Thursday, 5 May 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி வாயைக் கழுவிக்கொண்டபின் மாதாராவ் கைகளைத் துணியால் துடைத்துவிட்டுக்கொண்டிருந்தார். சாயி ஆனந்தமான மனநிலையில் இருந்தார்; அப்பொழுது என்ன செய்தார் என்று கேளுங்கள்.

மாதவராவின்மீது பிரேமை பொங்க, அவருடைய கன்னத்தை கிள்ளினார் பாபா. தேவருக்கும் பக்தருக்கும் அப்பொழுது நடந்த அன்பான சம்வாதத்தைக் (உரையாடலைக்) கேளுங்கள்.

எப்பொழுதும் விநயமாக நடந்துகொள்ளும் மாதவராவ் பொய்க்கோபம் ஏற்று, "இது என்ன லட்சணமான (சிறப்பான) செயலா?" என்று கேலியாகக் கேட்டார்.

"எங்களுக்கு கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டா! நாங்கள் உங்களுக்கு பந்தப்பட்டவர்களா என்ன?  இதுதான் எங்களுடைய நெருங்கிய தொடர்புக்குப் பரிசோ?

பாபா சொன்னார், "சாமா, எழுபத்திரண்டு ஜன்மங்களாக நான் உன்னைத் தொட்டதுண்டா?" ஞாபகப்படுத்திப் பார்!"

மாதவராவ் சொன்னார், "பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புக்கள் வழங்கும் கடவுளே உங்களுக்குத் தேவை.-

"உங்களிடமிருந்து கௌரவமோ சுவர்க்கலோகத்தின் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவையில்லை. உங்களுடைய பாதங்களில் என்றென்றும் விசுவாசம் என்னும் ஒரே வரத்தை கொடுங்கள்; அது போதும்".

பாபா சொன்னார், "இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிக்குமுள்ள அளவுகடந்த பிரேமையால் உங்களனைவருக்கும் உணவுவூட்டவே வந்திருக்கிறேன்".

இதன் பிறகு பாபா கிராதிக்கருகிலிருந்த தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். மாதவராவ் பெண்மணிக்குச் சைகை காண்பித்தார். பெண்மணி தாம் வந்த நோக்கம் பற்றி உஷாரானார்.

சைகை கிடைத்தவுடனே, அவர் எழுந்து தடதடவென்று படியேறிச் சென்று வணங்கினார். பாபா தேங்காயைத் தமது கைகளாலேயே கிராதியின்மேல் மோதி உடைக்க முயன்றார்.

பாபா கேட்டார், "இந்தத் தேங்காய் என்ன சொல்கிறது? ஏகமாக குடுகுடுவென்று ஆடுகிறதே!" கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது சாமா கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் பாபாவிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்.

"அதுமாதிரியாகவே இவருடைய வயிற்றிலும் (குழந்தை) உருளவேண்டுமென்று இப்பெண்மணி மனம் கனிந்து வேண்டுகிறார். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய விருப்பம் நிறைவேறட்டும். இவருடைய மனம் உங்களுடைய பாதங்களில் அகண்டமாக லயிக்கட்டும்; இவருடைய பிரச்சினைக்கு விடை கிடைக்கட்டும். -

"உங்களுடைய கருணாகடாட்சத்தை இவர்மீது செலுத்துங்கள். இந்தத் தேங்காயை இவருடைய முந்தானையில் போடுங்கள். உங்களுடைய ஆசீர்வாதத்தால் இவருக்குப் பல பிள்ளைகளும் பெண்களும் பிறக்கட்டும்."