ஷீர்டி சாயி சத்சரிதம்
தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது. புத்தி அசைவற்று நின்றது. வேற்றுமை உணர்வு விலகியது. ஐக்கிய உணர்வு மேலோங்கியது.
வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது. கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்ச பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது!
ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார். ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின. அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது. பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினர்.
'எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாக!' தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்!
புவா மெல்ல மெல்ல முன்னேற, பாபாவின் கோபமும் படிப்படியாக ஓங்கியது. பாபா வசைமாரி பொழியப்பொழிய, புவாவின் பிரீதி இரட்டித்தது!
சமர்த்த சாயியின் செயல்கள்தாம் என்னே! பாபா எடுத்த நரசிம்ம அவதாரம் தத்ரூபமாகவும் (முழுவதும் ஒற்றுமையான வடிவமாகவும்) பூரணமாகவும் அமைந்தது.
"எங்களுடைய டம்பம் எங்களுடனேயே இருக்கட்டும்! போம் வெளியே; திரும்பிப் போம். மறுபடியும் என்னுடைய மசூதியில் கால்வைக்காதீர்; ஜாக்கிரதை!-
"மசூதியின்மேல் கொடி பறக்கவிடுபவரை எதற்காக தரிசனம் செய்யவேண்டும்? கொடி பறக்கவிடுவது ஞானிக்கு லக்ஷணமா (அழகா)? ஆகவே, ஒருகணத்தையும் இங்கு வீண் செய்யாதீர்!" என்று பாபா கர்ஜித்தார்.
பின்னர், பயமும் ஐயமும் நிர்மபிய மனத்துடன் சுவாமி சபாமண்டபத்துள் நுழைந்தார். தூரத்திலிருந்து சாயியின் உருவத்தைப் பார்த்த சுவாமியால் அங்கு நிம்மதியாக உட்கார முடியவில்லை.
புவாவின் எண்ணங்களின் எதிரொலி, அவர்தம் காதுகளில் சொல்லுக்குச் சொல் துல்லியமாக மோதி அவரை வெட்கப்படச் செய்தது. உட்கார்ந்திருந்த இடத்திலேயே அவர் நினைத்தார், "மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர்!-
"ஓ, என்னுடைய சிற்றறிவு எங்கே; மஹாராஜின் பிரபஞ்ச பேரறிவு எங்கே! இவருடைய இதயத் தூய்மைதான் என்னே! என்னுடைய பழைய கற்பனை எவ்வளவு விபரீதமானது!-
"சாயி சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார். சிலர்க்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.-
"சிலரைப் பார்த்துப் புன்னகை போகிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரசாதம் அளிக்கிறார். இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார். -

No comments:
Post a Comment