ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆனால், சுவாமிஜியின் மனத்தியல்பு நானாவிதமான தர்க்கங்களையும் குதர்க்கங்களையுமே நாடியது. தூரத்திலிருந்தே ஷிர்டியின் கொடிகளைப் பார்த்த அவருக்குக் கற்பனைகள் பல உதித்தன.
அவருடன் கூட இருந்தவர்கள் மசூதியின் கலசத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர்.
கிடைக்கப்போகும் சாயிதரிசனம்பற்றி சுவாமிஜியின் மேலே பறந்து கொண்டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர்.
கொடியை தரிசனம் செய்யும்போதே பக்தி பூரித்தெழுகிறது. இதுதான் எல்லாரும் அடையும் அனுபவம். இதுவே பக்திப்பிரேமையின் லக்ஷணம் (இயல்பு). இதில் வழக்கத்திற்கு மாறானது ஏதும் இல்லை.
ஆனால், தூரத்திலிருந்தே கொடியைப் பார்த்த சுவாமியின் அற்பமனத்தில் கற்பனைக்குமேல் கற்பனையாக உதித்தன. அவருடைய மனத்தின் விசித்திரமான இயல்பு அது!
பதாகைகளின் மீது (விருதுக்கொடிகளின்மீது)இவ்வளவு விருப்பம் வைத்தல் சாதுவின் குணமாகுமா? தேவாலயத்தின்மேல் கொடி பறக்கவிடுவது சாதுத்துவத்திற்கு கறை அன்றோ!
ஒரு சாது இவ் வழியில் மரியாதை தேடுவது, அவர், கேவலம் கௌரவத்தையும் புகழையும் நாடுவதையே காட்டுகிறது. இவ்வகையான சாதுத்துவம் மனத்தை ஈர்ப்பதில்லை. உண்மையில் இது இவர்களின் பெருங்குறைபாடு!
சாராம்சம் என்னவென்றால், ஒருவரின் மனச்சாயல் எப்படியோ அப்படியே அவர் சாதுக்களை அணுகும் முறையும் அமையும். சுவாமியின் மனம் தீர்மானித்தது, ""எனக்கு ஸாயீயின் அனுக்கிரஹம் வேண்டா.-
"நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்." சுவாமி பாபாவின் மீது இழிவுணர்ச்சி கொண்டார். அங்கிருந்து உடனே திரும்பிவிட அவசர முடிவெடுத்தார்.
"இது புகழுக்கும் பகட்டுக்கும் ஆசைப்படும் வீண்பெருமையன்றி வேறெதுவும் இல்லை. ஒரு சாதுவுக்குப் படாடோபம் எதற்கு? கொடியைப்பற்றி என்னால் வேறெந்த காரணத்தையும் அனுமானிக்க முடியவில்லை.-
"இந்த சாது கொடியைப் பறக்கவிட்டுத் தம்முடைய பெருமையைப் பீத்துகிறார். இதுவே இவருடைய சாதுத்வத்திற்குப் பெருங்குறையாக ஆகிவிட்டது. இந்த சாதுவை நான் எதற்காக தரிசிக்கவேண்டும்?"-
"இம்மாதிரியான தரிசனத்தால் மனம் என்ன நிம்மதி பெரும்? ஆஹா! பறக்கும் இந்தக் கொடி டம்பத்தையே பறைசாற்றுகிறது! இதிலிருந்து எந்த விதமான மனவொருமைப்பாடும் கிடைக்காது."
ஆகவே, அவர் தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார், "நான் வந்தவழியே திரும்பிச் செல்வதே நல்லது. தரிசனம் செய்ய நினைப்பது நற்சிந்தனையாகத் தெரியவில்லை. அடடா! நான் எப்படி ஏமாறிப்போனேன்!"

No comments:
Post a Comment