valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 August 2014

ஷிர்டி சாய் சத்சரிதம்

சுதந்திர புத்தியுள்ள மனிதன் பாவமே செய்திருக்க மாட்டான். சுகத்தை சம்பாதித்துக் கொள்வதற்கும் புண்ணிய காரியங்களை செழிப்பாக செய்திருப்பான்.

ஆனால், எந்த மனிதனும் சுதந்திர முள்ளவன் அல்லன். கர்மத் தளைகள் அவனை பின்தொடர்கின்றன. கர்மத்தின் வழிமுறைகள் விசித்திரமானவை. மனிதனுடைய வாழ்க்கையின் சூத்திரத்தை அவையே இழுக்கின்றன.

இதன் காரணமாக, புண்ணியத்தை நாம் லட்சியமாக கொண்டாலும், பாவத்தை நோக்கி வலிமையாக இழுக்கப் படுகிறோம். நற்செயல்களை தேடும் பணியிலே நம்முடல் பாவங்களை தொட்டு விடுகிறது.

என்னிடம் கதை கேட்பவர்களே! புனே ஜில்லாவில் ஜுன்னர் தாலுகாவில் நாராயண் காங்கவ் கிராமத்தில் வாழ்ந்த பீமாஜி பாடீலின் காதையை கேளுங்கள். தேவாமிருதம் பொங்கி வழிந்தது போன்ற இனிமையுள்ளது இக்காதை.

பீமாஜி பாடீல் ஒரு தன வந்தர். விருந்தோம்பலில், முக்கியமாக அன்னமிடுவ்தில் உற்சாகம் கொண்டிருந்தார். சோகத்தையே அறியாத அவர் எப்பொழுதும் மலர்ந்த முகமாகவே இருந்தார்.

ஆனால், விதியின் வழிமுறைகள் விளக்க முடியாதவை. லாபத்தையும் நஷ்டத்தையும் மாறி மாறி கொடுக்கும். அந்தக் கணக்கு நமக்குப் புரியாது. கர்ம வினைகளுக்கேற்றவாறு இன்னல்கள் விளைகின்றன. நமக்கு வரக்கூடாத வியாதிகளும் வந்து நம்மை துன்புறுத்துகின்றன.

1909 ஆம் ஆண்டு பீமாஜியை பீடை பிடித்தது. நுரையீரல்களை சயரோகம் தாக்கி, ஜூரம் வர ஆரம்பித்தது;

பிறகு, பொறுக்க முடியாத இருமல் தொடர்ச்சியாக வந்தது; ஜுரம் நாளுக்கு நாள் அதிகமாகி பலமாக வளர்ந்தது; பீமாஜி இடிந்து போனார்.

வாயில் சதா நுரை கட்டியது; கோழையிலும் எச்சிலிலும் உறைந்த ரத்தம் வெளியாகியது. வயிறு எந்நேரமும் குமட்டியது; ஓய்வற்ற நிலையில் உடல் அலட்டுவது நிற்கவேயில்லை.

பீமாஜி படுத்த படுக்கையாகிவிட்டார்.  எத்தனையோ நிவாரணங்களை  முயன்று பார்த்தும் பயனில்லாது போயிற்று. உடல் மெலிந்து, காய்ந்து சுருங்கிய இலைபோல் ஆகிவிட்டார் பீமாஜி.

அவருக்கு சோறோ, நீரோ, எதுவுமே பிடிக்கவில்லை. கஞ்சியும் பத்தியச் சாப்பாடும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. இந்த நிலை அவரை அமைதி இழக்க செய்துத் திக்குமுக்காட வைத்தது. உடல் பட்ட வேதனை பொறுக்க முடியாததாக இருந்தது.

தெய்வங்களை பிரீதி செய்ய மந்திர உச்சாடனம் எல்லாம் நடந்தது. வைத்தியர்களும் கைவிட்டு விட்டனர். பீமாஜயும் 'பிழைக்க மாட்டேன்' என்று நினைத்து விசாரமடைந்தார்.

No comments:

Post a Comment