valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 5 September 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த விவரணத்தில் ஜோக்கின் பெயர் எழுந்ததால், பிரதானமான காதையைச் சொல்லும்போது, ஓர் உபகாதை ஞாபகத்திற்கு வருகிறது. காதையை கேட்டால், அதன் அபூர்வத்தையும் சாயியின் பிரேமையையும் காண்பீர்கள் .

சுருக்கமான உரையாடலாக இருப்பினும், குருபக்தர்களுக்குச் சிறந்த போதனையான அமைந்திருக்கிறது. துறவு மனப்பான்மை உள்ளவன் பாக்கியசாலி. சம்சார பந்தத்தில் உழல்பவன் அபாக்கியவான்.

ஒருசமயம் ஜோக் பாபாவைக் கேட்டார், "நான் ஏன் இன்னும் இந் நிலையில் இருக்கிறேன்? ஏன் என்னுடைய தலையெழுத்து இவ்வளவு விசித்திரமாக அமைந்திருக்கிறது? எப்பொழுது நான் நல்ல நிலையை அடைவேன்?-

"தேவா! பல ஆண்டுகளாக வேறெதிலும் நாட்டமின்றி உங்களுக்கு சேவை செய்யும் நல்வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இருந்தபோதிலும் சஞ்சலப்படும் என் சித்தத்திற்கு ஓய்வும் இல்லை; அமைதியும் இல்லை. இது ஏன்?

"நான் எப்படி இவ்வளவு துர்ப்பாக்கியம் பிடித்தவனாக இருக்கமுடியும்? ஒரு ஞானியின் சங்கத்தில் நான் எப்பொழுது பெற்ற பேறு இதுதானா? சத்சங்கத்தால் விளையும் பரிணாம நற்பயனை நான் எப்பொழுது அனுபவிப்பேன்?

பக்தரின் விநயமான வேண்டுகோளைக் கேட்டபின் சமர்த்த சாயி பரம பிரீதியுடன் என்ன பதில் கூறினார் என்பதை அமைதியான மனதுடன் கேளுங்கள்.

"உம்முடைய கெடுவினைகள் அனைத்தும் எரிந்துபோனபின், புண்ணிய பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியானபின், உமது தோளிலிருந்த ஒரு ஜோலி (பிச்சையெடுக்கும் பை) தொங்குவதைக் காணும்போது தான், நான் உம்மை பாக்யசாலியாக கருதுவேன்.-

"உலகியல் பற்றுகளைத் துறந்து, எந்நேரமும் பகவத் - பக்தியில் மூழ்கி, கடைசியில் ஆசாபாசங்களை முழுக்கத் துண்டித்துவிட்டு நிலையில்தான், உம்மை நான் பாக்யசாலியாக கருதுவேன்.-

"உலக விஷயங்களில் அபரிமிதமான ஆசை அறவே ஒழிக்கப்படவேண்டியது என்பதை ஏற்று, நான், நீ என்று பேதம் பார்ப்பதை அயோக்கியமான செயலாகக் கருதி விலக்கி, சுவையுணர்வையும் காமத்தையும் வெல்லுவதை எப்பொழுது யோக்கியமான செயலாக ஏற்றுக்கொள்கிறீரோ, அப்பொழுதுதான் உம்மை நான் பாக்கியசாலியாக கருதுவேன்".

இவ்வாறாக, சிறிது காலத்திற்குப் பிறகு பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. உரையாடலில் விவரிக்கப்பட்ட துறவு மனப்பான்மை ஜோகிற்கு சதகுருவின் கிருபையால் ஸித்தியாகியது.

புத்திர, சந்ததி பாசங்களிலிருந்து ஏற்கெனெவே விடுபட்டிருந்த அவருக்கு, மனைவியும் நற்கதியடைந்தாள். துறவு மனப்பான்மை இயல்பாக மலர்ந்தது. தேகத்தைச் சாய்ப்பதற்கு முன்னரே சந்நியாசம் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஜோக் ஒரு பாக்கியவான். சாயியின் திருவாய்மொழி சத்தியமாயிற்று. சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கடைசியில் பிரம்மத்துடன் ஐக்கியமானார். 



No comments:

Post a Comment