valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 19 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். 

எனக்கு இந்தப் பிறவியை அளித்த அன்னையும் தந்தையும் செய்திருக்கும் உபகாரத்திற்கு ஓர் எல்லையே இல்லை. அன்னையின் மலக்குடலில் ஒரு புழுவாக நான் ஜனிப்பதைத் தவிர்த்து, எனக்கு மனிதப் பிறவியை அளித்திருக்கின்றனர். 

குருடனாகவோ முடவனாகவோ ஊமையனவாகவோ செவிடனாகவோ ஒற்றைக் கண்ணனாகவோ திக்குவாயனாகவோ பிறந்து, நான் என் தாயாருக்குப் பயனற்ற பிரசவ வேதனையைக் கொடுக்கவில்லை.  ஆரோக்கியமான சிசுவாகவே பிறந்தேன். 

எவர்களுடைய பாதங்களில் தேவர்களும் வணங்குவார்களோ, அத்தகைய உன்னதமான பிராமண குலத்தில் பிறந்திருக்கிறேன்.  இது எனக்கு ஈசுவரனின் கிருபையால் கிடைத்தது; முழுக்க முழுக்க இறையருளால் விளைந்தது. 

நாம் கோடானுகோடி ஜென்மங்கள் எடுக்கிறோம்.  ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மாதா பிதா. ஆயினும், ஜனனமரணச் சுழலிருந்து நம்மை விடுவிக்கும் பெற்றோர் அமைவது அரிதினும் அரிது. 

ஜன்மத்திற்கு காரணமானவர் முதலாவது தந்தை.  பூணுல் அணிவித்துப் பிரம்மோபதேசம் செய்பவர் இரண்டாவது தந்தை.  அன்னமளித்துப் பாவிப்பவர் மூன்றாவது தந்தை.  பயத்திலிருந்தும் பீதியிலிருந்தும் விடுவிப்பவரோ நான்காவது தந்தை. 

உலக வாழ்வில் இவர்கள் நால்வருமே முக்கியமானவர்கள்.  ஆயினும், கிருபாளுவான (அருளுடையவரான) சத்குருவுக்கு இணையான தந்தை வேறெவரும் இல்லை.  சத்குருவின்  அற்புதமான லீலைகளைப் பாருங்கள்!

அன்னையின் கர்ப்பத்தில் வீரியத்தைப் பொழிந்து, யோனித்துவாரம் வழியாகக் குழந்தையைப் பிறக்கச் செய்பவர் உலகியல் ரீதியில் மாத்திரமே பிதா.  ஆனால், சத்குருவோ உலகநடையிலிருந்து வேறுபட்ட பிதா. 

சத்குரு, வீரியத்தின் சம்பந்தமே இன்றி, நீசமான யோனித்துவாரத்தின் சம்பந்தமும் இன்றித் தம் புத்திரனக்குப் பிறவி அளிக்கிறார். பூரணமாக அனுக்கிரஹம் செய்கிறார். 

நம்மை ஜனனமரணச் சுழலிலிருந்து விடுவிப்பவரும் கருணை நிரம்பியவரும் ஞானப்பிரகாசத்தை அளிப்பவரும் வேதங்களில் மறைந்திருக்கும் பேருண்மைகளை விளக்கி நமக்குப் புரியவைப்பவரும்  எங்கும் நிறைந்திருப்பவருமான சத்குருவை  நான் வணங்குகிறேன். 


 

No comments:

Post a Comment