ஷீர்டி சாயி சத்சரிதம்
கோடி ஜென்மங்களின் புண்ணியம் ஒன்றுசேரும்போதுதான் ஞானிகளின் அருகே செல்லமுடியும். ஞானிகளைச் சென்றடையும் பாக்கியம் கிடைப்பவர்களுக்குத்தான் பக்தி மலரும்.
நமக்குத் தெரிந்ததெல்லாம் உலகியல்வாழ்வுதான். நம்முடைய பற்றுகளும் அதன்மீதே. அதிலிருந்து விடுபடும் வழியை அறியோம். மனத்தின் இயல்பு இவ்வாறிருக்கும்போது பக்தி எப்படி உண்டாகும்?
நம்முடைய பக்தி எவ்வளவோ, அவ்வளவே நாம் அடையும் பேறுகளும். இந்த விதி எக் காலத்துக்கும் பொருந்தும்; இதன்படியே எல்லாம் நடக்கும்; இதைப்பற்றி எள்ளளவும் பிராந்தி (மனமயக்கம்) வேண்டா.
இரவுபகலாகப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக நாம் சாயியைச் சுற்றிக் குழுமியுள்ளோம். ஆகவே, நமக்கு கிடைப்பனவும் அவையாகத்தான் இருக்கும்! அதேசமயம், பரமார்த்ததை (வீடுபேறு) நாடுபவர்களுக்குப் பரமார்த்தம் கிடைக்கும்.
ஆக, இப்பொழுது, சோமதேவ சுவாமி என்னும் பெயர் கொண்டவரும் சாயியை சோதித்துப் பார்க்க ஷிர்டிக்கு நேரில் வந்தவருமான இன்னொரு நபரின் கதையைக் கேளுங்கள்.
1906 ஆம் ஆண்டு, உத்தரகாசியில் ஒரு தருமசத்திரத்தில் தங்கியிருந்த காலத்தில், சோமதேவ சுவாமி, பாயீஜி என்று மனிதரை சந்தித்தார்.
கைலாஸவாசியும் பிரசித்தி பெற்றவருமான ஹரி சீதாராம் தீக்ஷிதரின் சகோதரர் இந்த பாயீஜி. பத்ரிகேதார் புனிதப் பயணம் சென்றபோது வழியில் பாயீஜி சோமதேவ சுவாமியை சந்தித்தார்.
பத்ரிநாத், கேதார்நாத் தரிசனத்தை முடித்துக்கொண்டு பாயீஜி மலைப்பாதையில் கீழே இறங்கினார். வழியில் ஒவ்வோர் ஊராகக் கடந்து வந்தபோது பல சத்திரங்களைக் கண்டார். ஒரு சத்திரத்தில் யாத்திரிகர்கள் சிலர் அமர்ந்திருப்பதை பார்த்தார்.
அவர்களில் ஒருவர், பிற்காலத்தில், ஹரித்துவார் சுவாமி என்னும் பெயரால் எல்லாராலும் அறியப்பட்டார். அவர் பாபாவின் வசீகரிப்புக்கு உள்ளானார்.
அவருடைய கதை இது; நற்போதனை அளிக்கும்; பாபாவின் சொரூபத்தை விளக்கும்; கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்; எல்லாருக்கும் ஆனந்தமளிக்கும்.
பாயீஜி காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சத்திரத்திலிருந்து வெளியே சென்றபோது இந்த சுவாமிஜியை வழியில் சந்தித்தார். சகஜமான உரையாடல் மூலமாக இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகியது.
இந்த சந்திப்பு ஏற்பட்டது கங்கோத்திரிக்குக் கீழ்ப் பிரதேசத்தில், டேரா டூனிலிருந்து நூற்றுநாற்பது மைல் தூரத்திலிருக்கும் உத்தரகாசி என்னும் ஊரில் சகவாசம் ஏற்பட்டது.
கையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்காக சுவாமி காலைநேரத்தில் சென்றார். பாயீஜியும் அந்த இடத்திற்கு அதே நோக்கத்துடன் சென்றார்.

No comments:
Post a Comment