valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 21 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றவர்களுக்கெல்லாம் என்றும்போல் சாயிநாதர். ஆனால், அவ்வம்மையாரின் கண்களுக்கோ ஜானகிகாந்தர் (ஸ்ரீராமர்), அவருடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் அபூர்வமான காட்சியைப் பார்த்துக் குழுமியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

வியப்படைந்தது மட்டுமின்றி, விஷயம் என்னவென்று அறிந்துகொள்ளவும் ஆர்வமுற்றனர். ஏன் இந்த ஆனந்தக்கண்ணீர்? அவருக்கு மாத்திரம் பிரேமையின் ஆவேசம் எங்கிருந்து வந்தது?

பின்னர், மாலை நான்கு மணியளவில் அவ்வம்மையார் ஆனந்தத்தால் நிரம்பிய மனத்துடன் தம்மிச்சையாகவே, சாயி தமக்கு ஸ்ரீராமராக தரிசனம் தந்த அற்புத லீலையை கணவரிடம் விவரித்தார்.

"நீலோத்பலப் பூவைப் போன்ற நிறமுடையவரும் பக்தர்களின் ஆசைகளை கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுபவரும் பரதனுக்கு மூத்தவரும் தசரதருக்குப் புத்திரரும் சீதாமணாளருமான ஸ்ரீராமரை நான் கண்டேன்.-

"நான் கண்டது, மஞ்சள் பீதாம்பரம் அணிந்து கிரீட குண்டலங்களுடன் ஜொலித்துக் கொண்டு வனமாலையும் அணிந்த, நான்கு புஜங்களுடன் கூடிய ஜானகி காந்தரையே.-

"கைகளில் சங்கு - சக்கரம் - கதை, மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் மரு, கழுத்தைச் சுற்றிக் கௌஸ்துப மாலை, இவற்றை அணிந்துகொண்டவரும் புருஷோத்தமரும் உள்ளங்கவரும் உருவமுடையவரும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவருமாகிய ஸ்ரீராமரை கண்டேன்."-

அவர் மேலும் சொன்னார், "ஈடிணையற்ற லீலைகள் புரிவதற்காக மனித அவதாரம் ஏற்ற மஹாவிஷ்ணுவும், ஜானகியின் இதயத்தில் குடிகொண்டு மகிழ்விப்பவருமான ஸ்ரீராமரை நான் வில்லேந்திய கோலத்தில் கண்டேன்.-

"வெளிப்பார்வைக்கு அவர் ஒரு பக்கீராக தோன்றலாம்; வீடுவீடாகச் சென்று பிச்சையும் எடுக்கலாம். எனக்கு அவர் ஜானகியின் மனத்தைக் கவர்ந்த, வில்லேந்திய ஸ்ரீராமராகவே தெரிந்தார்.-

"மேலும், அவர் மேலெழுந்த வாரியாகப் பார்த்பதற்கு ஒரு அவலியாக (முஸ்லீம் முனிவராக) இருப்பினும், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றினாலும், எனக்கு ஜானகியின் மனத்தைக் கவர்ந்த கோதண்டபாணியாகவே தெரிந்தார்."

அவ்வம்மையார் பரமபக்தியும் பாவமும் கொண்டவர்; கணவனோ பணத்தாசை பிடித்த சுயநலவாதி. "பெண்ணினம் இப்படித்தான் பேசும். ரகுபதி (ஸ்ரீராமர்) இந்த இடத்தில் இப்பொழுது எப்படித் தோன்ற முடியும்?

"நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. நாமெல்லாம் சாயியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இவளுக்கு மட்டும் எப்படி ராமரூபம் தெரிந்தது?" 

Saturday, 15 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அன்புடன் செல்லமாக கொஞ்சும் போதிலும் அமனியின் மனம் ரூபாயில்தான் இருக்கும். "பாபா கொடு, சீக்கிரம் கொடு!" என்று அவருடைய பாக்கெட்டில் கண்வைத்தவாறே கேட்பாள்.

அமனியாவது ஒரு சிறு குழந்தை! ஆனால், பெரியவர்களுக்கும் கனவான்களுக்குமே இப் பேராசை இருக்கிறது. காசுக்காகவே சுயநலமாக அனைவரும் அலைகின்றனர். ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டவர் எவரோ ஒருவரே.

அமனி பாபாவின் மடியில் அமர்ந்திருப்பாள். தாயாரோ சற்று தூரத்தில் கிராதிக்கு அப்பால் நின்றுகொண்டு 'கொடுக்கும்வரை அவரை விடாதே' என்று விளங்கும்படி சைகை செய்வாள்.

"என்னைக் கொள்ளையடிக்க வந்த உதவாக்கரையே, நான் உன் அப்பனுக்கு கடன் பட்டிருக்கிறேனா என்ன? என்னைப் பிடுங்கியெடுக்கிறாயே " என்று பாபா கோபத்துடன் வினவுவார்.

ஆனால், இந்த கோபம் பொய்க்கோபமே. இதயத்திலோ அன்பின் அலைகள் பொங்கின. பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ரூபாயை எடுப்பார்.

ரூபாயை அந்தச் சிறிய டப்பாவில் இட்டு, டப்பென்று மூடுவார். டப்பா கையில் கிடைத்தவுடனே அமனி வீடு நோக்கிப் பாய்வாள்!

இது காலை உணவு நேரத்தின் நடப்பு. இதுபோலவே லெண்டித் தோட்டத்திற்குப் போகும்போதும் அமனியை அன்புடன் கடிந்துவிட்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

இவ்வாறாக, அவர் தினமும் அமனிக்கு இரண்டு ரூபாயும் ஜமலிக்கு   ஆறு ரூபாயும் தாதா கேள்கருக்கு ஐந்து ரூபாயும் பாக்கியாவுக்கும் சுந்தரிக்கும் தலா இரண்டு ரூபாயும் கொடுப்பார்.

தினமும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்வரை தாத்யாவுக்கும் பதினைந்திலிருந்து ஐம்பது ரூபாய் வரை பக்கீர் பாபாவுக்கும் எட்டு ரூபாய் ஏழை எளியவர்களுக்கும் தவறாது கொடுத்தார்.

இவ்வாறான தர்ம ஒழுக்கத்தை பற்றிக் கேள்வியுற்ற மதராஸ் கோஷ்டி, பாபாவிடமிருந்து நாமும் பணம் பண்ணலாமே என்று சுயநலமாக சிந்தித்தது இயற்கையே. பாபாவின் சந்நிதியில் தினமும் தவறாது நால்வரும் பஜனை செய்தனர்.

வெளிப்பார்வைக்கு பஜனை இனிமையாக இருந்தது. அந்தரங்கத்தில் அவர்களை பணத்தாசை பிடித்து ஆட்டியது. மேலும் மேலும் பாபா பணம் தருவார் என்ற நம்பிக்கையில் நால்வரும் ஷீர்டி வாசத்தை நீடித்தனர்.

நால்வரில் மூவர் பேராசை பிடித்தவர்கள்; பாபாவிடம் பணம் கறக்கவேண்டும் என்றே விரும்பினார். ஒருவர் மட்டும் (மனைவி) நேர்மையானவர். சாயியின் மீது தூயபக்தியுடனும் அன்புடனும் பஜனை பாடினார்.

அவருடைய சாயி பக்தியையும் பிரேமையையும், மேகத்தைக் கண்டு மகிழ்ந்து நடனமாடும் மயிலுக்கும் சந்திரனைக் கண்டு மகிழும் சகோர பட்சிக்கும் ஒப்பிடலாம்.

கிருபா மூர்த்தியான சாயி அவ்வம்மையாரின் பக்தியை மெச்சி, ஒருநாள் மதிய ஆரத்தியின்போது அவருக்கு ஸ்ரீராமனாகக் காட்சியளித்தார். 


Friday, 7 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா விரும்பினால் வழிப்போக்கர்களுக்கும் பணம் விநியோகம் செய்வார். கிருபா மூர்த்தியான சாயிநாதர் திக்கற்றவர்களையும் ஏழைஎளியவர்களையும் அன்புடன் நலன் விசாரித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து, துயர் துடைத்து விடை கொடுத்தனுப்புவார்.

அந்த கோஷ்டியில் ஓர் ஆடவரும் மூன்று பெண்டிரும் இருந்தனர். அதாவது , ஒரு மனிதர், அவர் மனைவி, மக்கள், மைத்துனி - ஆக மொத்தம் நால்வர் இருந்தனர். அவர்கள் மஹானை தரிசனம் செய்ய விரும்பினர்.

சாயி தரிசனம் செய்த பிறகு அந்த கோஷ்டி திருப்தியும் சந்தோஷமும் அடைந்தது. தினமும் சாயி சந்நிதியில் நியமமாக பஜனை செய்தனர்.

அவர்கள் ராமதாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பஜனை செய்வார்கள். பாபாவும் தமக்குத் தோன்றியவாறு ஒரு ரூபாயோ அரை ரூபாயோ கொடுப்பார்.

சில நாள்களில் பாபா அவர்களுக்கு பர்பி கொடுப்பார்; சில நாள்களில் வெறுங்கையுடன் அனுப்பி விடுவார். ஆதியிலிருந்தே பாபாவின் செயல்பாடுகள் இப்படித்தானே இருந்தன; எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே!

பாபா பணத்தை வாரிவாரி வழங்கியதென்னவோ உண்மைதான்! அதில் உண்மையில்லாதது ஏதும் இல்லை. ஆனால், அவர் எல்லாருக்குமே கொடுப்பார் என்று சொல்ல முடியாது! அவருடைய மனோகதியை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பக்கீர்கள், பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், பரதேசிகள் - இவர்களனைவரும் பாபாவை நாடி வந்தவண்ணமாக இருந்தனர். பாபா பரம தயாளராக இருந்தாலும், அவர்கள் எல்லாருக்குமே தருமம் கொடுக்கவில்லை.

யாருக்கு லாபகாலம் வந்ததோ, அவரே பாபாவின் கையால் தொடப்பட்ட பணத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்.

இது சம்பந்தமாக ஒரு கதை கேட்டால் சந்தோஷமடைவீர்கள். ஆகவே, முதலில் அதைச் சொல்லிவிட்டுப் பிறகு தொடர்கிறேன்.

காலையில் சொற்ப ஆகாரம் உண்டபின் பாபா துனிக்கு அருகிலிருந்த கம்பத்தடியில் உட்காருவார். அந்நேரத்தில் அமனி என்னும் சிறு பெண்குழந்தை வருவாள்.

மூன்று பிராயம் நிரம்பிய இச் சிறுபெண், உடையேதும் அணியாமல் கையில் ஒரு சிறிய தகர டப்பாவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துசேர்வாள். கூடவே தாய் ஜமலியும் வருவாள்.

அமனி, பாபாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு டப்பாவை அவரிடம் கொடுத்து, "பாபா, ரூப்பையா, ரூப்பையா" என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்.

பாபாவுக்குப் பொதுவாகக் குழைந்தைகளின் மீது அமோகமான அன்பு. புஷ்டியாகவும் அழகாகவும் இருந்த அமனியை நேசித்தார்; அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கொஞ்சுவார்; முத்தம் கொடுப்பார். 


Thursday, 30 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

29 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 1 ) 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாபாவின், கற்பனைக்கெட்டாத லீலைகளில் ஒன்றை இந்த அத்தியாயத்தில் சொல்கிறேன். விஷயம் அதுவேயானாலும் முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட லீலைகளை காட்டிலும் இது மேலும் விசித்திரமானது.

பாபவின் அற்புதமான லீலைகளை பற்றி கேள்விப்பட்டு ஒரு பஜனை கோஷ்டி 1916 ஆம் ஆண்டு பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு வந்தது.

மதராஸிலிருந்து காசி யாத்திரைக்காகக் கிளம்பிய இந்த கோஷ்டி பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு வழியில் ஷிர்டியில் இறங்கியது.

"சாயிபாபா ஒரு சிறந்த மஹான்; தீரம், உதாரம், தன்னடக்கம் போன்ற பல நற்குணங்களின் பெட்டகம். புனிதப் பயணிகளிடம் கிருபையுள்ளவர்; அவர்களுக்கு நிதியும் நிறைய அளிக்கிறார்.-

"ஒரு பைசா, ஓரணாவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; நாலணா, எட்டணா காசுகள் மழையாகக் கொட்டும்! சிலருக்கு பத்து ரூபாய், இன்னும் சிலருக்கு இருபது ரூபாய், வேறு சிலருக்கு ஐம்பது ரூபாயும் கொடுக்கிறார். -

"இந்தக் காசுமழை ஏதோ விசேஷ நாள்களிலோ, பண்டிகைகளிலோ, தானம் செய்யவேண்டிய புண்ணிய காலங்களிலோ மட்டும் பொழியவில்லை. மேற்சொன்ன ரீதியிலும் அளவிலும் ஒவ்வொரு நாளும் பாபா சந்தோஷமாக கொடுக்கிறார். -

"பஹுட்களும், பவய்யாக்களும் (மராட்டிய கிராமிய கலைஞர்கள்) வந்து நடனமாடுவர்; பாடகர்கள் பாடுவார்கள்; நாடோடிப் பாவாணர்கள் புகழ் பாடுவர்; கேளிக்கைக்காரர்கள் தமாஷா செய்து அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்துவர்; ஹரி பக்தர்கள் மெய்மறந்து பஜனை செய்வர். -

"மஹராஜ் அவ்வளவு உதாரகுணம் படைத்தவர்; தானமும் தருமமும் அவரிடமிருந்து மழையாகப் பொழிகிறது!" இந்தக் கீர்த்தி காதுவழிச் செய்தியாக மதராஸ் பஜனை கோஷ்டியை அடைந்தது. ஆகவே, அவர்கள் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்று விரும்பினார்.  
 
 

Thursday, 23 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சிவபூஜை செய்வதில் மேகா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பாபா அவருக்கு சிவலிங்கம் அளித்து அவருடைய பக்தியை திடப்படுத்தினார். சாயியின் லீலை அளவிடற்கரியது!

இந்த கதை ஒன்றுதானா! இம்மாதிரியான கதைகள் அபரிதமாக உள்ளன. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், இக் காவியம் அளவுக்கு மீறி விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, கதை கேட்பவர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்!

ஆயினும் நீங்கள் மென்மேலும் கேட்க ஆர்வம் காட்டுவதால், அடுத்த அத்தியாயத்தில் இம்மாதிரியான கதை இன்னுமொன்று சொல்கிறேன். நீங்கள் இதைவிட அற்புதமான சாயி லீலைகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.

சாயி பாதங்களில் சரணமடைந்து, ஹேமாட் உங்களை சாயி சரித்திரத்தை கேட்கும்படி செய்கிறேன். கேட்பவர்களின் பிறவிப் பயம் அழியும்; எல்லாத் தொல்லைகளும் துரிதமாக நிவாரணம் அடையும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'தெய்வீகக் காட்சிகள்' என்னும் இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Friday, 17 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன்".

கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். திரிசூலம் எதற்காக வரையச் சொன்னார் என்ற சம்பந்தம் அப்பொழுது விளங்கும்.

மேகா வாடாவுக்குத் திரும்பிவந்து, சுவரில் பாபவின் படத்திற்கு அருகில் திரிசூலம் வரைய ஆரம்பித்தார். திரிசூலம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டது.

அடுத்த நாளே புனேயில் இருந்து ஒரு ராமதாச பக்தர் மசூதிக்கு வந்தார். அவர் பாபாவுக்குப் பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டு ஒரு சிவலிங்கத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார்.

அச்சமயத்தில் மேகாவும் அங்கு வந்து பாபாவின்முன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பாபா சொன்னார், "இதோ பாரும், சங்கரர் வந்துவிட்டார். அவரை நீர் நன்கு கவனித்துக்கொள்ளும்".

திரிசூலம் பற்றிய காட்சி கிடைத்த மறுநாளே சற்றும் எதிர்பாராமல் சிவலிங்கம் இவ்விதமாக கிடைக்கிறதே! மேகா சிவலிங்கத்தையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் மெய்மறந்து நின்றார். உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது.

காகாசாஹேப் தீக்ஷிதர்க்கு ஏற்பட்ட அபூர்வமான சிவலிங்க தரிசன அனுபவத்தையும் கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்கவேண்டும்.  சாயி பாதங்களின்மீது விசுவாசம் பெருகும்.

மேகா சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு மசூதியில் இருந்து வெளிவந்தபோது, தீக்ஷிதர், வாடாவில் ஸ்நானத்தை முடித்தபின் நாமஸ்மரணத்தில் மூழ்கியிருந்தார்.

மேல்துண்டால் தலையை மூடிக்கொண்டு ஒரு பாறையின் மேல் நின்றுகொண்டு உடம்பை உலர்ந்த துணியால் துடைத்துக்கொண்டே, சாயி நாமஸ்மரணம் (சாயி நாமத்தை நினைத்தல்) பண்ணிக் கொண்டிருந்தார்.

தலையை போர்த்தியவாறு சாயி நாமஸ்மரணம் செய்யும் நித்திய நியமத்தை அனுசரித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சிவலிங்க தரிசனம் கிடைத்தது.

"சாயி நாமஸ்மரணம் செய்யும்போது இன்று மட்டும் என்ன எனக்கு சிவலிங்க தரிசனம் கிடைக்கிறது? தீக்ஷிதர் இவ்வாறு வியந்துகொண்டு இருந்தபோதே, மேகா மகிழ்ச்சி பொங்கப் பக்கத்தில் நிற்பதைக் கண்டார்.

மேகா கூவினார், "காகா, இங்கே பாருங்கள்! பாபா எனக்களித்த சிவலிங்கத்தைப் பாருங்கள்". காகா சிவலிங்கத்தின் விசேஷமான வடிவமைப்பை கண்டு வியப்படைந்தார்.

வடிவத்திலும் பரிமாணத்திலும் மேலிருந்த ரேகைகளாலும் அவருக்குச் சற்றுமுன் காட்சியில் தோன்றிய லிங்கத்தை போலவே அச்சாக மேகா வைத்திருந்த லிங்கம் இருந்ததை பார்த்து காகா மகிழ்ச்சியடைந்தார்.

பின்னர், மேகா தமது கைகளால் சுவரில் திரிசூலம் வரையும் வேலையை முடித்தவுடன் திரிசூலத்தின் சன்னிதியிலேயே சிவலிங்கத்தை ஸ்தாபனம் செய்யவைத்தார் பாபா.


Friday, 10 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீக பாதையில் ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்தினார் பாபா. 

மேகாவைப்பற்றி இதேமாதிரியாக இன்னொரு கதையும் உண்டு. கேட்பவர்கள், பக்தர்கள்மீது பாபா செலுத்திய பிரேமையை கண்டு ஆனந்தமடைவார்கள். 

நானாசாஹேப் சாந்தோர்கர் அன்பளிப்பாக அளித்த, புதியதும் பெரியதுமான படம் ஒன்று மேகாவிடம் இருந்தது. அதை வாடாவில் வைத்து பக்தியுடன் பூஜை செய்துவந்தார். 

மசூதியில் பாபா பிரத்யக்ஷ்மாக இருந்தார். வாடாவிலோ உருவத்தின் அச்சாக முழு உயரப்படம் பெரியதாக இருந்தது. இரண்டு இடங்களிலும் மேகா பூஜையும் ஆரதியும் செய்துவந்தார். 

இம்மாதிரியான சேவை பன்னிரண்டு மாதங்கள் தொடர்ந்து சகஜமாக நடந்தது. பின்னர் ஒருநாள் விடியற்காலை நேரத்தில், மேகா படுக்கையில் விழித்து கொண்டிருந்தபோது ஒரு தெய்வீக காட்சி கண்டார். 

படுக்கையில் இருந்தபோதே கண்கள் மூடியிருந்தாலும் விழிப்புடனிருந்த நிலையில் பாபாவின் உருவத்தைத் தெளிவாகப் பார்த்தார். 

மேகா விழித்துக்கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிந்து, பாபா அவர்மீது அக்ஷதையைத் தெளித்து, "மேகா, திரிசூலம் வரையுமய்யா!" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். 

பாபாவின் வார்த்தைகளை செவியுற்ற மேகா கண்களைத் திறந்து பார்த்தார். பாபாவின் உருவம் மறைந்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார். 

மேகா சுற்றுமுற்றும் பார்த்தார். படுக்கை முழுவதும் அக்ஷதை இறைந்து கிடந்தது. வாடாவின் கதவுகளோ முன்போலவே சாத்தப்பட்டிருந்தன. அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

உடனே மசூதிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்தார். தாம் கண்ட காட்சியை விவரித்தபின், திரிசூலம் வரைவதற்கு பாபாவின் அனுமதி வேண்டினார்.

மேகா தாம் கண்ட காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். பாபா அப்பொழுது வினவினார். "என்ன காட்சி? நான் உம்மைத் திரிசூலம் வரையும்படி சொன்னது உமது காதுகளில் விழவில்லையா?"-

"காட்சி என்று அதற்குப் பெயர் கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட அர்த்தமில்லாமற்போகாது."

மேகா பதிலுரைத்தார், "நானும் முதலில் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால், ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று அனுமானித்தேன்".

பாபா இதற்கு என்ன விடையிறுத்தார் என்று கேளுங்கள், "நான் நுழைவதற்கு கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் .-