ஷீர்டி சாயி சத்சரிதம்
சத் சரித்திரத்தைச் சொற்பொருள் அறிந்து பயபக்தியுடன் கேட்பவர்களுக்கு ஆத்மஞானம் அனாயசமாக கைகூடும்.
பக்திபாவத்துடன் சாயியின் பொன்னடிகளைத் தொழுவதாலும், சாயியை மனத்தில் நிலைபெறச் செய்வதாலும், புலன்கள் இஷ்டம்போல் செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன. பிறவிக்கடல் சுலபமாகவும் விரைவாகவும் கடக்கப்படுகிறது.
சாயி சத் சரித்திரத்தைப் படிப்பதும் கேட்பதும், பக்தர்களாகிய சாதகப் பறவைகளுக்கு ஜீவனளிக்கும் நீராகும். கேட்பவர்கள், கேட்டதை மனத்தில் இருத்துவதால் இறைவனின் கிருபையைப் பெறுவதற்கு ஆயத்தமாகின்றனர்.
இந்தக் கதையை எந்நிலையிலும் கருத்தூன்றிக் கேட்பவர்களின் கர்மபந்தங்கள் அறுந்து, விழும். அவர்கள் பிறவிக்கடலை இயல்பாகக் கடந்துவிடுவார்கள்.
இப்பொழுது, கதைகேட்பவர்கள், "கதை எப்பொழுது ஆரம்பிக்கப்போகிறது?" என்று தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புவது எனக்குப் புரிகிறது. பீடிகையை ஆரம்பித்து அவர்களுடைய சஞ்சலத்தை நிவிர்த்தி செய்கிறேன்.
விரோதம், கொலை, கடன் ஆகிய பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகப் புனர்ஜன்மம் எடுத்தாக வேண்டும் என்பதும், கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.
மக்களுக்கு முன்ஜன்ம ஞாபகம் இருக்காது. ஆனால், ஞானிகளோ அதை மறப்பதில்லை. பக்தர்கள் எங்கு மறுபிறவி எடுத்தாலும் அவர்களை சங்கடங்களிலிருந்து ஞானிகள் விடுவிக்கின்றனர்.
கொடுப்பதிலும் வழங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் (எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும்) ஞானிகளின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள், வாழ்க்கையில்
எவ்வாறு வெற்றியடைகிறார்கள் என்பதை விளக்கும் காதை ஒன்று இப்பொழுது சொல்லப்படும்.
ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இறைவனின் பாதங்களை நினைப்பவர்களுடைய மனக்கவலையை இறைவனே நிவாரணம் செய்கிறான். பக்தர்களும் தங்களுடைய கருமத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
'செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன்' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
ஞானிகள் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர்களாகத் துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவர்களுடைய அன்பு, லாபம் எதையும் எதிர்பார்க்காதது. பொறுமையாகவும் தைரியமாகவும் உறவைத் தொடர்ந்தால், நமக்கு மங்களங்கள் விளைவிப்பார்கள்.
சாபங்களும் தாபங்களும் சுயநல நோக்கத்தால் ஏற்படும் ஆசாபாசங்களும், ஞானிகளின் சத் சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வென்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் ஞானிகளின் பாதங்களை வணங்க வேண்டும்.
அகந்தையை விடுத்து, விநயத்துடன் ஞானிகளை சரணாகதி அடையவேண்டும். நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பதைப் பிரார்த்தனையாக அவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும். ஞானிகளின் நம்முடைய மனத்துக்குப் பெரும் திருப்தியை அளிப்பார்கள்.
No comments:
Post a Comment