valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்விதமாகவே, 'பிரம்மத்தைக் காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவர் பாபாவினுடைய ஆசீர்வாதங்களை பெற்றுத் திருப்தி அடைந்துவிட்டனர். நீங்களும் நானும் நாமெல்லோருமே, ஒரேவிதமாகத்தான் செயல்படுகிறோம்; பாதை கடினமாகும் போது பயணத்தையே கைவிட்டுவிடுகிறோம் !

ஒளியின் இனிமையையும் தொடும் உணர்வின் சுகத்தையும் நறுமணத்தை மோத்தலையும்  (மூக்கால் நுகர்தலையும்) வெளிக்காட்சிகளைக் காணும் மகிழ்ச்சியையும் நாம் நாடிச் சென்று இன்பம் தேடும் வரை புலன்களை அடக்க முடியாது.

புலன்களை ஒடுக்காமல் புலனின்பங்களில் இருந்து விடுபட முடியாது, ஆத்மாவினுடைய குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியாது. ஆத்ம ஞானம் பெற முடியாது.

முதலாவதாக, ஒருவர் எல்லா ஆசைகளில் இருந்தும் விடுபட வேண்டும்; பிறகு வேறெதிலும் நாட்டமின்றி குருவை சரணடைய வேண்டும். திடமான சிரத்தையுள்ளவரே ஆத்மா விஞ்ஞானம் பெறுவதற்கு தகுதியான பாத்திரம் ஆவார்.

ஐந்து ஞானேந்திரியங்களும் தங்களுடைய புலன்களின்மேல் உண்டான நாட்டங்களை விட்டு விடும்போதும், தீர்மானங்கள் செய்வது, தேவையில்லாத கற்பனைகள் செய்வது போன்ற நடப்புகளை மனம் தானாகவே நிறுத்தி விடும்போதும்; -

இவ்வாறு மனம் அடங்கிவிட்ட நிலையில், புத்தியும் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி விடும்போது, அதுவே மிக உன்னதமான நிலை அல்லது மோக்ஷம்; அதுவே நிர்விகாரமான பிரம்மத்தை அடைதல்.

தீர்மானங்கள் செய்யும் விஷயத்தில் எவருடைய புத்தி சூனியமாகி விட்டதோ, எவர் 'நான் யார்' என்று உணர்ந்து கொண்டவரோ, அவரே புண்ணியசாலி; அவரே ஆத்ம ஞானம் பெறுவார்; மற்றவர்கள் பெறமாட்டார்கள்.

உலக சுகங்களுக்குப் பாரா முகம் காட்டுபவருடைய புலன்கள் ஆத்மாவையே நாடும்; பேரின்பம் விளையும். இதன் பிறகு வேறெதுவுமே மகிழ்ச்சியைத் தராது.

ஆத்மா சூக்குமமானது; உணர்ந்து கொள்வதற்கு மிகக் கடினமானது. உலக விவகாரங்களாலும் புலன்களின் ஆசையாலும் மறைக்கப்பட்டு, அறிந்து கொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. ஆத்ம ஞானத்தை பெறுதலே பரமானந்தத்தை அடையும் வழியாகும்.

எவர் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் இருக்கும் எப்பொருளின் மீதும் ஆசை வைக்காதவரோ, நான்முகனாகப் (படைக்கும் கடவுளாகப்) பதவி பெறுவதற்கும் ஆசை இல்லாதவரோ, அவரே பிரம்ம பதத்தை அடைகிறார். அவரையே முக்தியடைந்தவராக கருத வேண்டும்.

மெதுவாகவும் படிப்படியாகவும் மனதைப் புலனின்பங்களில் இருந்து விடுபட செய்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காக 'நான் யார்' என்ற சிந்தனையில் செலுத்த வேண்டும்.

புத்திமான்களால்தான் இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் செயல்களின் பலன்களில் இருந்து விடுபட முடியும்; சுகம் / துக்கம் போன்ற இரட்டைச் சுழல்களில் இருந்தும் விடுபட முடியும். அத்யாத்ம யோகத்தின் உண்மையான வழி இதுவே.  


No comments:

Post a Comment