சத்குரு ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா

Thursday, 10 January 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாயையும் மோகமும் சூழ்ந்த இருட்டில், ஹேமாட் பந்த் இங்குமங்கும் சோம்பித் திரிந்து கொண்டிருந்தபோது ஹரியின் கிருபையும் குருவின் கிருபையும் அருள் பாய்ச்சின.

இதுவும் கேவலம் அதிர்ஷ்டவசமாக கிடைத்தது; அப்பியாசமோ (பயிற்சியோ) பிரயாசையோ (முயற்சியோ) ஏதும் செய்தறியேன் நான். ஹரியும் குருவும் அவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே எனக்கு கௌரவம் அளித்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

தம் பக்தர்களை உத்தாரணம் (தீங்கிலிருந்து மீட்கை) செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்ட பாபா என்னுடைய கையை பலமாகப் பிடித்துக்கொண்டு, தம்முடைய சரித்திரமாகிய இந்த கிரந்தத்தை (நூலை) விஸ்தாரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, வேறெதிலும் நாட்டமில்லாத பிரேமையென்னும் விசித்திரமான நிறங்களுடைய பூக்களை இடைவிடாத அனுசந்தானம் (வழிபாடு) என்னும் நாரால் தொடுத்து அழகான மாலையாக்கி,  பயபக்தியுடன் சாயிக்கு சமர்ப்பணம் செய்வோமாக.

தன்னிலேயே மூழ்கி ஆன்மீக சுயராஜ்யம் என்னும் அரியணையில் ஏறி அமர்வோமாக. அஹங்காரம் அணுவளவுமின்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்போமாக.

சாயியின் சரித்திரம் ஆழங்காணமுடியாத சமுத்திரம். சொல்லப்போகும் கதை முன்னதைவிட விசித்திரமானது. உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரம் அழைத்துச் செவிகளையும் செவிச்செல்வதையும் புனிதமாகிக் கொள்ளுங்கள்.

இதிலிந்து மூன்று அத்தியாயங்கள் ஒரு தொடராக மலரும். பாபா தம்முடைய இடத்திலிருந்தபடியே எவ்வாறு அபூர்வமான தெய்வீகக் காட்சிகளைக் காட்டி அற்புதம் விளைவித்தார் என்பதுபற்றி இம் மூன்றிலும் அறிவீர்கள்.

முதல் அத்தியாயம் லாலா லக்மீசந்தைப் பற்றியது. அவர் எவ்வாறு பிரேமையெனும் நூலால் கட்டி இழுக்கப்பட்டுத் தம்முடைய நிஜமான அடைக்கலத்தை அடைந்தார் என்பதே விஷயம்.

பர்ஹான்ப்பூர் அம்மையாரின் கிச்சடியின்மேல் ஆசைகொண்ட பாபா, அவருக்கு தரிசனம் செய்யும் உற்சாகத்தை அளித்து பக்தர்கள் மீது தமக்கிருந்த பிரேமையை ஓர் அற்புதத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

மேகா என்றழைக்கப்பட்ட மற்றொரு பக்தரின் கனவில் தோன்றி, திரிசூலம் ஓன்று வரையச் சொன்னார். திரிசூலத்தை தொடர்ந்து எதிர்பாராமலேயே சிவலிங்கம் ஒன்றும் கிடைக்கும்படி மேகாவுக்கு அருள் செய்தார்.

இவ்விதமாக அநேகக் கதைகள் இங்கிருந்து தொடரும். பக்திபூர்வமாகச் செவிமடுப்பவர்கள் கேள்வியின் பயனைத் திருப்தியாக அடைவார்கள்.

உப்பாலான பொம்மையை கடலில் முழுக்கினால் கடலோடு ஒன்றாகிவிடுகிறது. அவ்வாறே ஹேமாட் வேறெதிலும் நாட்டமின்றி சாயியிடம் சரணடைகிறேன்.

சாய்பரணி at 23:21 No comments:
Share
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

My photo
சாய்பரணி
அடியேன் ஒரு சாயி பக்தன். அவரைப் பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.
View my complete profile
Powered by Blogger.