valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதை நிறைவேற்றும் வகையில் ஒரு திருடு பற்றிய ரம்மியமான கதையை விவரிக்கிறேன்; ஆசுவாசமாகக் கேளுங்கள்.

இது வெறும் கதையன்று; ஆத்மானந்த தீர்த்தம். குடித்தால், மேலும் குடிக்க வேண்டுமென்கிற ஆவல் பெருகும். அதைக் தணிக்க இன்னும் ஒரு கதை சொல்லப்படும்!

ரசமான இக் கதையைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சம்சாரக் கடலின் சிரமங்கள் நிவாரணமடையும். சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.

தன்னுடைய நல்வாழ்வை விரும்பும் பாக்யசாலியான மனிதன், சாயியின் கதைகள் சொல்லப்படும்போது பயபக்தியுடன் கேட்கவேண்டும்.

ஞானிகளின் மஹிமை அளவிடற்கரியது; எவராலும் முழுமையாக விவரிக்க முடியாதது. நிலைமை இவ்வாறிருக்க, என்னுடைய புலமை எந்த மூலைக்குப் போதுமானது? இதை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.

கதை சொல்பவரின் இந்தச் சிறிய 'நான்' எனும் எண்ணமே சாயிக்குப் போதுமானது. கதை சொல்பவரின் கையை லாவகமாகப் பிடித்துக்கொண்டு பக்தர்களின் நன்மை கருதி தம்முடைய உன்னதமான குணங்களை எழுதவைத்துவிடுகிறார்.

அவர் முழுமுதற்பொருளாகிய நீர்நிலையில் பிரம்ம ரூப முத்துக்களை உன்ன விரும்பும் அன்னப்பறவை. 'நானே அவன்; அவனே நான்' என்ற நிலையில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் ஒப்பற்ற சாகசங்களும் புரிபவர்.

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண்பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!

தத்துவஞானத்தின் அவதாரமான சாயி தாம் பெற்ற இறையனுபவத்தை மக்களுக்கு காட்சிகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் அளிக்கிறார். அதே சமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாதவர் போல் தோன்றுகிறார். 




Thursday, 10 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஆயினும், நீண்ட வர்ணனை என்று சொல்வதும் பொருத்தமாகாது. எனக்கே, அது முழுமையாகத் தெரியாத நிலையிலும், நான் கதை கேட்பவர்களுடைய நன்மை கருதி சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

கதை கேட்பவர்களுக்கு இதுவே என் பிரார்த்தனை. சாயியை வழிபடுங்கள். உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது கேளுங்கள்!

இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பாவமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது; உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது.

சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். சுத்தமான பாவம் உடையவரே ஞானம் பெறுவார்.

கதையில் ஏதாவது குறைபாடுகள் நுழைந்திருந்தால், அவற்றையும் சாயி எனக்களித்த அருள் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதி, இந்த சத் சரித்திரத்தைப் படிக்கும்போது தெரியும் தோஷங்களை ஒருபொருட்டாகக் கருதாது விட்டுவிடுங்கள்.

இந்த சத் சரித்திரத்தை ரசித்து வாசிப்பவர்களின் இதயத்தில், எப்பொழுதும் கருணை ததும்பி வழியும் சாயியின் நிஜமான சொரூபம், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் ஸ்தாபிதம் ஆகட்டும். (நிலைபெறட்டும்)

கோவா எங்கே இருக்கிறது? ஷீர்டி எங்கே இருக்கிறது? அங்கு நடந்த திருட்டைப் பற்றிய சுவாரசியமான கதையை ஆதியிலிருந்து அந்தம் வரை விவரமாக சாயி எடுத்துரைத்தார். அடுத்ததாக அதைச் சொல்கிறேன்.

ஆகவே, ஹேமாட் மனப்பூர்வமாக சாயி பாதங்களில் பணிகிறேன். கதை கேட்பவர்களை பயபக்தியுடன் கேட்கும்படி பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்' என்னும் முப்பந்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

 

 ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.  




Thursday, 3 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

மாட்டுக்கொட்டலில் இருந்த பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி மறைந்தது. யாருக்குமே பாம்பு எங்கே சென்றதென்று தெரியவில்லை. எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

பிறகு அவர்கள் மாட்டுக்கொட்டில் முழுவதும் தேடினர்; பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெவாஸ்கர் ஒருவரைத் தவிர மற்றவரெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நெவாஸ்கருக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்தது.

மனக்குறை என்னவென்றால், பாம்பு மாட்டுக்கொட்டிலில் நுழைவதைப்பார்த்தது போலவே வெளியே சென்றதையும் பார்க்கமுடியவில்லையே என்பதுதான்!

நெவாஸ்கருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். குழந்தைகள் எல்லாரும் இளம் பிராயத்தினர். அவ்வப்பொழுது குடும்பத்தினர் அனைவரும் நெவாஸாவிலிருந்து ஷிர்டிக்கு தரிசனம் செய்ய வந்தனர்.

நெவாஸ்கரின் இரண்டு மனைவிகளுக்கும் பாபா புடவைகளும் ரவிக்கைத் துணிகளும் வாங்கி கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார். இவ்விதமாக வாழ்ந்த பாலாஜி நெவாஸ்கர் சிறந்த பக்தர்.

இந்த சத் சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது; இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீ ! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார். 

அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை இருக்கிறது. அருகில் ஷீர்டி கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் சாயி அமர்ந்திருக்கிறார். அவரை நினைப்பவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிக்கும் சாயி!

எங்கு சாயி சத் சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பாவங்களுடனும் அங்கு வாசம் செய்வார்.

ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனதிற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜெபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.

அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்.-

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவார். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் குஹ்யமாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும்.

உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமகா பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும்.

விபூதி தரிப்பதின் மஹிமை பக்தர்களுக்கு நன்கு தெரிந்ததே! கதை கேட்பவர்களுடைய மங்களத்திற்காகவே விபூதி வர்ணனை இவ்வளவிற்கு  நீண்டது. 


 



Thursday, 27 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஷீர்டி கிராமவாசியான ரகு பாடீல் என்பவர் ஒரு சமயம் நெவாஸா  கிராமத்திற்கு சென்று பாலாஜி பாடீல் நெவாஸ்கரின் விருந்தாளியாக அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.

ஒருநாள் இரவு, மாடுகள் எல்லாம் தறியில் கட்டப்பட்டிருந்த நேரத்தில், மாட்டுக் கொட்டகைக்குள் ஒரு நல்லபாம்பு புகுந்து 'புஸ்' என்று சீறியது.

இந்த ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். பாம்போ படமெடுத்த நிலையில் அங்கு சுகமாக அமர்ந்துகொண்டது.

மாடுகளோ நிலைகொள்ளாது கட்டுத்தறியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றன. ஆயினும் வந்திருப்பது சாயியே என்று நெவாஸ்கர் தீவிரமாக நம்பினார்.

மாடுகளை அவிழ்த்துவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மாடுகளில் ஒன்று தப்பித்தவறி பாம்பை மிதித்துவிட்டால் பெரும் நாசம் விளையும்.

தூரத்திலிருந்து புஜங்கத்தை பார்த்த நெவாஸ்கர், தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்கு மயிர்க்கூச்செரிந்தது. நல்லபாம்பை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

'புஜங்க ரூபத்தில் பாபா நமக்குத் பேட்டி அளிக்க வந்திருப்பது சாயியின் கிருபா கடாட்சமே" என்று சொன்னார். பிறகு, பாம்பிற்கு ஒரு கிண்ணம் நிறையப் பால் கொண்டுவந்தார்.

அணுவளவும் பயமில்லாமல் இருப்பதற்கு நெவாஸ்கருக்கு எவ்வளவு பக்தியும் விசுவாசமும் இருந்திருக்கவேண்டும்? அவர் நல்லபாம்பிடம் என்ன சொன்னார் என்பதை சாவதனாமாகக் கேளுங்கள்!

"பாபா, ஏன் இப்படிக் கோபமாகப் புஸ்ஸென்று சீறுகிறீர்கள்? எங்களை பயமுறுத்திப் பார்க்கிறீர்களா என்ன? எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலை நிம்மதியாக அருந்துங்கள்."

பாம்பிற்கு ஒரு கிண்ணம் பால் போதுமா? ஆகவே நெவாஸ்கர் ஒரு பெரிய பாத்திரம் நிறையப் பாலைக் கொண்டுவந்து பயமின்றிப் பாம்புக்கெதிரில் வைத்தார். உண்மையில் பயம் என்பது மனத்தில் உற்பத்தியாவதுதானே!

பால் நிரம்பிய பாத்திரத்தைப் பாம்புக்கு எதிரில் வைத்துவிட்டு, நெவாஸ்கர் அகலாதும் அணுகாதும் பழைய இடத்திற்குப் போய் உட்கார்ந்துகொண்டார். அகமும் முகமும் மலர்ந்து பாம்பைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.

பாம்பு நுழைவது பீதியைத்தான் அளிக்கும். ஆயினும், இச் சம்பவத்திற்கு எல்லாருடைய பிரதிபலிப்பும் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? இந்த ஆபத்திலிருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துப்போய், எல்லாரும் விசாரமடைந்தனர்.

'நாம் வெளியே சென்றால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடும். அங்கிருந்து பாம்பு வெளியே வருவது கடினம்' என்று நினைத்து எல்லாரும் அங்கேயே காவலாக உட்கார்ந்திருந்தனர். 




Thursday, 20 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


எதிர்பார்க்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேவையான உணவு சமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் பரிமாற ஆரம்பித்தபோது எதிர்பார்க்கப்பட்டதுபோல் மூன்று மடங்கு விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்தது.

நெவாஸ்கரின் மருமகள் கதிகலங்கிப்போனார். தம் மாமியாரிடம் (பாலாஜி பாடீல் நெவாஸ்கரின் மனைவியிடம்) தம்முடைய பயத்தை மெல்லிய குரலில் கிசுகிசுத்தார். 'நாம் இந்த சங்கடத்திலிருந்து விடுபடுவது எப்படி?'

மாமியாருக்கு பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. "சமர்த்த சாயி நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்போது நமக்கென்ன கவலை? பயப்படாதே" என்று மாமியார் தைரியம் சொன்னார்.

இவ்வாறு மருமகளுக்கு தைரியம் அளித்துவிட்டு, மாமியார் ஒரு பிடி உதீயை எடுத்துகொண்டுபோய் உணவு சமைத்து வைத்திருந்த எல்லாப் பாத்திரங்களிலும் கொஞ்சம்கொஞ்சம் தூவிவிட்டு அவையனைத்தும் துணியால் மூடிவிட்டார்.

பிறகு அவர் சொன்னனர், "குஷியாக உணவை எடுத்துக் பரிமாறு. எந்தப் பாத்திரத்தையும் முழுவதும் திறக்காதே. உணவை முகப்பதற்குத் தேவையான அளவிற்குத் திறந்து, உடனே துணியால் மூடிவிடு. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் நீ உஷாராக செயல்பட வேண்டும்.

"இவ்வுணவு அனைத்தும் சாயியின் இல்லத்து அன்னம்; ஒரு பருக்கையும் நம்முடையது அன்று. அவமானம் வாராமல் காப்பவர்  அவரே; பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே; நம்முடையதன்று!"

அந்த மாமியாரின் நிச்சயமான நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவருடைய அனுபவமும் ஆயிற்று. எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்லா விருந்தினர்களுக்கும் திருப்தியடையும் வரை உணவளிக்க முடிந்தது.

வந்தவர்கள் அனைவரும் விருந்துண்டு திருப்தியடைந்தனர். எல்லாம் நன்றாக நடந்துமுடிந்த பின்னரும் பாத்திரங்கள் முன்பு இருந்ததைப் போலவே உணவால் நிறைந்திருந்தன!

உதீயின் பிரபாவம் இதுவே. ஞானிகளுக்கு இதெல்லாம் சகஜமான சுபாவம். பக்தனைப் பொறுத்தவரை, பாவமும் எப்படியோ அப்படியே அனுபவம்.

உதீயின் மகிமையும் நெவாஸ்கரின் ஆழமான பக்தியைப் பற்றியும் பேசும்போது, இன்னுமொரு காதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை ஆடாத அசையாத மனத்துடன் கேளுங்கள்.

பிரதமமான கதையிலிருந்து பாதைமாறிச் செல்கிறேனோ என்னும் சிறிய சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அவ்வாறாகவே இருந்தாலும், அக் கதையை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

அவ்வாறு மனத்தில் முடிவெடுத்துவிட்டால், இப்பொழுது அக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அது இடம் மாறியிருக்கிறது என்று கதைகேட்பவர்கள் நினைத்தால், என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன். 




Thursday, 6 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று பெயர் கொண்ட தீவிர சாயிபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால் பாபாவுக்கு சேவை செய்தவர் அவர்.

ஷீர்டி கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர் செய்துவந்தார்.

அவருக்குப் பிறகு அந்த சேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயி என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், 'இந்த வேலையை நான் செய்வது தகாது' என்னும் முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.

விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய போற்றுதற்கரியது!

அவருடைய வேலை எவ்வளவு வேகம்; எவ்வளவு சுத்தம்! அந்தப் பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல்  ஏற்றுக்கொண்டார்.

உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வந்த நெவாஸ்கர் மஹாபாக்யசாலி. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையை கேளுங்கள்.

வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாக குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்பித்துவிடுவார்.

பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்துக்கும் எஜமானர் எனக் கருதி தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்கு தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்.

பாபா ஸ்னானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.

நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை (மகசூல் சமர்ப்பணம்) உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால், பகுதியாக மட்டுமே.

பாபா தேகவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார்.

ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர். 




Thursday, 30 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தை பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை.

இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை ஆலோசனை கேட்டார். (நண்பர் சாயிபக்தர்)

"என்னைப் பொறுத்தவரை மஹாநுபாவரான சாயி மஹாராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்."

எப்படி எப்படி சாயி பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.

விதிவசத்தாலும் நற்செயலின் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு சாயிபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.

சாயிபக்தர் சொன்னார், "படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாக தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீசாயியை மனத்தில் வைக்கவும்.-

"பக்திபாவத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தை பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே."

மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.

அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! அவர் உதீ பொட்டலத்தை தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.

பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.

தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாக பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினர். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.

இந்த நியமநிஷ்டையைக் கடைபிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.

இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது,  நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது.