valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 17 December 2020



 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஷிர்டியிலோ, ஜாம்நேரில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எங்கும் செல்லும் வல்லமை பெற்ற, எல்லாம் அறிந்த சாயிக்கு இவ்வுலகில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கமுடியாதே!


பக்தனுடைய ஆத்மாவுடன் ஒன்றிவிட்ட பாபாவுக்கு நானாவின் இல்லத்தில் இருந்த அவஸ்தை தெரிந்தது. இளகிய மனத்தினரான சாயி என்ன செய்தார் என்று பாருங்கள்.


நானாவுக்கு உதீ அனுப்பவேண்டும் என்று பாபா விரும்பினார். கோசாவி ராம்கீர் புவாவுக்கு தம்முடைய கிராமத்திற்கு திரும்பவேண்டுமென்ற பலமான எண்ணம் திடீரென்று எழுந்தது!


அவருடைய சொந்த ஊர் காண்தோச் ஜில்லாவில் இருந்தது. ஆகவே, அவர் அங்கே செல்வதற்குண்டான ஆயத்தங்களை செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.


பாபா ஜீவிதமாக இருந்தபோது, யார், எந்த வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தாலும் பாபாவின் பாதங்களை வணங்கி அனுமதி பெறாமல் யாரும் வெளியில் சென்றதில்லை.


திருமணமோ, உபநயனமோ, விதிமுறைகளின்படி சடங்குகளுடன் செய்யவேண்டிய விழாக்களோ, வேறு ஏதாவது விழாவோ, இவை சம்பந்தமாகச் செய்யப்பட்ட திட்டமிடுதலோ - அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாபாவின் அனுமதி, தவறாது பெறப்பட்டது.


பாபாவின் மனப்பூர்வமான அனுமதியும் உதீ பிரசாதமும் ஆசிகளும் இன்றி, எந்த விழாவும், விக்கினமின்றி நிறைவேறாது. இதுவே, சகலமான மக்களின் பூரணமான நம்பிக்கை.


இதுவே கிராமத்தின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. இதை அனுசரித்து ராம்கீர் புவாவும் மசூதிக்கு வந்து பாபாவின் பாதங்களை வணங்கி, கிளம்புவதற்கு அனுமதி வேண்டினார்.


அவர் சொன்னார், "பாபா, நான் கான்தேச் ஜில்லாவிலுள்ள என்னுடைய கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறேன். ஆசிகளுடன் உதீயும்  அளித்து, உங்கள் சேவகனாகிய எனக்கு அனுமதியளியுங்கள்".


பாபுகீர் என்று பாபா செல்லமாக அழைத்த ராம்கீர் புவாவிடம் பாபா சொன்னார். "போம், உம்முடைய கிராமத்திற்கு குஷியாகப் போய் வாரும். வழியில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்.-


"ஆகவே, முதலில் ஜாம்நேருக்குச் சென்று நானாவின் வீட்டில் தாங்கும். அவருடைய சமாச்சாரங்களை விசாரித்தபின், நீர் உமது வழியில் செல்லலாம்".


பாபா மாதவராவிடம் கூறினார், "சாமா, அக்கா இயற்றிய ஆராதிப்பாட்டை ஒரு காகிதத்தில் எழுது. அதை இந்த கோசாவியின் மூலம் நானாவுக்கு அனுப்பலாம்."


பிறகு அவர் கோசாவிக்கு உதீ கொடுத்தபின், ஒரு சிறிய உதீ பொட்டலமும்  கட்டி அவரிடம் கொடுத்தார். இவ்விதமாக பாபா நானாவுக்கு உதீ அனுப்பினார்.

"இந்த உதீ பொட்டலத்தையும் ஆரதிப் பாட்டையும் நானாவிடம் கொடும். அவருடைய குடும்ப க்ஷேமம் பற்றிக் குசலம் விசாரித்துவிட்டு உம்முடைய சொந்த ஊருக்குச் செல்லும்."




Thursday, 10 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்நிகழ்ச்சியிலாவது ஊதுவத்தியிலிருந்து விழுந்த விபூதி தேள்கொட்டுக்கு மருந்தாகப் பூசப்பட்டது. ஆனால், புழுதிமண்ணும் உதீயாக உபயோகப்படுத்தப்பட்ட போது அதே அனுபவத்தை அளித்தது.


ஒருவர் நெற்றியில் இடப்பட்ட  புழுதிமண், வேறு எங்கோ இருந்த நோயாளியை குணப்படுத்தியது!


வேறு கிராமத்தில் வசித்துவந்த தம் மகள் பிளேக் வியாதிக் கட்டிகளாலும் ஜுரத்தாலும் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து ஒரு தந்தை கவலையுற்றார்.

தந்தை பாந்தராவில் வசிக்க, மகள் வேறொரு கிராமத்தில் வசித்துவந்தாள். ஆகவே, அவர் நானாவுக்குச் (நானா கோவிந்த சாந்தோர்கருக்குச்) செய்தி அனுப்பினார்.


அவருக்காக நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்து அவரை இக் கவலையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் பாபாவின் உதீ பிரசாதம் சிறிது அவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கெஞ்சி, செய்தி அனுப்பினார்.


செய்தியைக் கொண்டுபோனவர் நானாவை வழியிலேயே  சந்தித்தார். நானா அப்பொழுது தம் மனைவியுடன் கல்யாண் என்னும் இடத்திற்கு போகக் கிளம்பிவிட்டிருந்தார்.


தாணே ரயில் நிலையத்திற்கு அருகில் அவருக்கு இச் செய்தி கிடைத்தது. நானாவின் கைவசம் அப்பொழுது உதீ இல்லை. ஆகவே, சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார்.


சாலையில் நின்றவாறே சமர்த்த சாயியை மன்றாடிப் பிரார்த்தனை செய்தபின், திரும்பி, எடுத்த புழுதிமண்ணைத் தம் மனைவியின் நெற்றியில் இட்டார்.


அங்கோ, அந்த பக்தர் (தந்தை) வீட்டிலிருந்து கிளம்பி தம் மகள் வசிக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தார்.


மூன்று நாள்களாக மகள் கடுமையான ஜுரத்தால் அவதிப்பட்டுப் பெரும்  வேதனையை அனுபவித்தாள். தந்தை சென்ற நாளுக்கு முந்தைய நாள்தான் ஜுரம் சிறிது இறங்கியிருந்தது.


பின்னோக்கிப் பார்த்தபோது, நானா சாயியைப் பிரார்த்தனை செய்தபின் புழுதி மண்ணை உதீயாக உபயோகித்த நேரத்திலிருந்துதான் மகளின் ஜுரம் குறைய ஆரம்பித்தது என்பதைத் தந்தை உணர்ந்தார்.


எப்படியும், இந்த வியாதியின் கதை விஸ்தாரமாக தக்க சமயத்தில் பிறகு சொல்லப்படும். உதீ சம்பந்தமான விவரத்தை மட்டும் இப்பொழுது சொன்னேன்.


பக்தனுக்கு மங்களம் அருள எப்பொழுதும் தயாராக இருந்த சாயி, பிரேமை மிகுந்த பக்தரான இதே நானா சாந்தோர்கருக்கு ஜாம்நேரில் மாம்லத்தாரக    உத்தியோகம் செய்துகொண்டிருந்தபோது அற்புதமொன்று செய்தார். அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.


உதீயின் மஹிமை அபாரமானது. கதை கேட்பவர்களே! அந்த அற்புதத்தைச் சொல்கிறேன்; கேட்டு ஆச்சிரியப்படுவீர்கள்.


நானாவின் மகள் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். எந்நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலைமை, ஜாம்நேரில் நானாசாஹேப் சமர்த்த சாயியைத் தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் கூவி அழைத்துக்கொண்டிருந்தார். 




Thursday, 3 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

"போதும் இந்த ஏவலாள் உத்தியோகம். சுதந்திரமான வியாபாரம் இதைவிட எவ்வளவோ மேன்மையாக இருக்கும்". சிலகாலம் கழிந்த பின்னர், இறைவன் ஜனீக்கு கருணை புரிந்தான்.


அடிமைத் தொழிலும் பிறரைச் சார்ந்த வாழ்வும் அகன்றது. ஜனீ சுதந்திரத்தை அனுபவித்தார். சொந்தமாகவே உணவு வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.


'ஆனந்தாச்ரமம்' என்று அதற்குப் பெயர் வைத்தார். கடுமையாக உழைத்தார். நாளுக்குநாள் அவ்விடுதியின் புகழ் பரவி அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.


பாபா சூசகமாகத் தெரிவித்தாவாறே அனைத்தும் நடந்ததை உணர்ந்து, சாயிபாதங்களில் விசுவாசம் வளர்ந்தது; நாள்கள் செல்லச் செல்ல திடமான பக்தியாக சொரூபம் ஏற்றது. பாபாவின் அறிவுரையைப் பின்தொடர்ந்த அனுபவம் ஜனீயின் மனத்தில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றது.


சாயியின் திருவாய்மொழி அருளிய அனுபவம் ஜனீக்கு கிடைத்தது; அதன் பயனாக கேட்பவர்களுக்கு இப்பொழுது ஒரு காதை கிடைக்கிறது. அவருக்கு சாயியின் மீதிருந்த பிரேமை பெருகியது. சாயியின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோ!


அவருடைய பேச்செல்லாம் தம்மைப்பற்றியதுபோல் தோன்றும்; ஆனால், அவர் வேறொருவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இரவுபகலாக பாபாவுடன் இருந்தவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர்.


பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக இவ்வனுபவங்கள் தொடர்ந்தன. நாராயண் ஜனீயின் பக்தியும் ப்ரேமையும் வளர்ந்தது. அவருடைய பக்திபாவத்தை வெளிப்படுத்தும் புத்தம் புதிய கதையொன்றைக் கேளுங்கள்.

ஒரு சமயம் நாராயண் ஜனீயின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். 

 

கொட்டுவாயில் தடவுவதற்கு பாபாவின் உதீயே சிறந்த மருந்து. ஆனால், எங்கே தேடியும் ஜனீக்கு உதீ கிடைக்கவில்லை.

நண்பருக்கு வேதனை பொறுக்கமுடியவில்லை; ஆயினும் உதீ எங்கும் கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கினார்; கருணை வேண்டினார் ஜனீ.


படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருந்ததை ஜனீ பார்த்தார். அக்கணமே அதை ரட்சிக்கும் உதீயாகவே நினைத்தார்.


அந்தச் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேள்கொட்டிய இடத்தில சாயிநாம மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தடவினார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்; நம்பியவர்க்கு நடராஜா!


சாம்பலை விரல்களால் கொட்டுவாயில் பூசியவுடனே வேதனை, வந்தவழியே சென்று மறைந்ததென்று சொன்னால், கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருவரும் பிரேமையால் மனம் நெகிழ்ந்தனர். 




Thursday, 5 November 2020



 ஷீர்டி சாயி சத்சரிதம்

தாமரையிலைத் தண்ணீரைப்போல், இந்த தேகம் ஒருநாள் கீழே விழும். ஆகவே, தேகாபிமானத்தை விட்டுத் தொலையுங்கள். இதைத்தான் பாபா உதீ அளிப்பதன் மூலம் தெரிவித்தார்.

இவ்வுலகமனைத்தும் சாம்பலால் போடப்பட்ட ஒரு கோலமே என்பதை உறுதியாக அறியவும். உலகமே ஒரு மாயை என்பதுபற்றிச் சிந்தித்து, உதீயின் சத்தியத்துவத்தை மட்டும் நம்புக.

உதீ, மண்ணே என்று தெரிந்துகொள்ளவும். உருவமும் பெயரும் உள்ள வஸ்துபொருள் எதுவாக இருந்தாலும் சரி, கடைசியில் மண்ணாகத்தான் ஆகவேண்டும். மாறுபாடில்லாத, என்றும் அழியாத மண்ணைப் பார்த்து, இவ்வுலகில் மற்ற பொருள்கள் அடையும் வளர்ச்சியும் மாறுபாடுகளும் தேய்மானமும் வெறும் பெயரளவிற்கே என்பதை அறியவும்.

பாபா குதூகலமான மனோநிலையில் இருக்கும்போது ஒரு பாட்டுப் பாடுவார். கதை கேட்பவர்களே! உதீயைப் பற்றிய இக் குறுஞ்செய்யுள் பாட்டை பயபக்தியுடன் கேளுங்கள்.

"நெஞ்சத்தைக் கிள்ளும் ராமன் வந்தான், வந்தானே; கோணி கோணியாய் உதீயை கொண்டுவந்தானே! (பல்லவி) மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கும்போது, பாபா இந்தப் பல்லவியைத் திரும்ப திரும்ப மிக இனிமையான குரலில் பாடுவார்.

சாராம்சம் என்னவென்றால், பாபாவின் துனீ மங்களம் தரும் உதீயை மூட்டை மூட்டையாக விளைவித்தது. மூட்டைகளைக் கணக்கு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சாமர்த்தியம் யாருக்கு இருந்தது?

உதீ அளிப்பதின் சூக்குமமான அர்த்தத்தையும் வெளிப்படையான அர்த்தத்தையும் உதீயின் ஆன்மீக மேன்மையையும் நன்கு அறிந்துகொண்ட  கதைகேட்பவர்கள், ஒளிவுமறைவு இல்லாத சுயநல நோக்கத்துடன் கேட்கலாம், "க்ஷேமமாக இவ்வுலகில் வாழ்வதற்க்கு உதீ ஏதும் உபயோகமாக இருக்குமா?"

நன்று, உதீக்கு இந்தப் பலனை அளிக்கும் குணமும் உண்டு. இல்லையெனில், அது எப்படி இவ்வளவு புகழ் அடைந்திருக்கும்? பரமார்த்த மார்க்கத்தில் விற்பன்னராகிய சாயி, ஆன்மீக லாபத்தையும் உலகியல் லாபத்தையும் சேர்த்தே அளிக்கிறார்.

உதீ யோகஷேமம் அளித்த காதைகள் அநேகம், அநேகம். விரிவுக்கு அஞ்சி ஒரு சில கதைகளை சுருக்கமாக சொல்கிறேன்.

ஒருகாலத்தில், ஜனீ என்ற குடும்பப் பெயரும் மோதீராம் நாராயண் என்ற பெயரும் கொண்ட ஒருவர் நாசிக்கில் வசித்துவந்தார். அவர் ஓர் இல்லறத்தவர். அவ்தீட்சியை உட்பிரிவைச் சேர்ந்த குஜராத்தி பிராமணர்.

ராமச்சந்திர வாமன் மோடக் என்பவர் பாபாவின் விசுவாசம் நிறைந்த பக்தர்களுள் ஒருவர். நாராயண் ஜனீ அவரிடம் வேலை செய்துவந்தார்.

பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ தம் தாயாருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார்.
பாபா அத் தருணத்தில் தாமாகவே சூசகமாகத் தெரிவித்திருந்தார். "இப்பொழுதிலிருந்து நமக்கும் அடிமைத் தொழிலுக்கும் சம்பந்தைமில்லை.-

 


 

Thursday, 29 October 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

விபூதியை பாபா எந்த உள்நோக்கத்தோடு அளித்தார்? இவ்வுலகில் கண்ணுக்குத் தெரியும் ஷிருஷ்டியெல்லாம் சாம்பல்தான் என்பதை அனைவரும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய உள்ளக்கிடக்கை.

மனித உடலும் பஞ்சபூதங்களாலான ஒரு மரக்கட்டையே. சுகதுக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று கீழே வீழ்கிறது; சாம்பலாக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.

நீரும் நானும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். இதை உமக்கு ஞாபகப்படுத்தவும் இது விஷயமாக நீர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விபூதியை அளிக்கிறேன்.

அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக.

மனைவி, மக்கள், மாமன், மருமகன் - இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து  வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

உதீயைப் பூசிக்கொள்வதால் ஆதிவியாதி (பிறவிப்பிணி) தொலைந்துபோகிறது. உதீயின் மிக உயர்ந்த தத்துவார்த்தம் என்னவென்றால், 'விவேகத்தால் விளைந்த பற்றற்ற நிலை'.

நம்மால் முடிந்த தக்ஷிணை கொடுத்துப் பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து (உலகியல் உழற்சியிலிருந்து) விடுபட முடிந்தால், கொஞ்சங்கொஞ்சமாக நிவிர்த்தி மார்க்கத்தின் (விடுதலையடையும் பாதையின் ) குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

பற்றற்ற நிலை கைக்கு கிடைத்தாலும் விவேகம் இல்லாதுபோனால், அது பயனின்றிப் போகும். ஆகவே, உதீயை மரியாதையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவேகத்தையும் பற்றற்ற மனப்பான்மையையும் இணைப்பது விபூதியையும் தக்ஷிணையையும் இணைப்பது போலாகும். இவ்விணைப்பு ஏற்படவில்லையெனில், பிறவியென்னும் நதியின் அக்கரை சேர்வது இயலாத காரியம்.

பெரியவர்களும் சிறியவர்களும் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். பாபாவின் பாதங்களில் விநயத்துடன் வணங்கிவிட்டு வீடு திரும்புமுன், பாபா அவர்களுக்கு விபூதி அளித்தார்.

மசூதியில் தினமும் இரவுபகலாக குன்றாது துனீ எரிந்துகொண்டிருந்தது. பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார்.

பக்தர்களின் தலைமேல் கைவைத்து, அதே சமயம் நெற்றியில் கட்டை விரலால் ரட்சை இட்டு மங்கள வாழ்த்தும் கூறி, துனீயின் சாம்பல் பிரசாதமாக அளிக்கப்பட்டது.

சாம்பல், ரட்சை, விபூதி, உதீ இவை நான்கும் வெவ்வேறு சொற்களாக இருப்பினும் வஸ்து (பொருள்) ஒன்றே. பாபா குறைவேதுமின்றி அபரிதமாக தினமும் அளித்த பிரசாதம் இதுவே.

சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.  

 


 

Thursday, 22 October 2020

                                                        ஷீர்டி சாயி சத்சரிதம்

                                             33 . உதீயின்பிரபாவம் (பகுதி 1 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.


எந்த ஞானிகளின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடுமோ, கலியுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போகுமோ, அவர்களை வணங்குவமாக.


அவர்களை செய்யும் உபகாரங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. அவர்கள் இயல்பாக பேசுவதே நமக்கு நலந்தரும் உபதேசம்; அதுவே முடிவில்லாத பரம சுகத்தைக் கொடுக்கும்.


'இது என்னுடையது, அது அவருடையது' என்னும் எண்ணமே அவர்களுடைய சித்தத்தில் எழுவதில்லை. உலகியல் வாழ்வுக்கே உரித்தான பேதங்காட்டும் எண்ணங்களுக்கு அவர்களுடைய இதயத்தில் இடமில்லை.


கடந்த அத்தியாயத்தில் குரு மகிமையின் ஓர் அம்சத்தை கேட்டீர்கள். கதை கேட்பவர்களே! இந்த அத்தியாயத்தில் உதீயின் சக்தியைப் பற்றிக் கேளுங்கள்.


பாபா கேட்டு கேட்டு தக்ஷிணை வாங்கினார். அதை ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தருமம் செய்தார். மீதமிருந்த பணத்திற்கு விறகுகட்டைகளை வாங்கி குவியலாக சேமித்துவைத்தார்.


இவ்விதம் சேமித்த காய்ந்த விறகுகளை தமக்கெதிரில் இருந்த துனீயில் ஹோமம் செய்தார். அதிலிருந்து கிடைத்த அபரிதமான உதீ (சாம்பல்) பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.


ஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் பழக்கம். இது அனைவர்க்கும் தெரிந்திருந்தது.


வேறுவிதமாகச் சொன்னால், பாபா 'உதீ கொண்டு வா' என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


ஆனால் , பக்தர்கள் ஷிர்டியில் தங்கும்வரை, காலையோ நண்பகலோ  மாலையோ எந்த நேரத்திலும் பாபா உதீ கொடுத்ததில்லை; வெறுங்கையுடன் தங்குமிடத்திற்கு திருப்பியனுப்பினார்.

இதுவே நித்திய கிரமமாக இருந்தது. இந்த உதீயின் தருமநெறிதான் என்ன? மசூதியில் எதற்காக எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி? ஏன் இது ஒரு தினப்படி வழிமுறையாக இருந்தது?


 

Thursday, 15 October 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக்கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்." (சாயி சொன்ன கதை இங்கு முற்றும்)


ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக் கதையின் விவரணம் அபூர்வமானது! சாயியே ஒரு காரியத்தைச் செய்யும்போது, 'என்னுடையது, நான்' என்னும் எண்ணங்கள் பிசுபிசுத்துப் போகின்றன. 


கதையை அளிப்பவர் அவரே; படிப்பவரும் அவரே; காதால் கேட்பவரும் அவரே; அவரே கதையை எழுதுகிறார். அவரே கதையை எழுதும் ஊக்க சக்தியையும் அளிக்கிறார். அர்த்த போதனையை அளிப்பதும் அவரே. 


சாயியே இக் கதையின் பாட்டுடைத் தலைவர்; சாயியே இக் கதையின் ருசியுமானவர். அவரே கதையை சொல்பவராகவும் கேட்பவராகவும் ஆகிறார். விளையும் ஆத்மானந்தத்தை அனுபவிப்பவரும் அவரே. 


ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் இவ்வினிமையான கதைகளை, 'கேட்டது போதும்' எனச் சொல்வாரோ? இந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் பக்தர்கள் பாக்கியசாலிகள். 


அடுத்த அத்தியாயத்தின் சாரம் உதீயின் அபாரமான மஹிமை. கதை கேட்கும் நல்லோரை பயபக்தியுடன் கேட்குமாறு வேண்டுகிறேன். 


சமர்த்த சாயி, கிருபையால் உந்தப்பட்டு தம்முடைய சரித்திரத்தை தாமே என் மூலமாக எழுதிக்கொண்டார் என்பதை, ஹேமாட் விநயத்துடன் சொல்ல விரும்புகிறேன். கதையோ அபூர்வமான ரசம் நிரம்பியது! 


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாம் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குரு மஹிமை வர்ணனை' என்னும் முப்பத்திரண்டாம் அத்தியாயம் முற்றும். 


ஸ்ரீ  சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும்.