ஷீர்டி சாயி சத்சரிதம்
அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால், சிலர் ஆரம்பகாலத்தில் ஞானிகளின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவர். ஆயினும், பின்னர் விசுவாசம் ஏற்பட்டால், மங்களங்கள் விளையும்.
ஓர் உண்மையான ஞானியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். ஞானியரின் ஆற்றல் அளவிடற்கரியது!
இந்தக் கருத்தைப் போதிக்கும் காதையொன்றை இப்பொழுது கவனத்துடன் கேளுங்கள். கேட்பவர்கள் ஆனந்தத்தால் நிரம்புவர்; அவ்வாறே, சொல்பவருக்கும் உற்சாகம் ததும்பும்.
அக்கல்கோட்வாசியும் சபட்னேகர் என்ற பெயர் கொண்டவருமான ஒரு வக்கீலின் அனுபங்களைக் கேளுங்கள். உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும்.
சட்டபடிப்பை முழுமுயற்சியுடன் இரவுப்பகலாகப் படித்துக் கொண்டிருந்தபோது, சேவடே என்ற சக மாணவரை இவர் சந்தித்தார். இருவரும் படிப்பு விஷயமாகப் பரஸ்பரம் கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
மேலும் சில சக மாணவர்களும் அங்கு வந்தனர். எல்லாரும் ஒரே அறையில் உட்கார்ந்தனர். யார், எந்த அளவிற்குப் படித்துத் தெளிவடைந்திருக்கிறார் என்பது அறிந்துகொள்ள ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.
யாருடைய விடை சரியானது என்பதையும், யார் எந்த இடத்தில எவ்விதமாகத் தவறு செய்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொண்டு மனநிறைவு பெறுவதே நோக்கம்.
சேவடேவின் விடைகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன. கடைசியில் எல்லா மாணவர்களும் சொன்னார்கள், "இவர் எப்படிப் பரீட்சையில் வெற்றி பெறப்போகிறார்?" படித்ததெல்லாம் அரைகுறையாக இருக்கிறதே!"
சக மாணவர்கள் இவ்வாறு இளக்காரமாக பேசிய போதிலும், சேவடே முழுநம்பிக்கையுடன் கூறினார், "படிப்பு அரைகுறையாக இருந்தாலும், முழுமையாக இருந்தாலும், வேளை வரும்போது நான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.-
"நான் முழுமையாக அப்பியாசம் செய்திராவிட்டாலும், என் பாபா எனக்குப் பரீட்சையில் வெற்றியளித்துவிடுவார். நான் எதற்காக கவலைப்பட வேண்டும்?"
இந்த வார்த்தைகளைக் கேட்ட ஸபத்னேகர் ஆச்சரியமடைந்தார். சேவடேவைத் தனியாக அழைத்துச் சென்று கேள்வி கேட்கத் தொடங்கினார்.
"அடடா! நீர் வானளாவப் புகழும் இந்த சாயி பாபா யார் ஐயா? அவர் மீது பூரணமான விசுவாசம் வைத்திருக்கிறீரே; அவர் எங்கு வாசம் செய்கிறார்?"
இதற்கு விடையாக சேவடே சாயி பாபாவின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். கூப்பிய கைகளுடன், தாம் அவர்மீது வைத்திருந்த ஆத்ம விசுவாசத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார்.
No comments:
Post a Comment