ஷீர்டி சாயி சத்சரிதம்
45 . குருபாத மஹிமை
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
ஒன்றுமறியாதவர்போல மாவரைக்கும் எந்திரத்தை இயக்கி பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்காக தம்முடைய சத் சரிதத்தை என்னை எழுதத் தூண்டியவரின் நுண்திறன் உலகநடைக்கு அப்பாற்பட்டதன்றோ!
நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.
குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும். நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கரை சேர்ப்பார்.
இந்தப் போதி இவ்வளவு நீளம் எழுதப்பட்டிருப்பினும், கதைகளை மிகச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். ஓ! சாயியின் வானளாவிய கீர்த்தியை நான் எப்படித்தான் வர்ணிப்பேன்!
எந்த உருவத்தின் தரிசனம் நித்தியதிருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் சகவாசத்தில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்குப் பிறவி பயத்திலிருந்து சுலபமாக விடுதலையளித்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.
எந்த உருவம் நம்மை ஆன்மீக மார்க்கத்தில் செலுத்தியதோ, எந்த உருவம் நமக்கு மாயையிலிருந்து மோஹத்திலிருந்தும் நிவிர்த்தி அளித்
ததோ, எந்த உருவம் நமக்கு அத்தியந்த க்ஷேமலாபங்களைக் கொணரந்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.
எந்த உருவம் வாழ்க்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் நியாயம் / அநியாயம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியதோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்குத் தைரியத்தைக் கொடுத்ததோ, அந்த தெய்வீகமான சாயியின் உருவம் மறைந்துவிட்டது.
தியானம் செய்வதற்காக அவருடைய சொரூபத்தை நம்முடைய மனத்தில் ஸ்தாபனம் செய்துவிட்டு, அவதாரத்தை முடித்துக்கொண்டு தம்முடைய என்றும் நிலையான இருப்பிடத்திற்கு சாயி சென்றுவிட்டார். அவருடைய யோகா நிலை கற்பனைக்கெட்டாதது அன்றோ!
No comments:
Post a Comment