valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 January 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் என்னிடம் காட்டிய கோபம் என்னுடைய ஆரம்ப நடத்தையால்தான் என்பது தெளிவு.  இது கோபமன்று; எனக்குப் புகட்டப்பட்ட ஒரு போதனை; கடைசியில் என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்".

ஆக, பின்னர் அவ்வாறே நிகழ்ந்தது! சுவாமி, பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டார். சாயியின் கிருபையால் தூயவராக ஆக்கப்பட்டார்.  பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாக தங்கிவிட்டார்!

சாயிபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளர்ச்சி செய்யட்டும்.  சாயி பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களை செய்தி மனநிறைவு அளிக்கட்டும். 

பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது.  பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பிருப்பினும்,-

அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை!

தாத்பர்யம் என்னவென்றால், மனித உருவமேற்காமல் சாயி விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதும் எப்படி?

இந்த அத்தியாயம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சமயத்தில், சாயி நல்லுபதேசம் செய்த விருத்தாந்தம் ஒன்று என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது.  உபதேசத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பயனடையவர். 

விருத்தாந்தம் மிகச் சிறியது. ஆயினும், இதைக் கருத்தில் கொள்பவர்களுக்கு மங்களம் விளையும்.  ஆகவே, சித்தத்தைச் சிறிது நேரம் என்னிடம் செலுத்துமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன். 

ஒருசமயம், பழுத்த பக்தரான மகால்சாபதி, நானா சாஹேப் சாந்தோர்கருடன் மசூதியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நடந்த அதிசயத்தைப்பற்றிக் கேளுங்கள். 

சமர்த்த சாயியை தரிசனம் செய்வதற்காக வைஜப்பூர்வாசியான ஒரு பணக்காரர் குடும்ப சகிதமாக அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தார். 

முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் வந்ததைக் கண்ட நானா சங்கோசமடைந்தார்.  கோஷாப் பெண்டிர் கூச்சமின்றி தரிசனம் செய்வதற்காக, அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நானா வெளியே செல்ல நினைத்தார். 

ஆகவே, அங்கிருந்து நகர்வதற்காக நானா எழுந்தார். பாபா அவரைத் தடுத்து நிறுத்திச் சொன்னார், "வர விரும்புபவர்கள் படியேறி வருவார்கள்.  நீங்கள் அமைதியான மனத்துடன் உட்கார்ந்திருங்கள்".

அங்கிருந்தவர்களில் ஒருவர் வைஜாப்பூர்  கனவானிடம் சொன்னார், "இவர்களும் தரிசனத்திற்காகவே வந்திருக்கின்றனர்.  நீங்களும் மேலே வரலாம்.  தடை ஏதுமில்லை."  அவர்கள் அனைவரும் வந்து சாயிக்கு வந்தனம் செய்தனர். 


 

No comments:

Post a Comment