valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 25 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாசாஹேப்  தேவ் என்று பெயர் கொண்டவர் பாபாவின் பரமபக்தர். சாயி பாதங்களில் சிறந்த நிட்டை வைத்திருந்தவர். தேவின் தாயார் தம்முடைய நன்மைக்காகவும் எல்லோரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

ஒருசமயம், தேவின் தாயார் பல விரதங்களை முடித்திருந்தார். விரதங்களை நிறைவுபெறச் செய்வதற்காக கொண்டாடப்படவேண்டிய உத்தியாயன (நிறைவு) விழா பாக்கியாக இருந்தது.

விரதங்களின் எண்ணிக்கை பூரணமடையும்போது உத்தியாபன விழா கொண்டாடப்பட வேண்டும். இல்லையெனில் விரதங்கள் பூரணமடையாமல் புண்ணியம் சேராது போய்விடும்.

இருபத்தைந்து - முப்பது விரதங்கள் முடிந்ததை முன்னிட்டு கொண்டாடப்படவேண்டிய உத்தியாபன விழாவிற்கு, நூறு-இருநூறு பிராமணர்களை தேவ் விருந்திற்கு அழைத்திருந்தார்.

உத்தியாபன விழாவிற்கு நாள் குறித்து பாபாவைத் தம்முடைய சார்பில் விருந்திற்கு அழைப்பதற்காக ஜோக் கிற்குக் கீழ்கண்டவாறு பிரார்த்தனை செய்யச்சொல்லி ஒரு கடிதம் எழுதினார்.

"நீங்கள் வாராது போனால் உத்தியாபனம் சிறப்பாக முடிவு பெறாது. ஆகவே, பணிவுள்ள சேவகனாகிய என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அருள்செய்யுங்கள்.-

"நானோ வயிற்றுப் பிழைப்புக்காக அரசாங்கத்திற்கு பணி செய்பவன். என்னால் முடிந்த அளவிற்கு ஆன்மீக சாதனைகளையும் செய்கிறேன். இது விஷயம் உங்கள் மனதிற்கே நன்கு தெரியும்.- (பி. வி . தேவ் டஹானுவில் தாசீல்தாராக வேலை செய்துவந்தார். )

"ஆகவே, டஹானுவிலிருந்து நெடுந்தூரம் ஷிர்டிக்கு வருவதென்பது என்னுடைய சக்திக்கு மீறிய செயல். ஆயினும், என்னுடைய அழைப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையும்."

பாபுசாஹெப் ஜோக் கடிதம் முழுவதையும் பாபா கேட்குமாறு படித்தபின் அவரிடம் சொன்னார், "தேவுக்கு உதவி செய்யுங்கள். உத்தியாபன விழாவைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுங்கள்."

தூய்மையான மனத்துடன் அனுப்பப்பட்ட அந்த அழைப்புக் கடிதத்தை முழுக்கக் கவனமாகக் கேட்டபின் பாபா சொன்னார், "யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.-

"எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.-

"நீரும் நானும் மூன்றாவது நபர் ஒருவரும் ஒன்றுசேர்ந்து போவோம். அவருக்கு அவ்வாறு கடிதம் எழுதுங்கள். அழைப்புக் கடிதம் எழுதியவர் சந்தோஷப்படுவார்."

 


 

Thursday, 18 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இது ஆதாரமில்லாத கருத்து என்று சந்தேகப்படுபவர்கள் பாவிஷ்யோத்ர புராணத்தைப்  படிக்கலாம். அந்தப் புராணத்தில், திரிபுரம் எரித்த சிவனே இவ்வாறு திருவாய்மொழிந்திருக்கிறார் .

ஈதனைத்தும் சாயியின் அருள்வெளிப்பாடே, ஆயினும், உலகியல் ரீதிக்கு உட்பட்டும் பக்தர்களின் நன்மை கருதியும் இக் காவியம் இயற்றுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்.

அதன் பிறகு, சமர்த்த சாயியின் கதையை பக்தர்கள் சாயி லீலா பத்திரிக்கையில் மாதந்தோறும் மிகுந்த பிரேமையுடன் கேட்டுவருகிறார்கள்.

அனுமதி அளித்த ஸாயிதான் எனக்கு புத்தியையும் அளித்தார். அவர்தான் ஆதாரமான உணர்வையும் எனக்கு ஊட்டினார். அவர்தான் தம்முடைய கதையத் தாமே எழுதவைக்கிறார்.

ஹேமாட் தம்முடைய புத்தியை உபயோகித்து இக் காவியத்தை இயற்றுகிறார் என்ற விகற்பமான சிந்தனை உங்கள் மனத்தில் சிறிதளவும் வேண்டா. ஆகவே, உங்களை மிகுந்த விநயத்துடன் கேட்டுக்கொள்கிறேன்; குணத்தையோ தோஷத்தையோ என்னுடையது ஆக்காதீர்!

குணம் (சிறப்பு) தெரிந்தால் அது சாயியினுடையது. தோஷம் (பிழை) ஏதாவது தெரிந்தால் அதுவும் அவருடையதே! நான் சாயியின் கையிலிருக்கும் பொம்மை; நூல்களின் இழுப்புக்கேற்ப நான் நடனமாடுகிறேன்.

நூல்களனைத்தும் பொம்மலாட்டாக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும் உருவங்களிலுமுள்ள விசித்திரமான பொம்மைகளைக் கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.

இப்பொழுது இந்த அறிமுக உரை போதும்! கதை மேற்கொண்டு தொடரவேண்டுமென்ற ஆர்வமுள்ள கதைகேட்பவர்கள், "அடுத்த அற்புதமான கதை என்ன?" என்று கேட்பது இயல்பே. குருவின் பெருமையையும் பக்தர்களின் அருமையையும் அவர்களுக்கு விவரிக்கிறேன்.

சென்ற அத்தியாயத்தை முடிக்கும் சமயத்தில், எனக்கு எந்தக் கதை ஞாபகப்படுத்தப்படுகிறதோ, அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆகவே, இப்பொழுது என் மனத்தில் உதித்திருக்கும் கதையைக் கேளுங்கள்.

பக்தர் பிரேமையுடன் போஜனம் (உணவு) அளிக்கும்போது சாயி எவ்வாறு பரம திருப்தி அடைகிறார் என்பதுபற்றிய இனிமையான கதையைச் சொல்கிறேன்; ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

வாஸ்தவமாக, சிசுவுக்கு தாயார் எப்படியோ அப்படியே பக்தருக்கு சாயி பிரத்யட்சம். குழந்தையைக் காக்கத் தாய் எப்படி ஓடி வருகிறாளோ, அப்படி பக்தன் எங்கிருந்தாலும் சாயி ஓடி வருகிறார். யாரால், அவருக்கு கைம்மாறு செய்யமுடியும்?

உடலளவில் அவர் ஷிர்டியில் சுற்றி வந்துகொண்டிருந்தார்; ஆயினும் அவர் மூன்று உலகங்களிலும் சஞ்சாரம் செய்தார். இது சம்பந்தமாக ஒரு சுவாரசியமான விருத்தாந்தம் சொல்கிறேன்; சாந்தமான மனத்துடன் கேளுங்கள். 




Thursday, 4 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


40 . உத்தியாபன (விரதங்களின் நிறைவு) விழா


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இக் காவியத்தின் மூலமாகத் தம் பக்தர்களுக்கு உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் போதனையளித்து வாழ்க்கையில் அடையவேண்டியதை அவர்களை அடையச் செய்து, தம்முடைய வேலையையும் நிறைவேற்றிக்கொண்ட சாயி பூஜிக்கத்தக்கவர் , பூஜிக்கத்தக்கவர்.

எவர், பேதம் பார்க்காது தம்முடைய கையை பக்தரின் தலைமேல் வைப்பதன் மூலமாக சக்தியைப் பாய்ச்சி, பக்தருக்குக் கிடைக்காத வஸ்துவும் (பொருளும்) கிடக்கைக்கும்படி செய்கிறாரோ, அவர் பூஜிக்கத்தக்கவர்.

'நீர்-நான்' என்ற பேதபாவமின்றி  சாயிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அனன்னியமாக எவர் சரணாகதி அடைகிறாரோ, அவரை சாயி அன்புடன் அணைத்துத் தம் இதயத்துள் தரிக்கிறார்.

கடலும் நதியும் பெயரளவில் வேறுபட்டவை. ஆனால், மழைக்காலத்தில் இரண்டும் ஒன்றாகிவிடும்போது எந்த வித்தியாசமும் இன்றிப் பார்ப்பதற்கு ஒரே உருவமாகிவிடுகின்றன.

அதே பாவத்தில் சத்குருநாதரிடம் பக்தர்கள் அனன்னியமாக சரணடையும்போது அவர்களுடைய பக்தியைக் கண்டு அவரும் தம்மையே அவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.

ஜய ஜய தீனதயாளா! பக்தர்களை உத்தாரணம் செய்பவரே! அன்புக்கடலே பிரம்மாண்ட மண்டலங்கள் அனைத்திலும் வியாபித்திருப்பினும் , ஷிர்டியில் தனிமையில் வாழும் தெய்வமே ! ஜய ஜய!

ஞானியாகிய தேவரீர் கால்களைப் பரப்பிக்கொண்டவாறு, நடுவே ஏந்திரத்தை வைத்து, அச்சை ஆடவிடாமல் இறுக்கி, முதல் பிடி தானியத்தை இட்டு மாவு  அரைக்க ஆரம்பித்தபோது என் சித்தம் வியப்படைந்தது!

அதுவே இந்தக் காவியத்தின் மூலம், அதுமாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதினால் மனத்தின் மலங்கள் அழியும் என்ற பலமான ஆர்வம் என் மனத்தே எழுந்தது.

ஹரியும் மிகுந்த மகிழ்ச்சியடைவார். தம்மைப் புகழ்ந்து பாடுவதைவிடப் பக்தர்களுடைய பெருமையும் குணாதிசியங்கள் பற்றியும் பாடுவதையே அவர் பெரிதும் விரும்புகிறார். 




Thursday, 27 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

கதையும் கதையைச் சொல்லும் வாயும் சொல்பவரும் சமர்த்த சாயியாக இருக்கும்போது இந்த ஹேமாட் பந்த் யார்? வேறு புனை பெயரே !

ஆகவே, மேற்கொண்டு அவருடைய மனத்தில் என்ன உதிக்கிறதோ அதைத்தான் நீங்கள் கேட்கப்போகிறீர்கள். வேளை வரும்போது தானாகவே வெளிப்படப் போவதைப்பற்றி  இன்றென்ன கவலை?

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாடட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்' என்னும் முப்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 




Thursday, 20 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"அங்கேதான் நாம் வளையவருவோம்; பேசுவோம், அங்கேதான் நாம் ஒருவரையொருவர் அன்புடன் அணைத்துக்கொண்டு விளையாடுவோம்; எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்போம்."

மாதவராவ் ஸ்ரீசாயியைக் கேட்டார், "இதுதான் நிச்சயமான ஆணையென்றால் அஸ்திவாரத்தை சுபதினமான இன்றே போட்டுவிடுவோம்.-

"தேவா! இது முஹூர்த்த வேளையா? உடனே சென்று ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைக்கட்டுமா?" பாபா உடனே சென்றார், "உடை, உடை". மாதவராவ் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து உடைத்தார்.

பின்னர் ஒரு கர்பக்கிருஹம் எழுப்பப்பட்டது. முரளீதரனுக்கு ஒரு மேடையும் அமைக்கப்பட்டது. சிலை செதுக்கும் வேலை ஒரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், பின்னர் இவ்வாறு நிகழ்ந்தது. பாபாவின் உடல்நலம் தீவிரமாக குன்றியது. அந்திமகாலம் நெருங்கியது. பக்தர்கள் மனம் குழம்பினர்.

பாபுஸாஹிபும் அமைதியிழந்தார். 'வாடாவின் கதி என்ன ஆகப்போகிறதென்று நிச்சயமாகத் தெரியவில்லையே' என்றெண்ணி வருத்தமுற்றார்.

"கடைசியில், பாபாவின் பாதங்கள் கோயில் தரையை மிதிக்கப்போகின்றனவா, இல்லையா? லட்சக் கணக்கில் பணம் செலவழித்தாகிவிட்டது; இப்பொழுது பெரிய தடங்கல் வந்துவிட்டதே!-

"பாபா தேகத்தை உதிர்த்துவிட்டபின், முரளீதரன் எதற்கு? வீடு எதற்கு? வாடா எதற்கு? கோயில் எதற்கு? என்றெண்ணி புட்டி மனமுடைந்து போய் சோகமுற்றார்.

பின்னர், கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்தாலும் வாடா செய்த பெரும் பாக்கியத்தாலும் முடிவில் எல்லாமே பக்தர்களின் விருப்பப்படியும் சாயியின் ஆணைப்படியுமே நடந்தன.

உயிர் பிரியும் நேரத்தில் பாபாவின் திருமுகத்திலிருந்து "என்னை வாடாவில் வையுங்கள்" என்று வெளிப்பட்ட திருவாய்மொழியைக் கேட்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பிறகு, சாயியின் புனிதவுடல் (முரளீதரனுக்காகக் கட்டப்பட்ட) கர்ப்பக்கிருகத்தில் (கருவறையில்) அடக்கம் செய்யப்பட்டது. வாடா, சமாதி கோயில் ஆயிற்று! சாயியின் வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக்கெட்டாதது அன்றோ!

எவருக்குச் சொந்தமான வாடாவில், காதால் கேட்பதற்கே பரமபுனிதமான பெயருடைய சாயியின் புனிதவுடல் அடக்கம் செய்யப்பட்டதோ, அந்த புட்டி மஹா பாக்கியசாலி; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்.

இந்தக் கதை அவ்வளவு பவித்திரமானது. கேட்பவர்கள் சந்தோஷத்தையும் செல்வத்தையும் பெறுவர். ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன்; ஒரு கணமும் அவருடைய பாதங்களை விட்டுப் பிரியமாட்டேன்.

சாயி உபதேசித்த மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தி அவரை சந்தோஷப்படுத்தினால் , அனுபவங்கள் இஷ்டமாக இருப்பினும் கஷ்டமாக இருப்பினும், சந்தேகமில்லாமல் வாழ்க்கையின் அபீஷ்டங்கள் (தீவிரமான விருப்பங்கள்) நிறைவேறும். 




Thursday, 13 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சுட்டுவிரலைத் தூக்கி, "இங்கே ஒரு கதவைப் பொருத்து; அங்கே ஒரு ஜன்னல் வை. இங்கே கிழக்குப் பக்கமாக ஒரு நீளமான கூடத்தைக் கட்டு. அது கட்டடத்தின் அழகை மேம்படுத்தும்" என்று யோசனைகள் கூறினார்.

பின்னர், காரிய காரண நிமித்தமாக, பாபுசாஹெப் ஜோக் கின் கைகளால் செய்யப்படவேண்டிய நிர்மாண வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலை இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது புட்டியின் சித்தத்தில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது (உதித்தது). "இக் கட்டடத்தில் ஒரு கர்ப்பகிருஹம் (கருவறை) சேர்க்கப்பட்டால், முரளீதரனின் சிலை ஒன்றை அங்கு ஸ்தாபனம் செய்யலாம்."

எண்ணம் உதித்ததே தவிர, பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமலும் அவருடைய தெளிவான ஆணையைப் பெறாமலும் புட்டி எந்த வேலையையும் ஆரம்பிக்கமாட்டார்.

இதுவே அவருடைய நித்திய நியமமாக இருந்தது. பாபாவின் அனுமதியே முக்கியம். அது இல்லாமல் எக் காரியத்திலும் புட்டி இறங்கமாட்டார்.

"கூடத்தின் மத்தியில் தடுப்புச்சுவர் எதற்கு? அதனால் என்ன பிரயோஜனம்? இருபுறங்களிலும் சுவர்களை எடுத்துவிட்டு முரளீதரனை அங்கு ஸ்தாபனம் செய்துவிடலாம்." (புட்டியின் சிந்தனை)

தடுப்பு உள்ள கூடத்திற்குப் பதிலாக ஒரு தேவாலயத்தை அமைத்துவிடலாம் என்பதே புட்டியின் விருப்பம். ஆயினும், பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொண்டு அவர் அனுமதியளித்தால் சந்தேகமில்லாமல் அவ்வாறே கட்டவேண்டும்!

ஆகவே அவர் மாதவராவிடம் சொன்னார், "பாபாவை இதுபற்றிக் கேட்போம். பிறகு, தேவனின் (பாபாவின்) விருப்பம் எப்படியோ அப்படியே மேற்கொண்டு திட்டம் போடுவோம்."

பாபா தம்முடைய தினசரி உலாவில் வாடாவுக்கு வந்து கதவருகில் நின்றபோது, சாமா அவரை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள்.

"தேவா! கூடத்தின் தடுப்புச் சுவர்கள் இரண்டையும் இடித்துவிட்டு குழலூதும் கண்ணனை அங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமென்று பாபுசாஹெப் சொல்கிறார்.-

"மத்தியபாகத்தில் ஒரு மண்டபம் வரும்படியாக அமைத்து, அதில் ஒரு சிம்மாசனம் கட்டி, அதன்மேல் முரளீதரனை ஸ்தாபனம் செய்யலாம். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். -

"இவ்வாறு பாபுசாஹெப் யோசிக்கிறார். ஆயினும் தங்களுடைய அனுமதி தேவை. இந்த ரீதியில், கோயிலும் வாடாவும் இரண்டுமே கிடுகிடுவென்று முடிந்துவிடும்."

சாமாவின் இவ்வார்தைகளைக் கேட்ட பாபா ஆனந்தம் நிரம்பியவராக சொன்னார், "கோயில் வேலை பூரணமாக முடிந்தவுடன் நாமும் அங்கு வந்து வசிப்போம்".

வாடாவின் சுவர்களையே பார்த்துக்கொண்டு பாபா மதுரமான வார்த்தைகளைப் பேசுவார், 'வாடாவின் வேலை பூராவும் முடிந்தபிறகு அதை நாமே உபயோகிப்போம்.-


 

Thursday, 6 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மாதவராவை, "நீர் என் அழுதீர்?" என்று புட்டி கேட்டபோது, அவர் பதில் கூறினார். "ஸ்ரீ சாயியின் அன்பு ததும்பிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் பிரமாவேசம் கொண்டேன்.-

"எனக்குத் தொண்டையை அடைத்தது.  கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. என்னுடைய இதயத்தில் பொங்கிய அன்பு எனக்கு கட்டுப்படாமல் அழுகையாக வெடித்தது. -

"பாபா என்னருகில் வந்து தெளிவாக ஆணையிட்டார், "வாடாவும் தேவாலயமும் திடமான உருவம் பெறட்டும். நான் எல்லோருடைய தீவிரமான விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன்."

இருவரும் ஒரேவிதமான கனவுக்காட்சி பெற்றது பற்றி பாபுசாஹெப் மனம் வியந்தார். மனத்திலிருந்த சந்தேகம் விலகியது. வேலையை ஆரம்பித்துவிடுவது என்று தீர்மானம் செய்தார்.

புட்டி, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பணக்காரர்! கோயிலுடன் வாடா கட்டுவதற்குண்டான வசதி படைத்திருந்தார். மாதவராவுக்கு நடுத்தர வசதிதான் இருந்தது. ஆயினும் இருவருக்கும் ஒரேவிதமான காட்சி கிடைத்தது.

பரஸ்பரம் கனவுக் காட்சிகள் ஒத்துப்போயின. இருவருமே பரமானந்தத்தால் நிறைந்தனர். கட்டடத்திற்கு ஒரு வரை படம் தயாரித்தனர். இந்த வரைபடத்தைக் காகா (ஹரி சீதாராம் தீக்ஷிதர்) ஆமோதித்தார்.

அடுத்த நாள் காலையில் இம் மூவரும் பாபாவுடன் இருந்தபோது எப்பொழுதும்போல் பாபா சாமாவின் முகத்தைப் பிரேமையுடன் உற்றுப்பார்த்தார்.

அப்பொழுது சாமா கேட்டார், "ஓ, தேவா! இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டு! எங்களை நிம்மதியாக தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைக்கிறீர்கள்."

இதைக் கேட்டவுடனே பாபா தம் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு, "யார் என்ன சொன்னாலும் சரி, நாம் உம்மிடத்திற்கு வந்திருந்தோம்" என்று சொன்னார்.

பிறகு, ஏற்கெனவே விவரிக்கப்பட்ட யோசனை-வரைபடம் பாபாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோயிலை உள்ளடக்கி வீட்டைக் காட்டும் யோசனைக்கு பாபா உடனே அனுமதியளித்தார்.

மாதவராவ் வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கினார். நிலவறையும் முதல் தளமும் அவருடைய நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டன கிணறும் அவருடைய கைகளால் கட்டப்பட்டது! கட்டுமான வேலை இதுவரை முன்னேற்றியது.

லெண்டிக்குப் போகும்போதும் திரும்பிவரும்போதும் கதவுகளும், ஜன்னல்களும் பொருத்தப்படும்போதும் பாபா ஆர்வத்துடன் கட்டுமான வேலையின் முன்னேற்றத்தை கவனிப்பார்.