Thursday, 26 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சம்சார இருளை அகற்றும் சூரியனே! ஆத்மானுவபம் பெட்ரா ஞானிகளின் மணிமகுடமே! பக்தர்களின் மனமாகிய சகோர பட்சிகளுக்குச் சந்திரனே; கற்பகத்தருவே! குருபரராகிய (பரமகுருவாகிய) தேவரீரை வணங்குகின்றேன். 

குருராயரின் மஹிமை எல்லையற்றது.  அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது.  ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று. 

பூர்வஜென்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஞானியின் தரிசனம் கிடைக்காது. 

ஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, ஒரு ஞானிக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார். 

ஞானியரின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும்?  நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது. 

சாயி பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார்.  தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர்.  அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்?

கிருபாளுவான சாயி, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்தச் சரித்திரம் ஒரு கோயில் அன்றோ!

----------------------------------------------------------------------------

சாயியின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது.  'அதுவே நான்' என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது.  பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. 

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்?  அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் ? பக்தர்களின் மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அந்த சாயியின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன்.  கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன்.  ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன்.  அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன். (தழுவுகிறேன்)

சாயி சஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியாசந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மகத்தான அனுபங்களைப் பெறுகின்றனர். 

 


 

No comments:

Post a Comment