ஷீர்டி சாயி சத்சரிதம்
குருவின் திருவாய்மொழியாக வெளிவந்த சொற்களை மனத்தில் நிலைநிறுத்துங்கள்; அறிவுரையை எப்பொழுதும் சிந்தனை செய்து கொண்டிருங்கள். அதுவே, உங்களுடைய ஆன்மீக ஏற்றத்திற்குக் காரணமாக அமையும். இக் கருத்தை நிரந்தரமாக மனத்தில் இருத்துங்கள்.
குருவின் சொற்களே போதியும் புராணமும்; அவையே அவற்றுக்குத் தெளிவுரையும் விரிவுரையும் ஆகும். முக்கியமான உபதேசத்தை தியானம் செய்யவேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய வேதஞானம்.
எந்த ஞானியின் சொற்களையும் அவமதியாதீர்! நம்முடைய தாய் நம்மைக் கவனித்துக் காப்பாற்றுவது போல, வேறு எவர் நம்மைக் காப்பாற்றுவார்?
தாயன்பு பரிசுத்தமானது. குழைந்தையைப் போஷிப்பதில் அவள் அடையும் மகிழ்ச்சி குழந்தைக்கு தெரியாது. குழந்தை ஆசைப்பட்டு விரும்புவதையெல்லாம் நிறைவேற்றிச் செல்லங்கொடுக்கிறாள்.
உலகில் எத்தனையோ ஞானிகள் இருக்கின்றனர். ஆயினும், கருணையால் வெளிப்பட்ட, "நம்முடைய பிதாவே (குருவே) நம்முடைய பிதா (குரு)" என்னும் சாயியின் திருவாய்மொழியை நம்முடைய இதயத்தில் ஆழமாகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
சொல்கிறேன்; சாயியின் வாயிலிருந்து வெளிவந்த வசனங்களை அனுசந்தானம் செய்யுங்கள் (இடையாறது சிந்தியுங்கள்). காரணம், கிருபாநிதியான அவர்தான் நம்முடைய நுதாபங்களையும் தணிக்கக்கூடியவர்.
அவருடைய கலைகளை அவர்தான் அறிவார்! அவருடைய லீலைகளின் அற்புதத்தையும் அவை சகஜமாக (இயல்பாக) வெளிப்படுவதையும் குதூகலத்துடன் கண்டு களிக்கத்தான் நம்மால் முடியும்.
யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய லட்சியப் பாதையிலிருந்து தடம்புரளக்கூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
அதுதான் (குருவின் திருவாய்மொழிதான்) நமக்குப் பரம மங்களைங்களை விளைவிக்கும். அதன் மூலமாகத்தான் நாம் பிறவி பயத்தை வெல்லமுடியும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும் - அனைத்தும் ஆகும்.
சாராம்சம் என்னவென்றால், பரமகுருவைப் பிரேமை செய்யுங்கள். அனன்னிய பாவத்துடன் நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்கு எதிரில் இருட்டு எப்படி இருக்கமுடியும்? அதுபோலவே, பிறவிக்கடலும் இல்லாதுபோகும்.
சிருஷ்டியின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ எட்டவோ ஏழுகடல் தாண்டியோ செல்லுங்கள். குருவுக்கு பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இன்னுமொரு காதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவரைக் காப்பியடித்து மற்றொருவர் அதே காரியத்தைச் செய்ய முயலும்போது, ஆபத்துக்கு உள்ளாகலாம் என்பது இக்காதையின் சாரம்.