valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றே அறிவீராக. ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக.-

"இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்தில் இருந்து சிகை வரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.-

"என்மீது இவ்வாறு தியானம் செய்துகொண்டு வந்தால், உம்முடைய மனம் படிப்படியாக ஒருமுகப்பட்டு தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள், இவற்றினிடையே இருக்கும் வேற்றுமை மறைந்துவிடும். -

"இம்முறையில் திரிபுடி (காண்பான், காட்சிப்பொருள், காட்சி) மறைந்து விடும்போது, தியானம் செய்பவர்  தூய உன்னதமான உணர்வை அடைவார். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏன் எனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகி விடுவீர். -

"தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது; குட்டிகள் அந்தக் கரையில் பாலும் அரவணைப்பில் கதகதப்புமின்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கை அளித்து வளர்ச்சியடைய செய்கிறது.

"குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டா; புல்லும் வேண்டா; வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.-

"தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியை கொண்டுவரும் அமிர்த மழையாகும். இதுவே குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும். "

இவ்வமுத மொழிகள் பாபாவினுடைய வாயில் இருந்து வெளிப்பட்டு முடிந்தபோது, ஆரத்தி பாட்டும் முடிந்துவிட்டது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் உரக்க "ஜெய் ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்" என்று கோஷித்தனர்.

தீபங்களை சுழற்றிக் காண்பிக்கும் சடங்குபூர்வமானான ஆர்த்தியும் முடிந்துவிட்டது! ஜோக் பாபாவுக்கு கற்கண்டு சமர்ப்பித்தார். பாபா அதை ஏற்றுக்கொள்ள தமது உள்ளங்கையை நீட்டினார்.

நீட்டிய கரத்தில் தம்முடைய நித்திய பழக்கத்தின்படி அன்புடன் கைநிறைய கற்கண்டுகளை வைத்தார் ஜோக்.

அந்தக் கற்கண்டுகள் அனைத்தையும் என் கைகளில் நிரப்பிவிட்டு பாபா கூறினார். "நான் இப்பொழுது கூறியதை உமது மனதில் நன்கு நிலைப் பெறச் செய்து விட்டீரானால், உமது வாழ்க்கை இக்கற்கண்டைபோலவே இனிக்கும். -

"இக் கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உம்முடைய மனதின் ஆசைகளும் நிறைவேறும். உமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். மனதின் ஆழமான ஏக்கங்களும் திருப்தியுறும். "


No comments:

Post a Comment