Thursday, 4 June 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அவர்கள், 'நான் சாஸ்திரங்களை அறிந்தவன், பேரறிவு படைத்தவன், எனக்கு நிகர் எவரும் இல்லை' என்று தமக்குள்ளே மிகச் செருக்குற்று வாழ்வதால் எப்பொழுதும் நிம்மதியின்றி வாழ்கின்றனர். 

இதற்கே, மாயை என்றும், அஞ்ஞானம் என்றும், அவித்யை என்றும், பிரதான தத்துவம் என்றும் பெயர்.  இதையே ஞானியர் ஆரம்பத்தில் எடுத்தெறிகின்றனர். பின்னர் ஞானத்தை மேலெழும்படி செய்கின்றனர். 

ஞானம் சுயஞ்சோதி.  அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது. 

மின்னும் ரத்தினம் ஒன்று குப்பையில் புதைந்து போய் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டால் அதைப்பற்றிய நினைவும் மறைந்துவிடுகிறது. 

பிற்காலத்தில், கர்மமும் தர்மமும் ஒன்றுகூடிய அதிருஷ்டசாலியின் கையில் அது அகப்படும்.  குப்பையில் புதைந்து கிடந்ததால் அது தன்னுடைய பிரகாசத்தை இழந்துவிட்டது போல் தோன்றலாம். 

ஆயினும், அழுக்கை அகற்றிச் சுத்தம் செய்தவுடன் ரத்தினம் தன்னுடைய சுயம்பிரகாசத்தை திரும்பப் பெற்றுவிடும். ஞானத்தின் நிலையம் அவ்வாறே. 

அழுக்கும் புழுதியும் அஞ்ஞானம். இந்த அஞ்ஞானமே ஞானத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது.  அழுக்கை விலக்கிவிட்டால் ரத்தினம் இயல்பாகவே மின்னும். 

நித்தியமான வாஸ்து எது?  அநித்தியம் எது? இது சம்பந்தமான விவேகமே பாவத் செயல்களை நாசம் செய்கிறது.  தூய்மையையும் நற்குணங்களையும் அளிக்கிறது.  இவ்விவேகமே ஞானத்தையும் மலர்ச்சி செய்கிறது. 

இவ்வுலகம் மாயையின் சந்தை.  அசலும் போலியுமான பொருள்கள் அபாரம்.  போலியை அசல் என்று நம்பிப் பொருள்களை வாங்கும் மனிதர்களும் அநேகம். 

அசலையும் போலியையும் அடையாளம் கண்டுகொள்வதில், திறமைமிக்கவர்களும் தடுமாறுகின்றனர்.  ஆகவே, வஞ்சத்தின் லட்சணங்களை (அடையாளங்களைப்) புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

இதற்கென்றே ஒரு நிபுணரைத் துணையாகக் கொள்ளவேண்டும்.  அவர் (சத் குரு),  போலி  எவ்வாறு அசல்போலத் தோற்றமளிக்கிறது என்பதை, பார்த்தவுடனே காட்டிக்கொடுப்பார்.  அஞ்ஞானம் இவ்வாறாக அழியும். 

அஞ்ஞானம் அகன்றபின் ஞானமே மிஞ்சும்.  இயல்பாகவே மாயை நீங்கிவிடும். மீதியிருப்பது உண்மையான வஸ்து என்றறிக.  பிரத்யட்சத்திற்கு (கண்ணெதிரில் காண்பதற்குப்) பிரமாணம் தேவையில்லை. 

புத்தியின் கண் பிரகாசமாக இருக்கிறது. ஆயினும், அது கற்பனை என்னும் இருளால் மூடப்பட்டிருக்கிறது.  இந்த இருள் உபதேசத்தால் விலகுகிறது.  பின்னர் மிஞ்சியிருப்பது முழுவதும் ஞானமே. 

வழியில் நாம் பார்க்கும் பொருள் உண்மையில் ஒரு மலர்மாலை.  ஆயினும், அந்திமயங்கும் நேரத்தில் அது ஒரு பாம்புபோலத் தெரிகிறது.  இதற்குக் காரணம் அஞ்ஞானப் படலமே.