valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 1 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களின் எண்ணிக்கைப் பெருக பெருக, பாபாவுக்கு ராஜோபசாரங்கள் செய்யப்பட்டன. பல இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, தலைக்குமேல் குடை பிடிக்கப்பட்டது. சாமரம் வீசப்பட்டது.

அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. மக்கள் பாபாவைத் தோத்திரம் செய்யவும் புகழ்பாடவும் ஆரம்பித்தனர். ஷீர்டி, புனிதப் பயணிகளுக்குப் புண்ணிய க்ஷேத்திரம் ஆகியது.

அந்த நிலையில் ஹண்டிக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. பக்கீர்களும் ஏழைஎளியவர்களும் வயிறார உண்டு திருப்தியடைந்த பிறகும், உணவு மீந்துபோகும் அளவிற்கு நைவேத்தியம் வந்து குவிந்தது.

இப்பொழுது இன்னுமொரு காதை சொல்கிறேன்; கேட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பக்தர்கள் ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடும்போது பாபா அகம் குவிந்தார்.

ஜாதியே இல்லாதவருடைய ஜாதியைப் பலர் பலவிதமாக அனுமானம் செய்தனர். சிலர் சாயியே பிராமணர் என்று நினைத்தனர்; சிலர் முஸல்மான் என்று நினைத்தனர்.

அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்த ஜாதியில் எப்பொழுது பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் பிராமணர்களா முஸ்லீம்களா? இவற்றில் எதுவமே தெரியாமல் கற்பனையில் அனுமானம் செய்தனர்.

அவர் முஸ்லீம் என்ற அனுமானத்தை ஏற்றுக்கொண்டால், அவர் எப்படி மசூதியில் அக்கினி வழிபாட்டை அனுமதித்தார்? துளசி பிருந்தாவனம் இருந்திருக்குமா? மணி அடிப்பதை எப்படி சகித்துக்கொண்டார்?

சங்கு ஊதுவதையும் தாளம், மிருதங்கம் போன்ற இன்னிசை வாத்தியங்களுடன் நடந்த கதாகீர்த்தனத்தையும் ஹரிநாம கோஷத்தையும் மசூதியில் அனுமதித்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், மசூதியில் உட்கார்ந்துகொண்டிருக்கையில் நெற்றியில் சந்தனம் இட அனுமதித்திருப்பாரா? சமபந்தி போஜனம் செய்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், தம்முடைய பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்து இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்திருப்பாரா? அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தனவே!

ஸ்னானம் செய்தபிறகு பட்டுப் பீதாம்பரங்களை தமக்கு அணிவிக்க அனுமதித்திருப்பாரா? ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒருகணமும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இது சம்பந்தமான ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மிக வினயமாக அதை உங்களுக்கு சொல்கிறேன். அமைதியான சித்தத்துடன் கேளுங்கள்.

ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. பாபா அப்பொழுதுதான் லெண்டியிலிருந்து திரும்பிவந்து மசூதியில் அமர்ந்திருந்தார். பக்தர்களும் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர். 




Thursday, 24 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"பாத்திரத்தின் மூடியைத் திறந்துவிட்டு உள்ளே கையை விட்டு நீரே பாரும்!" என்று சொல்லிக்கொண்டே, தாதாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்து பாத்திரத்தினுள்ளே பலவந்தமாகச் செருகினார்.

பிறகு பாபா சொன்னார், "இப்பொழுது உமது கையை வெளியே ஏதும். கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் பரிமாறிக்கொள்ளும். மடி ஆச்சாரத்தைபற்றிக் கவலைப்பட வேண்டா."

ஞானிகள் தம் சிஷ்யர்களை தூரசாரமான செயல்களில் ஈடுபடுத்துவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டா. ஞானிகள் கிருபையால் நிரம்பிவழிபவர்கள். அவர்களுடைய வழிமுறைகள் அவர்களுக்குத்தான் விளங்கும்!

ஒரு தாயும் தம்முடைய மனத்தில் பிரேமபாசம் அலையாகப் பொங்கியெழும்போது குழந்தையை கிள்ளிவிடுவார். குழந்தை அலறி அழும். தாய்தாம் உடனே அனைத்துக்கொள்ளவும் செய்வார்.

ஓர் உணவைத் தின்ன வேண்டுமென்று ஒருவர் மனத்தால் ஆசைப்பட்டபோதுதான் பாபா அவருடைய ஆசையை பூர்த்திசெய்தார். மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரே பாபாவின் ஆமோதிப்பை வென்றார்!

பாபாவின் ஆணையைப் பாவிக்கவேண்டும் என்ற உறுதி சில பக்தர்களின் விஷயத்தில் வரம்புமீறிச் சென்றது. ஜன்மம் முழுவதும் மாமிசத்தை தொட்டறியாதவர்கள் கூடத் தங்களுடைய விரதத்தில் தடுமாறினர்!

உண்மை நிலை என்னவென்று பார்த்தல், அதுமாதிரியான பக்தர்களை அவர்கள் தவறு என்று கருதிய செயல்களை செய்ய பாபா தூண்டியதில்லை; அனுமதிக்கவுமில்லை.

ஆக, 1910  ஆம் ஆண்டிற்கு முன்பாக ஹண்டி நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் அடிக்கடி நடந்தது.

அதன் பிறகு தாசகனு பம்பாய் நகரத்திற்குச் சென்றார். சாயியின் மஹிமையைக் கதாக்கீர்த்தனங்கள் செய்து எல்லாருடைய மனத்திலும் பதியும்படி செய்தார்.

அப்பொழுதிலிருந்து குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் பாபாவின் மகத்துவத்தை அறிந்தனர். கணக்கற்ற மக்கள் ஷிர்டிக்கு விஜயஞ்செய ஆரம்பித்தனர்.

பின்னர் ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை ஆரம்பித்தது. மதிய உணவையும் சிற்றுண்டிகளுமாகப் பல நைவேத்தியங்கள் வந்து குவிந்தன.

அரிசிச்சோறு, பருப்பு சூப்பு, பூரி, ரவாகேசரி, சப்பாத்தி, சட்டினி கோகமல்லி, பலவிதமான பாயாசங்கள், பஞ்சாமிருதம் - இவ்வகையான உணவுப்பண்டங்கள் மசூதிக்கு வந்துசேர்ந்தன.

அபரிதமான எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் வந்தனர். எல்லாரும் பாபாவை தரிசனம் செய்ய விழுந்தோடிச் சென்றனர். சாயிபாதங்களில் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இப் பண்டங்களெல்லாம்  பசித்தவர்களைத் திருப்தி செய்யச் சென்றடைந்தது இயல்பே. 




Thursday, 17 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இக் கேள்விக்கு ஒரே பதில்தான் உண்டு. சாயி பாபா எது தர்மம், எது அதர்மம் என்பதை நிரந்தரமாக அறிந்திருந்தார்.

ஹண்டியில் தயாரிக்கப்பட்ட பதார்த்தத்தை எல்லாரும் சாப்பிடவேண்டுமென்று பாபா என்றுமே சிறிதளவும் வற்புறுத்தியதில்லை.

பிரசாதத்தை அடையவேண்டுமென்று எவரெவர் தம்மிச்சையாகவே விரும்பினார்களோ, அவர்களுடைய ஆசையே பாபாவால் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டது. அவர் யாரையும் ஏமாற்றவில்லை!

மேலும், அவர் எந்த ஜாதியென்பதை யார் அறிவார்? மசூதியில் வாழ்ந்தாரென்பதால் அவர் ஒரு முஸ்லீம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆயினும், அவருடைய வாழ்க்கைநெறியைக் கண்டு ஜாதியென்னவென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எவரைக் கடவுளாக ஏற்று பக்தர்கள் பாததூளியில் புரளுகின்றனரோ, அவருடைய ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்யவேண்டுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

எவரிடம் இகபர நாட்டமின்மை உட்பொதிந்திருந்ததோ, இவருக்கு விவேகமும் வைராக்கியமுமே செல்வமோ, அவருடைய ஜாதியை ஒரு பிரச்சினையாக எழுப்பவேண்டுமா! அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டவரும் சுத்த ஆனந்தத்தில் சதா மூழ்கியவருமானவரின் ஜாதி என்னவென்று தெரிந்துகொள்ள வேணுமா? அய்யகோ! என்ன ஆன்மீகத் தேடல் இது!

இவ்வாறே பாபாவின் சரித்திரம். நானோ நிஜமான சுகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே அவருடைய சரித்திரத்தைப் பாடுகிறேன். கேட்க வேண்டுமென்று விரும்புபவர்களின் ஆவலை என் பாட்டு பூர்த்திசெய்யும்.

ஹண்டிக் கதையின் நூலை வழியில் எங்கோ விட்டுவிட்டோம். இப்பொழுது, பாபா தாதாவிடம் என்ன கேட்டார் என்பதைச் சொல்கிறேன்; கவனத்துடன் கேளுங்கள்.

"சுவையான புலாவ் கொஞ்சம் சமைக்கப்பட்டிருந்தது. அது எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்தீரா?" "ஆஹா, ஆஹா, மிகச் சுவைக்காக இருக்கிறது" என்று தாதா உபசார வார்தையைச் (புகழ் மொழியாக) சொன்னார்.

தாதா கேள்கர் வயதான பக்த சிரேஷ்டர். ஸ்நானம், சந்தியாவந்தனம் போன்ற தினசரிச் சடங்குகளை நியம நிஷ்டையுடன் செய்துவந்தவர். எந்த காரியமும் சாஸ்திரிவிதிகளுக்கு உட்பட்டதா, உடன்படாததா என்று பார்த்து சதா அனுசரித்துவந்தவர். அவருக்கு இச்செயல் (மாமிசம் கலந்த உணவைச் சுவைத்துப் பார்த்தல்) முறையானதாகத் தோன்றவில்லை.

பாபா தாதாவிடம் சொன்னார், 'நீர் எப்பொழுதும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. எப்பொழுதும் சுவைத்தும் பார்த்ததில்லை. அவ்வாறிருக்க, அது சுவையாக இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்?-

 


 

Thursday, 10 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒரு மளிகைச் சாமானைக் கையில் எடுத்துப் பார்த்துப் பேரம் பேசிய பிறகே விலையை நிர்ணயம் செய்வார். ஏமாற்ற முயன்றவர்கள் கர்வபங்கமடைந்தனர்.

கூட்டல் கணக்குப் போடுவதுபோல் பாசாங்கு செய்வார். ஆனால், பணம் கைக்கு கை பட்டுவாடா செய்யும்போது கடைக்காரர் ஐந்து ரூபாய் கேட்ட இடத்தில் பத்து ரூபாய் கொடுப்பார்.

அவர் இவ்வேலைகளைத் தாமே செய்ய விரும்பினார். மற்றவர்கள் செய்வதை அவர் அனுமதிக்கவில்லை; மற்றவர்கள் தமக்காகச் செய்வார்கள் என்று எதிரிபார்க்கவும் இல்லை; யாரையும் அவமதிக்கவுமில்லை.

இந்த ஒரு கொள்கையில் அவர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருந்தார். ஆகவே, ஹண்டி வேலைக்கு பாபா யாருடைய உதவியையும் நாடவில்லை.

ஹண்டி வேலை மாத்திரமில்லை, துனிக்கருகில் உள்ள விறகுகிடங்கின் கிழக்குப்புறச் சுவரில் முக்கால் பங்கைத் தம்முடைய கைகளாலேயே கட்டினார்.

மஹாதூ காரையைக் கலந்து கொடுப்பார். பாபா செங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துக் கொல்லுருவை உபயோகித்து தம்முடைய கையாலேயே காரை பூசிச் சுவரை எழுப்பினார்.

ஓ, பாபா செய்யாத வேலைதான் என்ன? மசூதியின் தரையைத் தாமே சாணியால் மெழுகினார். யாரையும் எதிர்பார்க்காமல் கப்னியையும் லங்கோட்டையும் தாமே தைத்துக்கொண்டார்.

ஹண்டி கொதித்துப் பயங்கரமாக நீராவி வெளிவந்துகொண்டிருக்கும்போது கம்பனியின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு உணவை மேலுங்கீழுமாகத் தம் கையால் கிளறுவார்.

ஹண்டி தளதளவென்று கொதித்துக் கிளறுவதற்குத் தயாராகிவிட்டது என்று தெரிந்தபின் பாபா இந்த அற்புதமான லீலையைச் செய்வார்.

ஓ, ரத்தமும் சதையுமான கை எங்கே? கொதிக்கும் ஹண்டி எங்கே? ஆயினும், பீதியடைந்த முகத்தையோ கை வெந்துபோன அடையாளத்தையே சிறிதளவும் காணமுடையவில்லை!

பக்தர்களின் தலைமேல் இன்னல் விழுந்தவுடன் எடுத்தெறியும் கையை, கொதிக்கும் சோறு என்ன செய்யமுடியும்? அவருடைய மகத்துவம் அதற்குத் தெரியாதா என்ன?

ஊறவைத்த பருப்புகளை அவரே அம்மியின்மீது பரப்பிச் சுத்தம் செய்தபின்  குழவியால் அரைப்பார். அரைத்த மாவைத் தம்முடைய கைகளாலேயே வடை உருவில் தட்டுவார்.

பிறகு அவற்றை லாவகமாக ஹண்டியில் நழுவவிடுவார் . அவை பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்கொள்ளாதவாறு புரட்டிவிடுவார். உணவு தயாரானவுடன் ஹண்டியைக் கீழே இறக்கி எல்லாருக்கும் பிரசாதம் அளிப்பார்.

'ஏன் எல்லாருக்கும் அளித்தார்? சாயி பாபா ஒரு முஸ்லீம். மற்றவர்களை எப்படி அவர் இம்மாதிரியாக அதர்ம வழியில் இறக்கலாம்?" என்று கதை கேட்பவர்கள் வினவலாம். 





Thursday, 3 November 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆணையை சிரமேற்கொண்டு வணங்கிவிட்டு தாதா உடனே உடையணிந்து கொண்டு கோர்ஹாலா கிராமத்திற்குச் செல்லக் கிளம்பியபோது திருப்பியழைக்கப்பட்டார்.

" ஓய்! வாங்கும் வேலையைச் செய்வதற்கு வேறு யாரையாவது அனுப்பலாமே. நீர் எதற்கு அனாவசியமாக அலையவேண்டும்?" என்று பாபா சொன்னார்.

ஆகவே, மாமிசம் வாங்கிக்கொண்டு வருவதற்கு பாண்டுவை அனுப்பலாம் என்று தாதா முடிவு செய்தார். அப்பொழுது பாபா தாதாவிடம் என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

பாண்டு கிளம்பிச் சிறிது தூரம் சென்றபிறகு, "சரி, இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்"  என்று சொல்லி பாபா பாண்டுவைத் திரும்பி வரும்படி செய்தார்.

பின்னர் ஒருசமயம், ஹண்டி செய்யவேண்டுமென்ற திடீர் உற்சாகம் பாபாவுக்கு எழும்பியது. அடுப்பின்மேல் அண்டாவை ஏற்றி மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

பிறகு அரிசியைக் களைந்து அளவான நீருடன் அதைச் சேர்த்தார். விறகுகளை அடுக்கி அடுப்பை மூட்டி அருகில் உட்கார்ந்துகொண்டு வாயால் ஊதா ஆரம்பித்தார்.

கிராமமக்கள் அனைவருமே அவர் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யத் தயாராக இருந்தனர். எவராவது ஒருவர் நெருப்பை ஊத்தி ஜுவாலையைப் பெருக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்திருப்பார். ஆனால், பாபாவின் ஆணையின்றி ஒருவருக்கும் இதைச் செய்ய தெரியமில்லை.

சமையல் செய்வதற்கோ உணவுப் பொருள்களைக் கொண்டுவருவதற்கோ பக்தர்களுக்கு ஒரு கோடி காண்பித்தால் போதும்; அவர்மேல் கொண்ட அன்பினால் அதை மிகுந்த உற்சாகத்துடன் செய்துமுடிக்கப் பலர் தயாராக இருந்தனர். இதுவிஷயமாக உதாசீனம் காட்டியவர் சாயியே!

அவர் உதாசீனம் செய்தார் என்று சொல்வதும் சரியாகாது. தாமே சமையல் செய்வது தம்முடைய நன்மைக்கே என்று அவர் நினைத்ததால் , அன்னதானம் செய்வதில் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவத்தில் அர்த்தம் என்ன இருக்கிறது?

அவரோ  மதுகரீப் பிச்சை எடுத்தவர்; அதற்காக தம்முடைய உயிரைக் காத்துக்கொள்ளும் அளவிற்கு மட்டும் வீடு வீடாகச் சென்று கால் பாகம் சோளரொட்டி இரந்தவர் .

அப்படிப்பட்ட மனிதர் அன்னதானம் செய்வதற்குத் தாமே கஷ்டப்பட்டு உழைத்தால்தான் திருப்தியடைவார். ஆகவே, பாபா இதற்காக யார்மீதும் சார்ந்திருப்பதை விரும்பவில்லை.

நூறுபேர்களுக்குச் சுயமாகச் சமைப்பதற்கு மாவு, அரிசி, பருப்புகள் போன்ற சாமான்களை அவரே பார்த்து வாங்கிக்கொண்டு ரொக்கமாக பணம் பட்டுவாடா செய்தார்.

கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு அவரே மாளிகைக்கு கடைக்குச் சென்ற காட்சி, உலகவிவகாரங்களில் மனிதன் எவ்வளவு உஷாராக இருக்கவேண்டுமென்பதை மக்களுக்கு உணர்த்தியது. 




Thursday, 27 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதில் சிரமம் ஏதும் இல்லை. மாமிசம் கலந்த உணவை வழக்கமாகச் சாப்பிடுபவர்களுக்குத்தான் பாபா அந்த உணவை அளித்தார்.

பிறந்ததிலிருந்து மாமிசம் சாப்பிடும் பழக்கமில்லாவதர்களை அவ்வுணவைத் தொடவும் விடமாட்டார். அம்மாதிரியான சாகசங்களை அவர் என்றுமே செய்ததில்லை. பிரசாதம் வேண்டுமென்று நாடியவர்களுக்கே மாமிச உணவு அளிக்கப்பட்டது.

குருவே ஒரு பிரசாதத்தை அளிக்கும்போது அது ஏற்றுகொள்ளத் தக்கதா, தகாததா, என்று விகற்பமாகச் சிந்திக்கும் சிஷ்யன் அதலபாதாளத்தில் வீழ்ந்து தன்னையே அழித்துக்கொள்கிறான்.

இந்தத் தத்துவத்தை பக்தர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதைக் கேலியாலும் நகைச்சுவை மூலமாகவும் பாபா தாமே நேரிடையாகத் தெரிந்துகொள்வார்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கதைகேட்பவர்களே! உங்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேள்கரைக் கேட்டார், "கோர் ஹாலாவிலிருந்து எனக்குக் கொஞ்சம் மாமிசம் வாங்கி வர முடியுமா?"

சாயி கொஞ்சம் பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்த்துவிட்டு தாதாவிடம் கொடுத்தார். "நீரே போய் வாரும். நீர்தான் இப்பணியைச் செய்யவேண்டும்"  என்றும் ஆணையிட்டார்.

கணேஷ் தாமோதர் என்ற பெயரும் கேள்கர் என்ற குடும்பப் பெயரும் கொண்டவரை அவருடைய மூப்பின் காரணமாக ஷீர்டி மக்கள் 'தாதா' என்றழைத்தனர்.

தாதா ஷிர்டியில் முதல் சத்திரம் கட்டிய ஹரிவினாயக் சாடேவின் மாமனார்; சாயிபாதங்களில் அளவுகடந்த பிரேமை கொண்டவர்; தம்முடைய ஆச்சார அனுஷ்டானங்களை சிரத்தையுடன் கடைபிடித்த பிராமணர்.

இரவுபகலாக பாபாவுக்கு சேவை செய்தும் திருப்தியடையாத இவர், பாபாவின் இந்த ஆணையைக் கேட்டு எப்படி ஆச்சரியப்படாதுபோனார் என்றுதான் எனக்கு விளங்கவில்லை!

உடல் வலிமை குறைவாக இருப்பினும், ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.

தனத்தையும் தானியத்தையும் வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணையாகிவிடாது. குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.

எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது. 



Thursday, 20 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உப்பு, மிளகாய், ஜீரகம், மிளகு போன்ற மாளிகைச் சரக்குகளையும் காய்கறிகளையும் கொப்பரைத் தேங்காய்களையும், எவ்வளவு தேவைப்படும் என்பதுபற்றிப் பூரணமாக சிந்தித்து அவரே வாங்குவார்.

மசூதியில் உட்கார்ந்துகொண்டு எந்திரக்கல்லை எடுத்துவைத்து அவருடைய கைகளாலேயே கோதுமை, பருப்பு வகைகள், கேழ்வரகு, இவற்றை மாவுகளாக அரைத்துக்கொள்வார்.

ஹண்டிபிரீத்தி (அன்னதானம்) செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பாபாவே அயராது செய்தார். மசாலா அரைக்கும் வேலைகளையும் தாமே மிகுந்த சிரத்தையுடன் செய்தார்.

அடுப்பின் ஜுவாலையைக் குறைப்பதற்கும் பெருக்குவதற்கும் விறகுக்குச்சிகளைக் கீழும் மேலும் தாமே தள்ளுவார்.

பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துப் பெருங்காயம், ஜீரகம், கொத்தமல்லி போன்ற பொருள்களை சேர்த்து அரைத்துக் காரசாரமான பண்டமொன்றைச் செய்வார்.

பிசைந்த கோதுமை மாவை ஒன்றேகால் முழ நீளத்திற்கு வட்ட உருவில் நீட்டிச் சிறிய உருண்டைகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சப்பாத்தியாகக் குழவியால் விஸ்தீரணம் செய்வார்.

ஏற்கெனவே, அளந்துவைக்கப்பட்ட தண்ணீருடன் கேழ்வரகு மாவையும் மோரையும் சேர்த்து ஹண்டியில் அம்பீலையும் தயார் செய்வார்.

பிறகு, இவ்வாறு தயார் செய்த அம்பீலை (மோர்க் குழம்பு) மிகுந்த அன்புடன் தம்முடைய கைகளாலேயே மற்ற உணவுப்பண்டங்கள் பரிமாறப்படும்போது மரியாதையுடன் எல்லாருக்கும் பரிமாறுவார்.

இவ்வாறாக, உணவு நன்றாக வெந்துவிட்டது என்பதை பரிசோதித்தபின் ஹண்டியை அடுப்பிலிருந்து இறக்கி மசூதிக்குள் எடுத்துச் செல்வார்.

மௌல்வியின் மூலம் விதிகளின்படி பாதியா ஓதி, இவ்வுணவு புனிதமாக்கப்படும். அதன் பிறகு, பிரசாதம் முதலில் மகால்சாபதிக்கும் தாத்யாவுக்கும் அனுப்பப்படும்.

பின்னர் இவ்வுணவைப் பாபாவே எல்லாருக்கும் பரிமாறுவார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் ருசியான உணவளித்து திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவார்.

அன்னத்தை நாடியவர்கள் வயிறு நிரம்புவரை திருப்தியாகச் சாப்பிடுவார்கள். பாபா அவர்களை, "போட்டுக்கொள்; இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்" என்று வற்புறுத்துவார்.

ஓ, இவ்வுணவை உண்டு திருப்தியடைந்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! பாபா தம்முடைய கைகளாலேயே பரிமாறிய உணவை உண்டவர்கள் மஹா பாக்கியசாலிகள்!

பாபா, மாமிசம் கலந்த உணவை பிரசாதமாகப் பல பக்தர்களுக்கு தங்குதடையில்லாமல் ஏன் விநியோகம் சிஎதார்? இந்த சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே.