valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பற்றற்றரவராகவும் தூய ஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார். 

உலகவிவகாரங்களே பிரம்மமாக தெரியும் முத்திநிலையில் அவர் இருந்தார். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை இது. 

தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ ஆசனத்திலிருந்து எழுந்துருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். 

இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை. பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதர்கேன்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மகிமை இவ்வாறே. 

கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதர்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர். 

சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணையைப் போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணை சூடுபடுத்தினால்தான் உருகுகிறது. ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது. 

நூறு இடங்களில் தையல் போட்ட கப்ணியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துகொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?

அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னாலிருந்து அவருக்கடியில் திணிக்க முயன்டால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப் போவதில்லை. 

நிர்மலமான ஷிர்டி என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை  மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர். நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியுலுமே உழன்று கொண்டிருந்தன. 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்த்ரியங்களை பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூசையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை. 


No comments:

Post a Comment