valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 1 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

சமர்த்த சாயியினுடைய நடத்தை மனத்திற்கும் புத்திக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டது. அவருடைய செயல்களோ கற்பனைக்கும் எட்டாதவை; எதிர்பார்க்க முடியாதவை.

அவருடைய முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனம் திருப்தியடையாது. அவருடன் பேசுவது மேலும் மேலும் பேச ஆவலை தூண்டிவிடும். அவருடைய திருவாய்மொழியை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படாது. இச் செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை மனதில் அடக்க முடியாது.

காற்றை மூட்டையாக கட்டிவிடலாம்; கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம்; ஆனால், சாயியினுடைய அற்புதங்களை கணக்கெடுக்க கூடிய வன்மை உள்ளவர் யார்?

இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாக கேளுங்கள். தம்முடைய பக்தர்களை சம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்ய வேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரிய வரும்.

பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தருக்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.

ஆர்வத்துடன் கதை கேட்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு கதையை கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, சாயியின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.

அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், சாயியினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் சாயி நாமத்தை இடைவிடாது ஜபித்தால், சாயி அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.

காகாசாஹெப் மிரீகர் என்பவர் அஹமத்நகர் பட்டணவாசி, அவருடைய சேவையில் மகிழ்ந்து, (பிரிட்டிஷ்) அரசாங்கம் அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை அளித்தது.

அவருடைய மகன் சிரஞ்சீவி பாலாசாஹேப்  மிரீகரும் ஒரு கடைமை வீரராகத் திகழ்ந்தார். கோபர்காங்கவிற்கு மாமலத்தாராக இருந்த அவர், சிதலீக்கு அலுவலகச் சுற்றுப்பயணமாக வந்திருந்தபோது பாபாவை தரிசனம் செய்ய ஷிர்டிக்கு வந்தார்.

மசூதிக்குச் சென்று பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கு அமர்ந்தார். எல்லாருடைய ஷேமத்தையும் குசலத்தையும் (சுகத்தையும்) பற்றி பாபா அவரை விசாரித்தார்; பேச்சுத் தொடர்ந்தது.

பல பக்தர்கள் அப்பொழுது அங்கே குழுமியிருந்தனர்; மாதவராவும் அருகிலேயே இருந்தார். ஓ, நான் சொல்லும் கதையை கவனத்துடன் கேட்பவர்களே! அமிருதத்தைப் போன்ற இக் காதையை இப்பொழுது பருகுங்கள். 


Thursday, 25 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இப் பாட்டு, தாசகணு அளித்த விதமாகவே ஏற்கனவே இந்நூலின் 4 வது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறுபடியும் படித்தால் முதல் தடவை கேட்டபோது அடைந்தவாறே ஆச்சரியம் அடைவீர்கள்.

சாகா சந்திர நியாயத்தின்படி தம்முடைய கால்கட்டைவிரலை கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.

இது, "உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு சகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய   கால் காட்டை விரலின் மீது தியானம் செய். இது பக்தியின் எளிய சாதனை" என்று பாபா நமக்கு குறிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றுகிறது.

இப்பொழுது, முன்பு சொன்ன கதைக்கு போவோம். அருள்மழை பொழிந்தது பற்றிய பிரவசனம் முடிந்தது. இப்பொழுது அபூர்வமான கதையொன்று தொடர்கிறது; கவனமாக கேளுங்கள்.

பாபா அங்கு வாசம் செய்ததால், ஷீர்டி புண்ணியஷேத்திரம் ஆகியது. இரவு பகலாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். புண்ணியத்தைத் தேடிய பல மக்கள் அங்கே கூடினர்.

பத்துத் திசைகளிலும் வியாபித்திருக்கும் .கற்பகத்தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளிவீசும் சாயிபாபா  ஷிர்டியில் அவதரித்துவிட்டார்.

ஏழையையும் பணக்காரனையும் சமசமானமாகப் பாவித்தார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளித்தார்.

ஓ, எவ்வளவு கரைகாணாத பிரேமை! என்னே இந்த இயல்பான பிரம்ம ஞானம்! எல்லா உயிர்களிலும் உறைபவன், ஒன்றான இறைவனே என்பதில்தான் அவருக்கு எவ்வளவு அமோகமான நம்பிக்கை! பாபாவை அனுபவித்தவர் பாக்கியசாலி.

சிலசமயங்களில் திடமான மௌனமே அவர் பிரம்மத்தை (முழுமுதற் பொருளை) பற்றிச் செய்த வியாக்கியானமாக அமைந்தது. சிலசமயங்களில் ஆத்மானந்தமாகிய இம்மேகத்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

சில சமயங்களில் அவருடைய திருவாய்மொழி மறைபொருளாகவும் கனமான அர்த்தம் நிரம்பியதாகவும் இருந்தது. சிலசமயங்களில் அவர் மென்மையாகவும் பரிஹாஸமாகவும் பேசினார். சில சமயங்களில் அவர் எப்பொழுதும் பேசும் மறைபொருளடங்கிய பேச்சை விடுத்துக் கோபம் வந்தது போல் பாசாங்கு செய்தார்.

சிலசமயங்களில் குறிப்பால் உணர்த்தியும், சிலசமயங்களில் விவேகத்தால் புரிந்துகொள்ளுமாறும், சிலசமயங்களில் வெளிப்படையாகத் தெளிவாகவும், அவர் அநேக பக்தர்களுக்கு அநேக விதங்களில் உபதேசம் அளித்தார். 


Thursday, 18 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஈடிணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய உம்முடைய பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கத்தி ஏதும் எங்களுக்கு இல்லை.

தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே! அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ!

ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம்! அதை எவ்விதம் வர்ணிப்பேன்! மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டை விரலை கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ!

தேய்பிறையின் பதினைந்தாவது நாளான அமாவாசையின் இருட்டான இரவு கடந்த பிறகு, எல்லாருக்கும் மறுபடியும் சந்திரனைப் பார்க்கவேண்டுமென்கிற ஆவல் எழுவது இயற்கையே.

தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தை பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.

அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.

இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்காலின் கட்டைவிரலைக் கவ்விக் கொண்டிருக்கிறது. கட்டைவிரலின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனை போல நகம் பளபளக்கிறது.

மூன்றாம் பிறைச்சந்திரனை பார்ப்பதற்கு மக்களுக்கு ஆவல் அதிகம். ஆனால், அச் சிறிய ஒளிக்கீற்று சுலபமாக தெரிவதில்லை. விவரம் தெரிந்த மனிதர் அப்பொழுது சொல்லுவார், "இந்த மரத்தின் கவட்டையான இரண்டு கிளைகளுக்கும் நடுவில் பார்" என்று.

அப்பொழுது, இரு கிளைகளுக்கும் நடுவே நமக்கு நேராகவே சந்திரன் தரிசனமாகும். சந்திரனின் கீற்று மிக மெல்லியதாக இருந்தாலும், கிளைகளுக்கு நடுவில் நன்கு தெரியும்.

கட்டியவிரலின் மகிமையே மஹிமை! பாபாவே வேணிமாதவராக ஆகி, புனிதமான கங்கையையும் யமுனையையும் தம்முடைய கட்டைவிரல்களில் இருந்து பெருக்கி தாசகணுவின் விருப்பத்தை திருப்தி செய்தார்.

புண்ணிய தீர்த்தமான பிரயாகைக்கு சென்று ஸ்நானம் செய்யவேண்டுமென்று தாசகணு விக்ஞாபனம் (வேண்டுகோள்) செய்த்தபோது, "என்னுடைய கால் கட்டைவிரலே பிரயாகை என்றறிவாயாக. இங்கேயே ஸ்னானம் செய்."-

என்று பாபா திருவாய் மொழிய, தாசகணு அவர் பாதங்களில் பணிந்தார். பாபாவின் பாதங்களில் இருந்து உடனே கங்கையும் யமுனையும் வெளிப்பட்டன.

அந்த நேரத்தில் தாசகணு உணர்ச்சி வெள்ளத்தில் ஆசுகவியாகப் பாடிய அழகான பாட்டு ஏற்கனவே உங்களால் செவிமடுக்கப்பட்டது. 


Thursday, 11 May 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

மரண விபத்துக்களை விலக்கி அருள் செய்த படலம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்ற! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஜய ஆனந்தம் நிரம்பியவரே சத்தகுருவே! ஞானத்தின் சொரூபமே! தூய்மையின் வடிவே! பிறவிப் பயத்தை ஒழிப்பவரே! பரிபூரணரே! கலியின் மலங்களை எரிப்பவரே ஜய ஜய!

பலவிதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் மேல்மட்டத்தில் அலைகளாக எழும் ஆனந்தக் கடல் தாங்களே! உண்மையான பக்தர்களின் மீதுள்ள கிருபையினால், தேவரீர், தேவரீர் மாத்திரமே, அவ்வலைகளை கட்டுப்படுத்துகிறீர்.

அறையிருளில் பாம்புபோல் தெரிவது வெளிச்சம் வந்தவுடன் தானாகவே கயிறாகிவிடுகிறது. அறையிருளையும் வெளிச்சத்தையும் சிருஷ்டி செய்பவர் நீரே.

முதலில் பாம்பு போன்ற உருவ பிரமையை சிருஷ்டி செய்து பயத்தை உண்டுபண்ணுகிறீர். கடைசியில் அந்த பயத்தை நிவாரணம் செய்வபவரும் நீரே.

ஆதியில் அந்தகாரத்தில் (இருளில்), பாம்பும் இல்லாத, கயிறும் இல்லாத நிலையில், கயிற்றை பார்த்துப் பாம்பென்று மயக்கம் அடைவதற்கு இடமேயில்லாத சூழ்நிலையில், உருவமற்ற அவ்விருட்டை வியாபித்தவரும் நீரே.

உருவமற்ற நிலையில் இருந்து மங்கிய ஒளியில் உருவமொன்று தோன்றியபோது பாம்பெண்ணும் பிரமை உண்டாகியது. அந்த மயக்கமும் உம்முடைய சிருஷ்டியே.

ஒருகணத்தில் தெரியும் தோற்றம் மறுக்கணத்தில் மறைந்துவிடுவதும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத தோற்றங்களும் உண்மையில் நீர் கண்ணாம்பூச்சி ஆடும் பிரபாவமே. இந்நிலையில் மாற்றமில்லாது இருந்தாலும், எவராலும் இதை ஆழங்கான முடியவில்லை.

தங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் வேதங்கள் மௌனமடைந்து விட்டன. ஆதிசேஷன் தம்முடைய ஆயிரம் வாய்களால் போற்றியும், தங்களுடைய வாஸ்தவமான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இவ்விதமிருக்க, நான் எப்படித் தங்களை புரிந்துகொள்ள முடியும்?

பாபா! தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன். 


Thursday, 4 May 2017

ஷீர்டி சாய் சத்சரிதம்

ஆகவே, அப்பொழுதிலிருந்து அந்த வக்கீல் யாரையும் நிந்திப்பதில்லையென்றும் விமரிசிப்பதில்லைஎண்டுறம் யாரைப்பற்றியும் எந்தக் கெட்ட எண்ணத்திற்கும் இடமளிப்பதில்லையென்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டார்.

நாம் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அது சாயியின் பார்வையில் படாமல் இருக்காது. இந்த விஷயம் அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அசத்தான (தீய) செய்கைகளில் அவருக்கிருந்த நாட்டம் ஒழிந்தது.

நல்ல காரியங்களை செய்யவேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தமக்கு உள்ளும் முன்னாலும் பின்னாலும் சாயி இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர் இதயத்தில் நிர்த்தரணம் ஆகிவிட்டது. சாயியை வஞ்சிக்கும் சாமர்த்தியம் படைத்தவர் யார்?

இக் கதை அந்த வக்கீலுக்கே சம்பந்தப்பட்டதாக தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்த போதனை எவ்விதமாக பார்த்தாலும் எல்லாவழியிலும் நம் எல்லாருக்கும் அளிக்கப்பட்டது என்பது விளங்கும்!

அந்த வக்கீலைப் போலவே, இந்தக் கதையைச் சொல்பவரும் கேட்பவர்களும் அனைத்து சாயி பக்தர்களுமே இந்த போதனையின்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.

சாயிகிருபை என்னும் மேகம் அருளைப் பொழியும்போது நாமனைவரும் திருப்தியடைவோம். இதில் புதுமை ஏதும் இல்லை. தாகமெடுத்தவர்கள் அனைவரும் திருப்தியடைவர்!

சாயிநாதரின் பெருமை அளவிடமுடியாதது; அவருடைய கதைகளும் எண்ணிலடங்காதவை. சாயியின் சரித்திரம் எல்லையற்றது; ஏனெனில், அவர் முழு முதற்பொருளின் அவதாரம்.

சிரத்தையுடன் செவிமடுப்பவர்களே! அடுத்த அத்தியாயத்தில் ஒரு கதையை பயபக்தியடன் கேட்டால் உங்களுடைய மனோரதங்கள் நிறைவேறும்; மனம் உறுதிப்படும்; சாந்தியடையும்.

தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரப்போகின்றன என்பது சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும். கேலியும் பரிஹாசமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே சாயிநாதர் அவ்வாபத்துக்கள் வாராது தடுத்துவிடுவார்.

பக்தன் ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக்காதை இங்கு முற்றும். அடுத்து வரும் கதை பக்தர்களுக்கு வரக்கூடிய சங்கடங்களை சாயி நிவாரணம் செய்தது பற்றியதாகும்.

பக்தர்களுக்கு நேரப்போகும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டே சாயி என்னும் கருணைக்கடல், எப்படி சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து அவ்வாபத்துக்கள் வாராது தடுத்தார் என்பது பற்றிச் சொல்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'அனுக்கிரஹம் செய்தல்' என்னும் இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.

                                        ஸ்ரீ சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                            சுபம் உண்டாகட்டும்.


Thursday, 27 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அவர் பக்கம் திரும்பி அவரைப்பற்றி ஏதோ சொன்னார். அந்த வார்த்தைகள் அவருக்குள்ளே புகுந்து, தேள் போல் கொட்டின. அவர் விசனமுற்றார்.

"ஓ, மக்கள்தாம் எவ்வளவு நேர்மையில்லாமல் இருக்கிறார்கள்! பாதங்களில் விழுந்து வணங்குவர்; தக்ஷிணையும் அர்ப்பணம் செய்வர்; ஆயினும் மனத்துள்ளே எப்பொழுதும் வசைபாடுவர். எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல் புரிகிறார்கள்!"

இதைக் கேட்ட வக்கீல் மௌனம் சாதித்தாலும், அவருடைய உள்மனத்திற்கு அனைத்தும் புரிந்துவிட்டது. பாபாவின் வார்த்தைகளில் நியாயமிருந்தது அவருக்குத் தெரிந்தது. தாத்பரியம் (பாபாவின் நோக்கம்) அவர் மனத்தை எட்டிவிட்டது!

பிறகு அவர் வாடாவிற்கு (சத்திரத்திற்கு) திரும்பியபோது தீக்ஷிதரிடம் சொன்னார். "பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் துளைப்பது போல் இருப்பினும், அவர் கூறியதனைத்தும் சரியே!-

"நான் நுழைந்தபோது பாபா விடுத்த சொல்லம்புகளெல்லாம் உண்மையில், மற்றவர்களைத் தூஷித்துப் பேசுவதிலும் இழிவாகப் பேசுவதிலும் என் மனம் ஈடுபடக்கூடாது என்று எனக்கு அளிக்கப்பட்ட எச்சரிப்பேயாகும்.-

"உடல் நலம் குன்றிய, எங்கள் நீதிபதி, ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும் சுகமடைவதற்காகவும் விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கு (ஷிர்டிக்கு) வந்தார்.-

"அந்த சமயத்தில், வக்கீல்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் நீதியபதியைப் பற்றிய பேச்சு எழுந்தது. சம்பந்தமே இல்லாதவர்கள் விவாதத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். -

"வைத்தியம் செய்துகொண்டு சரியான மருந்துண்ணாமல் சாயியின் பின்னால் ஓடுவதால் மட்டும் சரீரத்தின் நோய்கள் 'நிவாரணம் ஆகிவிடுமா என்ன? நீதிபதி பதவியில் இருப்பவர் ஒருவர் இவ்வாறு செய்வது முறியா?" (என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது)-

"இவ்வாறாக நீதிபதியைப் பற்றிய நிந்தையும் புறம் பேசுதலும்  தொடர்ந்தன. ஏளனம் பாபாவையும் விட்டு வைக்கவில்லை. மிகச்சிறிய அளவாக இருக்கலாம்; ஆனால், நானும் அந்த தூஷணைக்கு உடந்தையாக இருந்தேன். அது தகாத செயல் என்பதையே பாபா ஆக்ஷேபனம் (மறுப்பு) செய்து என்னை எச்சரித்தார். -

"பாபா என்னைத் திட்டவில்லை; அனுக்கிரஹமே செய்திருக்கிறார். வீணான வாதங்களையும் தர்க்கத்தையும் இகழ்ச்சியான விமரிசனங்களையும் நிந்தையையும் மற்றவர்களை  பற்றிய தீய எண்ணங்களையும் அறவே ஒழித்துவிடு என்று போதித்து எனக்கு அனுக்கிரஹம் செய்திருக்கிறார். -

"நூறு மைல்களுக்கப்பால் இச்சம்பவம் நடந்ததெனினும், சாயி ஒவ்வொருவர் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதற்கு  இன்னுமொரு நிரூபணம் கிடைத்துவிட்டது. அவர் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி படைத்தவரல்லரோ !-

"இன்னொரு விஷயமும் தெளிவாகிவிட்டது. குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. " 


Thursday, 20 April 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சேவை செய்தல்),
எட்டாவதாக, சக்யம் (தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக, ஆத்மநிவேதனம் (தன்னையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல்).-

"நவ வித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பாவத்துடன் கடைபிடித்தால், வேறெதையும் வேண்டாத ஸ்ரீஹரி, பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.-

"பக்தியில்லாத ஜபமும் தவமும் விரதங்களும் யோகசாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும் பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்தும்) வீண்.-

"வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை. -

"உம்மை அந்த வியாபாரியாக அறிந்து கொள்வீராக! அந்த நிகழ்ச்சியின் உட்பொருளை புரிந்து கொள்வீராக! ஒன்பது விதமான பக்தி என்னும் கோடி ஏற்றப்படும்போது இறைவன் உல்லாசமடைகிறான்.-

"குதிரை ஒன்பது லத்திகள் சாணமிட்டது. வியாபாரி அதை ஆவலுடன் ஓடிப் பிடித்தான். அம்மாதிரியாகவே நீர் நவவித பக்தியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டால், உமது மனம் சாந்தியில் திளைக்கும். -

"அதுவே உம்முடைய மனத்தை உறுதிப்படுத்திக் கம்பீரமாக்கும்; எல்லா உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லையெனில், மனம் சஞ்சலப் பட்டுக்கொண்டு  அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்."

அடுத்த நாள் சாயி பாதங்களுக்கு வந்தனம் செய்யச் சென்றபோது, "என்ன, குதிரைச் சாணி லத்திகளை உம்முடைய அங்கவஸ்திரத்தில் (மேல்துண்டில்) கட்டிவிட்டீரா?"  என்று பாபா கேட்டார்.

அனந்தராவ் பிரார்த்தனை செய்தார், "இந்த தீனனின்மேல் உங்களுக்கு தயவிருந்தால் அவற்றை சுலபமாகச் சேர்த்துக் கட்டிவிட முடியும். அப்படியென்ன முடியாத விஷயமா  அது?"

பாபா அவரை ஆசீர்வதித்து, 'மங்களமுண்டாகும்' என்று உறுதி அளித்தார். அவ்வார்த்தைகளை கேட்ட அனந்தராவ் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்; சுகத்தை அனுபவித்தார்.

செவி மடுப்பவர்களே! இப்பொழுது இன்னுமொரு சிறுகதையை பயபக்தியுடன் கேளுங்கள். பாபாவினுடைய அந்தர் ஞானத்தை (எங்கு நடப்பதையும் அறியும் சக்தியைப்) பற்றியும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் முறையையும் அறிந்துகொள்வீர்கள்.

ஒருசமயம் ஒரு வக்கீல் ஷிர்டிக்கு வந்தவுடனே மசூதிக்கு சென்றார். சாயிநாதரை தரிசனம் செய்துவிட்டு பாதங்களில் வணங்கினார்.

தாம் கொண்டு வந்திருந்த தக்ஷிணையை கொடுத்துவிட்டு உடனே ஒரு பக்கத்தில் அமர்ந்தார். அங்கு நடந்து கொண்டிருந்த சாயியின் சம்பாஷணையை கேட்க ஆவல் கொண்டார்.