valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 4 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் நேர்மையான ஆர்வம் கொண்ட பாபா, ஒவ்வொரு நாளும் பல பக்தர்களை இதைக் கேட்கச் செய்தார்.

பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆழங் காணமுடியாது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகில் இருந்தாலும் சரி, வெகுதூரத்தில் இருந்தாலும் சரி, பாபா ஹிருதய வாசியாக (இதயத்தில் வசிப்பவராக) அவர்களுடனேயே  இருந்தார்.

அவர் மசூதியில் உட்கார்ந்துகொண்டே ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு வேலையை நியமித்துத் தம்முடைய சக்தியையும் அளித்து, அவர்கள் மூலமாக காரியங்களை சாதித்து முடித்தார்.

பாபு சாஹேப் ஜோக்கை தினமும் வாடாவில் போதி படிக்கச் சொல்லுவார். ஜோக் தினமும் தவறாது படித்தார்; அங்கு அதைக் கேட்க மக்கள் குழுமினர்.

ஜோக்கும் தினமும் மதிய உணவு உண்ட பிறகு, பிற்பகலில் பாபாவிடம் செல்வார். நமஸ்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து விபூதியை பெற்றுக்கொண்டு போதி படிப்பதற்கு அனுமதி கேட்பார்.

சில சமயங்களில் அவர் ஞானேச்வரி படிப்பார்; சில சமயங்களில் ஏகநாத பாகவதத்தை வியாக்கியானத்துடன் படிப்பார். படிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பார்.

ஜோக்குகுப் போதி படிக்க அனுமதி அளித்தவுடனே, பாபா தம்மை தரிசனம் செய்ய வந்த பல பக்தர்களை போதியைச் செவிமடுக்க அனுப்புவார்.

சில சமயங்களில் பாபா குட்டிகதைகள் சொல்லுவார். இதை பக்தர்கள் கேட்டு மனதில் பதியவைத்துக் கொள்ளும் முன்னரே, 'எழுந்திருங்கள், வாடாவிற்கு போதி கேட்பதற்கு செல்லுங்கள்' என்று பாபா சொல்லிவிடுவார்.

விசுவாசமுள்ள பக்தர் போதியைக் கேட்கச் சென்றால், போதியில் வரும் கதை ஏற்கெனவே பாபாவிடம் கேட்டதை நிரூபணம் செய்யும் வகையில் அமையும்; முக்கியத்துவம் பூரணமாகவும் தெளிவாகவும் புரிந்து விடும்.

ஞானேச்வரர் அருளிய ஞானேச்வரியும் ஏகநாதர் அருளிய பாகவதமும் பாபா ஏற்கனேவே சொன்ன கருத்துகளை மேலும் வற்புறுத்துவதாகவே இருப்பது கண்டு பக்தர்கள் வியப்படைவர்.

ஒரு குறிப்பிட்ட போதியில் குறிப்பிட்ட பகுதியை குறிப்பிட்ட நாளில் படிக்க வேண்டுமென்ற கட்டளை ஏதும் இல்லாவிட்டாலும், ஜோக் படிப்பது, பாபா அன்று சொன்ன கதைக்கு நேரடி சம்பந்தம் உடையதாகத் தவறாது அமையும்!

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் என்னும் இரண்டு நூல்களைத்தான் ஜோக் தினமும் படித்தார். இரண்டுமே, பக்தி மார்க்கத்தை கைக்கொள்ளும் மனிதர் எவ்விதமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதன் சாரமே.

ஞானேச்வரி என்னும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட மராட்டி பாஷ்யம் (விரிவுரை). இந்நூலுக்கு பாவர்த்த தீபிகா என்றும் பெயர். ஏகநாதர் ஆன்மீக விஷயங்களை பற்றி எழுதிய ஏகநாத பாகவததிற்கு ஸ்ரீமத் பாகவததின் 11 ஆவது காண்டமே ஆதாரம்.  


No comments:

Post a Comment