ஷீர்டி சாயி சத்சரிதம்
சஞ்சலமும் வருத்தமும் அவர் மனத்தை நிரப்பின. அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. கோஷ்டியுடன் அவரும் கை கழுவ வெளியே வந்தார்.
எதிர்பாராது அங்கு ஒரு மராட்டிப் பையன் திடீரன்று தோன்றினான். ஒரு கோலை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தான். கோலின் நுனியில் காணாமற்போன செருப்புகள் தொங்கிக்கொண்டிருந்தன!.
சாப்பிட்டபின் மக்கள் கையைக் கழுவிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், யாரையோ தேடிக்கொண்டு வந்த அந்தப் பையன் சொன்னான், "பாபா இந்தக் கோலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். -
"பாபா பாடம் சொன்னார், 'மகனே, ஹரீ கா பேட்டா, ஜரீ கா பேடா (ஹரி, கானோபாவின் மகன், ஜரிகைத் தலைப்பாகை அணிந்தவர்) என்று கூவிக்கொண்டே போ. இவை என்னுடையவை என்று தெரிவித்து எவர் உன்னிடம் உற்சாகமாக ஒட்டிக்கொள்கிறாரோ, அவரிடம் கொடுத்துவிடு. -
"ஆனால், முதலில் அவர்தாம் ஹரி கா பேடா என்பது, ஜரீ கா பேடா என்பதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும். நீ முதலில் அதிகம் பேசாதே. ஊர்ஜிதம் ஆனபின் செருப்புகளைக் கொடுத்துவிடு."
கூவலைக் கேட்டுத் தம்முடைய செருப்பை அடையாளம் கண்டுகொண்ட ஹரிபாவூ ஆச்சரியம் நிரம்பிய மனத்துடன் தாவியடித்து முன்னேறினார்.
விழிகளில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது. தொலைந்துபோன செருப்பை மீண்டும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.
ஹரிபாவூ பையனைக் கூவியழைத்தார், "ஏய் , ஏய், இங்கு வா. அந்தச் செருப்பை என்னிடம் கொண்டுவா !" செருப்புகளைக் கருத்துடன் பரிசோதித்தபின் கேட்டார், "இவற்றை நீ எங்கே கண்டெடுத்தாய்? விவரத்தை எனக்கு சீக்கிரமாகச் சொல்!".
பையன் பதிலுரைத்தான், "அது எனக்குத் தெரியாது. நான் பாபாவின் ஆணையை மதித்து நடக்க வேண்டும். ஹரீ கா பேடா யாரோ, அவர் தம்முடைய ஜரிகைத் தலைப்பாகையை என்னிடம் காட்டவேண்டும். -
"அவரிடந்தான் நான் செருப்பைக் கொடுப்பேன். வேறு யாரையும் நான் அங்கீகரிக்கமாட்டேன். பாபா அளித்த குறிப்புகளோடு யார் சரியாகப் பொருந்துகிறாரோ, அவர்தம் செருப்பை எடுத்துக்கொள்ள முடியும்".
ஹரிபாவூ சொன்னார், "ஏ பையா, இவை என்னுடையவை." ஆனால், பையன் கொடுக்க மறுத்தான். ஆகவே, பாபா அளித்த குறிப்புகள் பற்றிய விவரங்களை அளித்துப் பையனை ஹரிபாவூ நம்பவைத்தார்.
ஹரிபாவூ சொன்னார், "பையா, என்னுடைய பெயர் ஹரி. நான் கானோபா என்பவரின் மகன். பாபா சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மை. அவை எனக்கு முழுமையாக பொருந்துகின்றன.
"இதோ, இந்த ஜரிகைத் தலைப்பாகையைப் பார். உன்னுடைய மனத்திலிருந்து சந்தேகம் விலகும். செருப்புக்கு நான்தான் சொந்தக்காரன் என்பது ருசுவாகும். வேறு யாரும் செருப்புக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது."

No comments:
Post a Comment