valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 9 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

'ஞானத்தால்தான் மோட்சம் அடையப்படுகிறது' என்னும் வேத சித்தாந்தம் அப்பட்டமான உண்மை.  ஆனால், பாவச்செயல்கள் நாசமாகாதவரையில் ஞானம் உதயமாகாது. 

தூய ஞானத்தில் மூழ்கியவரிடமிருந்து விருப்பங்கள் விலகிவிடும்.  மாயையின் பந்தங்கள் அவருக்கு கிடையா.  தீய குணங்களுக்கும் அவரிடம் இடமில்லை. 

பரம ஞானியான சுகதேவருக்கும் விகற்பத்தால் (சந்தேகத்தால்)  கேடு விளைந்தது. விகற்பத்தால் விளையும் அஞ்ஞானத்தை குருவைத் தவிர வேறு எவராலும் அகற்றமுடியாது. 

விகற்பம் (கோணல் சிந்தனை) ஞானத்துள் புகுந்தவுடன், ஞானியும் பற்றுடையவர் ஆகிறார்.  ஒரு குடம் பாலில் ஒருதுளி புளித்த கஞ்சி விழுந்துவிட்டாலும், பால் முழுவதும் திரிந்து போகின்றதன்றோ?

ஆதலின், முதலில் அஞ்ஞானத்தை அடையாளம் கண்டுகொள். அதிலிருந்து விடுபட்டால் மனம் தூய்மையடைகிறது.  அதன் பிறகே எல்லையற்ற ஞானம் தோன்றும்;  பேதமில்லாத சமாதி நிலை கிடைக்கும். 

எந்நேரமும் செல்வத்தின் மாட்சிமையைப்பற்றியே நினைத்துக்கொண்டு, உலகியல் சுகங்களில் திருப்தி அடையாமல், மனைவியையும் மக்களையும்பற்றி இடைவிடாது சிந்தனை செய்பவரின் ஞானம் ஞானமன்று; அது அஞ்ஞானம். 

செல்வம், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மோகம் கொண்டவர் ஞானியாக இருப்பினும் , தமக்கு எது நல்லது என்பதை அறியாதவர்.  ஆகவே, பக்தி இல்லாத அவருடைய ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. 

ஜீவசமுதாயமே அஞ்ஞானத்தால் மூழ்கிக் கிடக்கிறது. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானியாகி,  ஞானத்தையும் கடந்த நிலையை அடைவதே முழுமுதற்பொருளுடன் ஒன்றிய நிலை என்பது உறுதி. 

அஞ்ஞானம் வெளியே சென்றுவிட்டால், ஞானம் தோன்றும்.  மன்னிப்பதில் விரைவு காட்டுபவர் ஞானமுள்ளவர்.  ஆனால், பற்றுகளை விடாதவரையில் அவர் மாயைக்கு வசப்பட்டே வாழ்கிறார். 

மற்ற எல்லா மனிதர்களையும் மயக்கிய மாயை, ராமர் கிருஷ்ணர் போன்ற அவதார புருஷர்களுக்கும், சனகர் சனத்குமாரர் போன்ற முனிவர்களுக்கும், ஆணைக்கு அடிபணிந்த வேலையாளாக இருந்தது. 

அனைத்து உயிர்களிலும் இதயவாசியாக இறைவன் உறைகின்றான். ஆயினும், யாருமே இந் நிலையை அறிந்தாரில்லை! மாயையின் கற்பனைக்கப்பாற்பட்ட அந்தஸ்தும் அளவிடமுடியாத சக்தியும் அத்தகையன!

ஆதலால், 'நான்தான் செய்வோன்; நான்தான் செயலால் விளையும் இன்பங்களை அனுபவிப்பவன்'  என்னும் பொய்யான அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு இதயவாசியிடம் சரணடையாதவரையில், நாம் முக்தி அடையமுடியாது. 

 


 

Thursday, 2 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


நமஸ்கரித்தும் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள்.  தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். கீதை 4  - 34  (பொழிப்புரை)

இதுதான் கீதையின் மூல சுலோகம்.  இந்த சுலோகத்தின் இரண்டாவது அடியில் ஞானம் எனும் சொல்லுக்கு முன்னால், அகாரம் தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்தால், அச் சொல் அஞ்ஞானம் என்று மாறுபடும். 

அகாரம் தொக்கிநிற்கும் குறியைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டால், ஞானம் என்பதுதான் பதம். இதில் சந்தேகமேயில்லை.  அதற்கு விரோதமாக, துராகிருதம் (உரிமை இல்லாத இடத்தில் வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய விரும்புபவர் யாரும் இல்லை.  ஏனெனில், அந்தப் பதமும் அர்த்தமும் எல்லாராலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். 

"ஞானத்தால்தான் கைவல்லியம் (வீடுபேறு) அடையப்படுகிறது." இந்த வேதவசனம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும், 'தத்துவம் அறிந்தவர்களின் உபதேசத்தின் மூலமாகத்தான் ஞானம் பெறப்படவேண்டும்' என்று இந்த வேதவசனத்தை நீட்டித்துக் கருத்தைக் கட்டுப்படுத்துவது அனாவசியம். 

நான் ஆத்மா; நிர்மலன்; சுத்தன்; புத்தன்; சுதந்திரமானவன்; ஆதியந்தமில்லாத சாட்சி மாத்திரமே. எல்லா உயிர்களிலும் ஒளிரும் தூய உணர்வு நான்.  'இருப்பது ஒன்றே; இரண்டாவதாக ஏதும் இல்லை' எனும் உணர்வு விளைவிக்கும் ஆனந்தத்தால் நான் நிறைந்திருக்கிறேன். 

மேலும், நான் அஞ்ஞானம் அல்லேன்; அஞ்ஞானம் என்னுடைய செயல் அன்று.  அதர்வண வேதத்தின் மஹாவாக்கியமான 'அயம் ஆத்மா ப்ரஹ்ம' (இந்த ஆத்மா முழுமுதற்பொருள்) என்னும் சொற்றொடரில் இடம்பெறும் ஆத்மா நானே.  இருக்கு வேதத்தின் 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம ' (ஆத்மாவின் சஞ்சலமற்ற ஒருங்கிணைந்த தூய அறிவுநிலை முழுமுதற்பொருள் ) என்னும் மஹாவாக்கியத்தின் பொக்கிஷமும் நானே. 

யஜுர் வேதத்தின் 'அஹம் ப்ரம்மாஸ்மி ' (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன் ) என்னும் மஹாவாக்கியத்தை இடைவிடாது மனத்தில் இருத்துதலே வித்யா (மெய்ஞ்ஞானம்)  என்று அறிக.  நான் பாவி,  பாக்கியமற்றவன், தெய்வ அருள் இல்லாதவன் என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதே அவித்யா (அஞ்ஞானம்).

இரண்டுமே ஆதியந்தமில்லாத மாயையின் புராதனமான சக்திகள். ஒன்று (அவித்யா) பந்தத்தை விளைவிக்கும்.  மற்றொன்று (வித்யா) பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும். 

பெயர், உருவம் ஆகிய சகலமான பிரமைகளும் மாயை விளைவிக்கும் குழப்பங்களே.  மாயையின் சக்தியை விளக்கமுடியாது; கடப்பது அதனினும் கடினம். 

கற்பனையில் என்னென்ன உதிக்கின்றனவோ அவை அனைத்தும் மாயையின் வசிப்பிடங்கள்.  கட்டுக்குப்பட்ட நிலை, முக்தியடைந்த நிலை, ஆகிய கருத்துக்கள் நிச்சயமாகக் கற்பனையிலிருந்து பிறந்தவையே! 

 


 

Thursday, 26 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பாபாவுக்கு எப்படி சம்ஸ்கிருத ஞானம் இருந்திருக்க முடியும்?  சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம்.  ஞானிகளுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றும், சந்தேகத்திற்குக் காரணம் வேறெங்கேயோ புதைந்து இருக்கிறது என்றும் அறிவீர்களாக.

கதை கேட்பவர்களே, 'ஒன்றைக் (பரம்பொருளைக்) கண்டவன் அனைத்தையும் கண்டவனாகிறான்' என்பது பிரமாணம்.  இந்த வேதவசனத்தை ஒப்புக்கொள்ளாதவர் எவரும் உளரோ?  இந்த அபரோட்ச ஞானம் (காட்சி அறிவு) சாயி பாபாவுக்கு இருந்தது. 

பிரபஞ்சம் முழுவதையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் சம்பூரணமாக (முழுமையாகப்) பார்க்கும் சக்தி பெற்ற ஞானிகள் அறியாத விஷயம் ஏதும் உண்டோ?" சூரியன் பிரகாசிப்பதும் அவர்களாலேயே அன்றோ!

அத்தகைய ஞானம் படைத்தவர்களிடம் அஞ்ஞான இருள் எப்படி ஒட்டிக்கொள்ள முடியும்?  அவர்களிடம் அனைத்து வித்தைகளும் பொதிந்துகிடக்கின்றன. சம்ஸ்கிருத மொழி மட்டும் என்ன பெரிய கொக்கு?

ஆயினும், சாயி லீலா வாசகர்களில் சிலர் சொல்கின்றனர். "நானாவை நம்பமுடியாது.  ஞானம்  எனும் சொல்லை அஞ்ஞானமாக மாற்றும் அகாரம் தொக்கிநிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்துக்கொள்வது.  நானா சுயமாகச் செய்த கற்பனையே. -

"தம்முடைய புலமையை முழுமையாகப் பறைசாற்றுவதற்காக அகாரம் தொக்கி நிற்கும் இந்த அஞ்ஞான காண்டத்தை அவரே ஜோடித்திருக்கிறார்.  அர்த்தமில்லாத ஒரு விதண்டாவாதத்தைக் கிளறி விட்டிருக்கிறார். -

"அகாரம் தொக்கி நிற்கும் குறியைத் தேவையில்லாமல் சேர்த்து, ஞானைத்தை அஞ்ஞானமாக்கி, கீதைக்கு விபரீதமான விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்."

ஆயினும், உண்மையான நிலையைக் கவனித்து சூட்சமமாக சிந்தித்தால், சாயி லீலா பத்திரிகையில் வெளிவந்த முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் கருத்தில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது நன்கு விளங்கும். 

நானா நம்பத் தகுந்தவரா, நம்பத் தகாதவரா என்பதுபற்றி எவரெவருக்கு என்னென்ன அபிப்பிராயங்கள் இருந்தபோதிலும், அவர் அளித்திருக்கும் விருத்தாந்தத்தைப் பயனற்றதாகவோ அர்த்தமில்லாத பிதற்றலாகவோ நாம் கருதக்கூடாது. 

நானாவின் மீதிருக்கும் வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு, மனத்திரிபுக்கு உட்படாமல் கண்ணோட்ட தோஷத்தைத் தூர விரட்டிவிட்டால், சந்தேகிகளுக்கு குற்றமற்ற காட்சி முழுமையாக கிடைக்கும். 

சாயி லீலாவின் உத்தமோத்தமமான முப்பத்தொன்பதாவது  அத்தியாயத்தை மறுபடியும் படிக்காமல், இந்த அத்தியாயத்தில் மேற்கொண்டு சுலபமாக முன்னேற முடியாது. 

ஸ்ரீ கிருஷ்ணரின் திருவாய்மொழியாக வெளிவந்த ஸ்ரீ மத் பகவத் கீதையில் ஞானகர்மசந்யாச யோகம் என்னும் நான்காவது அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது சுலோகத்தில் 'அஞ்ஞானம்' தொடர்பான உபதேசம் நிகழ்ந்தது. 

தத்வித்தி ப்ரணிப்பாதேன பரிப்ரச்னேன சேவாய!
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சினஹ !! கீதை 4  - 34  (மூலம்)

 


 

Thursday, 19 March 2026

 

ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

இக் கேள்விக்கு நானா தெளிவாகப் பதிலுரைத்தார், "நான் கீதை பாடம் ஓதுகிறேன். மற்றவர்களுக்கு உபத்திரவமாக இல்லாமல் இருப்பதற்காக சன்னமாக ஓதுகிறேன்."

"சரி சரி; அதே இங்கே கூடியிருப்பவர்களுக்காக. ஆனால் , எனக்குக் கேட்கும்படியாக தெளிவாக ஓதும். நீர் பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீரா என்று பார்க்கிறேன்" என்று சாயி சொன்னார்.

நானா பாபாவுக்கு வந்தனம் செலுத்திவிட்டுத் 'தத்வித்தி ப்ரணிப்பாதென' என ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை உரத்த குரலில் ஓதினார். அதைக் கேட்டு பாபா திருப்தியடைந்தார்.

பின்னர், அந்த சுலோகத்தின் அர்த்தமென்ன என்ற கேள்விக்கு நானா விரிவாக்கப் பதிலுரைத்தார். நானாவின் விளக்கம் பூர்வாச்சார்யார்கள் (பண்டைய குருமார்கள் ) அளித்திருந்த பாதையிலேயே அமைந்தது. பாபாவும் தலையசைத்து அங்கீகரித்தார்.

பாபா நானாவை மறுபடியும் கேட்டார், "நானா, இந்தச் செய்யுளின் இரண்டாவது அடியின் முதற்பகுதியை பாரும். 'உபதேக்ஷ்யந்தி தே ஞானம்' என்னும் சொற்களின் பொருள் பற்றிச் சிந்தனை செய்யும்.-

"ஞானம் என்னும் சொல்லுக்கு முன்பாக, ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று பாரும். இவ்வாறு செய்தால், இச் சொல் 'அஞ்ஞானம்' என மாறுபடும். சுலோகத்தின் பொருள் எதிர்மறை ஆகிவிடுமா என்றும் யோசியும். -

"சங்கரானந்தர், ஞானேச்வரர் , ஆனந்தகிரி, ஸ்ரீதரர் , மதுஸூதனர் போன்ற பாஷ்யகாரர்கள் (பேருரையாளர்கள்) 'ஞானம்' என்னும் சொல்லுக்கு அளித்திருக்கும் விளக்கம்.

"அதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை நானும் அறிவேன். ஆயினும், ' ' எழுத்து தொக்கி நிற்கும் குறியைச் சேர்த்துக்கொள்வதால் விளையும் அற்புதத்தை தெரிந்துகொண்டே நாம் ஏன் அதைக் கோட்டை விடவேண்டும்?"

இவ்வாறு கூறியபின், கருணாமேகமான சாயி, சகோரபட்சிகளும் சாதகப்பட்சிகளுமான தம் பக்தர்களுக்காகப் பொழிந்த போதனாமிருதம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. (அத்தியாயம் 39 )

ஆனால் , சாயி லீலா பத்திரிக்கை வாசகர்களில் சிலர் அந்த விளக்கத்தை மெச்சவில்லை என்பதும், சந்தேகப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆகவே, சில பிரமாணங்களால் , 'அஞ்ஞானம்' என்னும் சொல் இங்கு நன்கு பொருந்துவதை நிரூபிக்கும் வகையில் சந்தேகிகளைத் திருப்தி செய்வதற்காக melum ஒரு சிறிய முயற்சி செய்கிறேன்

 


 

Thursday, 12 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் சாயியைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார்.  இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. 

காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ?  சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

இந்தக் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது.  கேட்பவர்கள் தங்களை மனத்தால் சாயியாகவோ பாவித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர்.  அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக்க காப்பாற்றுங்கள். 

அந் நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் சாயியின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றும். நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ?  அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும்! 

அந் நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்;  கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொழிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர்.  இவ்வாறாக, இக் காவியம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்!

முன்னதாக, இந்த சத் சரித்திரத்தின் முப்பத்தொன்பதாவது அத்தியாயத்தில், ஓர் உத்தமமான பக்தருக்கு சமர்த்த சாயி உபதேசம் அளித்த விவரம் எடுத்துரைக்கப்பட்டது. 

ஆக, பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அந்த பக்தர் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்து ஒப்பித்துக்கொண்டிருந்தார். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே மெல்லிய குரலில் கீதையை ஓதிக்கொண்டிருந்தார். முப்பத்துமூன்றாவது சுலோகம் முடிந்தபின் முப்பத்துநான்காவது சுலோகத்தை ஆரம்பித்தார். 

லயமடைந்த நிச்சலமான மனத்துடன் சன்னமான குரலில் ஓதுகை நிகழ்ந்ததால், மற்றவர்களுக்கு அது கேட்கவில்லை.  ஆகவே, ஓதுகையின் மூலநூல் எதுவென்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

முப்பத்துநான்காவது சுலோகத்தை அவர் ஆரம்பித்தபோது, அந்த உத்தமமான பக்தருக்கு சன்மார்க்கத்தைக் காட்டி அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்ற எண்ணம் பாபாவின் இதயத்தில் உதித்தது. 

அந்த பக்தரின் பெயர் நானா (நாராயண கோவிந்த சாந்தோர்கர்).  பாபா அவரிடம் கேட்டார், "நானா, நீர் எதை முணுமுணுவென்று ஓதுகிறீர் ஓய்?  அதை வாய்திறந்து ஸ்பஷ்டமாக (தெளிவாக) ஓதினால் என்ன?

"இத்தனை நேரமாக முணுமுணுவென்று ஏதோ ஓதுகை நடப்பதை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், சொற்களின் ஒலி தெளிவாக வெளிப்படவில்லை.  ஓய்! இவ்வாறு ஓதுவதன் சூக்குமம் என்ன?"

 


 

Thursday, 5 March 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது.  ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான்.  சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது.  ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன்.  சாயி எப்பொழுதும் சம்பூர்ணமானவர் அல்லரோ!

அவருடைய பாதங்களில் ஹேமாட் பணிவுடன் வணங்குகிறேன்.  இந்தக் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறேன். 

நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது .  ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?

ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும்.  கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும்.  ஆஹா! அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்!

சாலோக்யம் (இஷ்ட தேவதையின் உலகத்தில் உறைதல்)   போன்ற நான்கு வகை முக்திகளின்மீது நமக்கு ஆசை ஏதும் இல்லை.  சாயியிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும்.  அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).

அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர்! ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்?  'ஞானிகளின் மீது பக்தி' என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே, இதயத்தைப் பரிசுத்தமாகிவிடும். 

'நான்/நீ' என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக.  அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும்.  அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும்.  சாயியிடம் நாம் வேண்டுவது இதையே. 

போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும்.  இதுவே கதை கேட்பவர்களுக்கு யான் விநயமாக விடுக்கும் வேண்டுகோள். 

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்;  காரணம், சத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக சாயியால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர். 

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துசிப்பையைத் தூக்கியெறிப்பவர் அதுனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார்.  நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது.  அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே! 


 

 

Thursday, 26 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சம்சார இருளை அகற்றும் சூரியனே! ஆத்மானுவபம் பெட்ரா ஞானிகளின் மணிமகுடமே! பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே; கற்பகத்தருவே! குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன். 

குருராயரின் மஹிமை எல்லையற்றது.  அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது.  ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று. 

பூர்வஜென்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்?  நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

சாயி பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார்.  தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர்.  அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

கிருபாளுவான சாயி, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ!

----------------------------------------------------------------------------

சாயியின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது.  'அதுவே நான்' என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது.  பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. 

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்?  அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் ? பக்தர்களின் மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அந்த சாயியின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன்.  கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன்.  ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன்.  அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன். (தழுவுகிறேன்)

சாயி சஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியாசந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபங்களைப் பெறுகின்றனர். 

 


 

Thursday, 19 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 

எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குடலில் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர். 

குருடனாகவோ முடவனாகவோ ஊமையனவாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரசவ வேதனையைக் கொடுக்கவில்லை.  ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன். 

எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன்.  இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது. 

நாம் கோடானுகோடி ஜென்மங்கள் எடுக்கிறோம்.  ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழலிருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது. 

ஜன்மத்திற்கு காரணமானவர் முதலாவது தந்தை.  பூணுல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை.  அன்னமளித்துப் பாவிப்பவர் மூன்றாவது தந்தை.  பயத்திலிருந்தும் பீதியிலிருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை. 

உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள்.  ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) சத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை.  சத்குருவின்  அற்புதமான லீலைகளைப் பாருங்கள்!

அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா.  ஆனால், சத்குருவோ உலகநடையிலிருந்து வேறுபட்ட பிதா. 

சத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அனுக்கிரஹம் செய்கிறார். 

நம்மை ஜனனமரணச் சுழலிலிருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை விளக்கி நமக்குப் புரியவைப்பவரும்  எங்கும் நிறைந்திருப்பவருமான சத்குருவை  நான் வணங்குகிறேன். 


 

Thursday, 12 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும் தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும். 

விஷயசுகங்களின் மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்து விடும்.  ஆகவே, அதை மிச்சம் மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். 

கை, கால் முதலிய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால் ஜனன மரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது.  விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை!

விவேகமுள்ள சாரதி கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா. 

சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சாமார்த்தியசாலியுமான மனிதன் தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால், விஷ்ணு பதம் வெகுதூரத்தில் இருக்கிறது?

அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலும் கப்பாலாய் இருக்கும் நிலை. 

ஆக, இந்த அத்தியாயம் முடிவடைகிறது.  அடுத்தாற்போல்  வரும் அத்தியாயம் இதைவிட வசீகரமானது. சான்றோர்களாகிய பக்தர்களின் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். கிரமமாக கேளுங்கள். 

பிரிவதற்கு முன்பாக - சிருஷ்டியை நிர்வகிப்பவரும் புத்திசக்தியைத் தூண்டிவிடுபவரும் எவரோ, அந்த சத்குருவின் சேவடிகளில் ஹேமாட் தலைசாய்த்து வணங்குகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், "மஹானை சோதித்தல் - மனத்தை அடக்குதல்' என்னும் நாற்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீஸத்குரு   சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


 

Thursday, 5 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அர்த்தத்தைத் தெளிவுப்படச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார்.  மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது!  அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது. 

பின்னர், மாதவ்ராவ் செய்த நிர்பந்தத்தால், நானா இதயம் திறந்தார்.  மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார்.  மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது! 

பாபா எவ்வளவு உஷாராக இருந்தார்!  யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருக்கும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாக) தெரிகின்றன!

இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள்.  இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளை ஆகாத சமநிலையும் கம்பீரமும் பெருகும். 

மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது.  அதைக் கட்டவிழ விடக்கூடாது.  புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம்.  ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும். 

புலன்களை நம்பக்கூடாது.  ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது.  கொஞ்சம்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும். 

புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.  ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம். 

ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம்.  அழகை பயமின்றி ரசிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை?  ஆனால், துர்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது. 

இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரசிக்கலாம்.  தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும்.  இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும். 

தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலங்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும். 

தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான்.  அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது. 

சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன் கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்!

 


 

Thursday, 29 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தனம் செய்தபோது, அவர்களுள் ஒரு பெண்மணி தம் முகத்திரையைச் சற்று விலக்கினார்.  பேரெழில் வீசிய அந்த முகத்தைக் கண்ட நானா தம் உள்ளத்துள் மோகங்கொண்டார். 

சுற்றியிருந்தவர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது அவ்வழகிய முகத்தை உற்றுப் பார்ப்பதற்கு நானா சங்கடப்பட்டார்.  தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? மோகமென்னவோ கட்டுக்கடங்கவில்லை!

பாபாவின் முன்னிலையில் நானா பெருங்கூச்சமடைந்தார். தலையை நிமிர்த்த முடியவில்லை.  ஆனாலும், தயங்கித் தயங்கி கண்வீச்சு அந்தத் திசைக்குத் திரும்பியது.  நானா இருதலைக்கொள்ளி எறும்பானார். 

இதுவே நானாவின் உள்மன நிலை. எல்லோருக்குள்ளும் உறையும் பாபா இதை அறிந்துகொண்டார்.  மற்றவர்களால் இதை எப்படி உணர முடியும்?  சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றுதான் அவர்களால் மல்லுக்கட்ட முடியும்!

நானாவின் உள்மனத்தையும் அதில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் நன்கு உணர்ந்த பாபா அவரை சுயநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஓர் உபதேசம் செய்தார். அதைக் கேளுங்கள். 

"நானா, எதற்காக மனக்கலக்கம் அடைகிறீர்? எது தன்னுடைய தர்மத்தின்படி இயல்பாகச் செயல்படுகிறதோ, அது யாராலும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. ஏனெனில், அதில் கேடு ஒன்றும் இல்லை.-

"பிரம்மதேவருடைய சிருஷ்டியைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், அவருடைய புத்தி சாதுர்யமும் திறமையும் வீணாக்கப் போய்விடும்.  நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். -

"வாயிற்கதவு திறந்திருக்கும்போது புறக்கடைக் கதவை ஏன் அணுகவேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால், சங்கடம் ஏதும் இல்லை.-

"மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவன், எதற்காக, யாரைப் பார்த்து பயப்பட வேண்டும்? கண்கள் அவற்றின் வேலையாகிய காண்பதைச் செய்கின்றன. அதுபற்றி நீர் ஏன் சங்கடப்படுகிறீர்?"

இயல்பாகவே விஷய ஆர்வம் அதிகம் கொண்ட மாதவ்ராவ், அப்பொழுது அங்கிருந்தார். தம்முடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, "இந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்" என்று நானாவைக் கேட்டார். 

இவ்வாறு மாதவ்ராவ் கேட்டபோது நானா சொன்னார், "ஓய், கொஞ்சம் நிழலும்! நாம் வாடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, பாபா விளம்பிய வார்த்தைகளில் உட்கருத்து என்னவென்பதை விவரமாகச் சொல்கிறேன்".

வழக்கம்போல க்ஷேமகுசல விசாரிப்பு முடிந்தது. நானா சமர்த்த சாயியை வந்தனம் செய்தார். தாம் தங்கியிருந்த இடத்திற்கு நானா திரும்பியபோது மாதவராவும் அவருடன் சென்றார்!

உடனே மாதவ்ராவ் வினவினார், "நானா, நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று பாபா சொன்னதற்கும், அதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பதை எனக்குத் தெளிவுப்படச் சொல்லுங்கள்".



Thursday, 22 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் என்னிடம் காட்டிய கோபம் என்னுடைய ஆரம்ப நடத்தையால்தான் என்பது தெளிவு.  இது கோபமன்று; எனக்குப் புகட்டப்பட்ட ஒரு போதனை; கடைசியில் என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்".

ஆக, பின்னர் அவ்வாறே நிகழ்ந்தது! சுவாமி, பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டார். சாயியின் கிருபையால் தூயவராக ஆக்கப்பட்டார்.  பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாக தங்கிவிட்டார்!

சாயிபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளர்ச்சி செய்யட்டும்.  சாயி பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களை செய்தி மனநிறைவு அளிக்கட்டும். 

பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது.  பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பிருப்பினும்,-

அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை!

தாத்பர்யம் என்னவென்றால், மனித உருவமேற்காமல் சாயி விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதும் எப்படி?

இந்த அத்தியாயம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சமயத்தில், சாயி நல்லுபதேசம் செய்த விருத்தாந்தம் ஒன்று என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது.  உபதேசத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பயனடையவர். 

விருத்தாந்தம் மிகச் சிறியது. ஆயினும், இதைக் கருத்தில் கொள்பவர்களுக்கு மங்களம் விளையும்.  ஆகவே, சித்தத்தைச் சிறிது நேரம் என்னிடம் செலுத்துமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன். 

ஒருசமயம், பழுத்த பக்தரான மகால்சாபதி, நானா சாஹேப் சாந்தோர்கருடன் மசூதியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நடந்த அதிசயத்தைப்பற்றிக் கேளுங்கள். 

சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக வைஜப்பூர்வாசியான ஒரு பணக்காரர் குடும்ப சகிதமாக அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தார். 

முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் வந்ததைக் கண்ட நானா சங்கோசமடைந்தார்.  கோஷாப் பெண்டிர் கூச்சமின்றி தரிசனம் செய்வதற்காக, அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நானா வெளியே செல்ல நினைத்தார். 

ஆகவே, அங்கிருந்து நகர்வதற்காக நானா எழுந்தார். பாபா அவரைத் தடுத்து நிறுத்திச் சொன்னார், "வர விரும்புபவர்கள் படியேறி வருவார்கள்.  நீங்கள் அமைதியான மனத்துடன் உட்கார்ந்திருங்கள்".

அங்கிருந்தவர்களில் ஒருவர் வைஜாப்பூர்  கனவானிடம் சொன்னார், "இவர்களும் தரிசனத்திற்காகவே வந்திருக்கின்றனர்.  நீங்களும் மேலே வரலாம்.  தடை ஏதுமில்லை."  அவர்கள் அனைவரும் வந்து சாயிக்கு வந்தனம் செய்தனர். 


 

Thursday, 15 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது.  புத்தி அசைவற்று நின்றது.  வேற்றுமை உணர்வு விலகியது.  ஐக்கிய உணர்வு மேலோங்கியது. 

வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது.  கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்ச பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது!

ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார்.  ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின.  அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது.  பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினர். 

'எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாக!' தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்!

புவா மெல்ல மெல்ல முன்னேற, பாபாவின் கோபமும் படிப்படியாக ஓங்கியது. பாபா வசைமாரி பொழியப்பொழிய, புவாவின் பிரீதி இரட்டித்தது!

சமர்த்த சாயியின் செயல்கள்தாம் என்னே!  பாபா எடுத்த நரசிம்ம அவதாரம் தத்ரூபமாகவும் (முழுவதும் ஒற்றுமையான வடிவமாகவும்) பூரணமாகவும் அமைந்தது. 

"எங்களுடைய டம்பம் எங்களுடனேயே இருக்கட்டும்! போம் வெளியே; திரும்பிப் போம். மறுபடியும் என்னுடைய மசூதியில் கால்வைக்காதீர்; ஜாக்கிரதை!-

"மசூதியின்மேல் கொடி பறக்கவிடுபவரை எதற்காக தரிசனம் செய்யவேண்டும்?  கொடி பறக்கவிடுவது ஞானிக்கு லக்ஷணமா (அழகா)?  ஆகவே, ஒருகணத்தையும் இங்கு வீண் செய்யாதீர்!" என்று பாபா கர்ஜித்தார். 

பின்னர், பயமும் ஐயமும் நிர்மபிய மனத்துடன் சுவாமி சபாமண்டபத்துள் நுழைந்தார். தூரத்திலிருந்து சாயியின் உருவத்தைப் பார்த்த சுவாமியால் அங்கு நிம்மதியாக உட்கார முடியவில்லை. 

புவாவின் எண்ணங்களின் எதிரொலி, அவர்தம் காதுகளில் சொல்லுக்குச் சொல் துல்லியமாக மோதி  அவரை வெட்கப்படச் செய்தது.  உட்கார்ந்திருந்த இடத்திலேயே அவர் நினைத்தார், "மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர்!-

"ஓ, என்னுடைய சிற்றறிவு எங்கே; மஹாராஜின் பிரபஞ்ச பேரறிவு எங்கே! இவருடைய இதயத் தூய்மைதான் என்னே! என்னுடைய பழைய கற்பனை எவ்வளவு விபரீதமானது!-

"சாயி சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார்.  சிலர்க்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.-

"சிலரைப் பார்த்துப் புன்னகை போகிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரசாதம் அளிக்கிறார்.  இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார். - 





Thursday, 8 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அப்பொழுது, உடன் வந்தவர்கள் அவரிடம் கூறினார், "நீங்கள் எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?  கேவலம், கொடிகள் ஏன் உங்கள் மனத்தை இவ்வாறு கலவரமடையச் செய்கின்றன?-

"நாம் இப்பொழுது மிக அருகில் வந்துவிட்டோம்.  தேர், பல்லக்கு, குதிரை, இத்தியாதி பரிவாரங்களைப் பார்த்தால், நீர் இன்னும் எவ்வளவு கலவரமடைவீர்!"

இந்தக் கேட்ட சுவாமி மேலும் எரிச்சலுற்றார்.  "முரசுகளையும் பல்லக்குகளையும் குதிரைகளையும் வைத்துக்கொண்டு ஜம்பம் காட்டும் சாதுக்கள் - ஆஹா ! இவர்களை நான் கொஞ்சமாகவா பார்த்திருக்கிறேன்!"

இவ்வாறான எண்ணங்கள் மனத்துள்ளே ஓட, சோமதேவஜி திரும்பிவிடத் தயாரானார்.  அவர் நினைத்தார், "ஷீர்டி செல்வது பற்றிய எண்ணம் நல்லதில்லை. நதிக்குச் (கோதாவரிக்குச்) செல்லும் பாதையில் திரும்புவதே நல்லது!"

ஆனால், உடன் வந்தவர்கள் அவரை இல்லை. "நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் தயவுசெய்து திரும்பிச் செல்லாதீர்!-

"இவ்வளவு தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் வாருங்கள்.  தர்க்கம் செய்ய வேண்டா.  மசூதியின்மேல் பறக்கும் கொடிக்கும் சாதுவுக்கும் சம்பந்தம் இல்லை.-

"ஏனெனில், இந்த சாதுவுக்குக் கோடி தேவையில்லை; புகழ் தேவையில்லை; கௌரவமும் தேவையில்லை. கிராமத்தில் வசிக்கும் மக்கள்தாம் பக்திக்குப் பிரமாணமாக இம்மாதிரியான பூஷணங்களை (அணிகலன்களை) விரும்புகின்றனர். 

"ஆகவே, நீங்கள் கொடியைப் பார்க்க வேண்டா.  சும்மா சென்று தரிசனம் செய்யுங்கள்.  அங்கு ஒரு கணமும் அதிகமாகாத் தங்க வேண்டா; உடனே திரும்பிவிடுங்கள்."

இதனிடையே குதிரைவண்டி ஷிர்டியை நெருங்கிவிட்டது.  ஆகவே, மேற்கண்ட நேர்மையான உபதேசத்தைக் கேட்ட சுவாமி நினைத்தார், 'மனக்கலக்கத்தை ஒருவழியாக ஒழித்துவிடலாமே.  குற்றவுணர்ச்சியாவது இல்லாது போகும்!'

சமர்த்த சாயியின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது.  அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது.  பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது. 

சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன.  பாபாவின் பாததூளியில் ஸ்நானம்  செய்வதற்கு மனம் துடித்தது. 

அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன.  மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது.  தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது.  பாபாவின் சகுணரூபம் கண்களில் பதிந்தது.  புவா (சுவாமி)  ஆனந்தக்கடலில் மிதந்தார்!

கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார்.  தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார்.  அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார். 


 

Thursday, 1 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஆனால், சுவாமிஜியின் மனத்தியல்பு நானாவிதமான தர்க்கங்களையும் குதர்க்கங்களையுமே நாடியது.  தூரத்திலிருந்தே ஷிர்டியின் கொடிகளைப் பார்த்த அவருக்குக் கற்பனைகள் பல உதித்தன. 

அவருடன் கூட இருந்தவர்கள் மசூதியின் கலசத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கிடைக்கப்போகும் சாயிதரிசனம்பற்றி சுவாமிஜியின் மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர். 

கொடியை தரிசனம் செய்யும்போதே பக்தி பூரித்தெழுகிறது.  இதுதான் எல்லாரும் அடையும் அனுபவம். இதுவே பக்திப்பிரேமையின் லக்ஷணம் (இயல்பு).  இதில் வழக்கத்திற்கு மாறானது ஏதும் இல்லை. 

ஆனால், தூரத்திலிருந்தே கொடியைப் பார்த்த சுவாமியின் அற்பமனத்தில் கற்பனைக்குமேல் கற்பனையாக உதித்தன.  அவருடைய மனத்தின் விசித்திரமான இயல்பு அது!

பதாகைகளின் மீது (விருதுக்கொடிகளின்மீது)இவ்வளவு விருப்பம் வைத்தல் சாதுவின் குணமாகுமா?  தேவாலயத்தின்மேல் கொடி பறக்கவிடுவது சாதுத்துவத்திற்கு  கறை அன்றோ!

ஒரு சாது இவ் வழியில் மரியாதை தேடுவது, அவர், கேவலம் கௌரவத்தையும் புகழையும் நாடுவதையே காட்டுகிறது.  இவ்வகையான சாதுத்துவம் மனத்தை ஈர்ப்பதில்லை. உண்மையில் இது இவர்களின் பெருங்குறைபாடு!

சாராம்சம் என்னவென்றால், ஒருவரின் மனச்சாயல் எப்படியோ அப்படியே அவர் சாதுக்களை அணுகும் முறையும் அமையும்.  சுவாமியின் மனம் தீர்மானித்தது, ""எனக்கு ஸாயீயின் அனுக்கிரஹம் வேண்டா.-

"நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்." சுவாமி பாபாவின் மீது இழிவுணர்ச்சி கொண்டார்.  அங்கிருந்து உடனே திரும்பிவிட அவசர முடிவெடுத்தார். 

"இது புகழுக்கும் பகட்டுக்கும் ஆசைப்படும் வீண்பெருமையன்றி வேறெதுவும் இல்லை.  ஒரு சாதுவுக்குப் படாடோபம் எதற்கு? கொடியைப்பற்றி என்னால் வேறெந்த காரணத்தையும் அனுமானிக்க முடியவில்லை.-

"இந்த சாது கொடியைப் பறக்கவிட்டுத் தம்முடைய பெருமையைப் பீத்துகிறார்.  இதுவே இவருடைய சாதுத்வத்திற்குப் பெருங்குறையாக ஆகிவிட்டது.  இந்த சாதுவை நான் எதற்காக தரிசிக்கவேண்டும்?"-

"இம்மாதிரியான தரிசனத்தால் மனம் என்ன நிம்மதி பெரும்? ஆஹா! பறக்கும் இந்தக் கொடி டம்பத்தையே பறைசாற்றுகிறது! இதிலிருந்து எந்த விதமான மனவொருமைப்பாடும் கிடைக்காது."

ஆகவே, அவர் தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார், "நான் வந்தவழியே திரும்பிச் செல்வதே நல்லது.  தரிசனம் செய்ய நினைப்பது நற்சிந்தனையாகத் தெரியவில்லை.  அடடா! நான் எப்படி ஏமாறிப்போனேன்!"