப்பொழுது தாழம்பூவின் நடுப்பாகம் போல் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக ஜொலிக்கும். இந்த அழகை வாக்கால் வர்ணிக்க இயலாது; கண்களால் பார்த்துத்தான் அனுபவிக்கமுடியும்.

மகால்சாபதி ஆவேசம் பிடித்து நடனமாட ஆரம்பித்த பிறகும், பாபா ஒருமுகமான நிலையிலிருந்து கலையாதது அனைவர்க்கும் ஆச்சரியத்தை விளைவித்தது.

ஊர்வலத்தில் மகால்சாபதி பாபாவின் கப்னியின் நுனியைப்பிடித்துக்கொண்டு அவருக்கு வலப்பக்கத்தில் நடந்து வருவார். பாபாவின் இடப்பக்கத்தில் தாத்யா கோதே பாடீல் ஒரு லாந்தரைக் கையில் பிடித்துக்கொண்டு வருவார்.

ஓ, அந்த உற்சவந்தான் எவ்வளவு அற்புதமானது! அந்தப் பிரேம பக்தி எவ்வளவு உன்னதமானது! அந்தக் கோலாகலத்தை காண்பதற்குச் சான்றோர்களும் செல்வர்களும் அங்கு ஒன்று கூடினர்.

பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலித்த காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்த்தனர். ஆனந்தத்தால் நிரம்பினர்.

எல்லையற்ற பிரேமபக்தியாலும் இதயத்தை மூழ்கடித்த ஆனந்தத்தாலும் நிரம்பியவர்களாய் மக்கள் இருமருங்கிலும் மெதுவாக ஊர்வலத்தில் நடந்தனர்.

வருங்காலத்தில் யாருமே இந்தக் கோலாகலமான சாவடி ஊர்வலத்தைக் கண்களால் காணமுடியாது. அந்த நாள்கள் கடந்துவிட்டன. அக் காலம் மலையேறிவிட்டது. பழைய நினைவுகளை அசைபோட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

இவ்விதமாக, வாத்தியங்களின் இன்னிசைக்கும் அவ்வப்பொழுது எழும்பிய ஜெயகோஷத்திற்கும் இடையே, பாபா சாவடியிலிருந்த ஆசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெய்வங்களுக்குரிய உபசாரங்கள் செய்யப்பட்டன.

தலைக்குமேல் வெள்ளைத் துணியொன்று விதானமாகக் (கூரை போன்ற விரிப்பு) கட்டப்படும். தொங்கும் சரக்கொத்து விளக்குகளும் சாதாரண விளக்குகளும் ஏற்றப்படும். பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் விளக்குகளின் ஒளி பிரதிபலிக்கும். சாவடி பார்ப்பதற்கு ஜெகஜோதியாக காட்சியளிக்கும். 




 

Thursday, 18 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


வாத்தியங்கள் இன்னிசை முழங்கின. பக்தர்கள் பாபாவுக்கு ஜெயஜெயகோஷம் கர்ஜித்தனர். இவ்வாறு பக்தர்களின் கூட்டம் நடந்துசென்றபோது அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஜெயகோஷத்தில் பிரேமையுடன் கலந்துகொண்டனர்.

ஹரிநாமமும் அவ்வப்பொழுது கர்ஜிக்கப்பட்டது. பக்தர்களின் சம்மேளனம் சேகண்டி, மிருதங்கம், ஜால்ரா இவற்றின் ஒலிகளுக்கேற்ப நடைபோட்டுச் சென்றது.

ஊர்வலம் தெருமுனையை அடையும் சமயத்தில், ஆனந்தமாக ஜெயஜெயகோஷம் போட்டுகொண்டு சாயிக்கு முன்னால் செல்லும் பஜனை கோஷ்டி நிற்கும்.

சேகண்டிகள், ஜால்ராக்கள், டோலக்குகள் போன்ற வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒலிக்கப் பக்தி பாவத்துடன் பாடப்பட்ட பஜனை இசையின் ஆரவாரம் உச்சகட்டத்தை எட்டும். சாயி நாம கோஷம் இவற்றையும் மீறி ஒலிக்கும்.

பஜனை இசையால் கிளர்ந்த ஆனந்தம் நிரம்பியவர்களாய் இருமருங்கிலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆண்களும் பெண்களும் எழுப்பும் சாயி நாம கோஷம் வானைப் பிளக்கும்.

அவர்களுக்கு மேலிருந்த வானமே இசையால் நிறைந்தபோது மக்கட்கூட்டம் அகமகிழ்ச்சியால் பொங்கியது. இவ்விதமாகச் சாவடி ஊர்வலம் அனைவரும் கண்டு அனுப்பிவைக்கவேண்டிய கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த விழாக்கோலத்திற்கும் சோபைக்கும் ஈடிணையே இல்லை.

சாவடியின் முன்பாக பாபா நின்றபோது அவருடைய திருமுகத்தின் சோபை, உருக்கிய பொன் போன்றும், உதயகாலத்திலும் அஸ்தமனகாலத்திலும் வானை நிரப்பும் சூரியனுடைய பிரபையைப் போன்றும் செந்நிற ஒளி வீசியது.

அந்நேரத்தில் அவருடைய திருமுகத்திலிருந்து வீசிய ஒளி உதயசூரியனின் பிரபையை ஒத்திருந்தது. இக் காட்சி, பிரபஞ்ச சக்தியே அவருடைய திருமுகத்தில் ஒளியாக வெஸ்ஸியது போன்றிருந்தது. இந்த லாபத்தை யாராவது விட்டுவிடுவார்களா என்ன?

அந்த சமயத்தில் அவரை தரிசனம் செய்தவர்கள் தன்யர்கள். அவர் வடக்கு நோக்கி யாரையோ கூப்பிடுபவரை போல ஒருமுனைப்பட்ட மனத்துடன் நின்றபோது அவருடைய திருமுகம் செந்நிறத்தில் ஜொலித்தது.

இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்திற்கு நடுவே மஹராஜ் ஆனந்தம் நிரம்பியவராகத் தம்முடைய வலக்கையை மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் ஆட்டுவார்.

பக்தர்களில் சிரேஷ்டராகிய (தலை சிறந்தவராகிய ) ஹரி சீதாராம் தீக்ஷிதர் ஒரு வெள்ளித்தட்டு நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு பாபாவின் மேல் மறுபடியும் மறுபடியும் பூமாரி பொழிவார்.

இவ்வாறாக, காகாசாஹெப் தீக்ஷிதர் 'குலால்' (சிவப்பு வர்ணாப் பொடி) கலந்த ரோஜாக்களை பிரேமையுடன் பாபாவின் சிரத்தின்மீது மீண்டும் மீண்டும் பொழிவார்.

குலால் கலந்த ரோஜாக்களை அவர் பொழியும்போது கஞ்சிராக்களும் ஜால்ராக்களும் சேகண்டிகளும் பேரிகைகளும் ஒருசேர ஒலித்து ஆரவாரம் செய்யும். 




Thursday, 11 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

வில் போன்று வளைந்தும் வட்டமாகவும் பலவிதமான வடிவமைப்புகளில் அமைந்த, சிறிய மற்றும் பெரிய கொம்புகள் ஊதப்படும். சிலர் எக்காலம் ஊதினர். சிலர் ஜால்ராவாலும் சிலர் சேகண்டியிலும் தாளம் போட்டனர். கைத்தாளம் போட்டுகொண்டு வந்தவர்கள் அநேகம்.

மிருதங்கங்களையும் வீணைகளையும் 'ஜன்ஜன்' என்றொலித்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் பிரேமையுடன் வரிசைவரிசையாகப் பஜனையுடன் சேர்ந்து ஊர்வலமாக நடந்தனர். சாயி நாம கோஷம் வானைப் பிளந்தது.

சிலர் பதாகைகளை (விருதுகொடிகளை) நிலைதவறாது கவனமாகப் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் நடந்தனர். சிலர் கருடன் சித்திரம் வரையப்பட்ட கொடிகளை ஏந்திப் பெருமையுடன் நடந்தனர். இவ்வாறாக, மக்கள் அனைவரும் சந்தோஷமாக பஜனை பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சகல ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியுடன், பறக்கும் பதாகைகளுக்கும் உரத்த மேளதாளச் சத்தத்திற்கும் கொம்புகளின் சத்தத்திற்கும் சியாமகர்ண செய்த குளம்படிச் சத்தத்திற்கும் ஜெய கோஷச்  சத்தத்திற்கும் இடையே, ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வளவு ஆரவாரத்திற்கும் இன்னிசை வாத்தியங்களின் பேரொலிக்கும் நடுவே பாபா மசூதியை விட்டுக் கிளம்புவார். அவர் படியை மிதித்தவுடன் வாயில்காப்போர் பாபாவுக்கு கட்டியங்கூறுவர்.

சேகண்டிகளும் மிருதங்கங்களும் கஞ்சிராக்களும் பக்கவாத்யங்களாக ஒலிக்க, சிலர் வீணை வாசித்தனர்; சிலர் சப்லாகட்டையால் தாளம் போட்டனர்; பக்த மண்டலி பஜனை பாடியது. பக்த சம்மேளனம் பிரேமையினால் பொங்கியது.

பல பக்தர்கள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்திக்கொண்டு ஆனந்தமாக ஊர்வலத்தில் நடந்து வந்தபோது, சிலர் பாபாவின் இருபக்கங்களிலும் சவரியால் (சாமரத்தால்) தலைக்குமேல் விசிறிக்கொண்டு வந்தனர்.

சிலர் முன்னோடிகளாகச் சென்று ஒற்றையாகவும் இரட்டையாகவும் நடைவிரிப்புகளை விரித்தனர். பாபா விரிப்பின்மீது மெதுவாக நடந்து சென்றார். சிலர் அவருடைய கைகளை பிடித்துக்கொண்டனர். சிலர் சவரியால் அவருக்கு விசிறினர்.

தாத்யா சாஹேப் இடைக்கையைப் பிடித்துக்கொள்வார். மகால்சாபதி வலக்கையைப் பிடித்துக்கொள்வார். பாபு சாஹேப்  ஜோக் ஒரு பெரிய குடையை பாபாவின் தலைக்குமேல் உயரமாகப் பிடித்துக்கொள்வார். இவ்வாறு பாபா சாவடியை நோக்கி ஊர்வலமாக செல்வார்.

சியாமகர்ண என்ற பெயர்கொண்ட தாமிரவர்ணக் குதிரை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கால்களில் கட்டிய சதங்கைகள் 'ஜன்ஜன்' என்று ஒலிக்க வழிவகுத்துக்கொண்டு நடந்துசெல்லும்.

அதிகார கோலேந்திகள் அவ்வப்பொழுது சாயி நாம கோஷம் செய்துகொண்டு முன்னால் சென்றனர். குடையேந்துபவர் பெரிய குடையொன்றை ஏந்திச் சென்றார். சிலர் சவரிகளை ஏந்திச் சென்றனர். 




Thursday, 4 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலர் சேகண்டியைக் கையில் எடுத்துக்கொள்வர்; சிலர் சப்பளாக்கட்டையால் கைத்தலம் போடுவர். சிலர் மிருதங்கத்துடனும் வேறு சில கஞ்சிராவுடனும் பஜனையில் சேர்ந்துகொள்வர். இவ்வாறாக, பஜனை கோலாகலமான கூட்டிசையாக அமையும்.

சமர்த்த சாயி தம்முடைய காந்தசக்தியால் இரும்பு உலோகமான பக்தர்களை அவர்கள் அறியாதவாறு இழுத்தார்.

தீவட்டி ஏந்துபவர்கள் முற்றத்தில் தங்களுடைய தீவட்டிகளைத் தயார் செய்துகொள்வர்.  சிலர் பல்லக்கை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருப்பர். வாயிலில் வாயில்காப்போர் ஜெயகோஷமிட்டுக் கட்டியங்கூறுவர்.

மக்கள் கூடுமிடம் மாவிலைத் தோரணங்களாலும் உயர்ந்து பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். சிறுவரும் சிறுமியரும் புத்தாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் ஜம்பமாக நடமாடுவர்.

மசூதியைச் சுற்றி வரிசைவரிசையாக தீபங்கள் ஏற்றிவைக்கப்படும். 'சியாமகர்ண' என்ற பெயர்கொண்ட அருமையான குதிரை பூரணமாகச் சிங்காரிக்கப்பட்டு வாயிலில் தயாராக நின்றுகொண்டிருக்கும்.

தாத்யா பாடீல் தம்முடைய நண்பர்களுடன் திடீரென்று வந்து, பாபாவுக்கு அருகில் அவருடன் கிளம்புவதற்குத் தயார் நிலையில் உட்கார்ந்துகொள்வார்.

பாபா தாம் கிளம்புவதற்குத் தயாராகிவிட்டாலும், தாத்யா பாடீல் வரும்வரை தாம் இருக்குமிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருப்பார்.

தாத்யா பாடீல் பாபாவின் அக்குளுக்குக் கீழ் கைகொடுத்து எழுந்திருப்பதற்குக் கைலாகு கொடுத்த பிறகுதான், பாபா சாவடிக்குச் செல்வதற்கு கிளம்புவார்.

தாத்யா பாடீல் பாபாவை மாமாவென்று அழைத்தார். அவர்களுடைய பரஸ்பர பிரேமை அவ்வாறு இருந்தது. அவர்களிடையே நிலவிய நெருக்கமான உறவிற்கு ஈடினையே இல்லை.

உடலின் மேல் எப்பொழுதும் அணியும் கப்னி, அக்குளில் இடுக்கப்பட்ட சட்கா, கைகளில் புகையிலையும் சிலீமும், தோளின்மேல் ஒரு துணி.

பாபா இவ்வாறு தயாரானவுடன் தாத்யா பாடீல் அவருக்கு ஒரு ஜரிகைக்காரை போட்ட அழகான சால்வையை அணிவிப்பார்.

சுவரோரமாக விறகுகுச்சிகள் ஒரு கட்டாக இருக்கும். பாபா தமது வலக்கால் கட்டைவிரலால் அதை அப்பொழுதுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.

உடனே தமது வலக்கையால் ஜுவாலையை அணைத்துவிடுவார். அதன் பிறகு சாவடிக்குப் போகக் கிளம்புவார்.

சாயி கிளம்பும்போது இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரம்பிக்கும். தீவட்டிகளும் சந்திரஜோதிவாணங்களும் நான்கு பக்கங்களிலும் ஏற்றப்படும். 




Thursday, 28 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கரும்பைச் சக்கையாய்ப் பிழிவது போன்ற ஆயாசம் தரும் விவரங்கள் தற்பொழுது போதும்! நமக்கு உடனே வெள்ளம் வேண்டும்! முன்னரே குறிப்பறிவிக்கப்பட்ட ரசமான கதையைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்கிறீர்கள்.

கேட்பவர்களின் இந்த உணர்வை நன்கு அறிந்த நான், நான் சொல்லப்போகும் அற்புதமான கதையை அவர்கள் கவனத்துடன் கேட்கும் வகையிலும் அவர்களுடைய ஆர்வம் மழுங்காத வகையிலும் கதாம்சம் இல்லாத பொதுவான தத்துவ விவரணத்தை இப்பொழுது நிறுத்திக்கொள்கிறேன்.

பாமரனும் மந்தமதி படைத்தவனுமாகிய நான் சொற்களைக் கோர்த்துச் செய்யுள் படைக்கும் திறமை பெற்றவனில்லை. நான் எழுதுவது, என்னுடைய பேனாவை அவருடைய கையால் பிடித்துக்கொண்டு சாயி என்னை எழுதவைப்பதுவே.

சாயி எனக்கு புத்தியைக் கொடுத்திராவிட்டால், அவருடைய சரித்திரத்தை எழுத நான் யார்? ஒரே அவருடைய கதையைச் சொல்லி என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்கிறார்.

நான் ஏற்கெனவே உறுதியளித்தபடி, சாவடி, கண்டி, பிரசாத விநியோகம் இவற்றைப்பற்றிய கதையை இப்பொழுது தொடர்வோமாக. கதையைக் கவனத்துடன் கேளுங்கள்.

சம்பந்தப்பட்ட கதைகள் ஏதாவது ஞாபகத்திற்கு வந்தால் அவற்றையும் சொல்கிறேன். விவரணத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

சாயியின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை. கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை. மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். சாயிபாதங்களில் சத்பாவமும்  வளரும்.

இப்பொழுது நாம் முதலில் சாவடி வர்ணனை செய்வோம். அலங்கார அணிவகுப்புத் திருவிழாவைபற்றிச் சொற்சித்திரம் ஒன்று வரைவோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நியமமாக பாபா சாவடியில் உறங்கினார்.

ஒருநாள் மசூதியில் உறங்கினர்; மறுநாள் சாவடியில் உறங்கினார். மஹாசமாதி அடையும்வரை பாபா இரவில் உறங்கும் கிரமம் இவ்வாறு இருந்தது.

பின்னர், 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து சாவடி வழிபாடும் பஜனையும் பூஜையும் தொடங்கின.

சாவடியில் நடந்த திருவிழாவை என் புத்திக்கு எட்டியவாறு விவரிக்கிறேன். சாயியின் கிருபை இதற்குத் தேவையான அருள்வெளிபாட்டைத் தந்து என்னுடைய முயற்சியைப் பூரணமாகப் பலனுள்ளதாகச் செய்யும்.

சாவடியில் உறங்கும் முறைநாளன்று பஜனை மண்டலி மசூதிக்கு வரும். பிற்பகல் வேளையிலிருந்தே சபாமண்டபத்தில் பஜனை ஆரம்பித்துவிடும்.

பின்புறத்தில், துளசி பிருந்தாவனத்திற்கு இடப்பக்கத்தில் ஒளிவீசும் ரதம் நிற்கும். பாபா முன்னால் அமர்ந்திருப்பார். மத்தியில் பஜனை பாடும் பக்தர்கள் அமர்ந்திருப்பர்.

ஹரிபஜனையில் ஈடுபாடுகொண்ட ஆடவரும் பெண்டிரும் நேரத்தோடு வந்து சபாமண்டபத்தில் தம் தம் இடங்களில் அமர்ந்துகொள்வர். 




Thursday, 21 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்யவாஸம் செய்வாள். சப்தாஹமாகப்  (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.

இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சோ உங்களுக்கு சமுசயங்களை (ஐயங்களை) விளைவிக்கலாம். என்னுடைய, வாய்மூலமாக சாயியே இதைச் சொல்கிறார். அஆக்வே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.

சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்கு கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும்.

ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களை சீந்துவார்?

இன்பமும் துன்பமும்  மனத்தின் விகாரங்கள், சத்சங்கம் நம்மை இந்த நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.

துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்து சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.

பிராரப்த கர்மத்தினால் (முன்ஜன்ம வினைகள்) விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும்! ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும்  பக்தன் சுலபமாக தவிர்த்துவிடலாம்.

பிராரப்த கர்மத்தின் விளைவுகளிலிருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.

துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவை! முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கபோகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்!

அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும், அவ்வப்பொழுது ஷிர்டிக்கு பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.

சாயி, சாயி என்று நாமஸ்மரணமும் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரசரணமும். ஆகவே, அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.

கள்ளங்கபடமற்ற பிரேமைகளுடன் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜை செய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள்.