ஷீர்டி சாயி சத்சரிதம்
உலகியல் வாழ்க்கைக்கே சகாயம் (உதவி) செய்யமுடியாதவர்களால் பரமார்த்த (ஆன்மீக) வாழ்வுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சம்பந்தியானாலும் சரி, மாப்பிள்ளையானாலும் சரி, மனைவியேயானாலும் சரி, நம்முடன் சேர்ந்து பாரம் சுமப்பார்கள் என்று யாரையுமே எதிர்பார்ப்பதற்கில்லை.
அன்னையும் தந்தையும் 'இவன் என் மகன்' என்று சொந்தம் கொண்டாடுவர். புத்திரனோ சொத்தின்மேல் கண்வைப்பான். கணவன் நெடுங்காலம் வாழவேண்டுமென்று மனைவி கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வாள். ஆனால், பரமார்த்த வாழ்வில் கூட்டுச் சேர்ந்து செயல்பட யாருமே இல்லை!
பரமார்த்த வாழ்வில் உதவுவதற்கு இன்னும் வேறு யார் இருக்கிறார் என்று நிதானமாகச் சிந்தனை செய்து பார்த்தீரானால், கடைசியில் கிடைப்பது நீங்களே, நீங்கள் ஒருவரே!
நித்தியம் எது, அநித்தியம் எது என்பதை அறிந்து, இவ்வுலக சம்பந்தமாகவும் மேலுலக சம்பந்தமாகவும் செய்யும் செயல்களுக்குப் பலன் நாடுவதைத் துறந்தபின், அஷ்டாங்க யோகம் பயின்று மோக்ஷம் அடைபவர் பாக்யசாலியாவார்.
வேறொருவர்மேல் சார்ந்து இருப்பதை விடுத்துத் தம்மிலேயே பலமான நம்பிக்கை வைத்துக் கச்சைகட்டிக்கொண்டு எவர் செயலில் இறங்குகிறாரோ, அவரே பரமார்த்த வாழ்வில் வெற்றி பெறுகிறார் (மோக்ஷம் அடைகிறார்).
பிரம்ம நித்தியம்; உலகவாழ்வு அநித்தியம். குருவே சத்தியமான பிரம்மம். அநித்தியமான விஷயங்களைத் துறந்து விடுங்கள்; குருவைப்பற்றியே சிந்தியுங்கள்; இந்த பாவனையே ஆன்மீக சாதனை மார்க்கம்.
அநித்தியங்களைத் துறந்துவிடின் வைராக்கியம் (உலகப்பற்று இன்மை) பிறக்கிறது. சத்குரு பிரபஞ்ச பேருணர்வால் நிரம்பியிருப்பது தெரிகிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் உறைவது உணரப்படுகிறது. இதற்கு 'அபேத வழிபாடு' என்று பெயர்.
பயத்தாலோ, பிரேமையாலோ யார், யார்மீது இடைவிடாது தியானம் செய்துவந்தாலும், தியானம் செய்பவர் தியானிக்கப்பட்டவரே மாறிவிடுகிறார். கம்சனும் ராவணனும் கீடமும் (வண்டின் புழுநிலை) இதற்கு உதாரணங்கள்.
தியானம் ஒருமுகப்படவேண்டும். தியானத்திற்கு இணையான ஆன்மீக சாதனை வேறெதுவும் இல்லை. யார் இந்த சாதனையைத் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்கிறாரோ, அவர் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்.
அதன் பிறகு, ஜனனமும் மரணமும் இங்கு எப்படி இருக்கும்? ஜீவ பாவமும் அறவே மறந்துபோகிறது. மனம் பிரபஞ்ச உணர்வில் மூழ்குகிறது. ஆத்மாவுடன் லயித்த சுகம் ஒன்றே மிஞ்சுகிறது.
No comments:
Post a Comment