ஷீர்டி சாயி சத்சரிதம்
அப்பொழுது, உடன் வந்தவர்கள் அவரிடம் கூறினார், "நீங்கள் எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்? கேவலம், கொடிகள் ஏன் உங்கள் மனத்தை இவ்வாறு கலவரமடையச் செய்கின்றன?-
"நாம் இப்பொழுது மிக அருகில் வந்துவிட்டோம். தேர், பல்லக்கு, குதிரை, இத்தியாதி பரிவாரங்களைப் பார்த்தால், நீர் இன்னும் எவ்வளவு கலவரமடைவீர்!"
இந்தக் கேட்ட சுவாமி மேலும் எரிச்சலுற்றார். "முரசுகளையும் பல்லக்குகளையும் குதிரைகளையும் வைத்துக்கொண்டு ஜம்பம் காட்டும் சாதுக்கள் - ஆஹா ! இவர்களை நான் கொஞ்சமாகவா பார்த்திருக்கிறேன்!"
இவ்வாறான எண்ணங்கள் மனத்துள்ளே ஓட, சோமதேவஜி திரும்பிவிடத் தயாரானார். அவர் நினைத்தார், "ஷீர்டி செல்வது பற்றிய எண்ணம் நல்லதில்லை. நதிக்குச் (கோதாவரிக்குச்) செல்லும் பாதையில் திரும்புவதே நல்லது!"
ஆனால், உடன் வந்தவர்கள் அவரை இல்லை. "நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் தயவுசெய்து திரும்பிச் செல்லாதீர்!-
"இவ்வளவு தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் வாருங்கள். தர்க்கம் செய்ய வேண்டா. மசூதியின்மேல் பறக்கும் கொடிக்கும் சாதுவுக்கும் சம்பந்தம் இல்லை.-
"ஏனெனில், இந்த சாதுவுக்குக் கோடி தேவையில்லை; புகழ் தேவையில்லை; கௌரவமும் தேவையில்லை. கிராமத்தில் வசிக்கும் மக்கள்தாம் பக்திக்குப் பிரமாணமாக இம்மாதிரியான பூஷணங்களை (அணிகலன்களை) விரும்புகின்றனர்.
"ஆகவே, நீங்கள் கொடியைப் பார்க்க வேண்டா. சும்மா சென்று தரிசனம் செய்யுங்கள். அங்கு ஒரு கணமும் அதிகமாகாத் தங்க வேண்டா; உடனே திரும்பிவிடுங்கள்."
இதனிடையே குதிரைவண்டி ஷிர்டியை நெருங்கிவிட்டது. ஆகவே, மேற்கண்ட நேர்மையான உபதேசத்தைக் கேட்ட சுவாமி நினைத்தார், 'மனக்கலக்கத்தை ஒருவழியாக ஒழித்துவிடலாமே. குற்றவுணர்ச்சியாவது இல்லாது போகும்!'
சமர்த்த சாயியின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது. அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது. பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது.
சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன. பாபாவின் பாததூளியில் ஸ்நானம் செய்வதற்கு மனம் துடித்தது.
அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன. மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது. தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது. பாபாவின் சகுணரூபம் கண்களில் பதிந்தது. புவா (சுவாமி) ஆனந்தக்கடலில் மிதந்தார்!
கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார். தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார். அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார்.

No comments:
Post a Comment