valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜீவாத்மா எது, பரமாத்மா எது, என்பதை குருவைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது. சிஷ்யன் பூரணமாக சரணமடையா விட்டால் குருவும் ஞானத்தை அளிக்கமாட்டார்.

குருவைத் தவிர வேறெவரும் ஞானம் அளித்தால் மனதில் பதியாது; சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தியை தராது; மோக்ஷத்தையும் அளிக்காது.

ஆகவே, குருவின்றி ஞானம் இல்லை; எல்லா வித்வான்களும் அறிவாளிகளும் இதை நன்கு அறிவர். பிரம்மமும் (முழு முதற்பொருளும்) மனிதனுடைய ஆத்மாவும் ஒன்றே என்னும் அனுபவத்தை அளிக்க குருவைத் தவிர வேறெவருக்கும் சாமர்த்தியம் இல்லை.

தயக்கமும் கூச்சமும் இங்கு வேண்டா. கர்வத்தையும் அஹங்காரத்தையும் அறவே ஒழித்து விட்டு பூமியில் விழுந்து தண்டனிடுங்கள்; குருவின் பாதங்களில் பணிவுடன் தலையை வையுங்கள்.

திடமான மனதுடன் இவ்வுறுதி மொழியைக் கூறுங்கள், "நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை; உங்களிடம், உங்களிம் மாத்திரமே, விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்."

பிறகு அவர் செய்யும் அற்புதங்களைப் பாருங்கள்!  தயாசாகரமான குரு, உம்மீது கருணை கூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொள்வார்.

உம்முடைய தலைமேல் தம் அபயகரத்தை வைத்து, எல்லா இன்னல்களையும் துயர்களையும் அழித்துவிடுவார்; பாவ மூட்டைகளை எரித்து விடுவார்; உம்முடைய நெற்றியில் உதீ அணிவிப்பார்;

'ஜீவனும் சிவனும் ஒன்றே' என்பதை பக்தர்களுக்கு விரிவாக பாபா விளக்கிய நிகழ்ச்சிக்கு, 'பிரம்ம ஞானம் கொடு' என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு சாக்குப் போக்குதான்.

சாயி மகாராஜ் ஈடிணையற்ற அறிவும் ஞானமும் படைத்திருந்த போது, அவர் பரிஹாசதிற்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு இடம் கொடுத்தார்? தமாஷில் இவ்வளவு ஆர்வம் ஏன்?

இந்த சந்தேகம் மனதில் எழுவது இயற்கையே. ஆயினும் ஆழமாகச் சிந்தித்தால், அதற்கு ஒரே ஒரு நல்ல காரணம் இருப்பது தெளிவாக விளங்கும்.

நாம் குழந்தைகளுடன் பேசி அவர்களுடைய மழலையை கேட்டு மகிழும்போது, அறிவு முதிர்ந்த மும்முரமான பேச்சுக்கு இடமேது?

இதனால் நாம் குழந்தைகளிடமும் அன்பு காட்டவில்லை என்றா பொருள்? இவ்வாறே, பாபாவினுடைய பரிஹாசமும் நகைச்சுவையும் கோமாளிக் கூத்தும் என்றறிய வேண்டும்.  


No comments:

Post a Comment