ஷீர்டி சாயி சத்சரிதம்
அதற்கு மாதவ்ராவ் பதில் சொன்னார், "நேற்றுதான் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் உடனே கையோடு கிடைத்துவிட்டது! பக்தியின் கரைசேர்க்கும் லக்ஷணத்தை (சிறப்பியல்பைப்) பாருங்கள். -
"பாகாடேவின் சொப்பன விளக்கத்தை கேளுங்கள். பாபா எவ்வாறு தரிசனம் தந்தார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சந்தேகம் நிவர்த்தியாகும். நீங்கள் குருபாதங்களில் கொண்ட பக்தி பரிபூரணமானது என்றும் அறிவீர்கள்."
இந்தக் கட்டத்தில், சொப்பனத்தில் என்ன நடந்ததென்று அறிந்துகொள்ள எல்லாருமே ஆர்வமுற்றனர். குறிப்பாகக் காகா சாஹேப் மிகுந்த ஆர்வம் காட்டினார். சந்தேகம் எழுந்ததே அவருக்குத்தானே?
எல்லாருடைய ஆர்வத்தையும் கண்ட ஆனந்தராவ், தம்முடைய கனவை விவரித்தார். கூடியிருந்தவர்கள் ஸத்பாவம் நிறைந்த பக்தர்கள்; கேட்டு வியப்பிலாழ்ந்தனர்.
"ஒரு மஹாசமுத்திரத்தில் நான் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்ரீ சமர்த்த சாயீ என் கண்பார்வையில் படும்படி அங்கே தோன்றினார்.-
"ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் சாயீ அமர்ந்திருந்தார். அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கியிருந்தன. இதுவே நான் கண்ட காட்சி.-
"அந்த மனோஹரமான உருவத்தைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அது ஒரு கனவு என்பது அப்பொழுது யாருக்கு ஞாபகமிருக்கிறது? தரிசனம் கண்டு மனம் ஆனந்தமடைந்தது. -
"மாதவ்ராவ் அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தது எவ்வளவு அற்புதமான யோகம்! அவர் என்னிடம் உணர்ச்சி ததும்பக் கூறினார், "ஆனந்தராவ், சாயியின் பாதங்களில் விழுந்து வணங்கும்'.-
"நான் அவருக்குப் பதிலுரைத்தேன், 'ஆஹா! எனக்கும் மிகுந்த ஆசைதான். ஆனால், அவருடைய பாதங்கள் நீரில் மூழ்கிருக்கின்றனவே; என் கைகளுக்கு எப்படி எட்டும்?-
"பாதங்கள் நீரில் மூழ்கியிருக்கும்போது, நான் எப்படி என் தலையைப் பாதங்களின்மீது வைத்து வணங்க முடியும்? நான் இப்பொழுது செய்யவேண்டியது என்ன? இது என்ன தத்துவம் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே!"-
"இதைக் கேட்ட மாதவ்ராவ் பாபாவிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள், 'தேவரே, தண்ணீரில் மூழ்கியிருக்கும் பாதங்களை வெளியே எடுப்பீர்களாக."-
'இவ்வாறு மாதவ்ராவ் கேட்டுக்கொண்ட கணமே பாபா பாதங்களை நீரிலிருந்து வெளியே எடுத்தார். உடனே நான் பாதங்களைப் பற்றிக்கொண்டு பாபாவுக்கு வந்தனம் செய்தேன். -
"நான் பாபாவின் பாதங்களை இவ்வாறு கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தபோது பாபா ஓர் ஆசீர்வாதம் அருளினார், 'உமக்கு எல்லா மங்களங்களும் விளையுமய்யா! பீதியடைவதற்கு காரணம் ஏதுமில்லை.'-
No comments:
Post a Comment