valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 6 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று பெயர் கொண்ட தீவிர சாயிபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால் பாபாவுக்கு சேவை செய்தவர் அவர்.

ஷீர்டி கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர் செய்துவந்தார்.

அவருக்குப் பிறகு அந்த சேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயி என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், 'இந்த வேலையை நான் செய்வது தகாது' என்னும் முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.

விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய போற்றுதற்கரியது!

அவருடைய வேலை எவ்வளவு வேகம்; எவ்வளவு சுத்தம்! அந்தப் பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல்  ஏற்றுக்கொண்டார்.

உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வந்த நெவாஸ்கர் மஹாபாக்யசாலி. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையை கேளுங்கள்.

வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாக குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்பித்துவிடுவார்.

பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்துக்கும் எஜமானர் எனக் கருதி தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்கு தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்.

பாபா ஸ்னானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.

நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை (மகசூல் சமர்ப்பணம்) உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால், பகுதியாக மட்டுமே.

பாபா தேகவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார்.

ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர். 




Thursday, 30 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தை பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை.

இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை ஆலோசனை கேட்டார். (நண்பர் சாயிபக்தர்)

"என்னைப் பொறுத்தவரை மஹாநுபாவரான சாயி மஹாராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்."

எப்படி எப்படி சாயி பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.

விதிவசத்தாலும் நற்செயலின் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு சாயிபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.

சாயிபக்தர் சொன்னார், "படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாக தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீசாயியை மனத்தில் வைக்கவும்.-

"பக்திபாவத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தை பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே."

மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.

அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! அவர் உதீ பொட்டலத்தை தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.

பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.

தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாக பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினர். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.

இந்த நியமநிஷ்டையைக் கடைபிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.

இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது,  நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது. 




Thursday, 23 December 2021

ஷீர்டி சாயி சத்சரிதம்


மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

ஆகவே, சாயியின் உதீ பிரசாதத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு இருவரும் பம்பாய் திரும்பினர். விவாதங்கள் அனைத்தும் ஓய்ந்தன. சாயியினுடைய கியாதி எப்படியிருந்தது என்றால்,-

ஷிர்டியிலிருந்து புறப்படுவதற்கு முன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சாயியின் ஆக்ஞயைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும்.

உம்முடைய இஷ்டம்போல் ஷிர்டியிலிருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமும்தான் மிஞ்சும்.

ஷிர்டியிலிருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கத்தியும் அதுவே. "நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை." இது பாபாவின் திருவாய்மொழி.

"என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய வர முடியும்?"

நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.

ஷிர்டிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் இதுவே விதிமுறை. சாயியின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.

அவரை நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர் உதீயுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு  ஒப்பாகும்.

இப்பொழுது விபூதியின் ஒரு நவீனமான அனுபவத்தையும் நெவாஸ்கரின் பகுதி பிரபாவத்தையும் மஹானுபவரான சாயியின் கிருபையையும் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.

பாந்தராவில் வாழ்ந்துவந்த காயஸ்தப் பிரபு ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தார் ஒருவரால் எவ்வளவு முயன்றும் இரவில் சுகமாகத் தூங்கமுடியவில்லை.

கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கும்போது, காலஞ்சென்ற அவர் தந்தை கனவில் தோன்றி அவரை தினமும் தூங்கமுடியாமல் செய்வார்.

நல்லதும் கெட்டதுமான பழைய சங்கதிகளையெல்லாம் ஞாபகப்படுத்தி சாபங்களாலும் வசைமொழியாலும் அவரைத் துளைப்பார். ரகசியமானதும் பலகோணங்களுள்ளதும் பீடைபிடித்ததுமான விஷயங்களைக் கடுமையான இகழ்மொழியில் கொட்டுவார். 





 

Thursday, 16 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாக கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.

பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முதலில் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.

பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞான பண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.

"நாம் ஏற்றுக்கொள்வதை போலப் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சம்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்ய முடியும்?" (பாபா )

ஏற்கெனவே செய்துகூட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜி பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கை!

'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன்.-

'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா வேண்டும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்! சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை!-

'எந்நேரமும் 'அல்லா மாலிக்' என்று உச்சாரணம் செய்துகொண்டிருப்பதவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன். -

'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.-

'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்! நானாகவே சாயியின் பாதங்களைப் பூஜிக்கும் பாவத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம் உண்டோ?-

'சாயியின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்க முடியும்?-

'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.-

'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடையவில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்? இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!'

(141 லிருந்து 148 வரை 8 சுலோகங்கள் சேட்ஜியின் எண்ண ஓட்டம்)

 


 

Thursday, 9 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.

இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்சீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக் கொண்டார்.

சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. சாயி ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.

எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைபிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு சாயியிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.

வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். சாயி இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த சாயி மாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.

ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப்  பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார், -

"எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பாத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும். -

"நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.-

"பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.-

"அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில், இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன. -

"கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்!-

"கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான சேலம் சேர்த்து, அதை புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்".

"கொடுக்காதவன் உயர்வதில்லை" என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார். 




Thursday, 2 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பேச்சு இந்த ரீதியில் நடந்தது! தரம்ஸீ  தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு, இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.

மத்திய ஆரத்தி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.

தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், "நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்." இதைக் கேள்வியுற்ற மாதராவ் சொன்னார், -

"காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லது!"

ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.

"சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உடலிலும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதைகளை தேடினான். -

"அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை. -

"அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!-

"நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச் செய்". இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள் போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.

எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.

செல்வமும் சமூக கௌரமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூக்கிவிடுவார்.

இந்தக் கதை சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜி  மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.

காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.  




Thursday, 25 November 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்சீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார்.

"என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு சாயி கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பானாகவும் இருந்தன.

அவர் ஆச்சரியத்தால் செயலிழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப்பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின் மேல் பிரீதி பொங்கியது.

ஏற்கெனெவே செய்துகொண்ட  சங்கற்பங்கள் விலகின. சாயிபிரேமை இதயத்தில் பொங்கியது. ஷீர்டி செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.

பாபாசாகேப் தர்க்கடும் அப்பொழுது சாயி பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.

ஆகவே தரம்சீ அவரைக் கேட்டார், "உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன? தர்கட் "விதையுள்ளவை" என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.

பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். "நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெரும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்".

பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்து கொண்டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்!

சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்சீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.

மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், "காகாவின் எஜமானர் ஒரு சேட் உண்டே - அவர் இவர்தான்!"

"யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் எஜமானர் வேறு யாரோ ஆயிற்றே!" என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.

இதில் வினோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர் கொண்ட ஒரு சமையற்காரரை  இந்தக் கேலியில் இழுத்துவிட்டதுதான்.

பாபா சொன்னார், "இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின் மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் ஷிர்டிக்கு வந்திருக்கிறார்".