ஷீர்டி சாயி சத்சரிதம்
தேவரீர் உருவமற்ற இறையுடன் கலந்தபோது உருவத்தை விடுத்து உருவமற்ற நிலையை அடைந்தீர். ஆயினும், தேகத்தை உதறிய பிறகும் பக்தர்களுக்கு மங்களங்களை விளவிக்கும் செயல்கள் தொடர்கின்றன.
தேகத்துடன் வாழ்ந்தபோது என்னென்ன செய்தீரோ அவையனைத்தும் உருவமற்ற இறையுடன் கலந்த பிறகும் தொடர்கின்றன. உம்மை பக்தியுடன் அணுகுபவர்கள் இன்றும் அதே அனுபவத்தைப் பெறுகின்றனர்.
பாமரனாகிய என்னை ஒரு கருவியாகக்கொண்டு அஞ்ஞான இருளை நீக்கி, பக்தர்களை உத்தாரணம் செய்யக்கூடிய சக்திபடைத்த உமது சரித்திரம் என்னும் சூரியனை உதிக்கச் செய்துவீட்டிர்!
ஆஸ்திக புத்தியும் சிரத்தையுடன் கூடிய பக்தியுமே, பக்தனின் இதயமாகிய அகல் விளக்கு. அன்பாகிய எண்ணையுடன் திரி பிரகாசமாக எரியும்பொழுது ஞான ஜோதி வெளிப்படுகிறது.
அன்பில்லாத ஞானம் வறண்டது; அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? அன்பின்றி வாழ்வில் திருப்தி ஏது? அன்பு குறைவுபடாததாகவும் இருக்கவேண்டும்.
அன்பின் மஹிமையை யான் எங்கனம் எடுத்துரைப்பேன்! அன்பின் எதிரில் மற்றவை அனைத்தும் துச்சம் அல்லவோ? இதயத்தின் ஆழத்தில் அன்பில்லாதவனின் படிப்பும் கேள்விஞானமும் பயன் அளிக்காது.
அன்பில் பக்தி உறைந்திருக்கிறது. சாந்தியும் விரக்தியும் அன்பில் பொதிந்திருக்கின்றன. சகல சம்பத்துகளுடன் கூடிய முக்தியும் அன்பின் பின்னே நிற்கிறது.
பாவம் இன்றி அன்பு உண்டாவதில்லை. பாவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்றறிக. பாவத்தின் வயிற்றிலிந்துதான் பூரணமான அன்பு பிறக்கிறது. பாவந்தான் பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய்.
கங்கை நீர் போன்று பரம பவித்திரமான 'சாய் சத் சரித்திரத்தின் ' இனிமை அளவிடற்கரியது. சாயியே அதன் சுலோகங்களில் உறைந்திருக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே.
சாயி சத் சரித்திரத்தைக் கேட்பதால், கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராருமே தூய்மை அடைகின்றனர். புண்ணியங்களும் பாவங்களும் அடித்துச் செல்லப்பட்டு இரு சாராருமே நித்யமுக்தி பெறுகின்றனர்.
கேட்பவர்களின் காதுகள் பாக்கியம் பெற்றவை. சொல்பவரின் நாக்கோ விசேஷமான பாக்கியம் பெற்றது. பக்தர்களால் மிகப் பவித்தரமானதாகக் கருதப்படும் ஸ்ரீ சாயி தோத்திரம் பெரும்பேறு அளிக்கக்கூடியது.
தூய்மையான மனத்துடனும் சத்பாவத்துடனும் சரித்திரத்தைக் கேட்பவர்களின் சகல மனோரதங்களும் நிறைவேறும்; எல்லாச் செயல்களும் நற்பயன்களை அளிக்கும்.
No comments:
Post a Comment