valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.

இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்சீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக் கொண்டார்.

சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. சாயி ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.

எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைபிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு சாயியிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.

வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். சாயி இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த சாயி மாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.

ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப்  பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார், -

"எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பாத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும். -

"நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.-

"பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.-

"அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில், இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன. -

"கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்!-

"கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான சேலம் சேர்த்து, அதை புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்".

"கொடுக்காதவன் உயர்வதில்லை" என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார். 




Thursday, 2 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பேச்சு இந்த ரீதியில் நடந்தது! தரம்ஸீ  தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு, இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.

மத்திய ஆரத்தி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.

தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், "நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்." இதைக் கேள்வியுற்ற மாதராவ் சொன்னார், -

"காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லது!"

ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.

"சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உடலிலும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதைகளை தேடினான். -

"அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை. -

"அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!-

"நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச் செய்". இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள் போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.

எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.

செல்வமும் சமூக கௌரமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூக்கிவிடுவார்.

இந்தக் கதை சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜி  மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.

காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.  




Thursday, 25 November 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்சீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார்.

"என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு சாயி கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பானாகவும் இருந்தன.

அவர் ஆச்சரியத்தால் செயலிழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப்பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின் மேல் பிரீதி பொங்கியது.

ஏற்கெனெவே செய்துகொண்ட  சங்கற்பங்கள் விலகின. சாயிபிரேமை இதயத்தில் பொங்கியது. ஷீர்டி செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.

பாபாசாகேப் தர்க்கடும் அப்பொழுது சாயி பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.

ஆகவே தரம்சீ அவரைக் கேட்டார், "உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன? தர்கட் "விதையுள்ளவை" என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.

பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். "நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெரும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்".

பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்து கொண்டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்!

சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்சீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.

மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், "காகாவின் எஜமானர் ஒரு சேட் உண்டே - அவர் இவர்தான்!"

"யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் எஜமானர் வேறு யாரோ ஆயிற்றே!" என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.

இதில் வினோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர் கொண்ட ஒரு சமையற்காரரை  இந்தக் கேலியில் இழுத்துவிட்டதுதான்.

பாபா சொன்னார், "இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின் மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் ஷிர்டிக்கு வந்திருக்கிறார்".

 


 

Thursday, 11 November 2021

 ஷீர்டி சாயி சத் சரிதம்

பாபாசாகேப் தர்கட் என்ற பக்தரும் அங்கும் உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ  அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள்.

"இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு?" தர்கட் பதிலுரைத்தார், "நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம்". சேட் குறுக்குச்சால் ஓட்டினார், "ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?"

ஆகவே, தர்கட் சொன்னார், "என்னுடைய பாவனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் சித்தியாகிறது."

காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையை கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.

மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ  சேட்டுக்கும் சில திராட்சைகளை கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.

விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டது! அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை.

திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.

ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்! ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தை களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.

சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், "இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?"

இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.

அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், "அவற்றைத் தின்றுவிடும்". சேட்ஜீ  இந்த ஆணையை நிறைவேற்றினார்.

"அவற்றைத் தின்றுவிடும்" என்று பாபா சொல்லி முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தன! சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  

 


 

Thursday, 28 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று ஐவரும் காகா மஹாஜனியுடன் ஷிர்டிக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,

"நீர் ஷிர்டிக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக."

காகா பதில் கூறினார், "இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை". இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.

"ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம் துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது." சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவருரையும் அழைத்துக்கொண்டார். மூன்று பேராக ஷிர்டிக்கு கிளம்பினர்.

இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவர்த்தி செய்தார்.

அவர்கள் வீடு திரும்பித் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வர்; அல்லது மற்றவரின் உதவி கொண்டு அதை எழுதியும் வைப்பர். இதெல்லாம் மக்களை நல்ல பாதையில் கொண்டுவருவதற்காகவே.

தாத்பரியம் (ஆழ்ந்த கருத்து) என்னவென்றால், இவ்வாறு சென்றவர்கள் தரிசன சுகத்தால் திருப்தியடைவார்கள். கிளம்பும்போது மனப்போக்கு எப்படி இருந்திருந்தாலும் சரி, கடைசியில் பரமானந்தம் அடைந்தனர்.

'விஷய ஆர்வத்தாலும் உட்புகுந்து நேரில் பார்க்க விரும்பிய ஆவலாலும் அவர்களாகவே ஷிர்டிக்குச் சென்றார்கள்' என்று நாம் சொல்லலாமே தவிர, உண்மை என்னவோ வேறுவிதமாக இருந்தது. அவர்கள் பாபாவின் காரியசாதனைக்காகவே ஷிர்டிக்குச் சென்றனர்.

அவர்களுக்கு அந்த உள்ளுணர்வைக் கொடுத்தவரே பாபாதான். அதன் பிறகே அவர்களால் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைக்க முடிந்தது. அவர்களுடைய இயல்பான மனோபாவத்தை மேலும் கிளறிவிட்டு, அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்பினார் பாபா!

பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்? அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்! ஆனால், நீங்கள் அகங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.

தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம் ) வாங்கி கொண்டார்.

திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு . ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.

வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி ஷீர்டி போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.  



Thursday, 21 October 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

அவருக்கு இன்னொரு சுவாரசியமான அனுபவமும் உண்டு; கேட்பதற்குகந்தது. பல மாதங்களாக அவருக்கு ஒரு குதிகாலில் வலி இருந்தது.

ஷீர்டி செல்வதற்கு முன் பல மாதங்களாக இந்த வியாதியை அனுபவித்து வந்தார். ஷீர்டி சென்று வந்த பிறகு இந்தப் பாதிப்பு குறைந்தது; சில நாள்களில் அடியோடு மறைந்தது.


இதே மாதிரியான நிகழ்ச்சியொன்றில், ஞானியின் சக்தியைச் சோதிக்க முயன்ற ஒருவர் தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, ஞானியின் பாதங்களில் பணிய வேண்டி நேர்ந்தது. அந்தக் காதையை இப்பொழுது கேளுங்கள்.

மேலும், அவருடைய விருப்பத்திற்கு மாறாகவும் ஏற்கெனவே செய்திருந்த திடமான தீர்மானத்திற்கு நேரெதிராகவும் தக்ஷிணை கொடுக்கவேண்டுமென்று மோகங்கொண்டு தக்ஷிணை கொடுத்த காதையைக் கேளுங்கள்.

டக்கர் தரம்சீ ஜெடாபாயி என்னும் பெயர் கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் சாயிதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

அவர் காகா மஹாஜனியின் எஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே, அவர் நேரிடையாக ஷிர்டிக்குச் சென்று பாபாவை பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார்.

காகா மஹாஜனி, டக்கர் ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி ஷீர்டி சென்று வருவற்காகவே உபயோகித்தார்.

ஷிர்டிக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்ன! எட்டு நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்! "இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா?" என்று நினைத்து எஜமானர் எரிச்சலைடைவது வழக்கம்.

"இதென்ன ஞானிகளின் நடைமுறை! இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை!" இந்த சாயி விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்ட வேண்டுமென்று தீர்மானித்து, ஹோலிப் பண்டிகை விடுமுறையின்போது ஷிர்டிக்கு கிளம்பினார்.

'தான்' என்று அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், "ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வாங்கவேண்டும்?" என நினைத்தார்.

மெத்தப்படித்த பண்டிதர்களையும் சாஸ்திர விற்பன்னர்களையும் மண்டியிடவைத்த சாயியின் ஆன்மீக, தார்மீக சக்தியின் முன்பாகக் கேவலம் தரம்சீயின் தீர்மானம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க போகிறது?

ஆயினும், அவர் நினைத்தார், "குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்". இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் ஷிர்டிக்குப் போக ஆயத்தங்கள் செய்தார். 




Thursday, 14 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உமக்கும் எனக்கும் நடுவே பேதம் கற்பிக்கும் தேலி யின் சுவரை இடித்து நிரவிவிடுங்கள். ஒருவரையொருவர் சந்திக்க உதவும் வழி அகலமாகத் திறந்து கொள்ளும்".

பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கு பாபா அனுமதியளித்தார். ஆனால், இருண்ட வானத்தைப் பார்த்த மாதவராவ், "போகும் வழியில் இவர்கள் மழையில் மாட்டிக்கொள்வார்கள் போலிருக்கிறதே" என்று பாபாவிடம் சொன்னார்.

பாபா பதில் கூறினார், "இவர்கள் தைரியமாகக் கிளம்பட்டும். மழையைப் பார்த்து வழியில் பயப்படுவதற்கு ஏதும் இல்லை".

ஆகவே, இருவரும் பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டுப் போய்க்குதிரை வண்டியில் உட்கார்ந்தனர். காற்றில் நீர்மூட்டம் அதிகரித்தது; வானத்தில் மின்னலடித்தது; கோதாவரி நதியின் பெருக்கம் அதிகமாகியது.

வானம் கடகடவென்று கர்ஜித்தது. நதியைப் படகினால் கிடைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும், காகாவுக்கு பாபா அளித்த உறுதிமொழியின் மீது முழு நம்பிக்கை இருந்தது.

நண்பருக்கோ, எப்படி சௌகரியமாகவும் பத்திரமாகவும் வீடு போய்ச் சேர்வது என்பதே பெருங்கவலை. வழியில் நேரக்கூடிய சங்கடங்களை கற்பனை செய்து, 'ஏன் இங்கு வந்தோம்' என்றெண்ணி வருத்தப்பட்டார்.

எப்படியோ அவர்கள் பத்திரமாகவும் சுகமாகவும் நதியைக் கடந்தபின் பம்பாய்க்கு ரயில் ஏறினர். அதன் பிறகே மேகங்கள் மழையைக் கொட்ட ஆரம்பித்தன. இருவரும் பயமேதுமின்றி பம்பாய் சென்றடைந்தனர்.

காகாவின் நண்பர் வீட்டிற்குத் திரும்பிக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட்டார். உள்ளே மாட்டிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஒன்று வேகமாகப் பறந்து வெளியே சென்றது. வீட்டினுள் இரண்டு சிட்டுக்குருவிகள் இறந்து கிடந்தன.

அன்னமும் பானமும் இல்லாததால் இறந்துபோன சிட்டுக்குருவிகளை பார்த்த அவர் மனமுடைந்து சோகமானார்.

"ஷிர்டிக்குப் போவதற்குமுன் ஜன்னலைத் திறந்துவைத்துவிட்டு போயிருந்தால், அவை காலனின் பிடியில் சிக்கியிருக்கமாட்டா. பாவம்! அதிருஷ்டக்கட்டைகளான இவ்விரண்டு சிட்டுக்குருவிகள் என் கைகளில் இறக்கும்படி ஆயிற்று.-

"பறந்துபோன சிட்டுக்குருவியைக் காலனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே பாபா எங்களுக்கு இன்றே வீடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார் போலும்" என்று நினைத்தார்.

"இல்லையெனில் எப்படி உயிரோடிருக்கும்? ஆயுள் முடியும்போது இதுதானே கதி. ஒரு சிட்டுக்குருவியாவது பிழைத்ததே!"


------------------------------------------------------------------------------------------------------------------------

தேலி என்னும் மராட்டிச் சொல்லுக்கு வாணியர் என்று பொருள். பாபா இச்சொல்லையும் மளிகைகடைக்காரர் என்ற சொல்லையும் விரும்பத்தகாத மனித குணங்கள் என்னும் பொருள்பட உருவக பாஷையில்  உபயோகப்படுத்தினார். எண்ணெயின் கொழகொழப்பும் பிசுபிசுப்பும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் உலகியல் பிணைப்புகளுக்கு உருவகப்படுத்தப்பட்டன போலும்!