valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 10 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

எனக்கு அனுக்ரஹம் (பகுதி 1)

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!

பரம நித்தியமான சத்குருவே ஜய ஜய! பிரம்ம சத்தியமான சத்குருவே ஜய ஜய! இவ்வுலகின் பொய் தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜய!

ஆதியும் அந்தமும் இல்லாவதரே ஜய ஜய! இரட்டையராகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜய! நிர்விகாரராகிய  (மாற்றமே இல்லாதவராகிய ) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.

உப்பால் செய்யப்பட்ட பொம்மை சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பி வர இயலுமா? இது எக்காலத்துக்கும் நடக்காது; நீங்களும் அவ்வாறே! (பக்தன் உப்புப் பொம்மை; பாபா சமுத்திரம்)

வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) எதுமில்லாமேலேயே விரலால் சுட்டிக்காடுகிறீர்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவர்க்கு 'என்னுடையது' என்பதும் 'மற்றொருவருடையது' என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.

கடந்த அத்தியாயத்தில் தூய்மை அளிக்கும் ஒரு சிறுகதையின் மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கி விட்டு விட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

செவி மடுப்பவர்களே! பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அனுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.

இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனதுடன் கேட்க வேண்டும்.

கேட்பவர்கள் சுவாரசியமாக கேட்டால் கதை சொல்பவர்க்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது. 


Thursday, 3 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஹேமாத் சாயி பாதங்களில் சரணடைகிறேன். நகைச்சுவையாலும் கேலி செய்தும் ஞானத்தை அழிப்பது, பக்தர்களைக் கைதூகிவிட்டு மங்களம் அளிக்கும் வழிகளில் ஒன்று. 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுகொண்டு  வந்தவர் ஒரு நொண்டிசாக்குத்தான்!

அடுத்த அத்தியாயம் மேலும் இனிமையானது! செவிமடுப்பவர்கள் திருப்தி அடைவார்கள். என்னுடைய இதயத்தின் ரஹசிய தாபம் நிறைவேறும்.

நான் எவ்வாறு பாபாவின் செய்தியை எடுத்துக்கொண்டு மாதவராவ் இடம் (சாமா) சென்றேன் என்பது பற்றியும் அதன் பிறகு எவ்வாறு பாபாவின் அனுக்கிரஹதைப் பெற்றேன் என்பந்து பற்றியுமான விவரங்களைச் செல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வு ஊட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும் பதினேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்!


Thursday, 25 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஒரு குழந்தைக்கு தனக்கு என்ன வியாதி என்று தெரியுமா? குழந்தை மருந்தைக் குடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும்போது, தாய் பலவந்தமாக மருந்தைக் குடிக்க வைக்கிறாள்.

சில சமயங்களில் கெஞ்சிக் கூத்தாடுவாள்; சில சமயம் கோபத்துடன் முறைத்துப் பார்ப்பாள்; சில சமயம் குச்சியால் அடிப்பாள்; சில சமயம் அணைத்துக் கொள்ளவும் செய்வாள் (மருந்தைக் குடிக்க வைக்க)

குழந்தைகள் வளந்துவிட்ட பிறகும் அவர்களுக்குச் செல்லம் கொடுக்கும்போதோ, கொஞ்சும்போதோ, அவர்களுடைய புத்தி வளர்ச்சியை அறிந்துகொண்டே செயல்பட   வேண்டும். இவ்வறிவுரை ஞான போதனைக்கும் பொருந்தும்.

புத்தி எவ்வளவு கூர்மையாக் இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரமாக கிரஹிக்கும் சக்தியும் செயல்படும். ஒரே கணத்தில் உபதேசம் என்னவென்பது புரிந்துவிடும். மந்த புதியாக இருந்தால் நிலையே வேறு; உபதேசம் செய்யப் பிரயாசை (உழைப்பு) அதிகமாகத் தேவைப்படும்.

சமர்த்த சாயி ஒரு ஞானநிதி. பக்தனுடைய எடைபோட்ட பின், பாதிரம் சுத்தமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு பாத்திரத்தின் கொள்ளளவிற்கு ஏற்றவாறு ஞான செல்வதை அளிக்கிறார்.

அவருடைய அந்தர்ஞானம் பூரணமானது; எல்லாரையும் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு பக்தருக்கும் என்ன தகுதி இருக்கிறது என்றறிந்து அதற்கேற்ற சாதனை முறையை அவருக்கு வழங்குவார்.

ஒவ்வொருவருடைய ஆன்மீக அதிகாரத்தின் பிரகாரம் தகுதியுள்ளவரா, தகுதியற்றவரா, என்றறிந்த பின்னரே பக்தரின் பாரத்தைத் தம்மேல் ஏற்றுக் கொள்வார்.

அதுபோலவே, ஆண்டுகளில் முதியவர்கள் என நம்மை நாம் கருதினாலும், சாயி என்னும் சித்த புருஷரின் முன்பு நாம் அனைவரும் குழந்தைகளே. இதனால்தான் நாம் நகைச்சுவையிலும் நையாண்டியிலும் சதா ஆர்வம் காட்டுகிறோம்.

பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார். ஒவ்வொரு பக்தருக்கும் எது மிக விருப்பமோ அதை யதேஷ்டமாக (விருப்பம் நிறையுமாறு) கொடுத்தார்.

புத்தி கூர்மையானவர்களும் சரி, மந்த புத்திக்காரர்களும் சரி, இந்த அத்தியாயத்தைப் படிப்பதால் பரமானந்தம் அடைவார்கள். எல்லாருமே மேலும் இக்காதையை கேட்கவேண்டுமென்று விரும்புவர். தியானம் செய்யின் சந்தோஷமடைந்து திருப்தியுருவர்.

திரும்பத் திரும்பப் படித்தால் ஆன்மீகப் பாதை புலப்படும்; எந்நேரமும் மனத்திரையில் ஓடவிட்டால் பேரானந்தத்தையும் தங்கு தடையில்லாத மனமகிழ்ச்சியையும் அடைவர். இதுவே ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட பாபாவின் லீலை!

மிகச் சிறிய அளவிலும் இந்த அனுபவத்தைப் பெரும் பாக்கியம் எவராவது பெற்றால், மனதாலும் வாக்காலும் செயலாலும் அவர் பாபாவோடு இணைந்து கொள்வார். சாயியின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவை! 


Thursday, 18 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜீவாத்மா எது, பரமாத்மா எது, என்பதை குருவைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது. சிஷ்யன் பூரணமாக சரணமடையா விட்டால் குருவும் ஞானத்தை அளிக்கமாட்டார்.

குருவைத் தவிர வேறெவரும் ஞானம் அளித்தால் மனதில் பதியாது; சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தியை தராது; மோக்ஷத்தையும் அளிக்காது.

ஆகவே, குருவின்றி ஞானம் இல்லை; எல்லா வித்வான்களும் அறிவாளிகளும் இதை நன்கு அறிவர். பிரம்மமும் (முழு முதற்பொருளும்) மனிதனுடைய ஆத்மாவும் ஒன்றே என்னும் அனுபவத்தை அளிக்க குருவைத் தவிர வேறெவருக்கும் சாமர்த்தியம் இல்லை.

தயக்கமும் கூச்சமும் இங்கு வேண்டா. கர்வத்தையும் அஹங்காரத்தையும் அறவே ஒழித்து விட்டு பூமியில் விழுந்து தண்டனிடுங்கள்; குருவின் பாதங்களில் பணிவுடன் தலையை வையுங்கள்.

திடமான மனதுடன் இவ்வுறுதி மொழியைக் கூறுங்கள், "நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை; உங்களிடம், உங்களிம் மாத்திரமே, விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்."

பிறகு அவர் செய்யும் அற்புதங்களைப் பாருங்கள்!  தயாசாகரமான குரு, உம்மீது கருணை கூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொள்வார்.

உம்முடைய தலைமேல் தம் அபயகரத்தை வைத்து, எல்லா இன்னல்களையும் துயர்களையும் அழித்துவிடுவார்; பாவ மூட்டைகளை எரித்து விடுவார்; உம்முடைய நெற்றியில் உதீ அணிவிப்பார்;

'ஜீவனும் சிவனும் ஒன்றே' என்பதை பக்தர்களுக்கு விரிவாக பாபா விளக்கிய நிகழ்ச்சிக்கு, 'பிரம்ம ஞானம் கொடு' என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு சாக்குப் போக்குதான்.

சாயி மகாராஜ் ஈடிணையற்ற அறிவும் ஞானமும் படைத்திருந்த போது, அவர் பரிஹாசதிற்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு இடம் கொடுத்தார்? தமாஷில் இவ்வளவு ஆர்வம் ஏன்?

இந்த சந்தேகம் மனதில் எழுவது இயற்கையே. ஆயினும் ஆழமாகச் சிந்தித்தால், அதற்கு ஒரே ஒரு நல்ல காரணம் இருப்பது தெளிவாக விளங்கும்.

நாம் குழந்தைகளுடன் பேசி அவர்களுடைய மழலையை கேட்டு மகிழும்போது, அறிவு முதிர்ந்த மும்முரமான பேச்சுக்கு இடமேது?

இதனால் நாம் குழந்தைகளிடமும் அன்பு காட்டவில்லை என்றா பொருள்? இவ்வாறே, பாபாவினுடைய பரிஹாசமும் நகைச்சுவையும் கோமாளிக் கூத்தும் என்றறிய வேண்டும்.  


Thursday, 11 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்
வழி தவறிப் போவது வாழ்க்கையில் பிரமிப்பை அதிகமாக்குகிறது. தேஹாபிமானமும் 'நான்' 'என்னுடையது' என்னும் உணவர்வுகளும் மாயைகள்; கானல் நீரைப் போன்ற ஏமாற்றுத் தோற்றங்கள். ஆகவே, 'நான்' 'என்னுடையது' என்னும் எண்ணங்களை வென்று விடுங்கள்.

'நான்' 'என்னுடையது' என்னும் வலைகளில் ஏன் மாட்டிக் கொள்ளவேண்டும் என்பது பற்றித் தீவிரமாகச்  சிந்தனை செய்யுங்கள். உன்னுடைய தளைகளில் இருந்து விடுபடு; கிளியே! வானத்தில் சிறகடித்து உயரமாகப் பறக்கலாம்!

முக்தியை நாடினாலே பந்தபட்டிருக்கிறாய் என்று பொருள்! பந்தத்தில் இருந்துதானே விடுதலை பெறமுடியும்? பந்தமும் வேண்டா, முக்தியும் வேண்டா என்று ஒதுக்கி விட்டு, உன்னுடைய சுத்தமானதும் உண்மையானதுமான நிலையில் ஒடுங்கு.

எல்லா ஞானங்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவையே; சுகமும் துக்கமும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றையெல்லாம் உதறித்தள்ளி விட்டு உள்ளுணர்வு அனுபவத்தை விருத்தி செய்து கொள்; பிரம்ம ஞானம் கைக் கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.

'உன்னுடையது ' 'என்னுடையது' என்னும் உணர்வுகள் இருக்கும்வரை எது உண்மையான நன்மை என்பதி நீ பொருட்படுத்தவில்லை என்றே அறிக. இவ்வுணர்வுகளைத் தூக்கி எறிந்து விட்டு, உடலின் மேல் உள்ள பேராசையை உதறிவிட்டு உன்னுடைய உண்மையான சொரூபத்தை நோக்கித் திரும்பு.

குபேரனை போன்ற ஒரு பணக்காரர் பிச்சை எடுக்கப் போவது துர்ப்பாக்கியம் அன்றோ! அஞ்ஞானத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவன்றோ?

தினமும் நல்ல சாஸ்திரங்களை காதால் கேளுங்கள்; குருவினுடைய திருவாய் மொழிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடங்கள்; எந்நேரமும் பிரதமமான இலட்சியத்தை அடைவதைப் பற்றி விழிப்புடன் இருங்கள்.

இவ்வாழ் நெறியைக் கடைபிடிப்பதால் மக்கள் சுய முயற்சியால் மேன்மையுறும் பாதையைக் காண்பர். இவ்விதமாக எண்ணற்ற ஜீவர்கள் எழுச்சியுற்று உயர்வு பெறுவர்.

எவர் இரவு பகலாக 'எப்பொழுது சம்சார பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்று ஏங்குகிறாரோ, அவர் பந்தங்களை சீக்கிரமே அறுத்து விடுவார்.

இவ்வுலக வாழ்க்கை சாரமற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொண்டு, எப்பொழுது எல்லாம் தனிமை கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அத்ய யனமும் (சிறந்த நூல்களை கற்றல்) ஆத்மா சிந்தனையும் செய்யுங்கள்.

சிஷ்யன் பக்தியுடனும் சிரத்தையுடனும் விநயத்துடனும் பூரணமாக சரணாகதி அடைந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யா விடின் குரு ஞானக் கருவூலத்தை அளிக்க மாட்டார்.

உங்களை முழுமையாக குருவிடம் சரணாகதி ஆக்கிவிட்டு, குருவிற்கு சிசுருஷை (பணிவிடை) செய்யுங்கள். குருவினிடம் இருந்து முழுப்பலனையும் அடையும் வகையில் பந்தங்களை பற்றியும் விடுதலையைப் பற்றியும் கேளுங்கள்; ஞானம் எது, அஞ்ஞானம் எது என்று கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

Thursday, 4 February 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, "இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்" என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.

'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?' என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும்  அபிப்பிராயங்கள். இக்காவியமோ சாமானிய மக்களுக்கு பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக  ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்கு காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்து விடும் என்பதை உறுதியாக அறியவும்.

குருவினுடைய  திருவாய் மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்க வேண்டும். ஆராய்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச்  சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சாயியின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்து  போகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு  வந்து விடும்.

பாபாவினுடைய  அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தால் மன அமைதி பெற்று, அவருடைய பாத கமலங்களில்  பணிவுடன் சரணடையாத அபாக்கியசாலியோ எவரும் உண்டோ?

புனிதமானதும் தூய்மையானதுமான  சாயியின் சரித்திரம் திறந்த மனதுடன் கேட்கப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவ விடுவார்?

புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் சம்சாரக் கடலின் சுழல்கள். இக்கடலில் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கடலின் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.

சில சமயங்களில் மனிதன் சலிப்பிலும் துயரத்திலும் மாட்டிகொண்டு  தவிக்கிறான், இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்களை எழுப்பகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.

'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உடலில் மாட்டிக்  கொண்டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாக கால்களால் பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கும் கிளி நான்' என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாயையின் மோகத்தில் நீங்கள் வழி  தவறி விட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்து விட்டீர்கள். சுய முயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.  


 

Thursday, 28 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆதிதைவிகம், ஆத்யாமிகம், ஆதிபௌதிகம், ஆகிய மூவகைத் துன்பம் என்னும் ஊழியத்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக் கொண்டிருக்கும் சம்சாரக் கடலில் யாரால் சந்தோஷமாக வாழ முடியும்?

இத் துன்பங்களில் இருந்து விடுபட, சாயியுனடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான சரித்திரத்தை பய பக்தியுடன் கேளுங்கள்; பாராயணம் செய்யுங்கள்; மனத்திரையில் ஓட விடுங்கள்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேந்து கொண்டு இந்த 'ஸ்ரீ சாயிநாத சரித்திரம்' செவிமடுக்கப் பட்டால் அவர்களுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள் விசித்திரமானவை!

பாக்கியம் செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள் சாந்தமயமாகிவிடுவீர்கள்.

இக்காதையின் அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நர்செயலோ , தீச்செயலோ) கரைந்து விடும். கேட்கக் கேட்க, சாயியின் சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.

சாயியின் காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாசம் ஏதுமில்லாமல் பரம உல்லாசத்தையும் அடைகிறார்கள்.

சாயி சரித்திரத்தை கேட்பது மனதைத் தூய்மை அடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழலில் இருந்து விடுபட செய்கிறது. செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி செய்து, உயர்ந்த பதவியான பிரம்ம பதத்தை அடைய வழிகோலுகிறது.

இவ்வாறாக, சாயினாதருக்கு சேவை செய்ய வேண்டுமென்கிற ஆசை, சேவகர்களை நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கி விடுகிறது. ஸ்ரீ சாயிராமன் அவர்களுக்கு சதா சர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.

செவிமடுப்பவர்களே! இக்காவியத்தின் ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால் கேளுங்கள்; படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததை சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம் செய்யுங்கள்.

தைத்ரிய உபநிஷதத்தின் சித்தாந்தமான, "ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்" என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்ப திரும்ப உபதேசம் செய்தது போல் தோன்றியது.

"சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவராக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; கவலையே வேண்டா". இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.

இந்த அத்தியாயத்தின் லட்சியம் பிரம்ம தத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. சாயியிடம் சரணமடைபவர்களுக்கு அதுவே சம்சாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.