valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 July 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

கதை கேட்பவர்களுக்கு இப்பொழுது இது சம்பந்தமாக, சென்ற அத்தியாயத்தில் முற்றுப்பெறாத காதையை சொல்கிறேன்; கேளுங்கள்.

ஆண்டுகளால் முதிர்ந்து, உடல் பலவீனமுற்ற மூதாட்டி ஒருவர், சாயியின் இடமிருந்து மந்திர உபதேசம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பதென்னும் தீர்மானத்தை பிடிவாதமாக மேற்கொண்டார்.

அவருடைய தேகநிலையை பார்த்து பயந்துபோன மாதவராவ், மத்தியஸ்தம் (சமரசம்) செய்து வைப்பதற்காக பாபாவிடம் சென்றார். இதுதான் ஏற்கனவே சொல்லப்பட்ட காதையின் இணைப்பு.

சாயி சத்சரித்திரம் என்னும் விளக்கு இங்கே தூண்டப்பட்டு விட்டது. சாயியினுடைய எண்ணங்கள் இங்கு வெளிப்பட்டு, இவ்வொளியினால் விசுவாசமுள்ள அநேக பக்தர்கள் தங்களுடைய பாதையைத் தெரிந்துகொள்வர்.

பாபாவினுடைய ஆணையின்படி மாதவராவ் எனக்கு ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அதை இப்பொழுது மேற்கொண்டு சொல்கிறேன்.

அவர் சொன்னார், "அம்மூதாட்டியின் வைராக்கியத்தை கண்ட பாபா, மூதாட்டிக்கு அருள்செய்து, அவருடைய சிந்தனையில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தினார். கதையில் இங்குச் சுவையான திருப்பம் ஏற்பட்டது!"-

"பிறகு, பாபா அவரை அழைத்துவரச் செய்து பிரேமையுடன் சொன்னார், "தாயே! எதற்காக நீர் அடம் செய்துகொண்டு பட்டினி கிடக்கிறீர்? ஏன் உபவாசம் இருந்து உயிரை விடவேண்டும் என்று நினைக்கிறீர்?"

வயது முதிர்ந்த பெண்மணி யாராக இருந்தாலும் சரி, பாபா அவரைத்  'தாயே' என்றுதான் அழைத்தார். வயது முதிர்ந்த ஆண்களை, காகாவென்றும் பாபூவென்றும் பாயியென்றும் அழைத்தார். அவர் கூப்பிடும் அழகு அவ்வாறு!

அந்தரங்கத்தில் பிரேமை இருந்ததால், அவருடைய வார்த்தைகளும் இனிமையாயாக இருந்தன. துன்பப்படுபவர்களுக்கும் இன்னல்படுபவர்களுக்கும் கருணை காட்டும் தீனதயாளர் அல்லரோ சாயிநாதர்!

ஆகவே, அவர் அம் மூதாட்டியை அழைத்து, தம்மெதிரில் உட்காரவைத்துக் கொண்டு, நிஜமான குருத்துவத்தின் இரகசியத்தை ஆருக்குப் பிரேமையுடன் எடுத்துச் சொன்னார்.

ஞானமே ஆகிய பாபா, தம் பக்தர்களாகிய சகோதர பட்சிகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொழிந்த மழையில் இருந்து சுயானந்தம் அளிக்கும் நீரை இப்பொழுது நன்றாக பருகுங்கள். பக்தர்களுடைய உலகவாழ்வின் துக்கங்களும் இன்னல்களும் சாந்தமடையும்.

அவர் கூறினார், "தாயே விவரமாக சொல்லுங்கள்! எதற்காக இவ்வளவு துன்பத்தை உங்களின்மேல் சுமத்திக் கொள்கிறீர்கள்? நானோ, கவளங்கவளமாக பிச்சை தேடியலையும் ஒரு பக்கீர். என்னிடத்தில் அன்புகாட்டுங்கள்!

"வாஸ்தவத்தில் நான் உம் மகன்; நீர் என் தாயார். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய கதையொன்று சொல்கிறேன்.-

No comments:

Post a Comment