ஷீர்டி சாயி சத்சரிதம்
"பிரசித்தி பெற்ற அஹமத் நகர ஜில்லாவில் ஷீர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கீர் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற சத்புருஷர்-
"எங்கெங்கோ எத்தனையோ ஞானியர் இருக்கின்றனர். ஆயினும், அமோகமான புண்ணியம் சேர்த்திராவிட்டால், எவ்வளவு முயன்றாலும் அவர்களை தரிசனம் செய்யும் நல்வாய்ப்பு நேராது.-
"அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும். நடக்காமல் தடுக்க எச் சக்தியாலும் யுக முடிவுவரை முயன்றாலும் இயலாது.-
"நான் எவ்வளவு பிரயாசை செய்தாலும் இவ்வாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடையப்போவதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நான் பிரயாசையின்றியே தேர்ச்சி பெறுவேன். இது முவ்வகையிலும் சத்தியம்.
"இது அவர் எனக்களித்த வாக்குறுதி. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாகா. இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். -
"நான் அதிசயம் ஏதும் இன்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீட்சையிலும் வெற்றி பெறப் போகிறேன்." இந்த வார்த்தைகள் வெறும் பிதற்றல் என்றும், கேலிக்குரியவை என்றும் சபட்னேகர் சந்தேகமற நினைத்தார்.
சபட்னேகர் விகற்பமாகச் சிந்தித்தார், " இவர் சொல்வதை எப்படி நம்ப முடியும்?" இது இவ்வாறிருக்க, சேவடே அங்கிருந்து சென்று விட்டார். பிற்காலத்தில் என்ன நடந்ததென்பதைக் கேளுங்கள்.
சிலகாலம் கடந்த பிறகு, சேவடே சொன்னது அனுபவ பூர்வமாக உண்மையாகியது. சேவடே இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். சபட்னேகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்!
அதன்பின் பத்தாண்டுகள் கழிந்தன. சபட்னேகருக்கு கெட்ட காலம் துவங்கியது. துரதிர்ஷ்டம் அவரை திடீரென்று தாக்கித் துயரத்தில் ஆழ்த்தியது. அவர் சோகமானார்.
1913 ஆம் ஆண்டு சபட்னேகரின் ஒரே மகன் டிப்தீரியா ஜுரம் கண்டு இறந்து போனான். அவருக்கு வாழ்க்கையே வெறுத்தது.
ஆகவே, அவர் பண்டர்பூர், கண்காபூர் போன்ற தலங்களுக்கு புனித பயணம் சென்றார். எங்கே சென்றும் மனம் நிம்மதியடையவில்லை. பின்னர் அவர் வேதாந்தம் படிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு சிலகாலம் கழிந்தது. மனச்சாந்தி பெறுவது எவ்வாறு என்று யோசித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு ஒரு பாதை தென்பட்டது. சேவடே பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விருத்தாந்தம் ஞாபகத்திற்கு வந்தது.
சாயிபாதங்களில் சேவடேவுக்கு இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியும் அவருக்கு ஞாபகம் வந்தது. தாமும் சாயீ தரிசனத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது.

No comments:
Post a Comment