valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்
வழி தவறிப் போவது வாழ்க்கையில் பிரமிப்பை அதிகமாக்குகிறது. தேஹாபிமானமும் 'நான்' 'என்னுடையது' என்னும் உணவர்வுகளும் மாயைகள்; கானல் நீரைப் போன்ற ஏமாற்றுத் தோற்றங்கள். ஆகவே, 'நான்' 'என்னுடையது' என்னும் எண்ணங்களை வென்று விடுங்கள்.

'நான்' 'என்னுடையது' என்னும் வலைகளில் ஏன் மாட்டிக் கொள்ளவேண்டும் என்பது பற்றித் தீவிரமாகச்  சிந்தனை செய்யுங்கள். உன்னுடைய தளைகளில் இருந்து விடுபடு; கிளியே! வானத்தில் சிறகடித்து உயரமாகப் பறக்கலாம்!

முக்தியை நாடினாலே பந்தபட்டிருக்கிறாய் என்று பொருள்! பந்தத்தில் இருந்துதானே விடுதலை பெறமுடியும்? பந்தமும் வேண்டா, முக்தியும் வேண்டா என்று ஒதுக்கி விட்டு, உன்னுடைய சுத்தமானதும் உண்மையானதுமான நிலையில் ஒடுங்கு.

எல்லா ஞானங்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவையே; சுகமும் துக்கமும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றையெல்லாம் உதறித்தள்ளி விட்டு உள்ளுணர்வு அனுபவத்தை விருத்தி செய்து கொள்; பிரம்ம ஞானம் கைக் கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.

'உன்னுடையது ' 'என்னுடையது' என்னும் உணர்வுகள் இருக்கும்வரை எது உண்மையான நன்மை என்பதி நீ பொருட்படுத்தவில்லை என்றே அறிக. இவ்வுணர்வுகளைத் தூக்கி எறிந்து விட்டு, உடலின் மேல் உள்ள பேராசையை உதறிவிட்டு உன்னுடைய உண்மையான சொரூபத்தை நோக்கித் திரும்பு.

குபேரனை போன்ற ஒரு பணக்காரர் பிச்சை எடுக்கப் போவது துர்ப்பாக்கியம் அன்றோ! அஞ்ஞானத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவன்றோ?

தினமும் நல்ல சாஸ்திரங்களை காதால் கேளுங்கள்; குருவினுடைய திருவாய் மொழிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடங்கள்; எந்நேரமும் பிரதமமான இலட்சியத்தை அடைவதைப் பற்றி விழிப்புடன் இருங்கள்.

இவ்வாழ் நெறியைக் கடைபிடிப்பதால் மக்கள் சுய முயற்சியால் மேன்மையுறும் பாதையைக் காண்பர். இவ்விதமாக எண்ணற்ற ஜீவர்கள் எழுச்சியுற்று உயர்வு பெறுவர்.

எவர் இரவு பகலாக 'எப்பொழுது சம்சார பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்று ஏங்குகிறாரோ, அவர் பந்தங்களை சீக்கிரமே அறுத்து விடுவார்.

இவ்வுலக வாழ்க்கை சாரமற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொண்டு, எப்பொழுது எல்லாம் தனிமை கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அத்ய யனமும் (சிறந்த நூல்களை கற்றல்) ஆத்மா சிந்தனையும் செய்யுங்கள்.

சிஷ்யன் பக்தியுடனும் சிரத்தையுடனும் விநயத்துடனும் பூரணமாக சரணாகதி அடைந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யா விடின் குரு ஞானக் கருவூலத்தை அளிக்க மாட்டார்.

உங்களை முழுமையாக குருவிடம் சரணாகதி ஆக்கிவிட்டு, குருவிற்கு சிசுருஷை (பணிவிடை) செய்யுங்கள். குருவினிடம் இருந்து முழுப்பலனையும் அடையும் வகையில் பந்தங்களை பற்றியும் விடுதலையைப் பற்றியும் கேளுங்கள்; ஞானம் எது, அஞ்ஞானம் எது என்று கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment