valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிரம்ம நிரூபண விவரங்கள் புராணங்களிலும் புத்தகங்களிலும் கொஞ்சமாகவா இருக்கின்றன? ஆனால், சத்குருவின் அருள் இல்லாது, யுகமுடிவு வரை கடினமான பயிற்சிகள் செய்தாலும் பிரம்ம ஞானம் கைக்கு கிடைக்காது.

தினமும் செய்ய வேண்டிய கர்மாக்களையும் சம்ஸ்காரங்களையும் (மதச் சடங்குகளையும்) செய்து, அதன் விளைவாக மனம் தூய்மையடையாமல்  பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ அடையவோ இயலாது.

பிரம்மமே நித்தியமானது; மற்றவை அனைத்தும் அநித்தியம். கண்ணால் பார்க்கபடுவது எதுவும் நித்தியமானது அல்ல. இது மும்முறை பிரகடனம் செய்யப் பட்ட சத்தியம்.

பிரம்மத்தை பற்றி விளக்கமாகப் பேசக் கூடியவர் அரியவர். நிர்மலமான மனதுடன் அதைக் கேட்கக் கூடியவர் அவரினும் அரியவர். பிரம்மானுபவம் கண்ட சத்குருவைப் பெறுதல் மிக மிக அரிது.

பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ள ! மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம நியமங்களுக்கு உட்பட்டு தவம் செய்யும் மகா யோகிகள்.-

அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காண முடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?

செல்வத்தின் மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம்  அடைய முடியாது! இது நிச்சயம் என்று அறிக.

உலகியல் சிந்தனையைச் செய்து கொண்டே பரமார்த்தமான பிரசங்கத்தைக் கேட்பவனும் உலகியல் விஷயங்களையே இடைவிடாது யோசித்துக் கொண்டிருப்பவனும் பெறக்கூடிய சாக்ஷாத்காரமும் (நேரிடை தரிசனமும்) அவ்வகையாகத்தான் இருக்கும்.

தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்மை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல் இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் செயல்கள் எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கி விடும். பக்தியும் வழிபாடும் மனதின் மாய மயக்கங்களைத் துடைத்து தூய்மை ஆக்கிவிடும்.

தமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை சிரத்தையுடன் செய்வதுடன், உபாசனையும் செய்பவரின் மனம் பரிபக்குவம் அடையும். எதிர்மறையான எண்ணங்களுக்கும் மயக்களுக்கும் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பின், மீதி நிற்பது சத்தியத்தை மறைக்கும் திரையே.

எல்லா அனர்த்தங்களுக்கும் விதையாகிய இந்தத் திரை சூரிய உதயத்தால் இருள் அழிவது போல, ஞானம் பிறந்தால் நாசமாகிவிடும். 


No comments:

Post a Comment