valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

மனதின் மீது முழுக்கட்டுப்பாடு உடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சி செய்யப்படும் மனிதனே பரம பதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.

சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடைய மாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழலில் இருந்தும் அவனால் விடுபட முடியாது.

எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.

இங்கே தர்க்க வாதமும் சப்பைக் கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்கள் அனைத்தும் வியர்த்தமே.

தர்க்க வாதத்தின் சாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப் படித்த தர்கா சாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவே!

ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது. அதைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

விலை மதிக்க முடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாத உளுத்துப் போக அனுமத்திக்கபடுகிறது. பணத்தாசை என்பது உச்சி வெயில் நிழலைப் போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஞானிகள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்பலில் ஒரு பிரயாணி ஆகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இருக்கிறது?

களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலை கடப்பது சிரமமாக இராது.

இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களை தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது என்று அறியவும்.

ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களை செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனதில் உள்ள மலத்தைக் கழுவித் தூய்மை அடையும் ஒரே வழி. 

No comments:

Post a Comment