Thursday, 24 January 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

28 . அருட்பெருக்கு - மூன்று சிட்டுக்குருவிகள்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சாயி ஓரிடத்தில் மட்டும் வசிப்பவரல்லர்; அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார். பிரம்மதேவரிலிந்து ஈ, எறும்பு, பூச்சி, புழு உட்பட அனைத்து ஜீவன்களுள்ளும் மற்றும் எங்கும் உறைபவர் சாயி.

சாயி பூரணமான சப்த பிரம்மம் (வேதங்கள்); அவரே பர பிரம்மத்தின் அடையாளம். இவ்விருவகையிலும் தலைசிறந்த அவர் சத் குருவாக விளங்க இல்லாத தகுதிகளையும் பெற்றவர்.

வானளாவிய ஞானம் படைத்தவராயினும், தம்முடைய சிஷ்யனை ஆன்மீக எழுச்சி பெறச் செய்து 'தன்னை அறிந்த' நிலைக்கு உயர்த்த முடியாத சத் குருவால் யாருக்கு என்ன பயன்?

தேகத்தினுடைய ஜனனத்தை தந்தையும் தாயும் அளிக்கின்றனர். ஆனால், இந்த ஜனனத்தை மரணம் தொடர்கிறது. தாய்தந்தையரைவிட கருணை மிகுந்த குரு ஜனன மரணச் சுழற்சியையே நாசம் செய்துவிடுகிறார்.

கதையை விட்ட இடத்தில் தொடரும் வகையில், கனவில் தெய்வீகக் காட்சிகள் பற்றிய இந்த அத்தியாயத்தில், பக்தர்களின் கனவில் தோன்றி பாபா எவ்வாறு தரிசனமளித்தார் என்ற விவரத்தைக் கேளுங்கள்.

ஒருவரைத் திரிசூலம் வரையச் சொன்னார். இன்னொருவரிடம் கிச்சடி வேண்டுமென்று கேட்டார். மற்றொருவருக்கு ஆசிரியர் வடிவில் தோன்றிப் பிரம்பால் அடித்துப் பாடம் புகட்டினார்.

சிலரைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க கனவில் தோன்றி பயமுறுத்தினார். இவ்வாறு பக்தர்களை அநேக சங்கடங்களில் இருந்து விடுத்துத் தம்மிடம் ஈடுபாடு கொள்ளுமாறு செய்தார்.

ஒரு பக்தரின் கனவில் தோன்றி, முதுகில் பிரம்பால் விளாசியதும் மார்பின்மேல் குழவி ஒட்டியதும் பதின்மூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டது. இது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இனிவரும் கதை அபூர்வமானது. சொல்பவரும் கேட்பவர்களும் பாக்கியசாலிகள். இருசாராரும் ஆடாது அசையாது அமர்ந்து கதையில் மூழ்குவோம்; என்றும் அழியாத மகிழ்ச்சி எய்துவோம்.