Thursday, 25 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

முதலில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.  பின்னர், வழியில் பரஸ்பரம் சந்தித்தபோது குசலம் விசாரித்தனர்.  சந்தோஷமாக உரையாடினர். 

பேசப் பேச, நட்பு மலர்ந்தது; பிரேமை வளர்ந்தது; ஒருவரையொருவர், வசிப்பிடம் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டனர். 

"நீங்கள் ஹரித்துவாரில் வசிக்கிறீர்கள்.    நாங்கள் நாகபுரியில் (நாக்பூரில்) வசிக்கிறோம்.  நீங்கள் எப்பொழுதாவது அந்தப் பக்கம் வரும்படி நேர்ந்தால் எங்களுக்கு தரிசனம் தாருங்கள். -
 
"திருத்தலப் பயணமாக நாகபுரிக்கு வந்தால், எங்களுடைய இல்லதைப் புனிதப்படுத்துங்கள்.  மறுபடியும் தரிசனம் தாருங்கள்.  சிறிய சேவைகள் செய்ய எங்களை அனுமதியுங்கள்.-

"எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  எங்களுடைய இல்லத்தில் பாதம் பதித்து அதை புனிதமாக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை." (பாயீஜி) சுவாமிஜி பதில் கூறினார். "நாராயணர் உமது இச்சையைப் பூர்த்திசெய்வாராக."

1906 ஆம் ஆண்டு, உத்தரகாசிப் பிரதேசத்தில் இவ்விருவருக்குமிடையே நடந்த சம்பாஷணை மேற்கண்டவாறு. 

பரஸ்பரம் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.  மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரிந்தனர். 

ஐந்தாண்டுக் காலம் கழிந்தது.  சுவாமிஜி சாயியை சந்திக்கவேண்டிய வேளை நெருங்கியது.  பாயீஜியைக் காணவேண்டுமென்ற உந்துதல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. 

ஆகவே, 1911 ஆம் ஆண்டு,  சுவாமிஜி நாக்பூருக்கு வந்தார்.  சாயீநாதரின் பவித்திரமான சரித்திரத்தை கேட்டு ஆனந்தமடைந்தார். 

ஷீர்டி க்ஷேத்திரத்தை சுவாமிஜி சென்றடைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின்,  பாயீஜி ஒரு சிபாரிசு கடிதமும் கொடுத்தார். இதன் பிறகு சுவாமி நாக்பூரை விட்டுக் கிளம்பினார். 

மன்மாடில் இறங்கியபோது கோபர்காங்வ் ரயில்வண்டி தயாராகக் காத்திருந்தது.  கோபர்காங்வில் ஒரு குதிரைவண்டியில் ஏறி ஆனந்தம் நிரம்பியவராக சுவாமிஜி சாயீதரிசனத்திற்குச் சென்றார். 

எங்கே சென்று பார்த்தாலும் சாதுக்களுடைய பழக்கவழக்கங்களும் நடையுடைபாவனைகளும் ஒரே சீராக இருப்பதில்லை. ஒருவர் ஒருவிதம், இன்னொருவர் வேறுவிதம்.  அவர்கள் ஒரே விதமாக எங்கும் இருப்பதில்லை. 

ஒரு ஞானியின் பழக்கவழக்கங்களும் அனுஷ்டானமும் இன்னொரு ஞானிக்குப் பிரமாணம் (அளவுகோல்) ஆகா. இவற்றில் எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அனுமானிக்க நம்மிடம் சாதனம் ஏதும் இல்லை. 

கேட்கப்போனால், ஞானியை தரிசனம் செய்யச் செல்பவர் இதைப்பற்றி எதற்காக மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? ஒரு ஞானியின் நடைமுறையை ஆராய்ச்சி செய்யப் புகுபவர் தமக்கே தீங்கு இழைத்துக்கொள்வார் அல்லரோ?

 


 

Thursday, 18 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கோடி ஜென்மங்களின் புண்ணியம் ஒன்றுசேரும்போதுதான் ஞானிகளின் அருகே செல்லமுடியும். ஞானிகளைச் சென்றடையும் பாக்கியம் கிடைப்பவர்களுக்குத்தான் பக்தி மலரும்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் உலகியல்வாழ்வுதான்.  நம்முடைய பற்றுகளும் அதன்மீதே.  அதிலிருந்து விடுபடும் வழியை அறியோம். மனத்தின் இயல்பு இவ்வாறிருக்கும்போது பக்தி எப்படி உண்டாகும்?

நம்முடைய பக்தி எவ்வளவோ, அவ்வளவே நாம் அடையும் பேறுகளும். இந்த விதி எக் காலத்துக்கும் பொருந்தும்; இதன்படியே எல்லாம் நடக்கும்; இதைப்பற்றி எள்ளளவும் பிராந்தி (மனமயக்கம்) வேண்டா. 

இரவுபகலாகப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக நாம் சாயியைச் சுற்றிக் குழுமியுள்ளோம்.  ஆகவே, நமக்கு கிடைப்பனவும் அவையாகத்தான் இருக்கும்!  அதேசமயம், பரமார்த்ததை (வீடுபேறு)  நாடுபவர்களுக்குப் பரமார்த்தம் கிடைக்கும். 

ஆக, இப்பொழுது, சோமதேவ சுவாமி என்னும் பெயர் கொண்டவரும் சாயியை சோதித்துப் பார்க்க ஷிர்டிக்கு நேரில் வந்தவருமான இன்னொரு நபரின் கதையைக் கேளுங்கள். 

1906 ஆம் ஆண்டு, உத்தரகாசியில் ஒரு தருமசத்திரத்தில் தங்கியிருந்த காலத்தில், சோமதேவ சுவாமி, பாயீஜி என்று மனிதரை சந்தித்தார். 

கைலாஸவாசியும் பிரசித்தி பெற்றவருமான ஹரி சீதாராம் தீக்ஷிதரின் சகோதரர் இந்த பாயீஜி. பத்ரிகேதார் புனிதப் பயணம் சென்றபோது வழியில் பாயீஜி சோமதேவ சுவாமியை சந்தித்தார். 

பத்ரிநாத், கேதார்நாத் தரிசனத்தை முடித்துக்கொண்டு பாயீஜி மலைப்பாதையில் கீழே இறங்கினார்.  வழியில் ஒவ்வோர் ஊராகக் கடந்து வந்தபோது பல சத்திரங்களைக் கண்டார். ஒரு சத்திரத்தில் யாத்திரிகர்கள் சிலர் அமர்ந்திருப்பதை பார்த்தார். 

அவர்களில் ஒருவர், பிற்காலத்தில், ஹரித்துவார் சுவாமி என்னும் பெயரால் எல்லாராலும் அறியப்பட்டார். அவர் பாபாவின் வசீகரிப்புக்கு உள்ளானார். 

அவருடைய கதை இது; நற்போதனை அளிக்கும்; பாபாவின் சொரூபத்தை விளக்கும்;  கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்; எல்லாருக்கும் ஆனந்தமளிக்கும். 

பாயீஜி காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சத்திரத்திலிருந்து வெளியே சென்றபோது இந்த சுவாமிஜியை வழியில் சந்தித்தார்.  சகஜமான உரையாடல் மூலமாக இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகியது. 

இந்த சந்திப்பு ஏற்பட்டது கங்கோத்திரிக்குக் கீழ்ப் பிரதேசத்தில், டேரா டூனிலிருந்து நூற்றுநாற்பது மைல் தூரத்திலிருக்கும் உத்தரகாசி என்னும் ஊரில் சகவாசம் ஏற்பட்டது. 

கையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்காக சுவாமி காலைநேரத்தில் சென்றார்.  பாயீஜியும் அந்த இடத்திற்கு அதே நோக்கத்துடன் சென்றார். 


 

Thursday, 11 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


முடிவில், பையனுக்கு நம்பிக்கை பிறந்தது.  செருப்புகளை ஹரிபாவூவிடம் ஒப்படைத்தான்.  ஹரிபாவூவின் மனோரதம் நிறைவேறியது.   சாயி ஒரு ஞானி என்ற சுயானுபவம் ஏற்பட்டது!

"என்னுடைய தலைப்பாகைக்கு ஜரிகைக் கரை உண்டென்பது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.  எல்லாரும் காணும்படியாக அது என் தலைமேல் இருக்கிறது.-

"ஆயினும், நான் ஒரு அசலூரான். ஷிர்டிக்கு முதல் தடவையாக இன்றுதான் வந்திருக்கிறேன்.  என் பெயர் ஹரி என்பது பாபாவுக்கு தெரியும்?"-

"இங்கிருப்பவர் எவருமே என் பிதா கானோபாவைப் பார்த்ததில்லை. ஆயினும், 'கா' என்ற எழுத்தால் அவருடைய பெயர் கோடிகாண்பிக்கப்பட்டது.  இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. 

"அப்பொழுது, என் நண்பர்கள் ஞானி சாயியின் மஹிமையை விளக்கியபோது நான் அவர்களுடைய வார்த்தைகளை அவமதித்தேன்.  அதுபற்றி எனக்கு இப்பொழுது பச்சாதாபம் (செய்த குற்றத்தைக் குறித்து வருத்தம்) ஏற்படுகிறது. 

"இப்பொழுது, எனக்கே அனுபவம் கிடைத்தபின் சாயியின் பிரபாவத்தை அறிந்துகொண்டேன்.  ஸ்ரீஸாயி ஒரு மஹானுபவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை."

மனம் எப்படியோ அப்படியே பாவம். ஹரிபாவூவின் அனுபவமும் அவ்வாறே.  ஞானிகளை பரீட்சை செய்து பார்க்கவேண்டுமென்ற ஆசையே அவருடைய சுபாவம் (இயல்பு).  ஆன்மீக முன்னேற்றத்தில் அவர் மனம் பதிக்கவில்லை. 

சமர்த்த சாயி ஒரு மஹானுபாவர் என்பதை நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடைய அனுபவங்களால் விவரித்தனர்.  அந்தப் பதுமைத் தாமே நேரில் பார்க்கவேண்டும் என்பது ஒன்றுதான், அவர் ஷீர்டி சென்றதற்கே காரணம். 

'ஞானியின் பாதங்களில் ஜீவனை வைத்து இறைவனை அடையவேண்டும்' என்னும் விருப்பம் அவர் மனத்தில் சிறிதளவும் இல்லை.  பச்சோந்தியால் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்?

அற்புதம் காணவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் ஞானியின் வாயிற்படிக்குச் சென்றவருடைய தொலைந்துபோன புத்தம்புதிய ஜோடி செருப்பு, அவர் இருந்த இடத்தைத் தேடிக் கொண்டுவந்தது. 

கேவலம், ஒரு ஜோடி செருப்பு தொலைந்துபோனதால் என்ன பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கமுடியும்?  ஆயினும், அதைப்பற்றி அவருடைய மனம் ஓயாமல் அரித்துக்கொண்டிருந்ததால், செருப்பு திரும்பி வரும்வரை மனம் அமைதியடைவில்லை. 

ஞானிகளை அடைவதற்குண்டான மார்க்கங்கள் இரண்டு. ஒன்று பக்தி, இரண்டாவது ஞானம்.  ஆனால்,  ஞானமார்க்கத்தில் ஆயாசம் (களைப்பு) விண்ணவளவு; பக்தி மார்க்கத்தின் முயற்சிகள் சுலபமானவை. 

பக்தி மார்க்கம் அவ்வளவு சுலபமெனில், ஏன் எல்லாரும் அந்த வழியில் நடப்பதில்லை?  ஏனெனில்,  அதற்குப் பெரும்பாக்கியம் தேவைப்படுகிறது.  அது இருந்தால்தான் அவ்வழியில் நடக்கமுடியும்.  

 


 

Thursday, 4 December 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

சஞ்சலமும் வருத்தமும் அவர் மனத்தை நிரப்பின.  அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. கோஷ்டியுடன் அவரும் கை கழுவ வெளியே வந்தார். 

எதிர்பாராது அங்கு ஒரு மராட்டிப் பையன் திடீரன்று தோன்றினான். ஒரு கோலை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தான்.  கோலின் நுனியில் காணாமற்போன செருப்புகள் தொங்கிக்கொண்டிருந்தன!.

சாப்பிட்டபின் மக்கள் கையைக் கழுவிக்கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில், யாரையோ தேடிக்கொண்டு வந்த அந்தப் பையன் சொன்னான், "பாபா இந்தக் கோலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். -

"பாபா பாடம் சொன்னார், 'மகனே, ஹரீ கா பேட்டா, ஜரீ கா பேடா  (ஹரி, கானோபாவின் மகன், ஜரிகைத் தலைப்பாகை அணிந்தவர்) என்று கூவிக்கொண்டே போ.  இவை என்னுடையவை என்று தெரிவித்து எவர் உன்னிடம் உற்சாகமாக ஒட்டிக்கொள்கிறாரோ, அவரிடம் கொடுத்துவிடு. -

"ஆனால், முதலில் அவர்தாம் ஹரி கா பேடா என்பது, ஜரீ கா பேடா என்பதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும். நீ முதலில் அதிகம் பேசாதே.  ஊர்ஜிதம் ஆனபின் செருப்புகளைக் கொடுத்துவிடு."

கூவலைக் கேட்டுத் தம்முடைய செருப்பை அடையாளம் கண்டுகொண்ட ஹரிபாவூ ஆச்சரியம் நிரம்பிய மனத்துடன் தாவியடித்து முன்னேறினார். 

விழிகளில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.  உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது.  தொலைந்துபோன செருப்பை மீண்டும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார். 

ஹரிபாவூ பையனைக் கூவியழைத்தார், "ஏய் , ஏய், இங்கு வா.  அந்தச் செருப்பை என்னிடம் கொண்டுவா  !"  செருப்புகளைக் கருத்துடன் பரிசோதித்தபின் கேட்டார், "இவற்றை நீ எங்கே கண்டெடுத்தாய்?  விவரத்தை எனக்கு சீக்கிரமாகச் சொல்!".

பையன் பதிலுரைத்தான், "அது எனக்குத் தெரியாது. நான் பாபாவின் ஆணையை மதித்து நடக்க வேண்டும். ஹரீ கா பேடா யாரோ, அவர் தம்முடைய ஜரிகைத் தலைப்பாகையை என்னிடம் காட்டவேண்டும். -

"அவரிடந்தான் நான் செருப்பைக் கொடுப்பேன்.  வேறு யாரையும் நான் அங்கீகரிக்கமாட்டேன். பாபா அளித்த குறிப்புகளோடு யார் சரியாகப் பொருந்துகிறாரோ, அவர்தம் செருப்பை எடுத்துக்கொள்ள முடியும்".

ஹரிபாவூ சொன்னார், "ஏ பையா, இவை என்னுடையவை."  ஆனால், பையன் கொடுக்க மறுத்தான்.  ஆகவே, பாபா அளித்த குறிப்புகள் பற்றிய விவரங்களை அளித்துப் பையனை ஹரிபாவூ நம்பவைத்தார். 

ஹரிபாவூ சொன்னார், "பையா, என்னுடைய பெயர் ஹரி.  நான் கானோபா என்பவரின் மகன். பாபா சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மை.  அவை எனக்கு முழுமையாக பொருந்துகின்றன. 

"இதோ, இந்த ஜரிகைத் தலைப்பாகையைப் பார். உன்னுடைய மனத்திலிருந்து சந்தேகம் விலகும்.  செருப்புக்கு நான்தான் சொந்தக்காரன் என்பது ருசுவாகும்.  வேறு யாரும் செருப்புக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது."

 


 

Thursday, 27 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஹரிபாவூ, ஷிர்டியை நோக்கிக் கிளம்பியபோதே சமர்த்த சாயிக்கு ஹரிபாவூ, வரும் காரணம் தெரிந்துவிட்டது!  வெறும் அற்புதங்களை அனுபவிக்க விரும்புவர்; அவருடைய தகுதி அவ்வளவே!

ஆகவே, அவருக்கு அதுவே அளிக்கப்பட்டது.  அவரும் ஆட்கொள்ளப்பட்டார்!  அவ்விதமாக, அவர் பட்ட சிரமும் பயனுடையதாயிற்று. யுக்திகளைப் பிரயோகிப்பதில் (எய்தலில்) ஞானிகள் எத்தகைய வித்தகர்கள்!

கோபர்கங்காவில் ஹரிபாவூ தம் நண்பருடன் ஒரு குதிரைவண்டியில் ஏறினார்.  கோதாவரி நதியில் ஸ்நானம் செய்த பிறகு ஷிர்டிக்குப் பயணமானார். 

ஷீர்டி வந்துசேர்ந்தார்.  கால்களையும் கைகளையும் கழுவிக்கொண்டு ஞானியைப் பார்பதற்காகக் கிளம்பினார். 

தலையில் ஒரு ஜரிகைத் தலைப்பாகையையும் கால்களில் புத்தம்புதிய ஜோடி செருப்பையும் அணிந்துகொண்டு ஹரிபாவூ சாயி பாபாவை தரிசனம் செய்ய உற்சாகமாக வந்தார். 

மசூதியை நெருங்கியபோது சாயியை தூரத்திலிருந்தே பார்த்த ஹரிபாவூ, பாபாவின் சந்நிதிக்குச் சென்று நமஸ்காரம் செய்ய விரும்பினார். 

ஆனால், புதிய ஜோடி செருப்பு இதற்கு ஒரு தடங்கலாக அமைந்தது.  அதை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. கடைசியில், ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அவற்றை உள்ளே தள்ளினார். 

பிறகு தரிசனத்திற்காக மேலே சென்றார். அன்புடன் சாயிபாதங்களில் வணங்கினார். உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு திரும்பினார். வாடாவுக்குத் திரும்ப முனைந்தார். 

ஆனால், செருப்புகளை அணியச் சென்றபோது, அங்கு அவை காணப்படவில்லை. எங்கெங்கோ தேடினார்; கிடைக்கவில்லை. நம்பிக்கையை அறவே உதறிவிட்டு வாடிய முகத்துடன் வெறும் காலோடு வாடாவுக்குத் திரும்பி வந்தார். 

அங்கு எத்தனையோ மனிதர்கள் சதா போவதும் வருவதுமாக இருந்தனர். யாரிடம் சென்று கேட்பது?  அவருக்கு யோசனை ஏதும் தோன்றவில்லை. 

அவருடைய மனம் நிம்மதியிழந்து குழம்பியது.  தொலைந்துபோன செருப்பு மனக்கண்முன்னே வந்து நின்றது. அவருடைய மனத்தைச் செருப்புப் பற்றிக்கொண்டது. சிந்தனையெல்லாம் செருப்புமயம் ஆயிற்று! 

"அய்யகோ! எவ்வளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அது வாங்கப்பட்டது! அந்தச் செருப்புத் தொலைந்துபோய்விட்டது; தொலைந்துபோவிட்டது!  யாரோ ஒரு திருடன் அவற்றைத் திருடிவிட்டான். இது நிச்சயம் ." (ஹரிபாவூவின் புலம்பல்)

ஆனபோதிலும், பிறகு அவர் ஸ்நானம் செய்தார். பூஜை, நைவேத்தியம் ஆகியவை முடிந்தபிறகு பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்தார். ஆனால், மனம் சமாதானமடையவில்லை. 

"சபாமண்டபம் சாயியின் இடம். சாயியின் கண்ணில் படாமல் யார் என்னுடைய செருப்பைத் திருடியிருக்க முடியும்? பெரிய ஆச்சரியமாக இருக்கிறதே!"

 


 

Thursday, 20 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பொதுவாக, ஞானிகளின் கதைகளை ஞானிகளே எழுதுகின்றனர். ஞானிகளின் அருள்வெளிபாட்டைப் பெறாமல் எழுதப்படும் நூலில் சுவை இருக்காது;  வரிக்கு வரி, சோர்வு தட்டும். 

கிருபாமூர்த்தியான சாயிநாதர் என் மனத்துள் புகுந்து அவருடைய சரித்திரத்தை எழுதச்செய்து வாங்கிக்கொண்டார்;  என்னுடைய மனோரதத்தையும் நிறைவுசெய்தார். 

வாய், ஸ்ரீஸாயி நாமத்தை இடைவிடாது ஆவர்த்தனம் செய்யும்போதும், சித்தம் அவருடைய திருவாய்மொழியைச் சிந்திக்கும்போதும், மனம் அவருடைய திருவுருவத்தைத் தியானம் செய்யும்போதும், நான் பூரணமான சாந்தியை அனுபவிக்கிறேன். 

வாக்கில் சாயியின் நாமத்துடனும், இதயத்தில் சாயியின்மீது பிரேமையுடனும், சாயியைப் பிரீதி செய்வதற்காகவே செயல்புரிபவுனுக்கு சாயி பெருமளவில் கடன்பட்டிருக்கிறார்!

சம்சார பந்தங்களை அறுத்தெறிவதற்கு இதைவிட மேலான சாதனம் ஏதும் இல்லை. சாயியின் கதை பரம பாவமானது (தூய்மையளிப்பது);  படித்தாலும் கேட்டாலும் சுகத்தை அளிக்கும். 

கால்களால் சாயியைப் பிரதட்சிணம் செய்யுங்கள். காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள்.  கண்களால் சாயியை தரிசனம் செய்யுங்கள்.  எல்லா அங்கங்களாலும் அவரைப் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்யுங்கள். (தழுவுங்கள்).

அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துங்கள்.  வாய் அவருடைய நாமஸ்மரணத்தையே  செய்யட்டும்.  மூக்கு அவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மலர்களின் (நிர்மாலியத்தின்) நறுமணத்தை நுகரட்டும். 

இப்பொழுது, கதையை விட்ட இடத்தில தொடர்வோமாக.  'அற்புதங்களைக் காண்பதில் ஆவல் அதிகம் காட்டிய பக்தர் ஒருவரின் காதையைச் சொல்லப்போகிறேன்' என்று கடந்த அத்தியாயத்தில் கதைகேட்பவர்களுக்கு ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. 

உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவரும், ஞானிகளின் சக்திகளை அறியாதவருமாகிய மனிதர், அவரிடம் வேறொருவர் சொல்லும் விவரணத்தை மனத்தில் நம்பிக்கையின்றிக் கேட்கிறார். 

நண்பர்கள் சாயியின் பெருமைகளைச் சொன்னபோது அவர் குற்றங்காண்பதற்காகவே கேட்டார். இவ்வுலகில் தாமே நேரிடையாக அனுபவித்து உணரமுடியாத எதையும் அவர் நம்ப மறுத்தார். 

அவருடைய பெயர் ஹரி கானோபா. சாயியைத் தாமே சோதித்துப் பார்த்துவிடும் நோக்கத்துடன் அவர் பம்பாயிலிருந்து நண்பர்களுடன் யாத்திரையாகக் கிளம்பினார். 

ஆனால், எல்லாருடைய இதயத்தையும் ஒளிரச்செய்யும் சாயியின் கலைத்திறனையும் புதினங்கள் புரியும் லாவகத்தையும் நிர்த்தாரணமாக எவரால் அறிந்துகொள்ள முடியும்? 

 


 

Thursday, 13 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அவருடைய அளவிலா மஹிமையைப் பாடுவதற்கு நுழைபவர்களில் யாருக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இருக்கிறது?  பராவே (பேச்சின் முதல் நிலையே) திறமையின்றிப் பின்வாங்கும்போது, பச்யந்தி, மத்யமா (இடை நிலைகள்) இவற்றின் கதி என்னவோ!

இம் மூன்றும் வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது நான்காவதாகிய வைகரீ (கடைநிலை) என்ன செய்ய முடியும்?  ஈதனைத்தையும் நான் சம்பூர்ணமாக அறிவேன்;  ஆயினும், என் மனம் சும்மா இருக்க மறுக்கிறது!

சத்குருவின்  பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம்.  ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் எங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக. 

முழுக்க முழுக்கத் தேகாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்லிகொள்ளத் தகுதியில்லை.  தேகாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன். 

எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவர் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்?

தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும்  குருவின் பெருமையைக் கவனமாக கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ!

தீர்த்த யாத்திரை, விரதம் , யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம்.  அதனினும் மேன்மையானது ஹரிபஜனை.  எல்லாவற்றையும் விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம். 

சாயியே சாயிபக்தர்களின் தியானம்.  சாயியே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை.  சாயியே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமும்கூட! இப் பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்க வேண்டும்; ஆனால், கஞ்சத்தனம் கூடாது!

எப்பொழுதாவது ஒருசமயம் என்னைச் சோம்பல் அண்டும்.  ஆனால், அந்தர்மியமான (என்னுள் உறையும்)  சாயிக்கு அது என்னவென்றே தெரியாது.  கதை சொல்ல நான் மறந்தால், சரியான நேரத்தில் அவர் ஞாபகமூட்டுகிறார். 

சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நான் நினைக்கலாம்.  ஆயினும், என்னுடைய சட்டம் இங்கே செல்லுபடியாவதில்லை.  ஏனெனில், திடீரென்று என் மனத்தில் உதிக்கும் கதை என்னைப் பேனாவைக் கையிலெடுக்கச் செய்கிறது. 

அவருடைய அற்புதங்கள் நிறைந்த, கணக்கற்ற கதைகளை பக்தர்களுக்கு அளிப்பதற்காகவும் மற்றும் என்னுடைய நன்மைக்காகவும் இந்த சத் சரித்திரத்தை எழுத என்னை ஊக்குவிக்கிறார். 




 

Thursday, 6 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

49 .  மஹானை சோதிக்காதே! மனத்தை அடக்கு!

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள்.  பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

சத்குருவை சாங்கோபாங்கமாகப் (முழுமையாகப்) போற்றும் முயற்சியில் வேதங்களும் புராணங்களுமே திணறிக்கொண்டிருக்கும்போது எதையும் புரிந்துகொள்ள இயலாத என் போன்ற அஞ்ஞானி வாயை மூடிக்கொண்டிருப்பதே மேலாகும். 

சிந்தித்துப் பார்த்தால், வாயைப் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பதுதான் சத்குருவைப் போற்றும் சிறந்த வழியாகும். ஆனால், சாயியின் அடுக்கடுக்கான சீரிய பண்புகள் என்னுடைய மௌனவிரதத்தை மறக்கடித்துவிடுகின்றன. 

சாயியின் ஆழங்காணமுடியாத லீலைகள் பெரும்பேறு விளைவிப்பவையே. அவற்றைக் கண்ணால் கண்ட நான் எப்படிச் சும்மாயிருக்க முடியும்? இனிமையான அந்தத் தின்பண்டங்களை என் நாக்கு ருசிபார்த்தபோது, நான் கதைகேட்பவர்களை நினைவில் கொண்டேன். 

அந்தப் பந்தியில் நான் சுவைத்த ஆனந்தரசத்தை இந்த விருந்திலும் (காவியம்) சேர்க்க முடிவெடுத்தேன். அதனால்தான், இந்த இருந்து சுவாரசியமாகவும் களிப்பூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 

அறுசுவை விருந்தாயினும், பண்புள்ள நண்பர்கள் பந்தியில் இல்லையெனில், அவ்வுணவு ரசிக்காது.  தனியாக அமர்ந்து உண்ணும் விருந்துக்கு ருசியேது?

சாயி அனைத்து விருப்பங்களும் நிறைவேறியவர்; எல்லா ஞானியராலும் போற்றப்படுபவர். சாயி தம் பக்தர்களுக்கு ஓய்வையும் சாந்தியையும் அளிக்கும் பூஞ்சோலை; வாழ்க்கையின் சகித்துக்கொள்ளமுடியாத பிரமைகளை நிவாரணம் செய்பவர். 

சொல்லுக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலையை என்னுடைய பேச்சால் வர்ணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாதவரின் விவரிக்க முடியாத கலைகளை யான் எங்ஙனம் சாரம் வாங்குவேன்?

மங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தம்முடைய கதைப்பற்றிய நினைவைக் கருணையுடன் எனக்கு அளித்து இக் காவியத்தைப் பரிபூரணமாக்குகிறார். 

 

 

Thursday, 30 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஹீனர்களும் தீனர்களுமாகிய நாங்கள் பாமர மக்கள்.  அனாதைகளாகிய எங்களிடம் கிருபை காட்டுங்கள்.  இன்றிலிருந்து நிரந்தரமாக தேவரீர் பாதங்களில் நாங்கள் அடைக்கலம் காண்போமாக.-

"விழிப்புநிலையிலும் சொப்பனநிலையிலும் எங்கள் மனத்தில் பலவிதமான எண்ண அலைகள் மோதிப் பகலிலும் இரவிலும் சிரமபரிஹாரம் (இளைப்பாறுதல்) கிடைக்காமல் செய்கின்றன.  ஆகவே, எங்களை உங்களுடைய வழிபாட்டுக்கு இழுங்கள்".

முரளீதரன் எனப் பெயரிடப்பட்ட மகன் பிறந்தது போல, காலக்கிரமத்தில் பாஸ்கரன், தினகரன் என்ற இரண்டு மகன்களும் பிறந்தனர்.  சபட்னேகர் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

இவ்வாறாக, தயை மிகுந்த சாயியை வந்தனம் செய்ததால், சஞ்சலமடைந்திருந்த தம் மனத்தை உறுதியாக்கிக்கொண்டும், வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டும் சபட்னேகர் தம் மனைவியுடன் வீடு திரும்பினார். 

ஆரம்பத்தில், கதையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றே என் மனம் நினைத்தது.  ஆயினும், என்னைச் சொல்லவைப்பவர்  சாயிநாதர் என்ற காரணத்தால், கிரந்தம் (நூல்) விஸ்தாரமாகிவிட்டது. 

ஹேமாட் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அடுத்த கதையின் தாத்பரியத்தை (உட்கருத்தைக்) கதை கேட்பவர்களுக்கு கோடிட்டு காட்டுகிறேன். 

அடுத்த கதை இதனினும் சுவாரசியமானது.  ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாயி, அற்புதங்களை பார்க்க விரும்பிய ஒரு பக்தரைத் திருப்தி செய்த காதை. 

சாயியின் பெருமையை மக்கள் பலர் போற்றுகின்றனர். ஆயினும், குற்றங்காணும் குணமுடையவனுக்கு குற்றந்தான் தெரியும்.  உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவனுடைய மனம் தோஷங்களை காண்பதில்தான் மகிழ்ச்சியடையும். 

"சாயி பாபா ஒரு ஞானியாக இருக்கலாம். ஆனால், எனக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டாலன்றி, அதை அவர் எனக்கு அளித்தாலன்றி, நான் அவரைச் சிறிதும் மதிக்கமாட்டேன்." இவ்விதம் நினைத்து, -

பரீட்சை செய்து பார்ப்பதற்கென்றே சென்றவரையும் அவர் திருப்தி செய்தார்! அடுத்த அத்தியாயத்தின் காதை இதுவே.  கதைகேட்கும் நல்லவர்களே, கவனத்துடன் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சந்தேகிகளுக்கும் அருள்' என்னும் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும். 

 


 ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 

 

Thursday, 23 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அன்றிரவு சாவடி ஊர்வலம் நடந்தது. சபட்னேகர் பிரேமையுடனும் உற்சாகமாகவும் பல்லக்குக்கு முன்னே தண்டம் ஏந்தி ஆனந்தம் நிரம்பியவராக ஊர்வலத்தில் நடந்துசென்றார். 

கதைகேட்பவர்களுக்குச் சாவடி ஊர்வல விவரம் ஏற்கெனவே தெரியும்.  கூறியது கூறின் காவியம் நீளும்; ஆகவே, அது இங்கு அவசியமில்லை. 

அன்றிரவு பாபா புரிந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! பாபாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சபட்னேகருக்கு பண்டரிபுரத்துப் பாண்டுரங்கனாக பாபா காட்சியளித்தார். 

பின்னர், சபட்னேகர் வீடு திரும்ப அனுமதி வேண்டியபோது, "சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று ஆணை பிறந்தது.  அவ்வாணையைச் சிரமேற்கொண்டு உணவருந்தியபின் புறப்படுவதற்கு முன்னதாக சபட்னேகர் தரிசனம் செய்யச் சென்றார். 

திடீரென்று அவருடைய மனத்தில் ஒரு கற்பனை உதித்தது, "பாபா தக்ஷிணை கேட்டால் அவருடைய விருப்பத்தை நான் எவ்விதம் திருப்திசெய்வேன்?"

அவர் கொண்டுவந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டிருந்தது.  பயணச் செலவுக்குத் தேவையான பணந்தான் கையிலிருந்தது.  ஆகவே, 'தக்ஷிணை கொடு' என்று பாபா கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார். 

'பாபா கேட்பதற்கு முன்னரே நான் ஒரு ரூபாயை அவருடைய கையில் வைப்பேன். அவர் மேலும் கேட்டால், இன்னுமொரு ரூபாயை அர்ப்பணம் செய்வேன்.  அதன் பிறகும் கேட்டால், என்னிடம் பணமில்லை என்று சொல்லிவிடுவேன்.-

"என்னிடம் புகைவண்டிக்குரிய கட்டணம் மட்டுந்தான் இருக்கிறது என்று பாபாவிடம் ஒளிவுமறைவின்றித்  தெளிவாகச் சொல்லிவிடுவேன்.' இந்தத் தீர்மானத்துடன் அவர் பாபாவிடமிருந்து விடை பெறுவதற்காகச் சென்றார். 

ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு ரூபாயை அவர் பாபவின் கையில் வைத்தபோது பாபா மேலும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டார். அதை வாங்கிக்கொண்டு பாபா தெளிவாகச் சொன்னார்,-

"இந்தத் தேங்காயை எடுத்துக்கொள்ளும்.  அதை உம் மனைவியின் சேலைத் தலைப்பில் இடும். பிறகு நீர் குசாலாகப் போய்வாரும்.  உம்மை வாட்டும் மனக்கிளர்ச்சியைத் தூக்கியெறியும்."

பன்னிரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு புத்திரன் பிறந்தான்.  எட்டு மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு மறுபடியும் தரிசனத்திற்கு வந்தனர். 

குழந்தையை பாபாவின் பாதங்களில் கிடத்தினர்.  ஆஹா! என்னே இந்த ஞானியர் விளைவிக்கும் அற்புதம்! அவர்கள் இருவரும் கைகளைக் கூப்பிக்கொண்டு செய்த பிரார்த்தனையைக் கேளுங்கள்.

"ஓ சாயிநாதரே! தேவரீர் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று அறியோம்.  ஆகவே, உம்முடைய பாதாரவிந்தங்களில் பணிகிறோம்.-


 

Thursday, 16 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வேறொரு பெண்மணிக்கு, இறந்துபோன மகன் ராமதாசனை எவ்வாறு திருப்தியளித்தேனோ, அவ்வாறே, இவர் மகனையும் இவருடைய வயிற்றில் மறுபடியும் நான் கொண்டு வருகிறேன்."

இதைக் கேட்ட சபட்னேகர் பாபாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் அங்கேயே காத்துகொண்டு நின்றார். பாபா சபட்னேகரின்  தலைமேல் கை வைத்து அவருக்கு தைரியமளித்தார். 

பாபா சொன்னார், "இந்தப் பாதங்கள் புராதனமானவை.  உம்முடைய கவலைகளெல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் பூரணமான நம்பிக்கை வையும்.  சீக்கிரமே நீர் கிருதார்த்தர் (பேறுபெற்றவர்) ஆவீர். 

பாபாவுக்குப் பாதசேவை செய்துகொண்டே இவ்வினிமையான வசனத்தைக் கேட்ட சபட்னேகரின் நயனங்கள் கண்ணீரால் நிறைந்தன.  பாபாவின் பாதங்களுக்கு அவர் வந்தனம் செய்தார். 

அஷ்டபாவம் அவரை ஆட்கொண்டது.  ஆனந்தக்கண்ணீர் பொங்கியது. கண்ணீரால் பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார்.  பிரேமையுடன் பாதங்களை துடைத்தார். 

மறுபடியும் பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலைமேல் வைத்து, "சௌக்கியமாக இரும்" என வாழ்த்தினார்.  பிறகு, ஆனந்தம் பொங்கிய மனத்துடன் சபட்னேகர் தாம் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினார். 

நைவேத்தியம் தயார் செய்யப்பட்டது. சபட்னேகர் அதைத் தம் மனைவியின் கையில் கொடுத்தார். பூஜையும் ஆரதியும் நடந்துமுடிந்தபின், நைவேத்திய தட்டை அவர் பாபாவுக்கு முன்னால் வைத்தார். 

பின்னர், சடங்கு விதிமுறைகளின்படி தட்டைச் சுற்றி நீர் தெளித்துவிட்டுத் தட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ஐந்து பிராணன்களுக்கும் அர்ப்பணம் செய்தபின் பாபாவுக்கு நைவேத்தியத்தை சமர்ப்பணம் செய்தார்.

பாபா தினமும் செய்வது போன்று, நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தட்டைத் தம்முடைய கையால் தொட்டார். இதைக் கண்ட சபட்னேகருக்கு மயிர்க்கூச்செரிந்தது. 

பிறகு, அங்கே பாபாவின் பாதங்களுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த இதர பக்தர்களின் ஊடே விரைவாகப் புகுந்து சென்று சபட்னேகர் மறுபடியும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

அங்கு ஏற்பட்ட நெருக்கடியால், பக்தர்களின் தலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.  இதைப் பார்த்த பாபா, சபட்னேகருக்கு வழங்கிய சாந்தமான அறிவுரை என்னவென்று கேளுங்கள். 

"ஓய்! எதற்காக இப்படித் திரும்பத் திரும்ப நமஸ்காரத்தின்மேல் நமஸ்காரம்? நற்செயல் என்றுணர்ந்து பக்தியுடன் செய்யப்படும் ஒரு நமஸ்காரமே போதுமானது!" 





Thursday, 9 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


வந்தவுடன், உட்கார்ந்த நிலையில் பாபாவின் இடுப்பை மும்முரமாக பிடித்துவிட ஆரம்பித்தாள்.  வழக்கம்போல் பாபா அவளுடன் பேசுவதற்கு தொடங்கினார். 

பேச்சின் அற்புதம் என்னவென்றால், சபட்னேகர் அதை உன்னிப்பாக கேட்க கேட்க, எழுத்துக்கெழுத்து அது தம்முடைய காதை என்பதை அறிந்தார். 

ஆடு மேய்க்கும் பெண் அவ்வப்பொழுது 'ஊம்' கொட்டிக் கதையைக் கேட்டாள்.  ஆயினும், சபட்னேகரோ, தம்முடைய விருத்தாந்தத்தை  தாமே கேட்டு ஆச்சரியமடைந்தார். அவர் திகைத்துப்போனார்!

பாபா சொன்னதோ ஒரு மளிகைக் கடைக்காரரின் கதை.  ஆனால், உண்மையில் அது சபட்னேகரின் கதை.  கதையின் நடுவில், இறந்துபோன மகனைப் பற்றிய குறிப்பும் வெளிப்பட்டது. 

நெருங்கிய உறவினர் ஒருவரால் விவரிக்கப்பட்டதுபோல் ஜனனத்திலிருந்து மரணப்பரியந்தம், மகனின் கதை விரிவாகச் சொல்லப்பட்டது. 

கதையுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆடு மேய்க்கும் பெண்ணிடம் கதை சொல்லப்பட்டது. அது ஒரு 'தகப்பன் - மகன்' கதை. அனைத்து விஷயங்களும் அவ்விருவர் சம்பந்தமானவையே. 

ஆகவே, அவ்வாறாகத் தம்முடைய கதையையே சாயியின் திருவாய்மொழியாகக் கேட்ட சபட்னேகரின் மனம் மிகுந்த வியப்பிலாழ்ந்தது. சாயிபாதங்களில் அவருக்கிருந்த பயபக்தி மேலோங்கியது. 

அனைத்து விவரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பாபா அறிந்திருந்ததை சபட்னேகர் மனத்தால் பாராட்டிப் போற்றினார். 

பிரம்ம சொரூபமாக இருப்பவருக்கு இவ்வுலகமே குடும்பம்.  இன்னும் சரியாகக் கூறுமிடத்து, அவரே பூரணமான சிருஷ்டி ஆவார். இதுவே சாயியின் பரிமாணம். 

ஒன்றேயெனும் பொருளின் விஸ்தாரமே சாயிபாபா அவதாரம். அவரால், 'உன்னுடையது' 'என்னுடையது' என்று எப்படிப் பேதப்படுத்திப் பார்க்கமுடியும்? அவரே இவ்வுலக ரூபத்தில் விரிந்திருக்கிறார்.!

பரம புருஷனோடு ஒன்றியிருப்பவரால், எப்படி துவைத பாஷை (நான் வேறு, நீ வேறு என்று பிரித்துப் பேசுதல்) பேச முடியும்?  காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் பேதம் அவருக்கு இல்லை. பரந்த வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியமோ!

பாபா மகா அந்தர்ஞானி  (பிறர் மனம் அறியும் சக்தி படைத்தவர்). ஆகவே, அந்த எண்ணம் (சுலோகம் 138 ) சபட்னேகரின் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே பாபா அவரிடம் என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறேன். நற்குணவான்களாகிய நீங்கள் கேட்டு மகிழுங்கள். 

சபட்னேகரை விரலால் சுட்டிகாட்டிக்கொண்டே  பாபா ஆச்சரியம் பொங்கும் குரலில் முழங்கினார், "இவர் மகனை நான் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார். என்மீது இக் குற்றத்தைச் சாடுகிறார். -

"நான் ஜனங்களின் குழந்தைகளைக் கொல்பவனாக இருந்தால், இவர் ஏன் மசூதிக்கு வந்து அழுகிறார்?  நல்லது, இப்பொழுது நான் இவ்வாறு செய்கிறேன். இவர் புத்திரனை மறுபடியும் இவருடைய வயிற்றில் கொண்டுவருகிறேன். -


 

Thursday, 2 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

பாபா மறைமுகமாக விவரித்த வியாதி, ஓரிரண்டு மாதங்களுக்குப் பிறகு நிவிர்த்தியானபோது, பெண்மணியின் அனுபவம் உண்மையை உணர்த்தியது. 

அப் பெண்மணியின் விருப்பம் பின்னர்ப் பூரணமாக நிறைவேற்றப்பட்டது.  ஆனபோதிலும், சபட்னேகர் தரிசனம் செய்யப்போனபோது, 'போ வெளியே' என்ற பழைய வெகுமானத்தையே பாபா மறுபடியும் அளித்தார். 

"பாபா விடாப்பிடியாக என்னை இழிவுபடுத்தும்படியாக நான் என்ன தவறு இழைத்தேன் என்று அறியேன்.  நான் நமஸ்காரம் செய்யும்போது அவர் கூறும் மறுமொழி, மாறமாட்டேன் என்கிறது!

"என் கண்ணெதிரிலேயே மற்றவர்களிடம் மிகுந்த பிரேமை காட்டுகிறாரே; அவர் என்னிடம் மட்டும் கோபங்காட்டுவதற்கு நான் முன்ஜன்மங்களில் என்ன பாவம் சம்பாதித்தேன்?-

"காலையிலும் மாலையிலும் அவரைப் பார்ப்பதற்குச் செல்லும் மக்கள் நித்தியதீபாவளியைப்போல ஆனந்தம் அனுபவிக்கிறார்களே;  என்னுடைய தலையில்மட்டும் 'போ வெளியே' என்றா எழுதியிருக்கிறது?

"என்னுடைய கர்மவினை என்னை அதர்மவழியில் செலுத்தி அளவற்ற பாவங்களைச் செய்யவைக்கும் அளவுக்குக் கொடுமையானதோ? அதனால்தான் பாபா எனக்கு அவகிருபை (கிருபைக்கெடு) காட்டுகிறாரோ?-

"ஆரம்பகாலத்தில் பாபா விஷயமாக நான் குதர்க்கமாகச் சிந்தித்து சந்தேகப்பட்டேன். ஆகவே, பாபாவே இந்த உபாயத்தால் என்னைத் தம்மிடம் நெருக்கமாக இழுக்கிறார் என்று நினைக்கிறேன்".

ஆகவே, பாபாவின்மேல் உறுதிப்பாட்டுடன் மனம் செலுத்தி, பாபாவிடமிருந்து அனுக்கிரஹம் பெறும்வரை ஷிர்டியிலிருந்து நகர்வதில்லை என்று சபட்னேகர் நிர்த்தாரணம் செய்துகொண்டார். 

முவ்வகைத் தாபங்களால் தாக்குண்டபோதிலும், சாயிதரிசனம் செய்யவேண்டுமென்று தாகத்துடன் வந்தவர் யாராவது, மனத்திருப்தி அடையாமல் கூம்பிய முகத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறாரா?

அந்த நாளில், அன்னமும் பானமும், போவதும் வருவதும் பிடிக்காமல், எதிலும் விருப்பமின்றி சபட்னேகர் சோகமாக இருந்தார். தூக்கம் வராமல் விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தார். 

"யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து, பாபா தனிமையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன். "

இவ்வாறு சபட்னேகர் நிச்சயம் செய்துகொண்டார். அவருடைய தீர்மானத்திற்குப் பலனும் கிடைத்தது. மனத்துள்ளே ஏற்பட்ட நல்லெழுச்சியால் பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். 

பாதங்களில் தலையை வைத்து வணங்கியபோது பாபா தம்முடைய கையை சபட்னேகரின் தலையின்மேல் வைத்தார். சபட்னேகர் பாதசேவை செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது, ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

 


 

Thursday, 25 September 2025

ஸ்ரீ  ஷீர்டி சாயி சத் சரிதம்  


மனைவி கனவைக் கணவருக்கு விவரித்தார், "அங்கு, ஒரு வேப்பமரத்தடியில், தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக்கொண்டிருந்த பக்கீர் ஒருவர் என்னருகில் வந்தார்.-

"கோமளமான குரலில் பக்கீர் இயம்பினார், 'குழந்தாய், ஏன் இப்படி வீணாக சிரமப்படுகிறாய்? நான் உன்னுடைய குடத்தை நிர்மலமான தூய நீரால் நிரப்பித் தருகிறேன்.'-

"எனக்குப் பக்கீரிடம் பீதி ஏற்பட்டது. காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு சரசரவென்று வீடு திரும்பினேன். பக்கீர் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். -

"கனவின் இந்தக் கட்டத்தில் நான் விழித்துக்கொண்டேன்."  மனைவி கண்டா கனவின் விவரத்தைக் கேட்ட சபட்னேகர் ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். 

அதே முஹூர்த்தத்தில் இருவரும் கிளம்பி, மறுநாள் உதயகாலத்தில் ஷீர்டி கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர்.  உடனே மசூதிக்குச் சென்றனர். அந் நேரத்தில் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். 

ஆகவே, பாபா திரும்பிவரும் வரையில் அவருக்காகக் காத்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி பாபாவும் அங்கு வந்தார். 

நகத்திலிருந்து சிகைவரை, கனவில் கண்ட அதே உருவத்தைப் பார்த்த பெண்மணி (சபட்னேகரின் மனைவி ) ஆச்சரியப்பட்டார். மேலும் உன்னிப்பாகப் பார்த்தார். 

பாதங்களை அலம்பும் சேவை முடிந்தது. தரிசனம் செய்த பிறகு பாபாவின் பாதங்களுக்குப் பெண்மணி நமஸ்காரம் செய்தார். ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். 

பெண்மணியின் விநயத்தைக் கண்டு சாயிநாதரின் சித்தம் மகிழ்ந்தது. அவளுடைய வியாதியை நிவாரணம் செய்ய, மெல்லிய குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் பாபா. 

வழக்கம்போல, அங்கிருந்த ஒரு மூன்றாவது நபரிடம் தம்முடைய வியாதியைப் பற்றி பிரேமையுடன் விஸ்தாரமாக பாபா தெரியப்படுத்தினார். 

உண்மையில் அது அப் பெண்மணியின் கதை.  அதை அவளிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கவேண்டும். ஆயினும், அவளுடைய முன்னிலையில், மூன்றாமவர் ஒருவரிடம் அதைச் சொன்னபோது அப் பெண்மணி கண்கொட்டாது கதையைக் கேட்டாள்.

"என்னுடைய கைகள், வயிறு, இடுப்பு, எல்லாம் பல வருஷங்களாக கடுமையாக வலிக்கின்றன.  மருந்துகள் தின்று நான் களைத்துவிட்டேன். வியாதி பரிஹாரம் ஆகவில்லை. (குணமடையவில்லை)

"மருந்துகளை விழுங்கி விழுங்கி என்னுடைய தொண்டை அலர்சியுற்றதுதான் மிச்சம். ஒரு நிவாரணமும் ஏற்படவில்லை. திடீரென்று அந்த வியாதி இப்பொழுது காணாமல் போய்விட்டது. என்னே ஆச்சரியம்!"

இதுதான் அப் பெண்மணியின் கதை.  பெயரைக் கூடாக குறிப்பிடாமல் மூன்றாமவரிடம் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அப் பெண்மணி சம்பந்தப்பட்டவையே; அவளுடைய கதையே!


 

Thursday, 18 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இறைவா! இது என்ன சித்திரம்?" பாபா படத்தைப் பார்த்துவிட்டு சபட்னேகரைச் சுட்டிக்காட்டியவாறு  பதிலளித்தார், "இது அவர் நண்பரின் படம்"

இவ்வாறு சொல்லிக்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. "பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?" என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை).

உடனே பாலா சிம்பி சபட்னேகரிடம்  சொன்னார், " தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்."  ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது ,, "போ வெளியே " என்ற முழக்கத்தை சபட்னேகர் செவிமடுத்தார். 


"அய்யகோ! அதே 'போ வெளியே ' இன்னும் என்னைப் பின்தொடர்கிறதே! இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?" இதுவே சபட்னேகரின் பெருவியப்பு. 

அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், "இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்!"

"சமர்த்த ஸ்வாமியே! உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது.  இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்ன! இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். -

"பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், "போ வெளியே " என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்! இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.-

"எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடிய சீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசியளியுங்கள்."  அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு. 

பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோ ! ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். 

பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர். 

மேலும் ஓராண்டு கழிந்தது.  ஆனபோதிலும், சபட்னேகரின்  மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார்.  மனக்கலக்கம் அதிகரித்தது. 

ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச்  சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார்.  அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 

காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது.  காசிப் பயணம் நிறுத்தப்பட்டது!

ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது  எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன்.  சாயியின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள். 

சபட்னேகரின்  மனைவி படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சா ' வின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார். 


 

Thursday, 11 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அந்த ஞானியை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் மூண்டது. ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். உறவினர் ஒருவருடன் கிளம்பினார். 

தம்முடைய பாதங்களில் பணிவதற்காக அவரை ஷிர்டிக்கு இழுத்தவர் சாயியே! சேவடே  எப்பொழுதோ சொன்ன வார்த்தைகள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்கே)! நான் இப்பொழுது சொல்லப்போவதைக் கவனத்துடன் கேளுங்கள். 

தம் இளையசகோதரர் பண்டித ராவையும் கூட்டிக்கொண்டு சபட்னேகர் ஞானி தரிசனத்திற்காக ஷிர்டிக்குக் கிளம்பினார். 

அவர்கள் இருவரும் ஷிர்டிக்கு வந்து சேர்ந்தவுடனேயே சாயிதரிசனத்திற்குச் சென்றனர். தூரத்திலிருந்து பாபாவை தரிசனம் செய்தபோதே மனங்குளிர்ந்தனர். 

தூரத்திலிருந்து பாபாவின் கண்களைச் சந்தித்தவுடன் இருகைகளையும் கட்டிக்கொண்டு விரைவாக அவரருகில் சென்று நின்றனர். 

இருவரும் மிகுந்த பணிவுடன் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். தூய்மையான உள்ளதுடனும் பிரேமையுடனும் ஒரு தேங்காயை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தனர். 

தேங்காயை பாபாவின் பாதங்களில் சபட்னேகர் சமர்ப்பித்தபோது, "போ வெளியே" என்று சத்தம் போட்டு பாபா அவரை விரட்டியடித்தார். 

பாபா கோபங்கொண்டதை கண்ட சபட்னேகர் மனக்கலக்கம் அடைந்தார். 'இதற்கு என்ன பொருள் என்பதை, குறிப்பறிந்தவர் யாரையாவது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இவ்வாறு தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். 

தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டியவர், சுடுசொல் கேட்டுத் துணுக்குற்றுப் பின்வாங்கினார். வருத்தத்துடன் முகங்கவிழ்ந்து உட்கார்ந்தார். 

'இப்பொழுது யாரிடம் செல்வது? பாபாவின் சுடுசொல்லுக்கு அர்த்தம் என்னவென்று எந்த பக்தரைக் கேட்பது? பாபாவின் என்ன ஓட்டம் என்னெவென்று யாரைக் கேட்பது ?"

அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்ட யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாலா சிம்பியின் பெயரை சிபாரிசு செய்தார்.  ஆகவே, சபட்னேகர் பாலா சிம்மியைத் தேடிச் சென்றார். 

விருத்தாந்தத்தை முழுமையாக பாலா சிம்பியிடம் விவரித்தபின், சபட்னேகர் வேண்டினார், "பாபா உக்கிரமான வார்த்தை பேசி என்னை விரட்டிவிட்டார்.-

"தாங்கள் என்னுடன் வந்தாலாவது எனக்கு சாந்தமான தரிசனம் கிடைக்கலாம். பாபா கோபப்படாமல் நம்மீது கிருபைகனிந்த பார்வையைச் செலுத்த வாய்ப்பு உண்டு".

பாலா சிம்பி இதற்கு ஒத்துக்கொண்டார். சபட்னேகர் சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். பாபாவின் படம் ஒன்றை வாங்கிக்கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு கிளம்பினார். 

பாலா சிம்பியும் உடன் சென்றார். படத்தைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டபின், பாபாவிடம் அதைக் கொடுத்துப் பணிவன்புடன் பாலா சிம்பி கேட்டார், -

 


Thursday, 4 September 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"பிரசித்தி பெற்ற அஹமத் நகர ஜில்லாவில் ஷீர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கீர் வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு புகழ்பெற்ற சத்புருஷர்-

"எங்கெங்கோ எத்தனையோ ஞானியர் இருக்கின்றனர். ஆயினும், அமோகமான புண்ணியம் சேர்த்திராவிட்டால், எவ்வளவு முயன்றாலும் அவர்களை தரிசனம் செய்யும் நல்வாய்ப்பு நேராது.-

"அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும்.  நடக்காமல் தடுக்க எச் சக்தியாலும் யுக முடிவுவரை முயன்றாலும் இயலாது.-

"நான் எவ்வளவு பிரயாசை செய்தாலும் இவ்வாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடையப்போவதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நான் பிரயாசையின்றியே தேர்ச்சி பெறுவேன். இது முவ்வகையிலும் சத்தியம். 

"இது அவர் எனக்களித்த வாக்குறுதி. எனக்கு அவரிடம் முழுநம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாகா.  இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். -

"நான் அதிசயம் ஏதும் இன்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி, இதற்கடுத்த பரீட்சையிலும் வெற்றி  பெறப் போகிறேன்."  இந்த வார்த்தைகள் வெறும் பிதற்றல் என்றும், கேலிக்குரியவை என்றும் சபட்னேகர் சந்தேகமற நினைத்தார். 

சபட்னேகர் விகற்பமாகச் சிந்தித்தார், " இவர் சொல்வதை எப்படி நம்ப முடியும்?" இது இவ்வாறிருக்க, சேவடே அங்கிருந்து சென்று விட்டார். பிற்காலத்தில் என்ன நடந்ததென்பதைக் கேளுங்கள். 

சிலகாலம் கடந்த பிறகு, சேவடே  சொன்னது அனுபவ பூர்வமாக உண்மையாகியது. சேவடே  இரண்டு பரீட்சைகளிலும் வெற்றி பெற்றார். சபட்னேகர் ஆச்சரியத்தில் மூழ்கினார்!

அதன்பின் பத்தாண்டுகள் கழிந்தன. சபட்னேகருக்கு கெட்ட காலம் துவங்கியது. துரதிர்ஷ்டம் அவரை திடீரென்று தாக்கித் துயரத்தில் ஆழ்த்தியது.  அவர் சோகமானார். 

1913  ஆம் ஆண்டு சபட்னேகரின் ஒரே மகன் டிப்தீரியா ஜுரம் கண்டு இறந்து போனான்.  அவருக்கு வாழ்க்கையே வெறுத்தது. 

ஆகவே, அவர் பண்டர்பூர், கண்காபூர் போன்ற தலங்களுக்கு புனித பயணம் சென்றார். எங்கே சென்றும் மனம் நிம்மதியடையவில்லை. பின்னர் அவர் வேதாந்தம் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு சிலகாலம் கழிந்தது.  மனச்சாந்தி பெறுவது எவ்வாறு என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  திடீரென்று அவருக்கு ஒரு பாதை தென்பட்டது.  சேவடே  பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விருத்தாந்தம் ஞாபகத்திற்கு வந்தது. 

சாயிபாதங்களில் சேவடேவுக்கு  இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியும் அவருக்கு ஞாபகம் வந்தது. தாமும் சாயீ தரிசனத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. 


 

Thursday, 28 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால், சிலர் ஆரம்பகாலத்தில் ஞானிகளின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவர்.  ஆயினும், பின்னர் விசுவாசம் ஏற்பட்டால், மங்களங்கள் விளையும். 

ஓர் உண்மையான ஞானியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். ஞானியரின் ஆற்றல் அளவிடற்கரியது!

இந்தக் கருத்தைப் போதிக்கும் காதையொன்றை இப்பொழுது கவனத்துடன் கேளுங்கள். கேட்பவர்கள் ஆனந்தத்தால் நிரம்புவர்; அவ்வாறே, சொல்பவருக்கும் உற்சாகம் ததும்பும். 

அக்கல்கோட்வாசியும் சபட்னேகர் என்ற பெயர் கொண்டவருமான ஒரு வக்கீலின் அனுபங்களைக் கேளுங்கள். உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும். 

சட்டபடிப்பை முழுமுயற்சியுடன் இரவுப்பகலாகப் படித்துக் கொண்டிருந்தபோது, சேவடே என்ற சக மாணவரை இவர் சந்தித்தார். இருவரும் படிப்பு விஷயமாகப் பரஸ்பரம் கருத்துக் பரிமாற்றம் செய்துகொண்டனர். 

மேலும் சில சக மாணவர்களும் அங்கு வந்தனர். எல்லாரும் ஒரே அறையில் உட்கார்ந்தனர். யார், எந்த அளவிற்குப் படித்துத் தெளிவடைந்திருக்கிறார் என்பது அறிந்துகொள்ள ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.

யாருடைய விடை சரியானது என்பதையும், யார் எந்த இடத்தில எவ்விதமாகத் தவறு செய்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டு, சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொண்டு மனநிறைவு பெறுவதே நோக்கம். 

சேவடேவின் விடைகள் அனைத்தும் தவறானவையாக இருந்தன. கடைசியில் எல்லா மாணவர்களும் சொன்னார்கள், "இவர் எப்படிப் பரீட்சையில் வெற்றி பெறப்போகிறார்?" படித்ததெல்லாம் அரைகுறையாக இருக்கிறதே!"

சக மாணவர்கள் இவ்வாறு இளக்காரமாக பேசிய போதிலும், சேவடே முழுநம்பிக்கையுடன் கூறினார், "படிப்பு அரைகுறையாக இருந்தாலும், முழுமையாக இருந்தாலும், வேளை வரும்போது நான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவேன்.-

"நான் முழுமையாக அப்பியாசம் செய்திராவிட்டாலும், என் பாபா எனக்குப் பரீட்சையில் வெற்றியளித்துவிடுவார். நான் எதற்காக கவலைப்பட வேண்டும்?"

இந்த வார்த்தைகளைக் கேட்ட ஸபத்னேகர்  ஆச்சரியமடைந்தார்.  சேவடேவைத் தனியாக அழைத்துச் சென்று கேள்வி கேட்கத் தொடங்கினார். 

"அடடா! நீர் வானளாவப் புகழும் இந்த சாயி பாபா யார் ஐயா? அவர் மீது பூரணமான விசுவாசம் வைத்திருக்கிறீரே; அவர் எங்கு வாசம் செய்கிறார்?"

இதற்கு விடையாக சேவடே சாயி பாபாவின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். கூப்பிய கைகளுடன், தாம் அவர்மீது வைத்திருந்த ஆத்ம விசுவாசத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார். 



Thursday, 21 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

சத் சரித்திரத்தைச் சொற்பொருள் அறிந்து பயபக்தியுடன் கேட்பவர்களுக்கு ஆத்மஞானம் அனாயசமாக கைகூடும். 

பக்திபாவத்துடன் சாயியின் பொன்னடிகளைத் தொழுவதாலும், சாயியை மனத்தில் நிலைபெறச் செய்வதாலும், புலன்கள் இஷ்டம்போல் செயல்படுவதை நிறுத்திவிடுகின்றன. பிறவிக்கடல் சுலபமாகவும் விரைவாகவும் கடக்கப்படுகிறது. 

சாயி சத் சரித்திரத்தைப் படிப்பதும் கேட்பதும், பக்தர்களாகிய சாதகப் பறவைகளுக்கு ஜீவனளிக்கும் நீராகும். கேட்பவர்கள், கேட்டதை மனத்தில் இருத்துவதால் இறைவனின் கிருபையைப் பெறுவதற்கு ஆயத்தமாகின்றனர். 

இந்தக் கதையை எந்நிலையிலும் கருத்தூன்றிக் கேட்பவர்களின் கர்மபந்தங்கள் அறுந்து, விழும்.  அவர்கள் பிறவிக்கடலை இயல்பாகக் கடந்துவிடுவார்கள். 

இப்பொழுது, கதைகேட்பவர்கள், "கதை எப்பொழுது ஆரம்பிக்கப்போகிறது?" என்று தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புவது எனக்குப் புரிகிறது.  பீடிகையை ஆரம்பித்து அவர்களுடைய சஞ்சலத்தை நிவிர்த்தி செய்கிறேன். 

விரோதம், கொலை, கடன் ஆகிய பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகப் புனர்ஜன்மம் எடுத்தாக வேண்டும் என்பதும், கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. 

மக்களுக்கு முன்ஜன்ம ஞாபகம் இருக்காது. ஆனால், ஞானிகளோ அதை மறப்பதில்லை. பக்தர்கள் எங்கு மறுபிறவி எடுத்தாலும் அவர்களை சங்கடங்களிலிருந்து ஞானிகள் விடுவிக்கின்றனர். 

கொடுப்பதிலும் வழங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் (எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும்) ஞானிகளின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள், வாழ்க்கையில் 
எவ்வாறு வெற்றியடைகிறார்கள் என்பதை விளக்கும் காதை ஒன்று இப்பொழுது சொல்லப்படும். 

ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இறைவனின் பாதங்களை நினைப்பவர்களுடைய மனக்கவலையை இறைவனே நிவாரணம் செய்கிறான். பக்தர்களும் தங்களுடைய கருமத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

'செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன்' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

ஞானிகள் கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவர்களாகத் துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவர்களுடைய அன்பு, லாபம் எதையும் எதிர்பார்க்காதது.  பொறுமையாகவும் தைரியமாகவும் உறவைத் தொடர்ந்தால், நமக்கு மங்களங்கள் விளைவிப்பார்கள். 

சாபங்களும் தாபங்களும் சுயநல நோக்கத்தால் ஏற்படும் ஆசாபாசங்களும், ஞானிகளின் சத் சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வென்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் ஞானிகளின் பாதங்களை வணங்க வேண்டும். 

அகந்தையை விடுத்து, விநயத்துடன் ஞானிகளை சரணாகதி அடையவேண்டும்.  நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பதைப் பிரார்த்தனையாக அவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்.  ஞானிகளின் நம்முடைய மனத்துக்குப் பெரும் திருப்தியை அளிப்பார்கள். 


 

Thursday, 14 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

தேவரீர் உருவமற்ற இறையுடன் கலந்தபோது உருவத்தை விடுத்து உருவமற்ற நிலையை அடைந்தீர்.  ஆயினும், தேகத்தை உதறிய பிறகும் பக்தர்களுக்கு மங்களங்களை விளவிக்கும் செயல்கள் தொடர்கின்றன.

தேகத்துடன் வாழ்ந்தபோது என்னென்ன செய்தீரோ அவையனைத்தும் உருவமற்ற இறையுடன் கலந்த பிறகும் தொடர்கின்றன. உம்மை பக்தியுடன் அணுகுபவர்கள் இன்றும் அதே அனுபவத்தைப் பெறுகின்றனர். 

பாமரனாகிய என்னை ஒரு கருவியாகக்கொண்டு அஞ்ஞான இருளை நீக்கி, பக்தர்களை உத்தாரணம் செய்யக்கூடிய சக்திபடைத்த உமது சரித்திரம் என்னும் சூரியனை உதிக்கச் செய்துவீட்டிர்!

ஆஸ்திக புத்தியும் சிரத்தையுடன் கூடிய பக்தியுமே, பக்தனின் இதயமாகிய அகல் விளக்கு. அன்பாகிய எண்ணையுடன் திரி பிரகாசமாக எரியும்பொழுது ஞான ஜோதி வெளிப்படுகிறது. 

அன்பில்லாத ஞானம் வறண்டது; அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? அன்பின்றி வாழ்வில் திருப்தி ஏது? அன்பு குறைவுபடாததாகவும் இருக்கவேண்டும். 

அன்பின் மஹிமையை யான் எங்கனம் எடுத்துரைப்பேன்! அன்பின் எதிரில் மற்றவை அனைத்தும் துச்சம் அல்லவோ? இதயத்தின் ஆழத்தில் அன்பில்லாதவனின் படிப்பும் கேள்விஞானமும் பயன் அளிக்காது. 

அன்பில் பக்தி உறைந்திருக்கிறது. சாந்தியும் விரக்தியும் அன்பில் பொதிந்திருக்கின்றன. சகல சம்பத்துகளுடன் கூடிய முக்தியும் அன்பின் பின்னே நிற்கிறது. 

பாவம் இன்றி அன்பு உண்டாவதில்லை. பாவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறான் என்றறிக. பாவத்தின் வயிற்றிலிந்துதான் பூரணமான அன்பு பிறக்கிறது. பாவந்தான் பிறவிக்கடலைக் கடக்க உதவும் நாவாய். 

கங்கை நீர் போன்று பரம பவித்திரமான 'சாய் சத் சரித்திரத்தின் ' இனிமை அளவிடற்கரியது. சாயியே அதன் சுலோகங்களில் உறைந்திருக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே. 

சாயி சத் சரித்திரத்தைக் கேட்பதால், கேட்பவர்கள், சொல்பவர்கள் இரு சாராருமே தூய்மை அடைகின்றனர். புண்ணியங்களும் பாவங்களும் அடித்துச் செல்லப்பட்டு இரு சாராருமே நித்யமுக்தி பெறுகின்றனர். 

கேட்பவர்களின் காதுகள் பாக்கியம் பெற்றவை. சொல்பவரின் நாக்கோ விசேஷமான பாக்கியம் பெற்றது. பக்தர்களால் மிகப் பவித்தரமானதாகக் கருதப்படும் ஸ்ரீ சாயி தோத்திரம் பெரும்பேறு அளிக்கக்கூடியது. 

தூய்மையான மனத்துடனும் சத்பாவத்துடனும் சரித்திரத்தைக் கேட்பவர்களின் சகல மனோரதங்களும் நிறைவேறும்; எல்லாச் செயல்களும் நற்பயன்களை அளிக்கும். 


 

Thursday, 7 August 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

தாமே இறையனுபவம் பெறாதவர், சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்?  எவருக்குப் பிரதட்சயமான இறையனுபவம் இல்லையோ, அவரை எக்காலத்தும் சத்குரு என்று அழைக்கலாகாது. 

எவர், தம் சிஷ்யனிடமிருந்து சேவை பெறவேண்டுமென்று கனவிலும் நினைக்காமல், அதற்கு மாறாக, சிஷ்யனுக்காகத் தமது உடலை ஓடாகத் தேய்க்க விரும்புகிறாரோ அவரையே ஒரு சத்குருவென்று அறிவீராக. 

'சிஷ்யன் ஒரு துரும்பு, குருவோ உத்தமர்களில் உத்தமமானவர்' என்ற அகம்பாவம் இல்லாத சத் குருவே நன்மை செய்யக்கூடியவர். 

சிஷ்யனை முழுமுதற்பொருளாகக் கருதி அவனைத் தம் மகனைப்போல நேசித்துத் தம்முடைய வாழ்க்கைத்தேவைகளுக்காக சிஷ்யனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத சத் குருவே, இப்புவியில் பரம சிரேஷ்டமானவர் (தலைசிறந்தவர்). 

பரம சாந்தியின் இருப்பிடமானவரும், ஞான கர்வம் இல்லதாவரும், சிறியோரையும் பெரியாரையும் சரிசமமாக மதிப்பவருமாகிய சத்குரு  எனக் கொள்வீராக. 

இவையே ஒரு சத்குருவின் சர்வசாதாரணமான லக்ஷணங்கள். இவற்றைத் தொகுத்துச் சுருக்கிக் கதைகேட்பவர்களுக்கு அடியேன் அளித்திருக்கிறேன். 

ஏற்கெனவே சாயிதரிசனம் செய்து திருப்தியடைந்த கண்களை பெற்றிருக்கும் பாக்யசாலிகளுக்கு ஒரு சத்குருவின்  லக்ஷணங்களைப் (சிறப்பு இயல்புகளைப்பற்றி ) பற்றி அடியேன் மேற்கொண்டு என்ன வர்ணனை செய்யமுடியும்?

ஜென்மஜென்மங்களாக சேமித்துவைத்த புண்ணியங்களின் விளைவாக நாம் சத் குருராயர் சாயியின் பாதங்களை வந்தடைந்தோம். 

இளமையிலேயே அவர் தமது என்று எதையும் உடைமையாக்கி கொள்ளவில்லை; வீடுவாசல் ஏதும் இன்றி நிராதரவாக வாழ்ந்தார். உடைமைகள் என்று அவர் வைத்திருந்தவை புகையிலையும் சிலீமும் மகத்தான மனவொடுக்கமுமே!

பதினெட்டு வயதிலேயே அவர் பூரண மனோஜயம் பெற்றவராக இருந்தார். தன்னிலேயே லயித்து ஏகாந்தமாகவும் நிர்ப்பயமாகவும் (பயமின்றியும்) வாழ்ந்தார். 

'நான் பக்தர்களின் அடிமை' என்னும் தம் வாக்குறுதியை நிரூபிப்பதற்காக, எங்கே சுத்தமான அன்பை பக்தர்களிடம் கண்டாரோ, அங்கே அவர் எப்பொழுதும் இருந்தார்.

பர பிரம்மமே, பழம்பொருளே, ஜய ஜய ! தீனர்களைக் கைதூக்கிவிடுபவரே, மலர்ந்த முகத்தோரே, ஜய ஜய! பிரபஞ்சப் பேருணர்வால்



நிரம்பியிருப்பவரே, பக்தர்களின் வசத்தில் இருப்பவரே, ஜய ஜய! பக்தர்களுக்கு தரிசனம் தாரும் ஸ்வாமி!

இரட்டைச் சுழல்களுக்கு அப்பாற்பட்டவரே, ஜய ஜய! உருவமுள்ளதும் உருவமில்லாதவருமான இறையே, ஜய ஜய! பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியே, ஜய ஜய! அனைத்திற்க்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜய! பக்தர் அல்லாதாருடைய புத்திக்கு நீர் எட்ட மாட்டீர்.

இவ்வுலக வாழ்வின் இன்னல்களையும் துக்கங்களையும் அழிப்பவரே, ஜய ஜய! பிறவியெனும் யானையைக் கிழித்துக் கொள்பவரே, ஜய ஜய ! அடைக்கலம் புகுந்தவர்களிடம் பூரணமான பிரேமை செலுத்துபவரே, ஜய ஜய! சங்கடங்களிலிருந்து பக்கதர்களை விடுவிக்கும் சத் குருராயரே, ஜய ஜய! 

 

 

Thursday, 31 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


48 .  சந்தேகிகளுக்கும் அருள்!


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

இந்த அத்தியாயத்தைத் தொடங்கும் சமயத்தில், கதையை மிகுந்த பக்தியுடன் கேட்பவர்களில் ஒருவர், "ஸ்ரீ சாயி ஒரு குருவா, சத்குருவா?" என்ற கேள்வியை எழுப்பினார். 

அவருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு சத்குருவின் லட்சணங்களை (சிறப்பு இயல்புகளை) சுருக்கமாக எடுத்துரைப்போமாக.  பின்னர், சமர்த்த ஸ்ரீசாயியின் பாதங்களில் அந்த லக்ஷணங்களை நம்மால் காணமுடிகிறதா என்றும் பார்ப்போமாக!

வேதங்களை ஓதுவிப்பவர்களையோ, ஆறு சாஸ்திரங்களில் அடங்கிய ஞானத்தைக் கற்பிப்பவர்களையோ, வேதாந்த நிரூபணம் செய்து அறிவைப் பெருக்குவர்களையோ, சத்குரு என அறிஞர்கள் அழைப்பதில்லை. 

சிலர் மூச்சை அடக்குகின்றனர்.  சிலர் மதச்சின்னங்களை உடம்பில் முத்திரையாக சூடுபோட்டுக்கொள்கின்றனர். சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றிக் கேட்பவர்களை மகிழ்விக்கின்றனர்.  இவர்களில் யாரையும் சத்குருவென்று  விஷயமறிந்தவர்கள் அழைப்பதில்லை. 

சிலர் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு சிஷ்யர்களுக்கு மந்திர உபதேசம் அளித்து, ஜபம் செய்யும்படியாக ஆணையிடுகின்றனர். ஜபம், எப்பொழுது என்ன பயன் அளிக்கும் என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாது!

வார்த்தை ஜாலத்துடன் செய்யப்படும் பிரம்ம தத்துவ நிரூபணம், கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கலாம். ஆனால், சுயானுபவம் விளைவிக்காத ஞானம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்!

கவனமாக நிரூபணத்தைக் கேட்பவர்களின் மனத்தில் இவ்வுலக, மேலுலக இன்பங்களின்மேல் விரக்தி ஏற்படலாம்.  ஆயினும், பிரம்ம ஞானத்தைத் தாமே அனுபவித்தவர்தாம், அந்த இனிமையான அனுப்புவதை பிறருக்குப் பிரகடனம் செய்யமுடியம். 

வேதங்களை முழுமையாக அறிந்து, பூரணமான அனுபவத்தைப் பெற்றுக் கண்கூடாக அவ்வனுபவத்தை சிஷ்யனுக்கு அளிக்கும் சக்தி பெற்றவருக்குதாம், சிஷ்யனை எழுப்பிவிடும் அதிகாரம் உண்டு. அவரைத்தாம் சத்குரு என்று அழைக்கலாம். 


 

Thursday, 24 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


காலப்போக்கில் வீரபத்ரப்பா மரணமடைந்தான். பின்னர் சர்ப்பயோனியில் (பாம்பின் வயிற்றில்) பிறந்தான். இவ்விதமாக அவன் வேறு உடலுக்கு மாறினான். 

சனபசப்பா பயந்துகொண்டே வாழ்ந்தான்; அதுவே அவனுடைய முடிவுக்குக் காரணமாகியது. அவன் மறுபிறவியில் தவளையோனியில் பிறந்தான். அவனுடைய கதை அவ்வாறு. 

பூர்வஜென்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாக பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபசப்பாவை பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான். 

தவளையாகப் பிறந்த தீனன் சனபசப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது. 

முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபசப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பாலித்தேன் (காப்பாற்றினேன்). 

பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ! அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்?

அதுவே இங்கு பிரதக்ஷ்யமான (கண்கூடான) அனுபவமாக மலர்ந்தது. வீரபத்ரப்பா எங்கோ ஓடிவிட்டான். சனபசப்பா ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டான். ஈத்தனைத்தும் இறைவனின் லீலை! 

சரி, இப்பொழுது சிலீமை நிரப்பும். புகைக்குடித்த பிறகு நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். நீரும் உமது கிராமத்திற்கு திரும்பிச் செல்வீராக. ஆயினும், என்னுடைய நாமத்தைக் குறியாகக் கொள்வீராக!

இவ்வாறு பேசிய பிறகு நாங்கள் இருவரும் சிலீம் பிடித்தோம். சத்சங்கத்தின் சௌக்கியம் எனக்குக் கிடைத்தது.  அதன்பிறகு, நான் மெதுவாக வழி நடந்து திரும்பி வந்தேன். என் உள்ளத்தில் பரம திருப்தி நிலவியது. 

(சாயி சொன்ன கதை இங்கு முடிகிறது)

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பாம்பும் தவளையும்' என்னும் நாற்பத்தேழாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


 

Thursday, 17 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


அன்று இரவே, தூங்கிக் கொண்டிருந்தபோது கௌரிபாய் ஒரு கனவுக்காட்சி கண்டாள்.  சங்கரர் கனவில் தோன்றினார்.  சங்கரர் என்ன சொன்னார் என்பதைக் கேளும். 

"பணம் அனைத்தும் உன்னுடையது. எவருக்கும் எதையும் கொடுக்காதே. நான் சொல்லும்படி செயல்பட்டு நிரந்தரமாக அதை நிருவாகம் செய்வாயாக.-

"இறைவனைப் பிரீதிசெய்ய என்ன செலவழிக்கிறாயோ அதைச் சனபசப்பாவின் சொற்படி செய்.  ஏனெனில், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். இதை ஒரு கண்டிப்பான நியதியாக அனுசரிப்பாயாக. -

"இதர காரியங்களில் பணம் செலவழிப்பதாக இருந்தால், நிர்வாக ஒழுங்கீனம் ஏதும் நேராமல் தடுக்கும் பொருட்டு, மசூதியிலிருக்கும் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் திட்டம் எதுவும் தீட்டக்கூடாது."

கௌரிபாயி தன் கனவுக்காட்சி முழுவதையும் எனக்கு விவரித்தாள். நானும் என் மனத்தில் உதித்தவாறு கனவுக்காட்சியை நம்பும்படி அவளுக்கு அறிவுரை கூறினேன். 

"உன்னுடைய அசலை நீ எடுத்துக்கொள். வட்டியில் பாதியை சனபசப்பாவுக்கு கொடு. இந்த விதியை முறைபிறழாது பின்பற்று. வீரபத்ரனுக்கு இதில் ஏதும் சம்பந்தம் இல்லை."

நானும் கௌரியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சண்டைபோட்டுக்கொண்டு அங்கு வந்தனர். இருவரையும் சாந்தமடையச் செய்ய நான் மிகவும் முயன்றேன். 

சங்கரர் கௌரிக்கு அருளிய கனவுக்காட்சியை இருவருக்கும் விவரமாக எடுத்துரைத்தேன். அதைக் கேட்ட வீரபத்திரன் உன்மத்தனானான் (வெறிகொண்டான்).

வீரபத்திரன் தன் எதிரியின்மேல் வசைமாரி பொழிந்தான். கன்னாபின்னாவென்று கத்தினான்.  அதைக் கேட்ட சனபசப்பா பயத்தால் வெலேவெலத்துப்போனான். 

வெறிபிடித்த வீரபத்ரப்பா எதிரியின்மேல் அபத்தமான சாபங்களை வாரியிறைத்துக்கொண்டே சூளுரைத்தான், "உன்னை நான் எங்கே பிடித்தாலும் அங்கேயே அழித்துவிடுவேன்."

வெறிபிடித்த வீரபத்ரப்பா சனபசப்பாவை நோக்கிக் கத்தினான், "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எல்லாத் துண்டுகளையும் தின்றுவிடுவேன்."

பீதியால் பீடிக்கப்பட்ட சனபசப்பா என் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், "என்னை இந்தப் பேராபத்திலிருந்து காப்பாற்றுங்கள்". நான் அப்பொழுது அவனுக்கு அபயமளித்தேன். 

தீனனாகிய சனபசப்பாவுக்கு அந்நேரத்தில் தைரியமளித்துச் சொன்னேன், "வீரபத்ரப்பாவின் கைகளில் நீ சாகும்படி நான் விடமாட்டேன்."


 

Thursday, 10 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

வீரபத்ரப்பா எதையும் கொடுக்க விரும்பவில்லை. சனபசப்பாவும்  விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இருவரும் என்னிடம் வந்தனர். 

நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "அந்த நிலத்தின் பூரண உரியமையாளர் சங்கரரே.  வேறு எவருக்கும் அது உபயோகப்படாது. ஆகவே, நீங்கள் இருவரும் வீணாகப் பேராசையில் மூழ்கவேண்டா.-

"நிர்ணயிக்கப்பட்ட விலை, சங்கரரைப் பிரீதி செய்ய அர்ப்பணம் செய்யப்பட்ட நிலத்தினையுடையதுதான் என்பது சர்வ நிச்சயம்.  கௌரியைத் தவிர வேறு எவனாவது இப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அவன் பட்டினி கிடந்தது சாக நேரிடும்.-

"இறைவனின் சம்மதிமின்றி இந்தப் பணத்தை எவனாவது தொட்டால், அவன் இறைவனின் கோபத்திற்கு காரணமாவான்.  ஏனெனில், இந்தச் செல்வம் சம்பூரணமாக இறைவனுடையது."

அந்த நிலம் பூஜாரிக்குச் சொந்தம். பூஜாரியின் வாரிசான கௌரிக்குதான் நிலத்தின்மேல் உரிமை உண்டு. வெளியார் இது விஷயமாக என்ன செய்யமுடியும்? செல்வம் முழுவதும் கௌரிக்கே சொந்தம். 

ஆகவே, நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "செல்வம் கௌரியினுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவளுடைய அனுமதியின்படி நடந்தால்தான் நீங்கள் இருவரும் பேறுபெற்றவர்கள் ஆவீர்கள். -

"அப்படியின்றி அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நீங்கள் நடந்தால், அது இறைவனுக்கு சம்மதமாகாது. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வீரபத்ரபாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை."

நான் என்னுடைய புடம்போட்ட அபிப்பிராயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியதால், வீரபத்திரன் என்மேல் கடுங்கோபம் கொண்டான்; என்னை இகழ்ந்து பேசினான். 

அவன் சொன்னான், "பாபா, என் மனைவியின் சொத்து உரிமையை நிர்த்தாரணம் செய்தபின், மொத்தப் பணத்தையும் விழுங்கிவிட்டு சுகமாக வாழலாம் என்ற சுயநல நோக்கம் உங்கள் மனத்தில் இருக்கிறது."

அவன் அவ்வாறு பேசியதைக் கேட்ட நான் வியப்பால் பேச்சிழந்துபோனேன்! அல்லாமியாவின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ! ஆகையால், நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்?

வீரபத்ரப்பா என்னிடம் இவ்வாறு பேசினான்.  வீட்டிலோ மனைவியின்மேல் கடுஞ்சினங்கொண்டு நெருப்பைக் கக்கினான். ஆகவே, பிற்பகலில் அவள் தரிசனம் செய்ய வந்தாள்; என்னிடம் கெஞ்சினாள்.   

"பாபா, வேறெவரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கிருபை செய்யாது அலட்சியப்படுத்திவிடாதீர்கள். பயபக்தியுடன் நான் வேண்டுகிறேன். உங்கள் மகளாகிய என்னிடம் இரக்கம் காட்டுங்கள்."

அவள் அவ்விதம் கெஞ்சியத்தைக் கேட்டு நான் அவளுக்கு மீண்டும் பூரணமாக உறுதியளிக்கும் வகையில் சொன்னேன், "என்னுடைய கிருபையால் உனக்கு எழுகடலையும் பரிசளிப்பேன் (ஏழு கடல்களையும் தாண்டிவந்து உன்னைப் பாதுகாப்பேன்). நீ சிறிதும் வருத்தப்படாதே."


 

Friday, 4 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பணம் என்பது ஒரு கண்ணி. பெரியோர்களும் பணக்காரர்களும் கூட அதன் அலைக்கழிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. வீரபத்ரனையும் அவ்வப்பொழுது பணத்தட்டுப்பாடு கிள்ள ஆரம்பித்தது. பணத்தின் சேஷ்டை அத்தகையது! 

"பாபா, இல்லறத்தின் தளைகள் மிகத் துன்பமூட்டுபவை.  பணத்தட்டுப்பாட்டால் நான் துன்பப்படுகிறேன். குடும்பப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு வழி காட்டுங்கள். -

"உங்களுடைய பாதங்களில் விழுகிறேன். இவ்விதம் என்னை ஏமாற்றுவது தகாது. என்னுடைய சங்கடத்தை நிவாரணம் செய்யுங்கள். நீர்தான் என்னுடைய திருமணத்திற்குக் காரண கர்த்தா!"

நானும் அவனுக்குப் பல தருணங்களில் போதனை அளித்தேன்.  "இதை அல்லா மாலிக்தான் அறிவார்.  அவர்தான் உன் சங்கடத்தையும் நிவாரணம் செய்வார்" எண்டு சொல்லி அவனைப் பிரேமையுடன் ஆசீர்வாதமும் செய்தேன். 

வீரபத்ரனின் மனப்போக்கை அறிந்து, அவனுடைய மனோரதம் நிறைவேறவேண்டும் என்பதற்காக நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். 'சிறிதளவும் கவலைப்பட வேண்டா' என்றும் சொல்லுவேன். -

"உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாகக் கிளர்ச்சியடையாதே.  கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்குச் செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதியாவாய்". (பாபாவின் நல்வாக்கு)

"செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ 'இந்தக் கொண்டுவா, அதைக் கொண்டுவா' என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கௌரவமே வேண்டா" (வீரபத்ரனின் பதில்) 

ஆனால், பின்னர் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கௌரியின் கிரகயோகத்தைப் பாரும்! தரிசு நிலத்தின் மதிப்பு திடீரென்று உயர்ந்தது. இறைவனின் லீலை மனித அறிவுக்கெட்டாதது!

ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்கத் தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார். பாதிப்பணத்தை ரொக்கமாக கொடுத்தார். மீதிப்பணத்தைத் தவணைகளில் செலுத்துவதாக வாக்களித்தார். 

அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ரூபாய், வட்டியுடன் சேர்த்துச் செலுத்தவேண்டும் என்றும், இவ்விதமாக மீதிப்பணம் முழுவதையும் அடுத்த இருப்பைத்தந்து ஆண்டுகளுக்குள் கொடுத்துத் தீர்த்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்முறையில் கௌரி பெரும்பணம் சேர்ப்பாள். 

இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சனபசப்பா எழுந்து நின்று சொன்னான், "சங்கரருக்கு எது சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு எஜமானன் குரவர் வம்சத்தவனே".

அவன் மேலும் சொன்னான், "வருடாந்திர வட்டியில், குரவரின் பங்கான பாதி வட்டித்தொகை என்னிடம் வந்து சேரவேண்டும். அது வராமல் நான் திருப்தி அடையமாட்டேன்."


 

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ!