valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 27 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்வதில் சிரமம் ஏதும் இல்லை. மாமிசம் கலந்த உணவை வழக்கமாகச் சாப்பிடுபவர்களுக்குத்தான் பாபா அந்த உணவை அளித்தார்.

பிறந்ததிலிருந்து மாமிசம் சாப்பிடும் பழக்கமில்லாவதர்களை அவ்வுணவைத் தொடவும் விடமாட்டார். அம்மாதிரியான சாகசங்களை அவர் என்றுமே செய்ததில்லை. பிரசாதம் வேண்டுமென்று நாடியவர்களுக்கே மாமிச உணவு அளிக்கப்பட்டது.

குருவே ஒரு பிரசாதத்தை அளிக்கும்போது அது ஏற்றுகொள்ளத் தக்கதா, தகாததா, என்று விகற்பமாகச் சிந்திக்கும் சிஷ்யன் அதலபாதாளத்தில் வீழ்ந்து தன்னையே அழித்துக்கொள்கிறான்.

இந்தத் தத்துவத்தை பக்தர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதைக் கேலியாலும் நகைச்சுவை மூலமாகவும் பாபா தாமே நேரிடையாகத் தெரிந்துகொள்வார்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. கதைகேட்பவர்களே! உங்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேள்கரைக் கேட்டார், "கோர் ஹாலாவிலிருந்து எனக்குக் கொஞ்சம் மாமிசம் வாங்கி வர முடியுமா?"

சாயி கொஞ்சம் பணத்தை எடுத்து அதை எண்ணிப் பார்த்துவிட்டு தாதாவிடம் கொடுத்தார். "நீரே போய் வாரும். நீர்தான் இப்பணியைச் செய்யவேண்டும்"  என்றும் ஆணையிட்டார்.

கணேஷ் தாமோதர் என்ற பெயரும் கேள்கர் என்ற குடும்பப் பெயரும் கொண்டவரை அவருடைய மூப்பின் காரணமாக ஷீர்டி மக்கள் 'தாதா' என்றழைத்தனர்.

தாதா ஷிர்டியில் முதல் சத்திரம் கட்டிய ஹரிவினாயக் சாடேவின் மாமனார்; சாயிபாதங்களில் அளவுகடந்த பிரேமை கொண்டவர்; தம்முடைய ஆச்சார அனுஷ்டானங்களை சிரத்தையுடன் கடைபிடித்த பிராமணர்.

இரவுபகலாக பாபாவுக்கு சேவை செய்தும் திருப்தியடையாத இவர், பாபாவின் இந்த ஆணையைக் கேட்டு எப்படி ஆச்சரியப்படாதுபோனார் என்றுதான் எனக்கு விளங்கவில்லை!

உடல் வலிமை குறைவாக இருப்பினும், ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.

தனத்தையும் தானியத்தையும் வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணையாகிவிடாது. குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.

எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது. 



Thursday, 20 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

உப்பு, மிளகாய், ஜீரகம், மிளகு போன்ற மாளிகைச் சரக்குகளையும் காய்கறிகளையும் கொப்பரைத் தேங்காய்களையும், எவ்வளவு தேவைப்படும் என்பதுபற்றிப் பூரணமாக சிந்தித்து அவரே வாங்குவார்.

மசூதியில் உட்கார்ந்துகொண்டு எந்திரக்கல்லை எடுத்துவைத்து அவருடைய கைகளாலேயே கோதுமை, பருப்பு வகைகள், கேழ்வரகு, இவற்றை மாவுகளாக அரைத்துக்கொள்வார்.

ஹண்டிபிரீத்தி (அன்னதானம்) செய்வதற்கான அனைத்து வேலைகளையும் பாபாவே அயராது செய்தார். மசாலா அரைக்கும் வேலைகளையும் தாமே மிகுந்த சிரத்தையுடன் செய்தார்.

அடுப்பின் ஜுவாலையைக் குறைப்பதற்கும் பெருக்குவதற்கும் விறகுக்குச்சிகளைக் கீழும் மேலும் தாமே தள்ளுவார்.

பருப்பைத் தண்ணீரில் ஊறவைத்துப் பெருங்காயம், ஜீரகம், கொத்தமல்லி போன்ற பொருள்களை சேர்த்து அரைத்துக் காரசாரமான பண்டமொன்றைச் செய்வார்.

பிசைந்த கோதுமை மாவை ஒன்றேகால் முழ நீளத்திற்கு வட்ட உருவில் நீட்டிச் சிறிய உருண்டைகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சப்பாத்தியாகக் குழவியால் விஸ்தீரணம் செய்வார்.

ஏற்கெனவே, அளந்துவைக்கப்பட்ட தண்ணீருடன் கேழ்வரகு மாவையும் மோரையும் சேர்த்து ஹண்டியில் அம்பீலையும் தயார் செய்வார்.

பிறகு, இவ்வாறு தயார் செய்த அம்பீலை (மோர்க் குழம்பு) மிகுந்த அன்புடன் தம்முடைய கைகளாலேயே மற்ற உணவுப்பண்டங்கள் பரிமாறப்படும்போது மரியாதையுடன் எல்லாருக்கும் பரிமாறுவார்.

இவ்வாறாக, உணவு நன்றாக வெந்துவிட்டது என்பதை பரிசோதித்தபின் ஹண்டியை அடுப்பிலிருந்து இறக்கி மசூதிக்குள் எடுத்துச் செல்வார்.

மௌல்வியின் மூலம் விதிகளின்படி பாதியா ஓதி, இவ்வுணவு புனிதமாக்கப்படும். அதன் பிறகு, பிரசாதம் முதலில் மகால்சாபதிக்கும் தாத்யாவுக்கும் அனுப்பப்படும்.

பின்னர் இவ்வுணவைப் பாபாவே எல்லாருக்கும் பரிமாறுவார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் ருசியான உணவளித்து திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவார்.

அன்னத்தை நாடியவர்கள் வயிறு நிரம்புவரை திருப்தியாகச் சாப்பிடுவார்கள். பாபா அவர்களை, "போட்டுக்கொள்; இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்" என்று வற்புறுத்துவார்.

ஓ, இவ்வுணவை உண்டு திருப்தியடைந்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! பாபா தம்முடைய கைகளாலேயே பரிமாறிய உணவை உண்டவர்கள் மஹா பாக்கியசாலிகள்!

பாபா, மாமிசம் கலந்த உணவை பிரசாதமாகப் பல பக்தர்களுக்கு தங்குதடையில்லாமல் ஏன் விநியோகம் சிஎதார்? இந்த சந்தேகம் இங்கு எழுவது இயற்கையே. 




Thursday, 13 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தைப் பிரேமை இல்லாத பஜனைக்கும் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும் குரலினிமை இல்லாதவனின் பாட்டுக்கும் உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.

அன்னதானம் செய்யும்போது, வியாதியஸ்தர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் குருடர்களுக்கும் முடவர்களுக்கும் செவிடர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் முதலில் உணவு அளிக்கப்படவேண்டும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்க வேண்டும்.

இப்பொழுது, பாபாவின் ஹண்டியைப்பற்றிய விவரங்களை அறிய ஆர்வமாக இருப்பவர்களை பிரீதிசெய்யும் வகையில் விவரம் சொல்ல முயல்கிறேன்.

மசூதியின் முற்றத்தில் ஒரு பெரிய மண் அடுப்பு நிறுவப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு வாயகன்ற பாத்திரம் வைக்கப்பட்டுத் தேவையான தண்ணீர் நிரப்பப்படும்.

சிலசமயங்களில் சர்க்கரைப் பொங்கலும் சிலசமயங்களில் மாமிசம் கலந்த புலாவும் செய்யப்படும். சிலசமயம் மாவைப் பிசைந்து வடைபோல் கையால் உருச்செய்து பருப்பு சூப்புடன் சேர்த்து சமையல் செய்யப்படும்.

சிலசமயங்களில், கொதிக்கும் பருப்பு சூப்பில், மாவால் செய்யப்பட்ட பானக்காக்களையோ ரோடக்காக்களையோ பாபா லாவகமாக மிதக்க விடுவார்.

மசாலாப் பொருள்களைத் தாமே அம்மியில் அரைத்துச் சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார். பயத்தம் பருப்பு மாவால் தம் கையாலேயே சின்னச் சின்ன வடைகள் தட்டி லாவகமாக ஹண்டியில் நழுவ விடுவார்.

சொர்க்கம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் சிலர், மிருகங்களை சடங்குபூர்வமாக கொன்று யாகத்தீயில் சமர்பிக்கின்றனர். பிராமணர்களும் இம் மாமிசத்தில் சிறிது பிரசாதமாக உண்கின்றனர். இதற்கு 'சாஸ்திரத்தால் அனுமதிக்கப்பட்ட ஹிம்சை' என்று பெயர்.

அவ்வாறே, பாபாவும் முல்லாவுக்குச் சொல்லியனுப்புவார். இஸ்லாமிய சாஸ்திர விதிகளின்படி குரான் மந்திரங்களை ஓதிய பின்னரே, விதிக்கப்பட்ட சடங்குமுறையில் ஆடு கொல்லப்படும்.

ஹண்டிகள் இரண்டு இருந்தன; ஒன்று சிறியது. மற்றது பெரியது. இந்த ஹண்டிகளில் சமைத்து, அன்னத்தை நாடியவர்களுக்குப் போஜனம் செய்துவைத்தார் பாபா.

இரண்டு ஹண்டிகளில் சிறியது, ஐம்பது ஜனங்களுக்கு உணவளிக்கக்கூடிய கொள்ளளவு வாய்ந்தது. நூறு ஜனங்களுக்கு உணவளித்த பிறகும், சிறிது மீதம் இருக்கக்கூடிய அளவிற்குப் பெரிய ஹண்டி இருந்தது.

அவரே மளிகைக்கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி கணக்கைக் காட்டுவார். கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்பொழுதுமே கைமேல் காசுதான்!

 


 

Thursday, 6 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒரு குழந்தைக்கு எப்படிச் சாப்பிடுவது என்றுதான் தெரியும்; எதைச் சாப்பிடுவது என்பது தெரியாது. தாய்தான் பாலூட்டியோ ஒரு கவளம் சோறூட்டியோ குழந்தையைப் பாதுகாக்க வேண்டும்.

அவ்வாறே, என் சாயிமாதாவும் என்னுடைய பேனாவைப் பிடித்துக்கொண்டு தம் பக்தர்களின்மேல் கொண்ட அன்பால் இந்தப் பிரபந்தத்தை (பாமாலையை) எனக்கு சிரமமேதுமின்றி எழுதி வாங்கிக்கொண்டார்.

மோக்ஷம் சித்தியாவதற்கான சாதனைகளை தர்மசாஸ்திரம் நான்கு யுகங்களுக்கும் நான்குவிதமாக விதித்திருக்கிறது. கிருதயுகம் அல்லது சத்யயுகத்திற்குத் தவம்; திரேதாயுகத்திற்கு ஞானம்; துவாபரயுகத்திற்கு யாகம்; கலியுகத்திற்கு தானம்.

மனிதன் அடிக்கடி தானதர்மங்கள் செய்யவேண்டும். பசிப்பிணியைக் களைவதையே முக்கியமான தானமாகக் கருதவேண்டும். நித்தியநியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக்கொண்டு வாழ வேண்டும்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது. நமக்கெப்படியோ அப்படியே பிறருக்கும். இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.

ஆசாரதர்மத்தில் பிரதானமானதும் முதலில் செய்யவேண்டியதுமான தானம் அன்னதானம். இதுபற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிரேஷ்டமான (சிறந்த) தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

அன்னம் பாரா பிரம்ம ரூபம். எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே எழுகின்றன. அன்னமே உயிரைக் காப்பாற்றும் சாதனம். உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளேயே சென்று கலந்து விடுகிறது.

அதிதி (விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும், நேரம் தவறி வந்தாலும், இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டுத் திருப்திசெய்யவேண்டும். அன்னமளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னல்களுக்கு அழைப்புவிடுகிறான்; இதில் சந்தேகமே இல்லை.

வஸ்திரங்களையோ பாத்திரங்களையோ தானமாக அளிக்கும்போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று யோசிக்கவேண்டிய அவசியம் உண்டு. அனால், அன்னதானம் செய்வதற்கு இந்தச் சிந்தனையே தேவையில்லை. வீட்டுவாயிலுக்கு எவர் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அவரை அனாதவராக விட்டுவிடுவது தகாது.

அன்னதானம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது; இதற்கு கருதியே (தைத்திரீய உபநிஷதம்) பிரமாணம். ஆகவே, பாபாவும் உலகியல் ரீதியைக் கடைபிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்துத் திருப்தி செய்தார்.

அன்னதானம் இன்றிச் செய்யப்படும் காசுதானம் போன்ற மற்ற தானங்கள் முழுமை பெறாதவை. எத்தனை நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ? பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கிலி முழுமை பெறுமோ?

அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறே புண்ணியங்களிலெல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம். கலசமில்லாத கோபுரத்திற்கு தாமரை இல்லாத நீர்நிலைக்கும் சோபை ஏது?

 


 

Thursday, 29 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


38 . அன்னதானம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

அகில உலகங்களுக்கும் ஆனந்தமளிப்பவரே! பக்தர்களின் இஷ்டங்களை பூர்த்தி செய்பவரே!  சரணமடைந்தவர்களின் மூன்றுவிதமான இன்னல்களையும் அபகரிப்பவரே! குருவரரே! உம்முடைய பாதங்களில் வணங்குகிறோம்.

அடக்கமுள்ளவர்களைக் காப்பவரும் பரம உதாரணமுள்ளவரும் அடைக்கலம் புகுந்த பக்தர்களை உத்தாரணம் செய்பவருமாகிய தேவரீர், உலகமக்களுக்கு உபகாரம் செய்வதற்காகவே அவதாரம் செய்திருக்கிறீர்.

துவைத பாவத்தை நாசம் செய்வபவரே ஜய ஜய! பக்தர்களின் மனத்தைக் கொள்ளைகொள்பவரே ஜய ஜய! பக்தர்களை உலகியல் வாழ்விலிருந்து விடுவிப்பவரே ஜய ஜய! கருணைக்கு கடலான குருராயரே ஜய ஜய!

உம்முடைய புனிதமான பாதங்களை பார்ப்பதற்கும் உம்முடன் சமகாலத்தில் வாழும் சுகத்தை அனுபவிப்பதற்கும் நாங்கள் என்ன பேரு பெற்றோம் ஐயனே! ஆனால் அந்தக் காலம் கடந்துவிட்டது; இனித் திரும்பி வரப்போவதில்லை.

முழுமுதற்பொருளின் சுத்த சொரூபமான ரசத்தை ஓர்  அச்சில் ஊற்றியபோது உருவான மூர்த்தியே ஞானிகளில் சிறந்தவரான இந்த சாயி.

சாயியே ஆத்மாராமர். அவரே பூர்ணானந்தத்தின் இருப்பிடம். தாமே எல்லா விருப்பங்களும் நிறைவேறியவராதலால் பக்தர்களையும் ஆசையற்றவர்களாக ஆக்கிவிடுகிறார்.

எவர் எல்லா தர்மங்களையும் ரக்ஷிப்பவரோ, எவர் பிரம்ம பலத்தாலும் க்ஷத்திரிய பலத்தாலும் யமனையே விழுங்கக்கூடியவரோ, அவர் ஆடிய நாடகமே இந்தச் சரித்திரம்.

ஜனனமரண சம்பந்தத்தையும் மற்ற பந்தங்களையும் அறுத்தெறியக்கூடியவரின் சன்னியதியில் குருட்டு ஜடமாகிய நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

சென்ற அத்தியாயத்தில், மிகுந்த அன்புடன் சாயிநாதரின் சாவடி ஊர்வலத்தை வர்ணித்தேன். இந்த அத்தியாயத்தில், இடையறாத ஆனந்தத்தை அளிக்கும் ஹண்டியின் (வாயகன்ற பெரிய தவலை - அன்னதானம்) விவரத்தைக் கேளுங்கள். 




Thursday, 22 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம், அக்தர், பன்னீர் இவற்றை பாபாவுக்கு கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, தாத்யா பாடீல் வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில் பாபா அவரிடம் சொல்வார். "என்னைக் கவனித்துக்கொள்.-

"போவதாக இருந்தால் போ. ஆனால், இரவில் அவ்வப்பொழுது என்னை விசாரித்துக்கொள். "சரி" என்று உறுதி கூறிவிட்டுத் தாத்யா சாவடியை விட்டுத் தமது இல்லம் நோக்கிச் செல்வார்.

இவ்வாறாக எல்லா ஜனங்களும் சென்ற பிறகு, பாபா தம்முடைய கைகளாலேயே படுக்கைச் சுருளை எடுத்து ஒவ்வொரு வேட்டியாகச் சீர் செய்து பல படலங்களைப் பரப்பித் தம்முடைய படுக்கையைத் தாமே தயார் செய்துகொள்வார்.

சுமார் அறுபது - அறுபத்தைந்து வெண்ணிறத்த துணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக விரித்து அதன்மீது பாபா படுத்துக்கொள்வார்.

இவ்வாறாக, சாவடியில் கதை எவ்விதம் நடந்ததோ, அவ்விதமாகவே இதுவரை எடுத்துரைக்கப்பட்டது. மற்ற கதைகள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்.

இந்த சாயியின் மஹிமை ஆழங்காணமுடியாதது. நான் சுருக்கமாகச் சொல்ல நினைத்தாலும் அது எல்லையில்லாமல் என்னை இழுத்துக்கொண்டே போகிறது. குருதர்மம் (குருநெறி) எல்லையற்றதன்றோ!

ஹண்டியின் கதையையும் விட்டுப்போன கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். ஒருமித்த மனத்துடன் கேளுங்கள்.

இடையறாத குருநினைவே ஹேமாடுக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும், குருசரணங்களில்  பணிவதே செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள் அனைத்தும். ஏனெனில், அவருடைய பாதங்களில்தான் நான்கு புருஷார்த்தங்களையும் (ஆறாம்-பொருள்-இன்பம்-வீடு) அடையமுடியும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சாவடி வர்ணனை' என்னும் முப்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.

 


 

Thursday, 15 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிலீம் மஹா கடினமான தவத்தைச் செய்த பொருளாகும். சிறுவயதில் அது காலால் மிதித்துத் துவைத்துத் துவம்சம் செய்யப்பட்டது. பிறகு வெயிலின் காய்ச்சலைத் தாங்கிக்கொண்டது. கடைசியாக சூளையில் அக்கினிப் பிரவேசமும் செய்தது.

பாபாவின் கையால் தொடப்படும் பாக்கியத்தைப் பெற்றது. மறுபடியும், எரியும் புகையிலையின் சூட்டைப் பொறுத்துக்கொண்டது. சூளையிலிடப்பட்ட பிறகு, செம்மண் பூசப்பட்டு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டாலும், பின்னர் பாபாவின் உதடுகளால் முத்தமிடப்படும் கௌரவத்தைப் பெற்றது.

கற்பூரமும் குங்குமப்பூவும் சந்தனமும் சேர்த்து அரைத்த குழம்பை பக்தர்கள் பாபாவின் கைகளில் பூசுவர். கழுத்தில் பூமாலைகளை அணிவித்து கைகளில் ஒரு பூச்செண்டையும் அளிப்பர்.

சதா புன்னைகைபூத்த முகத்துடன், மிகுந்த பிரேமையுடனும் தயையுடனும் பக்தர்களை நோக்கியவருக்குத் தம்மைச் சிங்காரித்துக்கொள்வதில் என்ன அபிமானம் இருந்திருக்கமுடியும்? பக்தர்களைத் திருப்திசெய்வதற்காகவே இவையனைத்தையும் பாபா ஏற்றுக்கொண்டார்.

பக்தியென்னும் விலைமதிப்பற்ற ஆபரணத்தை அணிந்து சாந்தியென்னும் அழகில் மூழ்கியவர்க்கு, மாலைகளாலும் மணிகளாலும் செய்யப்பட்ட உலகநடையான அலங்காரத்தில் என்ன நாட்டம் இருந்திருக்க முடியும்?

துறவின் உருவாக வாழ்ந்தவருக்கு மரகத கற்களாலான அட்டிகை எதற்கு? ஆயினும், பக்தர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர்களுடைய களிப்பு நாட்டத்தைத் திருப்திசெய்வதற்காகக் கழுத்தில் அவற்றை அணிந்துகொள்வார்.

மரகதம் இழைத்த தங்கச் சங்கிலிகளும் பதினாறு சாரம் முத்துமாலைகளும் அன்றலர்ந்த தாமரைகளுடனும் சேர்ந்து அவருடைய கழுத்தை அலங்கரித்தன.

மல்லிகையும் முல்லையும் துளசியும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைகள் அவருடைய கழுத்திலிருந்து கால்வரை நீண்டு புரண்டன. கழுத்தைச் சுற்றி முத்தாலான ஆபரணங்கள் அபூர்வமாக ஜொலித்தன.

அவருடைய மார்பில் தங்கப்பதக்கம்  பதிக்கப்பட்ட மரகத அட்டிகை தவழ்ந்தது. நெற்றியில் இடப்பட்ட கறுப்பு நிறுத்த திலகம் அழகுக்கு அழகு சேர்த்தது.

அவர் ஒரு சிறந்த வைஷ்ணவரைப்போல ஜொலித்தார். தலைக்குமேல் குடை சுழன்றது; சாமரங்கள் வீசின. தங்கச்சரிகை கரை போட்ட சால்வை போர்த்தியிருந்தார். அவரை எப்படிப் பக்கீர்  என்று  சொல்ல   முடியும்?

மங்கள வாத்தியங்கள் பின்புலத்தில் முழங்க, ஜோக் தான் பெரும்பாலும் ஐந்து விளக்குகள் பிரகாசமாக எரியும் ஆரதியைச் சுற்றுவார்.

ஐந்து உபச்சாரங்களுடன் கூடிய பூஜை முடிந்த பிறகு, பளபளக்கும் பெரிய பஞ்சாராத்தித்தட்டை பத்திரமாக எடுத்து ஐந்து திரிகளையும் கற்பூரத்தையும் ஏற்றி பாபாவுக்கு ஆரத்தி சுற்றுவார்.

ஹாரதி நடந்து முடிந்த பிறகு எல்லா பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து பாபாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். பின்னர் தம் தம் வீடுகளுக்குச் செல்வர்.