valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 21 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்யவாஸம் செய்வாள். சப்தாஹமாகப்  (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.

இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சோ உங்களுக்கு சமுசயங்களை (ஐயங்களை) விளைவிக்கலாம். என்னுடைய, வாய்மூலமாக சாயியே இதைச் சொல்கிறார். அஆக்வே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.

சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்கு கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும்.

ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களை சீந்துவார்?

இன்பமும் துன்பமும்  மனத்தின் விகாரங்கள், சத்சங்கம் நம்மை இந்த நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.

துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்து சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.

பிராரப்த கர்மத்தினால் (முன்ஜன்ம வினைகள்) விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும்! ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும்  பக்தன் சுலபமாக தவிர்த்துவிடலாம்.

பிராரப்த கர்மத்தின் விளைவுகளிலிருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.

துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவை! முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கபோகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்!

அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும், அவ்வப்பொழுது ஷிர்டிக்கு பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.

சாயி, சாயி என்று நாமஸ்மரணமும் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரசரணமும். ஆகவே, அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.

கள்ளங்கபடமற்ற பிரேமைகளுடன் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜை செய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள். 




Thursday, 14 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவையானவை என்னவென்றால், கடமையைச் செய்தும் தூய்மை தரும் சடங்குகளை செய்தும் கிடைக்கும் பலமும், பிறந்ததிலிருந்தே செய்யும் ஆன்மீக அப்பியாசங்களால் விளையும் விவேகபுத்தியுந்தான்.  பயிற்சின்றி சித்தம் சுத்தமடையாது; மனம் தூய்மையடையாது; ஞானம் பிறக்காது.

நிர்மலமான சித்தத்தை விருத்தி செய்துகொள்ளாவிட்டால் ஆத்மஞானம் பிறக்காது. ஆகவே, தன்னை அறிந்த நிலையை அடையும்வரை பக்திமார்க்கத்தை கைவிடலாகாது.

நான்கு முக்திநிலைகள் என்னும் கலசங்களுக்குமேல் துறவென்னும் கொடி உயரப் பறக்குமாறு ஆத்மஞானமாகிய கோயிலை எழுப்புவதற்கு  பகவானின்மீது பக்தியென்பதே அஸ்திவாரம்.

நாய்களும் பன்றிகளும் மலத்தைத் தின்றுவிட்டு இரவுபகலாக குப்பைமேட்டில் புரளுகின்றன. அவையும் விஷயபோகங்ளை அனுபவிக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த பிறகும் நாம் அவற்றைப் போலவே செயல்படுவது முறையா?

மனித தேகத்தில் வாழும்போது, கடமைகளைச் செவ்வனே செய்தும் சுயதர்ம அனுஷ்டானங்களை செய்தும் தவம் செய்தும் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். தூய்மையான மனம் அகண்டமான பிரம்ம சித்தியை அளிக்கும்.

'சாதுக்களுக்கு சேவை செய்வது முக்தி மார்க்கத்தின் வீடு; சிற்றின்பம் நரகத்தின் நுழைவாயில்'. பூஜைக்குரிய ஆன்றோர்களின் இந்த வாக்கு எப்பொழுதும் சிந்தனையில் வைக்கத்தக்கது.

எப்பொழுதும் நன்னெறியில் நடந்து உயிரைக் காப்பதற்கு மட்டும் உணவுண்டு வீடும் குடும்பமும் வேண்டாவென்று ஒதுக்கி வாழும் சாது தன்னியராவார்.

எவர்களெல்லாம் கண்களையும் சிமிட்டாமல் சாயியைபற்றிச் சிந்தனை செய்கிறார்களோ, அவர்களெல்லாம் அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். அவர்களிடம் விசுவாசம் ஏற்பட்டு ஏற்பட்டு சாயி அவர்களின் மேல் தியானம் செய்கிறார்.

குரு நாமஸ்மரணம்  மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குருவும் பக்தஸ்மரணம்  செய்கிறார்! தியானம் செய்பவர், தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்! இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.

'நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நானோ இரவுபகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்." இது பாபாவின் பிரேமை பொதிந்த திருவாய்மொழி; பலருக்கு ஞாபகமிருக்கும்.

நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த சாயியின் போதியே (தினமும் பாராயணம் செய்யும் நூலே) நமக்குத் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களிலிருந்து விடுவிப்பவர் அவரே.

தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்மந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப் படிப்பவருக்கு ஸ்ரீஹரி குருராஜருடன் சேர்ந்து காட்சியளிப்பார். 




Thursday, 7 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயியே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்ட பிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா? பார்க்குமிடங்களிலெல்லாம் அவருக்கு சாயியே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் சாயி இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.

சாயியின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் க்ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், சாயியே அவரை ரட்சிப்பார்.

செவிச்செல்வ விஷயத்திலும் இதுவே கதி. காதுகளுக்கு சாயியைத் தவிர வேறு கேள்வியே இல்லை. மூக்கும் சாயியின் பரிமளத்தால் நிறையும்; நாக்கிலும் சாயி நாமத்தின் இனிமையான சுவையே ஊறும்.

சாயியின் புன்னகை தவழும் முகம் எவ்வளவு அற்புதமானது! அப் புன்னகை அளித்த சுகம் எவ்வளவு தூய்மையானது! சாயியின் திருமுகத்தை நேரில் பார்த்தவர்களும் அமிருதத்தை ஒத்த அவருடைய திருவாய்மொழியைக் கேட்டவர்களும் மஹாபாக்யம் பெற்றவர்கள்!

மங்களங்களின் உறைவிடமும், சுகத்திற்கும் சாந்திக்கும் பிறப்பிடமும், விவேகமும் வைராக்கியமும் நிறைந்தவருமான சாயி எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தார்.

வயிறு நிரம்பப் பாலைக் குடித்தபிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிடவேண்டும்.

குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.

இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில், அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.

கால்கள் முதலாக வெளிவந்து பிறந்தவரின் கண்களில், சித்திகள் பெற்ற மந்திரவாதியின் மையைப் பூசினால், அவருக்கு மறைந்திருக்கும் புதையல்களும் கண்ணுக்குப் புலப்படும். அதுபோலவே, குருவின் பாதத்துளிகள் கண்களில் பட்டவருக்கு ஞானமும் விஞ்ஞானமும் மலரும்.

சித்தர்களுக்கு எந்தெந்த லக்ஷ்ணங்கள் (சிறப்பியல்புகள்) உண்டோ, அவையே சாதகர்களின் பயிற்சிமுறையாக அமைய வேண்டும். கடுமையான பயிற்சியும் நீண்டகாலப் பிரயத்தனமும் செய்பவரே வெற்றியடைகிறார்.

நெய் பாலுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், பாலைக் காய்ச்சி அது ஆறிய பின், புளித்த மோரை உறையாக ஊற்றாவிட்டால் மோரும் கிடைக்காது; வெண்ணையும் கிடைக்காது. முறையாகச் செயலாற்றி மோர் கிடைத்த பின்பும், நெய் கிடைப்பதற்கு மேலும் செயல்பட வேண்டும்.

மோரைக் கடையாமல் வெண்ணெய் கிடைக்காது. வெண்ணெயையும் அடுப்பிலேற்றி பதமாகக் காய்ச்சினால்தான் சுவை மிகுந்த நெய் கிடைக்கும்.


 

Thursday, 30 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"பூரணமான சிரத்தையும், தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன் இணைந்த மகேசுவரன். அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.

"பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்" மேற்கொண்டது. அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய சாயிநாதரின் திருவாய்மொழியாகும்.

கண்ணுக்குத் தெரியும் இப் பிரபஞ்சம் ஓர் மாயை என்பதையும், பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்பட்டபோதிலும் கண்விழித்தவுடன் காணாமற்போகும் கனவைப் போன்றது என்பதையும் அவசியம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய புத்திக்கு அவ்வளவு தூரந்தான் எட்டும்; அதற்குமேல் கேட்டது. நாம் ஆத்மாவை அறிந்துகொள்வதும் அவ்வளவே. உண்மை எது என்பதை புத்தியால் அறிந்துகொள்ளமுடியாது. அதை உணரும் சக்தி ஆத்மாவுக்குத்தான் உண்டு.

இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததையும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒளியால் ஒளியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டதும் - குரு ரூபத்தில் இருக்கிறது.

ஆத்மா எந்த குணாதியசம் இல்லாதது; மூப்பிற்கும் ஜனன மரணத்திற்கும் அப்பாற்பட்டது; புராணமானது; சாசுவதமானது; என்றும் அழிவில்லாதது;

நித்தியமானது; பிறக்காதது; புராதானமானது; விண்வெளியைப் போல் எங்கும் நிறைந்தது; ஆரம்பம் இல்லாதது; இடையறாதது; வளர்ச்சியோ மாறுதலோ இல்லாதது.

சொல்லுக்கு அப்பாற்பட்டதும் உருவமில்லாததும் ஆரம்பமில்லாததும் முடிவில்லாததும் அளக்கமுடியாததும் அழிவில்லாததும் வாசனையோ ருசியோ இல்லாததும் கறைபடாததுமான ஒன்றின் சொரூபத்தை யாரால் வர்ணிக்கமுடியும்?

இவ்வகையான நிர்குணமான ஆத்மாவை அஞ்ஞானத்தால் அறியமுடியாதபோது அஞ்ஞானத்தை ஞானத்தால் விலக்குங்கள். ஆத்மா சூனியம் என்று மட்டும் எப்பொழுதும் சொல்லிவிடாதீர்கள்.

ஸ்ரீசாயியின் சொந்தச் செல்வமான அந்தப் பரமஹம்ச நிலை எப்பேர்பட்டது! காலம் அதை ஒரு கணத்தில் திருடிக்கொண்டு போனபிறகு அதை மறுபடியும் பார்க்கமுடியுமா?

மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றால் பந்தப்பட்ட சாதாரண இல்லற பக்தனை விட்டுவிடுங்கள். அனைத்தையும் துறந்த யோகிகளும் சாயிதரிசனத்திற்கு வந்து பாதகமலங்களில் மூழ்கினர்.

ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களிலிருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய பக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்)

 


 

Thursday, 23 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

புத்திதான் ஆசைகளுக்கு இடமளிக்கறது. ஆகவே, புத்தி அழிந்துபோகும்போது ஆத்மா எழும்புகிறது; அழியாத இடத்தை அடைந்துவிடுகிறது.

அஞ்ஞானம், மாயை, ஆசை, செயல் இவைதான் மரணத்தின் முக்கியமான வழிமுறைகள். இவையனைத்தும் அணைந்துபோகும்போது உலகவாழ்வின் பந்தங்களும் அறுந்துவிடுகின்றன.

மேகங்கள் விலகியவுடன் சுயம்பிரகாசியான சூரியன் ஒளிர்வதுபோல், பந்தங்கள் அறுந்து விழுந்தவுடன் ஆத்மா எந்த முயற்சியுமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

'இந்த சரீரமே நான்; இது என்னுடைய செல்வம்'. - இதற்குத்தான் திடமான தேகாபிமானம் என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்குக் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம்.

இந்த தேகம் ஒருமுறை விழுந்தவுடன் கர்மவிதையால் இன்னொரு தேகத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்தத் தடவையும் கர்மவிதை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மற்றுமொரு ஜன்மம் ஏற்படுகிறது.

மறுபடியும் விதை மரமாகிறது. பூர்வஜென்ம வாசனை என்னும் விதை புதுப்புது தேகங்களை ஒவ்வொரு தடவையும் அளிக்கிறது. இந்தச் சக்கரம் பூர்வஜென்ம வாசனைகள் அழியும் வரை முடிவில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது.

ஆசைகள் வேரோடு அழிக்கப்பட்டவுடன் இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. அப்பொழுதுதான் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுவே வேதாந்த (உபநிஷதங்கள் தரும்) உபதேசம்.

தர்மம், அதர்மம், இரண்டையுமே கடந்த நிலைக்கு விரஜ நிலை (ஆசைகளைக் கடந்த நிலை) என்று பெயர். அஞ்ஞானமும் ஆசைகளும் அழிக்கப்பட்ட நிலையில் மரணத்திற்கு எந்தவிதமான சக்தியும் இல்லாமல் போகிறது.

பூர்வஜென்ம வாசனைகளால் விளையும் ஆசைகளை அறுப்பதே பிரம்மானந்தத்தை அடையும் வழி. இந்த நிலையை எழுத்தால் விவரிக்கமுடியாது; ஆயினும் அதை எழுதி விவரிக்க முயல்கிறோம். பேச்சால் வர்ணிக்கமுடியாது; ஆயினும் அதை வாய்ச்சொல்லால் வர்ணிக்க  முயல்கிறோம்.

முழுமுதற்பொருளை நன்கு அறிந்துகொள்வதே வேண்டாத விஷயங்களுக்கெல்லாம் ஒரு முடிவு; மனத்தில் விளைந்த அனைத்து ஆசைகளின் நிறைவேற்றம். இதுவே சுருதி (வேதங்கள்), ஸ்மிருதி (வாழ்க்கை நெறிக் கோட்பாடுகள்), இவை இரண்டின் பிரமாணம்.!

பிரம்ம ஞானத்தை அடைந்தவனே பரவுலகத்தை அடைந்தவன். அது மட்டுமே கடைமுடிவாக பிரம்மத்துடன் ஒன்றிய ஆனந்தத்தை அடையும் மார்க்கம். இதைவிட உயர்ந்த நிலை வேறெதுவும் உண்டோ? தன்னை அறிந்தவன் சோகத்தை கடந்தவன் அல்லனோ?

அஞ்ஞான இருளை மூலமாகக் கொண்ட சம்சாரக்கடலை பிரம்ம ஞானம் என்னும் ஒரே உபாயத்தால்தான் கடக்கமுடியும். அதுவே அனைத்துப் பேறுகளையும் பெரும் சாதனை மார்க்கம். 





Thursday, 16 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சிரேயஸை (ஆன்மீக மேன்மை) அளிக்கும் ஞானமே கட்டாயமாக அடையவேண்டிய மெய்யான ஞானம். எது கேவலம் பிரேயஸை (உலக வாழ்வில் உழலுதல்) அளிக்கிறதோ அதற்கு அவித்யாஅல்லது அஞ்ஞானம் என்று பெயர்.

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய பயம் மரணம் பற்றியதுதான். இந்த பயத்திலிருந்து விடுபட்டு பயமற்ற நிலை பெறுவதற்கு 'உள்ளது ஒன்றே'என்ற அத்வைத ஞானத்தை அளிக்கும் குருவின் இருபாதங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொள்ளவேண்டும்.

எங்கு 'இரண்டுண்டு' என்னும் பிழையான கருத்து நுழைகிறதோ அங்கு பயமும் நுழைந்துவிடும். ஆகவே, பேதம் பாராத குருவின் திருவடிக்கு சேவை செய்தால், பயமென்பது லவலேசமும் இருக்காது.

தூய அன்பு என்னும் சந்தனத்தை அவருடைய நெற்றியில் இடுங்கள். எளிமையான விசுவாசம் என்னும் பீதாம்பரத்தை அவருக்கு ஆடையாக அணிந்த இறைவனைத் தம் பக்தர்களுக்கு காட்டிக்கொடுப்பார்

அஷ்டபாவ நிலையில் பெருகும் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டுங்கள். திடமான சிரத்தையென்னும் சிம்மாசனத்தில் அவரை எழுந்தருளச் செய்யுங்கள். அவர் உடனே முகம் மலர்வார்.

பக்தி என்னும் மேகலையை இடுப்பில் அணிவித்து அவரை உங்களுக்கே சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பவை அனைத்தையும் அவருக்கு பிரீதியுடன் சமர்ப்பித்து ஆரத்தி சுற்றுங்கள்.

இல்லாத பொருளை அழிக்கமுடியாது; இருக்கும் பொருளைத்தான் அழிக்க முடியும். கல்லால் அடிபட்டபானை உடையும்போது அதனுடைய உருவந்தான் இல்லாமற்போகிறது.

பானையின் இருக்கும் தன்மை சிறிதளவும் அழிவதில்லை. ஏனெனில், உடைந்த பாகங்களுக்கு மறுபடியும் பானையாக ஆகும் சக்தி இருக்கிறது.

ஆகவே ஒரு பொருளை அழிக்கமுடியுமா என்பது அதனுடைய இருக்கும் தன்மையையே சார்ந்திருக்கிறது. அதுபோலவே எந்த மரணமும் சூனியத்தில் முடிவதில்லை.

காரணம் இன்றி விளைவேதும் இல்லை. இதை எல்லா விஷயங்களிலும் அனுபவத்தால் காண்கிறோம். உருவநிலையில் இருப்பது அருவநிலைக்கு மாறினாலும், சத்தியத்தின் சம்பந்தத்தை விட்டுவிடுவதில்லை.

சூக்கும நிலையிலேயே பல படிகள் இருப்பது இதைத் தெளிவாக்குகிறது. பூதவுடல் அழிந்துபோன பின்பும் சூக்கும சரீரம் தொடர்ந்து வாழ்கிறது!

சூக்கும சரீரமும் மறையும்போது அதைவிடச் சூக்குமமான நிலை தொடர்கிறது. அந்த நிலையில் ஞானேந்திரியங்களும் மனமும் புத்தியும் இன்பங்களைத் துய்க்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

தாத்பர்யம் (மூலக்கருத்து) என்னவென்றால், புத்தியும் ஓய்ந்துபோகும் நிலையில் உருவமுள்ளது உருவமில்லாமல் போக்கியது, அப்பொழுதும் ஆத்மா அணைந்துபோவதில்லை; சுயமாகவே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. 




Thursday, 9 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சொர்க்கத்திற்குப்போனாலும்  நரகத்திற்குப் போனாலும் இன்பத்துன்ப அனுபவங்களில் பேதம் ஏதுமில்லை. இந்திரனானாலும் கழுதையானாலும் புலனின்ப அனுபவம் ஒன்றுதான்.

இந்திரன் நந்தவன சுகத்தில் புரள்கிறான்; கழுதை குப்பைமேட்டு சுகத்தில் புரள்கிறது. ஆனாலும், சுகம் என்ற நோக்கில் பார்க்கும்போது இரண்டிற்கும் சிறிதளவும் பேதம் இல்லை.

புண்ணியக் கணக்கு தீர்ந்தவுடன் எங்கிருந்து கீழே விழுந்துவிடுவோமோ, அங்கே செல்வதற்கு எக்காரணத்திற்காகப் பிரயத்தனம் செய்யவேண்டும்?

ஒரு கல்பகாலம் வாழக்கூடிய பிரம்மலோகத்திற்கு என்ன பெருமை? அற்ப ஆயுளாக இருப்பினும் பூலோக வாழ்க்கையே சிறந்ததன்றோ?

குறுகிய ஆயுளாக (பிரம்மலோக கால நிர்ணயத்திற்கு ஒப்பிடும்போது) இருந்தபோதிலும், ஈசுவர அர்ப்பணமாக ஒருகணம் வினையாற்றினாலும் அபயம் (அடைக்கலம்) கிடைக்கிறது.

ஹரியின் கதையையும் குருவின் கதையையும், வர்ணித்தும் ஆடியும் பாடியும் இறைவனைத் தொழும் பக்தர்கள் இல்லாத இடம் எதற்கு உபயோகம்?

முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஐக்கியமானவை என்ற விஞ்ஞானமே, என்றும் அழியாத உன்னதமான பேற்றை அளிக்கக்கூடியது. இதைப் பெறுவதற்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தைவிட பூலோகமே சிறந்த இடம்.

உடலாலும் வாக்காலும் மனத்தாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும் பணிவுடனும் குருவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்.

இவ்வாறு குருவிடம் சரணடைந்த பிறகு சம்சார பயம் பற்றி பேச்சுண்டோ? மொத்தமாகக் களைந்துவிட அவர் இருக்கும்போது, உலகவாழ்வின் விசாரணைகளை பற்றி என்ன விசாரம்!

மாயையும் அஞ்ஞானமும் எங்கு வாசம் செய்கின்றனவோ, அங்கே பிள்ளைகுட்டிகளையும் மாடுகன்றுகளையும் பற்றிய பாசமும்ம் உலகவாழ்வைப்பற்றிய கவலைகளும் இரவுபகலாக ஓய்வின்றி இருக்கும். நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனை லவலேசமும் (சிறிதளவும்) இராது.

அஞ்ஞானமே பேதமனைத்திற்கும் மூலகாரணம். இக் காரணம்பற்றியே குருவிடம் சென்று சிறந்த ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

அஞ்ஞானம் நிவிர்த்தியாகிவிட்டால், 'பல உண்டு' என்னும் பேதபுத்தி அணுவளவும் மீதி இருக்காது. 'உள்ளது ஒன்றே' என்ற ஞானத்தைப் பெற்றவன் ஜனனமரணச் சுழலிலிருந்து விடுபடுகிறான்.

ஆயினும், மிக அற்பமான அளவிற்குப பேதக் கருத்தை வைத்திருந்தாலும், அவன் ஜனனமரணச் சுழலில் மாட்டிக்கொள்வான். சிருஷ்டியும் விநாசமும் அவனை விடாது தொடரும்.