valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவாகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான சாதனை சம்பதுக்களான சமம், தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உடலில் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.

செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், சங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்து விட்டவர், சத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.

புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்மா ஞானத்தை பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.

அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மாமன மார்க்கத்தில் இறங்கினால் அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும்  இல்லாமல் திரிசங்கு போல் மாட்டிக் கொள்வார்.

ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை சம்சாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தி ஏற்பட்டு விடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார். ஆனால், இவ்வுலத்தைச் சார்ந்தவரல்லர்.

ஆத்ம ஞானம் அடைந்தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது?

தேஹம் பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கி விடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.

நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது?

இந்த மகா சுகத்தின் முன்னர் உடலின் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காக கண்ணீர் விடுபவர் யார்? 


Thursday, 10 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

மனதின் மீது முழுக்கட்டுப்பாடு உடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சி செய்யப்படும் மனிதனே பரம பதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.

சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடைய மாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழலில் இருந்தும் அவனால் விடுபட முடியாது.

எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.

இங்கே தர்க்க வாதமும் சப்பைக் கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்கள் அனைத்தும் வியர்த்தமே.

தர்க்க வாதத்தின் சாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப் படித்த தர்கா சாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவே!

ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது. அதைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

விலை மதிக்க முடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாத உளுத்துப் போக அனுமத்திக்கபடுகிறது. பணத்தாசை என்பது உச்சி வெயில் நிழலைப் போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஞானிகள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்பலில் ஒரு பிரயாணி ஆகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இருக்கிறது?

களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலை கடப்பது சிரமமாக இராது.

இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களை தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது என்று அறியவும்.

ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களை செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனதில் உள்ள மலத்தைக் கழுவித் தூய்மை அடையும் ஒரே வழி. 

Thursday, 3 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது - இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே, அவற்றை முதலில் ஒழிக்கவும்.

எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்த பின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பி விடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக் கூட வைத்து ஊன்ற முடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.

ஞானம் பெறுவைதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் சமாதி நிலைமையையும் அடைய விடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனதின் வியாதிகள்.

கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளி விடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகி விடுகிறது.

விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவசெயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?


அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனதுடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?

சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கை சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்பேச்சு சாமர்த்தியம் என்ன சாதித்து விட முடியும்?

ஆகையால், வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமே இல்லை; சாரம் அப்பியாசமே (பயிற்சியே) ! நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.

இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனதுடன் எஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.

வெற்றி பெறுவதற்குச் சிரமமானவையும், பரம்பரையாக வருவனமாகிய புலனின்ப நாட்டங்களை கடந்து செல்லத் தேரோட்டிகு வழி காட்டவும். பத்து இந்திரியங்களையும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.

தேரோட்டி நிபுணவாகவும் சாமார்தியசாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும். 


Thursday, 26 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இரண்டையும் சீர் தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமான செயல், மந்தப் புத்திகாரனை புலனின்பங்கள் வென்று விடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆலிங்கனம் (தழுவதல்) செய்து கொள்கிறது.

தண்ணீர் கலந்த பாலில் பாலை மற்றும் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.

ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையே ஆயினும், மந்த புத்தி படைத்த விவேகமற்ற  மனிதன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.

வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப் படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றி பெற முடியும்.

இங்கேதான் மனிதன் சக்தி மிகுந்ததும் உறுதி படைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனதில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாதது! அது இரவு பகலாகச் சுழன்றுகொண்டே மூவகை இன்னல்களையும் மனிதனுக்கு அளித்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது.

அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களில் இருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்க முடியாத நிலையை அடையும்போது, "இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயச்சி செய்கிறான்.

ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப் போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, சாதகன் தன்னுடைய நன்மை கருதி இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை கையாளுகிறான்.

அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சலில் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்று காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாக தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெரிய வேண்டும்.

கனவில் ஆலங்கட்டி மழை பொற்காசுகளாகப் பொழிகிறது! தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெரு முயற்சி எடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய் விடுகிறது.    


Thursday, 19 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மகாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்த்ரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயினாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த அத்தியாயத்தில் ஆன்மீக ஈடுபாடு மற்றும் உலகியல் ஈடுபாடு இவற்றின் லட்சிணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாக கேளுங்கள்.

ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்படிருப்பது போல் தோன்றினாலும் அவை ஒன்றுகொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.

எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்து விட சபிக்கப் பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேக ரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.

ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.

பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்ப நாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின் மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.

ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையில் இருந்து மானச சரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே, -

தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாலிகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக் கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பி விடுவர்.

இந்த மந்த புத்திகாரர்களைப் பாருங்கள்! உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப் போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள். அவற்றையே அடைகிறார்கள்;

சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மிகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டில் இருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.   


Thursday, 12 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

வேதாந்தம் நன்கு அறிந்தவர்கள் பிரம்மத்தை சத்தியம், ஞானம், அனந்தம் (முடிவே இல்லாதது) என்ற லக்ஷனங்களால் வர்ணிக்கின்றனர். பிரம்மம் ஞானிகளுக்குoli வழங்கி, ஆத்மாவிலேயே மூழ்கச் செய்கிறது.

காட்டினுள்ளே நடந்து செல்லும் யாத்திரிகன், மங்கலான சந்திர ஒளியில், வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தை பார்த்துக் கொள்ளைக்காரன் என்று நினைத்து மிரண்டு பயத்தால் எங்காவது ஒளிந்து கொள்கிறான்.

"நான் தனியாக நடந்து செல்கிறேன்; பணமும் வைத்திருக்கிறேன்; வழிப்பறிக் கொள்ளைக்காரன் மறைந்து கொண்டிருக்கிறான்; யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிருக்கே ஆபத்தாக இருக்கும்போலிருக்கிறதே!" என்று தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான்.

திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு தீபம் வருகிறது; வெட்டப் பட்ட மரத்தின் அடிப்பாகம் தெரிகிறது; யாத்திரிகனுடைய பயம் தெளிந்து விடுகிறது. கொள்ளைக் காரன் என்று நினைத்தது மனதின் பிரமையே என்று அறிந்துகொள்கிறான்.

கதை கேட்பவர்களுக்கு ஞானத் தேடலில் ஏற்படக் கூடிய தடங்கல்களை பற்றி எல்லாம் விவரித்து விட்டேன். அடுத்த அத்தியாயத்தில் பிரம்ம ஆனந்தத்தை தேடுபவர்களுக்கு அதனுடைய ஒளி மிகுந்த நிஜ ரூபம் தரிசனமாகும்.

ஹெமாத் சாயியின் பொற்கமலப் பாதங்களில் புரளுகிறான். வாயில் வந்ததை உளறுகிறான். சாயியினுடைய கிருபையினால் எதெது வெளிவருகிறதோ அததைஎல்லாம் விசுவாசமுள்ள எளிமையான பக்தர்கள் கேட்டு மகிழட்டும்.

எல்லாருக்கும் ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும்  பதினாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்!

சுபம் உண்டாகட்டும்.

Thursday, 5 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிரம்ம நிரூபண விவரங்கள் புராணங்களிலும் புத்தகங்களிலும் கொஞ்சமாகவா இருக்கின்றன? ஆனால், சத்குருவின் அருள் இல்லாது, யுகமுடிவு வரை கடினமான பயிற்சிகள் செய்தாலும் பிரம்ம ஞானம் கைக்கு கிடைக்காது.

தினமும் செய்ய வேண்டிய கர்மாக்களையும் சம்ஸ்காரங்களையும் (மதச் சடங்குகளையும்) செய்து, அதன் விளைவாக மனம் தூய்மையடையாமல்  பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ அடையவோ இயலாது.

பிரம்மமே நித்தியமானது; மற்றவை அனைத்தும் அநித்தியம். கண்ணால் பார்க்கபடுவது எதுவும் நித்தியமானது அல்ல. இது மும்முறை பிரகடனம் செய்யப் பட்ட சத்தியம்.

பிரம்மத்தை பற்றி விளக்கமாகப் பேசக் கூடியவர் அரியவர். நிர்மலமான மனதுடன் அதைக் கேட்கக் கூடியவர் அவரினும் அரியவர். பிரம்மானுபவம் கண்ட சத்குருவைப் பெறுதல் மிக மிக அரிது.

பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ள ! மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம நியமங்களுக்கு உட்பட்டு தவம் செய்யும் மகா யோகிகள்.-

அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காண முடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?

செல்வத்தின் மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம்  அடைய முடியாது! இது நிச்சயம் என்று அறிக.

உலகியல் சிந்தனையைச் செய்து கொண்டே பரமார்த்தமான பிரசங்கத்தைக் கேட்பவனும் உலகியல் விஷயங்களையே இடைவிடாது யோசித்துக் கொண்டிருப்பவனும் பெறக்கூடிய சாக்ஷாத்காரமும் (நேரிடை தரிசனமும்) அவ்வகையாகத்தான் இருக்கும்.

தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்மை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல் இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் செயல்கள் எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கி விடும். பக்தியும் வழிபாடும் மனதின் மாய மயக்கங்களைத் துடைத்து தூய்மை ஆக்கிவிடும்.

தமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை சிரத்தையுடன் செய்வதுடன், உபாசனையும் செய்பவரின் மனம் பரிபக்குவம் அடையும். எதிர்மறையான எண்ணங்களுக்கும் மயக்களுக்கும் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பின், மீதி நிற்பது சத்தியத்தை மறைக்கும் திரையே.

எல்லா அனர்த்தங்களுக்கும் விதையாகிய இந்தத் திரை சூரிய உதயத்தால் இருள் அழிவது போல, ஞானம் பிறந்தால் நாசமாகிவிடும்.