valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 15 August 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


வெறும் தேஹந்தான் சாயி என்று கருதினால், உள்ளுறையும் பொருளுக்கும் பெயரில்லாமல் போகிறது; அந்த வஸ்துவுக்கு உருவமும் இல்லை. ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்பட்டவர்.

தேகம் நசித்துப் போகக்கூடியது. தேகத்தில் உறையும் வாஸ்து சுதந்திரமுள்ளது அழிவிற்கு அப்பாற்பட்டது. தேஹம் பஞ்சபூதங்களால் ஆனது; உள்ளுறையும் வஸ்துவோ ஆதியந்தமில்லாதது.

தேஹத்தினுள்ளே இருப்பது சுத்த சத்துவ சைதன்யம். அதுவே பௌதீக இந்திரியங்களை இயக்கம் பிரம்மம். அந்த வஸ்துவுக்கு சாயீ என்று பெயர்.

அதுவென்னவோ இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது. ஜடமான இந்திரியங்கள் அதை அறிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதுதான் இந்திரியங்களை செயல்படும்படி ஊக்குவிக்கிறது.  பிராண ஓட்டத்தைச் சுழலச் செய்கிறது.

அந்த சக்தியின் பெயர் சாயீ.  அது இல்லாத இடமேயில்லை. அது பத்துத் திசைகளிலும் நிரம்பியிருக்கிறது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்தையும் வியாபித்திருக்கிறது.

சாயியின் அவதார நிலைமையும் இதுவே. ஆதியில் எது தோன்றாநிலையில் இருந்ததோ, அது ஒரு பெயரையும் உருவத்தையும் ஏற்றுக்கொண்டு தோன்றிய நிலைக்கு மாறியது. வேலை முடிந்த பிறகு மீண்டும் தோன்றாநிலைக்குத் திரும்பிவிட்டது.

அவதாரம் ஏற்றுக்கொண்டு வந்தவர்கள் எல்லாரும் எவ்வாறு ஒரு காலகட்டத்தில் அவதார தேஹத்தைத் துறந்து ஆதியந்தமில்லாத இருப்பிடத்திற்குத் திரும்பினரோ, அவ்வாறே சாயியும் செய்தார்.

மறைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றியவுடன், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி, 'பர்வத யாத்திரையாகச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டுச் சட்டென்று காண்காபூரிலிருந்து கிளம்பிவிட்டார்.

பக்தர்கள் தடுக்க முயன்றபோது அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், "நான் போவது உலகியல் ரீதியில்தான்; காண்காபூரை விட்டு நான் போகமாட்டேன்.-

"கிருஷ்ணா நதியில் காலையில் நீராடிவிட்டு பிந்து க்ஷேத்ரத்தில் அனுஷ்டானத்தை (சந்தியா வந்தனம், ஜபம் போன்ற தினமும் செய்யவேண்டிய தொழுகைகளை) முடித்துக்கொண்டு மடத்திற்கு வந்து என்னுடைய பாதுகைகளை பூஜைசெய்யுங்கள். நான் அங்கு நிரந்தரமாக வாசம் செய்கிறேன்".

அவ்வாறே சாயிபாபாவின் வழியும்! அவருடைய மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகர பொருள்கள் அனைத்தினுள்ளும் ஸ்ரீசாயியைப் பார்க்கலாம்.

ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்கவேண்டா; சாயி மரணத்திற்கு அப்பாற்பட்டவர். 



No comments:

Post a Comment